
ஓவியங்கள்: கேஷவ்
வருடம் 1962. மார்ச் திங்கள் 22-ம் நாள். ஸ்ரீசைலத்தில் ஆதிசங்கரர் மண்டபத்துக்குக் குடமுழுக்கு நடந்த புனித நாள்.
மகா பெரியவாவும், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இதர சந்நியாசிகளும் சங்கர மடத்தின் நுழைவாயிலுக்கு அருகே வருகை புரிகிறார்கள். முதலில் கிழக்கு நோக்கி நர்த்தன கோலத்தில் கோயில் கொண்டிருக்கும் விநாயகருக்கு அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகின்றன.

அடுத்து மண்டப சிகரத்துக்கு அபிஷேகம் முடிகிறது. கற்பூராரத்தியும் நடைபெறுகிறது. பின்னர் மகா பெரியவரும் மற்றவர்களும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மண்டபத்துக்குப் படியேறிச் செல்கிறார்கள். 32 அடி உயரமுள்ள, சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த மண்டபத்தின் எட்டுத் திக்குகளிலும் யானை முகங்கள். நான்கு சிஷ்யர்களுடனான ஆதிசங்கர பகவத்பாதரின் உருவச்சிலை சலவைக் கல்லில் வடிக்கப்பட்டிருந்தது.
காவி உடை தரித்து, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் ஐந்து ஆசாரிய மூர்த்திகளுக்கும் மகா பெரியவா முதலில் தண்டம் சமர்ப்பிக்கிறார். பின்னர், ஒவ்வொரு மூர்த்திக்கும் அபிஷேகம். அது நடைபெறும்போது, மகா பெரியவா பொற்கரம் பட்டு, மந்திர பலத்துடன் கூடிய அந்த மங்கல நீர் மேலும் புனிதமடைகிறது; புண்ணிய கங்கையாக மாறுகிறது. வேத கோஷங்களின் முழக்கம் காதுகளைக் குளிர்விக்கிறது.

பரமேஸ்வரனின் அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கர பகவத் பாதருக்கு, அவருடைய மறு அவதாரமாகக் கருதப்படும் ஆசார்ய சுவாமிகள் தம் திருக்கரத்தால் அபிஷேகம் செய்து முடித்ததும், ஐந்து துறவிகளும் ஆசாரிய மூர்த்திகளுக்குத் தேங்காயில் கற்பூரார்த்தி எடுக்கிறார்கள்.
அடுத்து, மண்டபத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆசார்ய பாதுகைகளுக்கு வில்வ தளங்களால் பூஜை, தீபாராதனை. பிற்பகல் இரண்டு மணிக்கு மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டு புஷ்ப அலங்காரங்கள் பூர்த்தியாகின்றன.
ஸ்ரீமல்லிகார்ஜுன ஆலயத்திலிருக்கும் திருக் கல்யாண மண்டபம். காமகோடி பெரியவர்களின் முன்னிலையில் பரமேஸ்வரனுக்கும் ஜகன் மாதாவுக்கும் திருமணம்.
காஞ்சியில் காமாட்சியின் சந்நிதிக்கு முன்னே இருப்பதுபோல் ஸ்ரீசைலத்திலும் ஒரு வட்டமான இடம் உண்டு. அதில் பக்தர்கள் தாங்களே குங்கும அர்ச்சனை செய்து கற்பூரம் காட்டுவார்கள். அந்தக் குங்குமத்தைப் பிரசாதமாக எடுத்துச் செல்வது வழக்கம். அருகிலிருந்தவரிடம் அந்த குங்குமத்தை யெல்லாம் அகற்றச் சொன்னார் மகா பெரியவா. அதனடியில், தளத்தின் மீதுள்ள ஸ்ரீசக்ரம் இருப்பது தெரிய ஆரம்பித்தது. பின்னர், எண்ணெய் எடுத்து வரச் சொல்லி பூசச் சொன்னார். பால் எடுத்து வரச் சொல்லி அதற்கு அபிஷேகம் செய்து, ஸ்ரீசக்ரத்தின் ரேகைகளையும் அட்சரங்களையும் கவனித்தார். அதைப் பார்த்ததும் பக்தர்கள் மகிழ்ந்தார்கள்.
கல்யாண மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் மகா பெரியவா. மண்டபத்தின் படிகளில் நிதானமாக ஏறி அமர்கிறார். தெய்விக மண மக்களின் திருமண உற்சவத்தை கணீரென்ற குரலில் துவங்கி வைத்தார் புரோகிதர். பின்னர் மகா சங்கல்பத்தைச் சொல்லி, மந்திர கோஷங்களுக்கிடையில் திருமணத்தை நடத்திவைத்தார். கல் இழைத்த கண்ட சரம், மெட்டி, பீலி உள்ளிட்ட நகைகள் மகா பெரியவரின் ஆசியைப் பெற்று அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டன. பட்டுத் துணியால் திரை போடப்பட்டு திருமாங்கல்யதானம் ஆயிற்று. திருக்கல்யாணம் நடந்து முடிந்தது.
காஞ்சிபுரத்துக்கு அருகிலிருக்கிறது கீழம்பி என்கிற கிராமம். காமகோடி மடத்தின் 60-வது பீடாதிபதியாக இருந்தவரின் சமாதி இருக்கும் கிராமம். அதனால் கீழம்பி கிராமமே மடத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அங்கே மடத்துக்குச் சொந்தமான நிலங்கள் உண்டு. அதில் ஒரு வருடம் நிறைய வேர்க்கடலை விளைந்திருந்தது. மூட்டை மூட்டையாகக் கடலை வந்து மடத்தில் இறங்கியது. அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் மானேஜர் விற்றுவிட்டார்.

திடீரென்று மானேஜரை அழைத்த பெரியவா, ‘நிலக்கடலை மூட்டை நிறைய வந்ததே... எனக்குக் கொஞ்சம் எடுத்து வாயேன்...” என்றார். மானேஜருக்கு விழி பிதுங்கியது. ‘எத்தனையோ நாள் மூட்டைகள் மடத்தில் கிடந்தன. அப்போதெல்லாம் கேட்காமல், இப்போது கேட்கிறாரே’ என்கிற தவிப்பு.
“இதோ வரேன்...” என்று சுவாமிகளிடம் சொல்லிவிட்டு, மடத்திலிருந்து இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு நிலத்துக்கு ஓடினார் மானேஜர். நிலம் வெறுமையாக இருந்தது. அங்கே இருந்த எலிப்பொந்தில் சில கடலைகள் காணப்பட்டன. தோண்டிப் பார்த்ததில் எக்கச்சக்க கடலைகள் இருப்பது தெரிந்தது. பிள்ளையாரே தங்களைக் காப்பாற்றியிருப்பதாக மகிழ்ந்து, அதைக்கொண்டு வந்து மகா பெரியவருக்கு கொஞ்சம் எடுத்து வைத்தார்.

‘`ஏன் இத்தனை நாழி?” என்று கேட்டார் பெரியவா. அவரிடம் உண்மையை மறைக்க முடியாமல் விவரம் சொன்னார் மானேஜர். “என்னது! எலி வளையத்திலேர்ந்து எடுத்துண்டு வந்தேளா? எனக்கு வேணும்கறதை கொடுக்கணுமேன்னு, பாவம் அந்த எலி சேர்த்து வச்சதை திருடிண்டு வந்துட்டேளே? இதைவிடப் பெரிய தோஷம் வேற உண்டா?” என்ற பெரியவா, கடலையை வண்டியில் ஏற்றச் சொன்னார். கொஞ்சம் பொரியும் வாங்கிவரப் பணித்தார்.
“எந்த எலி வளையத்திலேர்ந்து எடுத்தேளோ அங்கேயே போட்டுட்டு வந்துடலாம் வாங்கோ...” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு போனார். வளையை நிரப்பினார். பாக்கி இருந்ததை மற்ற எலிப் பொந்து களையும் தேடிச்சென்று அவற்றில் கடலைகளைப் போட்டு நிரப்பினார்.
“இனிமே நான் ஏதாவது கேட்டு, அது இல்லேன்னா இல்லைன்னு சொல்லிடுங்கோ. இப்படிப்பட்ட காரியமெல்லாம் பண்ணக்கூடாது” என்று பெரியவா அறிவுறுத்தியபோது, எல்லா ஜீவராசிகளிடமும் அந்த மாமுனிவர் கொண் டிருந்த பரிவு வெளிப்பட்டது.
அப்போது இளையாத்தான்குடியில் முகாமிட்டிருந்தார் மகாபெரியவா. கும்பகோணத் திலிருந்து டாக்டர் ஒருவர் ஒவ்வொரு வாரமும் தரிசனத்துக்கு வருவது வழக்கம். வரும்போது உயர்ரக பழ வகைகள் எடுத்து வருவார்.
ஒரு தடவை, மடத்தில் கைங்கர்யம் செய்ய வந்திருந்த மேலூர் ராமச்சந்திர ஐயர் என்பவரிடம், “மாமா... பழமெல்லாம் வழக்கம் போல் கொண்டு வந்திருக்கேன். எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. பத்திரமா எடுத்து வச்சு பெரியவா சாப்பிடறதுக்கு கொடுங்க. மடத்தில் நிறையப் பெருச்சாளிகள் இருக்கறதா கேள்விப்பட்டேன்... ஜாக்கிரதை...” என்றார் கும்பகோணம் டாக்டர். இது பெரியவா காதுகளிலும் விழுந்திருக்கவேண்டும். பூஜை முடித்து ஆகாரம் செய்த பின், அங்கிருந்த ஓர் அறையில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டார்.
“கும்பகோணம் டாக்டர் வந்தாரே... இருக்காரா பாரு.”
டாக்டர் அழைத்து வரப்பட்டார்.
“மேலூர் மாமாகிட்டே கேட்டு, இந்த டாக்டர் கொடுத்த பழக் கூடையை எடுத்து வா...”
கொண்டு வரப்பட்டது.
“எனக்கு என்ன வயதாறது தெரியுமா” என்று டாக்டரைப் பார்த்து வினவினார். அவரே விடையையும் சொன்னார்.“எனக்கு 65 வயசு இப்போ. இந்தக் கிழவன் ஒருத்தனே இத்தனை பழங்களையும் தின்னா உடம்பு என்னத்துக்கு ஆகும். நீங்க டாக்டராச்சே... சொல்லுங்கோ...”
டாக்டர் மிடறு விழுங்கினார்.
“இங்க மடத்துல பெருச்சாளிகள் நிறைய இருக் கறது வாஸ்தவம்தான். அதையெல்லாம்விட பழம் பெருச்சாளி நான்தான்...” என்று சிரித்தார் மகா பெரியவா. மேலூர் மாமாவிடம் தான் சொன்னதைத் தெரிந்துகொண்டு பெரியவா ஆழம் பார்க்கிறார் போலிருக்கிறது என்று நினைத்து நடுங்கினார் டாக்டர்.
“இங்க வர்றவா எல்லோரும் தாங்க கொடுக்கற எல்லாத்தையும் பெரியவாளே சாப்பிடணும்னு நினைச்சா எப்படி? என்மேல இருக்கற பிரியம்தான் காரணம்கறது புரியறது... ஆனா, இது சாத்தியமான்னு யோசிக்கணும். நான் ஒருத்தனே எல்லாத்தையும் சாப்பிட முடியுமாங்கறதை நினைச்சுப் பார்க்கணும். அப்புறம், இன்னொரு சமாசாரமும் இருக்கு...
நீங்க என்கிட்ட எனக்காகன்னு ஒண்ணைக் குடுத்துட்டா, அப்புறம் அது என்னுடையதுதான். அதை நான் என்ன வேணும்னாலும் பண்ணலாம். யாருக்கு வேண்டும்னாலும் கொடுக்கலாம். அதுக்காக நீங்க வருத்தப்படக்கூடாது. மடத்துல எத்தனையோபேர் தங்கள் குடும்பம், குட்டி எல்லாத்தையும் விட்டுட்டு எனக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கா. அவாளையெல்லாம் பராமரிக்கறது என்னோட பொறுப்பு. நானோ சந்நியாசி... பக்த கோடிகள் கொடுக்கறதைதானே நான் அவாளுக்குத் தர முடியும்” என்று மகா பெரியவா சொல்ல, டாக்டரின் கண்களில் நீர்.
“பெரியவா என்னை மன்னிக் கணும்...” என்று சொல்லி நமஸ்கரித்தார் டாக்டர்.
அடுத்த கணம் அத்தனை பழங்களையும் ஜன்னல் வழியே ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டார் பெரியவா. அங்கே நரிக்குறவர்கள் சிலர் நின்றுகொண்டிருக்க, தங்களை நோக்கி வந்து விழும் பழங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார் டாக்டர். பழங்களை வீசியது அவர்தான் என்று நினைத்து, ‘`சாமி! நீங்க நல்லா இருக்கணும். உங்க குழந்தை குட்டிங்களெல்லாம் நல்லா சந்தோஷமா இருக்கணும்...” என்று மனமார வாழ்த்தினார்கள், நரிக்குறவர்கள்.
“இவாளுக்கெல்லாம் யாரு ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கித் தரப் போறா? அவாளோட சந்தோஷ முகங்களைப் பார்... யாராயிருந்தாலும் ஈஸ்வரார்ப்பணம்னு முடிஞ்சதெல்லாம், முடிஞ்சபோதெல்லாம் கொடுக்கணும்...’’ என்று சொல்லி டாக்டரை ஆசிர்வதித்து அனுப்பினார் மகா பெரியவா.
-வளரும்..
வீயெஸ்வி