
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...
ஐயப்பமார்கள் அவசியம் படித்தறிய வேண்டிய அற்புதக் கதை!
பொதுவாகவே குழந்தையின் விளையாட்டுகள் ஆனந்தமானவை. பரப்ரம்மமே ஒரு குழந்தை வடிவாகி நிற்கும்போது, அதன் லீலைகள் அகில உலகுக்கும் பேரானந்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தன. பால பருவத்திலேயே குழந்தை அகிலமெங்கும் பவனி வந்து தன் லீலா வினோதங்களால் அனைவரையும் பேருவகைக் கொள்ளச் செய்தது.

சிறிது நேரம் விசித்திரமான பூதகணங்களோடு விளையாடுவார், அடுத்த கணம் பதினான்கு உலகங்களையும் சுற்றி வருவார்.
ஒரு கணம் குழந்தையாகத் தோன்றி சப்பாணி கொட்டி மகிழ்ந்தார்.
பிறகு ஞானஸ்வரூபனாய் மலைகளிடையும் வனத்திடையும் அமர்ந்து, அழகிய வீணையை கரத்தில் ஏந்தி அனைத்துலகும் உய்யும் வண்ணம் தேர்ந்த இசைக்கலைஞன் போல் இசையமுதை பொழிந்து வீணாகானம் செய்யத் துவங்கினார்.

அங்கிருந்து உடனே கிளம்பி தடியூன்றி நடக்கும் பழுத்த கிழச் சிவனடியாராக சென்று முனிவர் பலருக்கும் ஆசி கூறினார்.
அதன் பிறகு பிரம்மசார்யாகத் தோன்றி, வேத அத்யயனம் செய்து மகிழ்ந்தார். சதுர் வேதங்களும் ஐயனின் திருவடிகளை பணிந்து நிற்க நாடி ஓடி வந்தன. உடன் திவ்ய ஸ்வரூபனாய் தோன்றி அழகிய சிங்கத்தில் ஏறி பவனி வந்து, வேதங்களெல்லாம் போற்றும் முதல்வனாக காட்சி தந்தார்.
சற்றைக்கெல்லாம் யுவராஜனைப் போல், குதிரை மேலேறி காட்டிலெல்லாம் புகுந்து வேட்டையாடினார்.
இப்படி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன், கணப்போதில் அண்டமெங்கும் தன் விளையாட்டை நடத்திவிட்டு மீண்டும் தளிர்நடை போடும் குழந்தையாக அன்னை மடியை நாடி கயிலைக்கு ஓடிவந்தார்.
பொங்கி வரும் காவேரி அகண்ட நதியாக ஓடுவது ஒரு அழகென்றால், அதுவே உருவாகும் இடத்தில், சின்னஞ்சிறு ஊற்றாக பொங்கிப் பிரவாகிப்பதும் ஓர் அழகுதான். அது போல் பின்னாளில் அளப்பரிய செயல்களெல்லாம் செய்யுமுன்னர் சின்னஞ்சிறுவனாக, அழகுச்சிலையாய் விளங்கினார் பால சாஸ்தா.
காலில் இரண்டு தண்டைகளும், நவரத்ன பாத சதங்கை களும், கிண்கிணி மணிகொண்ட ஒட்டியாணமும், `ஜல் ஜல்' என ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டிருக்க... அம்பிகையின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கிருந்து இருகையையும் நீட்டி அப்பாவை நோக்கித் தாவுகிறது; அவரது கையிலுள்ள உடுக்கையை வாங்கி `டம... டம...' என அடித்து விளையாடுகிறது.

அதற்குள் அப்பாவின் மற்றொரு கையிலுள்ள நெருப்பு கண்ணை உறுத்துகிறது; ஈசன் தலையிலிருந்து கங்கையை எடுத்து ஊற்றி குழந்தை அந்த நெருப்பை அணைத்துவிட்டது. தலையில் மின்னிய பிறை நிலவை எடுத்து, கழுத்திலுள்ள நாகத்தின் வாயில் வைத்து அழகு பார்க்கிறது. அண்ணனின் அறுகம்புல் மாலையை எடுத்து ஈசன் கையிலுள்ள மானுக்கு உணவளித்து சாப்பிடச் சொல்கிறது.
ஆனந்தமாக குதித்து நடனமாடி, வெண்ணீற்றினை மேனியெங்கும் புழுதிபோல் அப்பிக்கொண்டது. ஈசனின் தலையில்தான் கங்கை தயாராக இருக்கிறாளே? அதில் ஆனந்தமாக நீராடிவிட்டு அப்பாவின் மடியிலிருந்து குதித்து, சாதனைகள் பல செய்தவன்போல் தன் முத்துப்பற்கள் தெரியும் படி கள்ளத்தனமாக ஒரு குறுஞ்சிரிப்பும் சிரிக்கிறது குழந்தை.
அம்மையும் அப்பனும் அழகனை அள்ளி எடுத்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள்.
பரமேசனும் அன்னை உமையும் தங்கள் அருஞ்செல்வனை சீராட்டி வளர்த்தார்கள். சிவவிஷ்ணு சக்திகளாக தோன்றிய ஸச்சிதானந்த பரப்ரம்மம் - குவலயம் காக்க வந்த கடவுள் குழந்தையாக தவழ்ந்து அவர்களை ஆனந்தப்படுத்தியது. இந்நிலையில், தளிர்நடைப்பருவம் கடந்து அழகும் அறிவும் பிரகாசிக்க, ஐயன் கயிலையில் பவனி வரலானார்.
புவனேஸ்வர பட்டாபிஷேகம்
சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அனைத்துலகங்களையும் காத்து ரக்ஷிக்கும் பொறுப்பை அளித்தார் ஈசன். ஸ்திதி - ஸம்ஹார மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக, உலகங்களை ஆட்சிபுரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார்.
பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் தன் செல்வனைக் கண்டு நாடி வந்து பூஜித்து கொண்டாட, பரமன், தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்து, தன் செல்வன் குடிகொள்ள தனியொரு உலகை உருவாக்கச் சொன்னார். பரமனின் ஆணைப்படி, தேவ சிற்பியும், கயிலாய மலைச் சிகரத்தில் - உத்தமமான ஒரு கொடி முடியில் ஓர் அற்புதப் பட்டணத்தை ஐயனுக்காக உருவாக்கினான்.
அகில உலகுக்கும் ஆதிசக்தியான பரம் பொருள், அருளாட்சி புரியும் தலம்... கற்பக விருட்சங்கள், தங்கமும் வைரமும் மின்னும் அழகு வனங்கள், அதில்பாடும் பறவைகள், அவற்றைச்சுற்றி ரத்னக்கற்கள் மிதக்கும் தெள்ளிய நதிகள், மயக்கும் மலர்கள், கொஞ்சும் நந்தவனங்கள், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட மாளிகைகள் எனப் பேரொளி கொண்டு விளங்கியது.
அங்கே, அழகிய ரத்ன மண்டபத்தில் வைரங்கள் இழைக்கப்பட்ட ஸ்வர்ண சிம்மாசனத்தில் ஐயனை இருத்தி, அம்பிகை மணாளன் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

பின்னர் பாரெங்கும், பற்பல தலங்களில் பல அளப்பரிய லீலைகளைப் புரிந்து, பலரும் போற்றி புகழும் பல்வகை பெயர்களுடனும் பிரதாபங்களுடனும் அனேக க்ஷேத்திரங்களில் கோயில் கொண்டார் சாஸ்தா.
பின்னர் சித்தர், நாகர், ஆகாசர், கந்தர்வர், போக பூமியர், கிம்புருஷர், விஞ்சையர், பிசாசர், தாரகர், சுரர், அசுரர், பூதம், முனி, தேவர், கருடர், ராக்ஷஸர், சாரணர், யக்ஷர் எனும் பதினெட்டு கணங்களும் போற்றிப்பணிந்திட, ஐயன் தன் தனியுலகில் கொலுவிருந்து அகிலாண்ட நாயகனாக தன் பரிபாலனத்தை நடத்தி வந்தார்.
மஹிஷியின் எழுச்சி
மகாவிஷ்ணுவின் மாயையால் சுந்தர மஹிஷத்துடன் காதல் இன்பம் அனுபவித்து வந்த மஹிஷி, தேவலோகத்தை மறந்தாள்; தேவர்களை மறந்தாள்; தன் சபதத்தை மறந்தாள்; தன் வரத்தை மறந்தாள்; தன்னையே மறந்து இன்ப வாழ்வில் மூழ்கிக் கிடந்தாள்.
அவள் பூர்வஜன்மத்தில் ஆசைப்பட்ட இன்பம் மட்டுமே அவளுக்குக் கிட்டியது. அன்று அவள் தன் கணவனுடன் பட்டமஹிஷியாக துய்க்க நினைத்த வாழ்வு, இன்று அதே கணவனும் மஹிஷமாக இருக்கும் நிலையில் நிறைவேறியது.
நன்மையும் தீமையும் அனுபவித்தால் தீரும் என்பதுதானே கர்மக்கணக்கு? தான் ஆசைப்பட்ட இன்ந்த்தை மட்டுமே அனுபவித்து வந்த மஹிஷிக்கு அந்த இன்பச்சுவையின் கணக்கும் முடிவடையும் காலம் வந்தது. மறைந்திருந்த மஹிஷியைத் தேடி, அசுரகுருவான சுக்ராச்சார்யர் வந்தார்.
குருவைக் கண்டதுமே அவள் மனதின் காமம் விலகியது. அதற்குள்ளாகவே அங்கு வந்துசேர்ந்த மற்ற அசுரப்படையினரும், மஹிஷி இல்லாமல் தாங்கள் பட்ட துன்பங்களையும் வேதனை களையும் எடுத்துரைத்தார்கள். ஆசையின் காரண மாக தான் தனியே வந்தது எவ்வளவு பெரிய தவறு என மஹிஷி உணர்ந்தாள்.
மஹிஷி எப்போது தன்னைப் பிரிவாள் என்று காத்திருந்த சுந்தர மஹிஷம், அங்கிருந்து கிளம்பி மீண்டும் தன் மூல சக்திகளான பிரம்ம விஷ்ணு ருத்ரர்களிடம் லயம் அடைந்தது. இதுவும் அமரர்களின் சதியே என்பதை அறிந்ததும் அவள் கோபம் பன்மடங்கானது.
கோபத்துடனும், ஆக்ரோஷத்துடனும் கிளம்பிய மஹிஷி, மீண்டும் தன் படைகளுடன் தேவலோகத்தை வந்தடைந்தாள். இடியென கர்ஜித்த மஹிஷியின் முன் நிற்கவே தேவர்கள் பயந்தார்கள். ஏற்கனவே முன்பகை, இப்போது ஏமாற்றப்பட்ட ஆத்திரமும் சேர வந்திருக்கும் மஹிஷியை எதிர்க்க யாரால் முடியும்?
ஆயினும் வந்தது வரட்டுமென்று அவளுடன் போருக்கு முன் வந்தார்கள் தேவர்கள். அதனால் பயனேதும் ஏற்படவில்லை. வெகு விரைவில் தேவலோகம் அசுரர் வசமானது.
அமிர்தத்தை உண்டதால் தேவர்களுக்கு மரணம் இல்லாத வாழ்வு உண்டாகிவிட்டது. ஆனால், மஹிஷியிடம் அடைந்த தோல்விக்கும், அவமானத்துக்கும், கொடுமைகளுக்கும் மரணமே மேல் என்ற எண்ணம் தேவர்களுக்குத் தோன்றியது.
தேவர்களைத் தேற்றிய தேவகுரு, அவர்களுக்கு அற்புதமான ஓர் உபாயத்தைச் சொன்னார்.
- புராணம் தொடரும்..