Published:Updated:

இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்

இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்
News
இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்

இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்

இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்

இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்

Published:Updated:
இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்
News
இன்றும் அணையவில்லை அருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய அடுப்பு! - இன்று ஜோதி தினம்

ன்று உயிர்களின் பசிப்பிணி தீர்த்து அருட்பணி செய்த வள்ளலார் ஜோதி வடிவான தினம்!

``நாம் பிறந்த குடியின் பெருமையினை அழித்துவிடும். நல்லொழுக்கங்களைக் கொல்லும். கற்ற கல்வியின் சிறப்பினை மறக்கச் செய்யும்.  வெட்கம் கெட்டுப் பிறரிடம் கையேந்தி நிற்கச் செய்யும். இவற்றை எல்லாம் நமக்குச் செய்வது வேறு யாருமல்ல, பசிப்பிணி என்னும் பாவி" என்கிறாள் மணிமேகலை. அறங்களிலும் உயர்ந்ததாகக் கருதப்படுவதும் பசித்தோர்க்கு உணவு அளிப்பதே. `உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பதுதானே புறநானூற்றுப் புலவனின் வாக்கும்! 

மணிமேகலை ஓர் இலக்கியக் கதாபாத்திரம். அவள் கையின் அட்சயபாத்திரம் மானுடத்தின் மீதான பெரும் பாசத்தினால் விளைந்த புனைவு. ஆனால், அதை உண்மையாக்கத் தலைப்பட்ட ஞானிகள் அநேகர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து 

`பட்டினி கிடப்பதைப் பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர்' (திருவருட்பா 3:3) 

என்று வருந்தி, பசிப்பிணியை ஒரு பெரும்பாவி என்றழைத்து அதை அழிக்க அணையாத அடுப்பு மூட்டியவர் அருட்பிரகாச வள்ளலார். 

வள்ளலார் பிறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவில் ஒரு புதிய ஆன்மிக எழுச்சி ஏற்பட்ட காலம். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ராஜாராம் மோகன்ராய், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், நாராயண குரு உள்ளிட்டோர் தோன்றி ஆன்மிக விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். இதே நூற்றாண்டில்தான் இந்தியாவெங்கும் பல்வேறு பஞ்சங்களும் ஏற்பட்டன. மக்கள் பசிப்பிணியால் வாடி இறக்கவும் நேரிட்டது. இதைக் கண்டு பொறுக்காமல், முன்னர் நாம் குறிப்பிட்ட மகான்கள் ஆன்மிகத்தைச் சமூகச் சீர்திருத்தக் கருவியாகவும் பயன்படுத்தினர்.

இளம் வயதிலேயே ஆன்மிகப் பற்றுக் கொண்டவராக விளங்கியவர் வள்ளலார். தில்லையில் வாழும் நடராஜ பெருமானிடத்தில் பக்தி கொண்டவர். `யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்னும் தமிழ்ச் சிந்தனை மரபு அவரின் பிரியமாக இருந்தது. உலகத்து உயிர்கள் எல்லாம் சமம். சாதி, மத, வர்க்க, தேச பேதங்கள் இன்றி அனைவரும் சமம் என்னும் தத்துவத்தை முன்னிறுத்தும் சமரச சுத்த சன்மார்க்க சபையினைத் தோற்றுவித்தார்.

அவரின் சிந்தனைகளும் கருத்துகளும் திருமூலர், தாயுமான சுவாமிகள் வழி வந்த முற்போக்குக் கருத்துகள். அவரைப் பொறுத்த அளவில் இறைப்பணி என்பது எவ்வுயிர்க்கும் இரங்கி அருள்வதே. 

`எவ்வுயிர்க்கும் பொதுவெனக் கண்டிரங்கிஉப

கரிக்கின்றார் யாவர் அந்தச்

செவ்வியர் தன் செயலனைத்தும் திருவருளின் 

செயலெனத் தெரிந்தேன்' (திருவருட்பா 5296).

அதனால் அவர் பழைமை சாத்திரங்களை விட்டு விலக விரும்பினார். 

`நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் நவின்ற

கலைச் சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டே'  ( திருவருட்பா 85) 

என்று துணிந்து சொல்லும் அவரின் வார்த்தைகளை, சித்தர் மரபின் நீட்சியாகவே அறிய முடிகிறது. சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த ஆன்மிகச் சீர்திருத்தக் குரல். இல்லையென்றால் அவர் பாடல்களை அருட்பாவென்று அழைக்கலாகாது என்று வழக்கு மன்றம் வரை போவார்களா? ஆனால் வழக்கு வள்ளலார் பக்கமே தீர்ப்பானது.  

எனவே அனைத்துயிர்க்குமான சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்க விரும்பினார். சன்மார்க்க சபையின் தத்துவமாக `யோகாந்தம்', `கலாந்தம்', `நாதாந்தம்' , போதாந்தம், `வேதாந்தம்', `சித்தாந்தம்' ஆகிய ஆறு அந்தங்களைக் கொண்ட `ஷடாந்தம்' என்னும் தத்துவத்தை முன்வைத்தார்.  

பல கடவுள் கொள்கைகளைக் கைவிட்டு இறைவனை ஜோதிவடிவாக வழிபட வேண்டும் என்று கூறினார். இறைவனை அருட்பெருஞ்சோதி வடிவினனாகக் காண அவரால் முடிந்தது. `அருட்பெருஞ்சோதி  தனிப்பெருங்கருணை ' என்பதே சமரச சன்மார்க்கத்தின் தாரக மந்திரமும் ஆனது.

ஆன்மிக விடுதலையை முன்வைக்கும்போது அதன் ஒரு பகுதியாக வள்ளலார் ஜீவகாருண்யத்தையும் முன்வைத்தார். ஜீவகாருண்யமே அவருக்குத் தலையாய கொள்கை. மகாவீரரும், புத்தரும் முன்வைத்த உயிர்க்கொலை தவிர்த்தலை வள்ளலாரும் முன்வைத்தார். இறைவனின் பேரால் உயிர்கள் பலியிடப்படுவதை கண்டு மனம் வருந்தினார். எனவே உயிர்க்கொலையை தன் சங்கத்தின் முக்கிய ஒழுக்கமாகவும் கடைப்பிடித்தார். ஒருவகையில் சமரச சன்மார்க்க சபை தமிழகம் எங்கும் ஒரு பெரும் இயக்கமாக மாறுவதற்கு இந்த ஒழுக்க விதி ஒரு பெரும் தடையாக இருந்திருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

வள்ளலார் தான் வாழ்ந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பஞ்சங்கள் ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் மடிவதைக் கண்டு வருந்தினார். பீகாரிலும், பஞ்சாபிலும், ஒடிசாவிலும், வடமேற்கு மாகாணங்களிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதுவரை வட இந்தியாவை ஆட்டிப் படைத்த பஞ்சம் தமிழகத்தையும் விரைவில் தாக்கும் என்று அந்த ஞானி அறிந்திருக்கவேண்டும். எனவே அதை வேர்பிடிக்க விடக்கூடாது என்று பெரும் ஆவேசத்துடன் பணியாற்றினார். பசியினால் மனிதர்கள் மடிவது மனித இனத்துக்குப் பெரும் அவமானம் என்று கருதினார். ஆன்மிக விடுதலையை விடப் பசிப்பிணியிலிருந்து மக்களைக் காக்கவேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தார்.

அணையாத அடுப்பை மூட்டினார். பசித்தவருக்கு உணவிடுவதை ஒரு வழிபாடாகச் செய்ய முடியும் என்று கூறினார். பசிப்பிணி தீர்ப்பவர்கள் தங்கள் நோய் நீங்கப் பெற்று, சகல செல்வங்களையும் பெறுவர் என்று பாடினார். செல்லுமிடமெல்லாம் 

`பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே

பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று' (திருவருட்பா. 873) 

என்று பாடினார்.

ஆனால், அவை எந்த அளவுக்கு மக்களின் காதுகளில் விழுந்தது என்பது கேள்விக்குறி. அவர் கடைவிரித்தார், ஆனால் கொள்வார் இல்லாமல் போயினர். வாழும் காலத்தே இறைவனைக் காணும் பேறு பெற்றவர் அவர். விரைவில் இறைவனோடு ஜோதிவடிவாய்க் கலப்பேன் என்று சொல்லியவண்ணம் இருந்தார். 1874 ஆம் ஆண்டு ஒரு தைப்பூச நாளில் வள்ளலார் வடலூர் சன்மார்க்க சபையில், ஜோதி வடிவமாகி இறைவனோடு இரண்டறக் கலந்தார். 

அவர் வாழும் காலத்தே அஞ்சியிருந்த அந்தக் கொடுமையான பசிப்பிணி தமிழகத்தின் மீதும் தன் கொடும் நிழலை விரித்தது. 1876 ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருஷ பஞ்சம் பல லட்சம்பேரைப் பலிகொண்டது.

உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்

உறுபசி உழந்துவெந்துயரால்

வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ

மற்றிதை நினைத்திடுந் தோறும்

எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பு

எரிகின்ற தென் செய்வேன் அந்தோ

கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்

குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய் (திருவருட்பா. பிள்ளைப் பெருவிண்ணப்பம், முறையீடு. 3)

என்று பிறர் பசி கண்டு துயருற்றுத் தன் உள்ளமும் உடலும் எரியும் வேதனையை அடைந்த வள்ளலார் சொல்லினைத் தமிழ்ச் சமூகம் செவிமடுத்திருந்தால், பல ஆயிரம் பேர் உயிர் பிழைத்திருக்கலாம். 

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்றேன்' என்று பயிர்களுக்கும் இரங்கிய வள்ளலார் இன்று நம்மிடையே இல்லை. ஆனபோதும் அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் எரிகிறது. ஓரிடத்தில் ஓர் அடுப்பு உலகின் துயர் தீர்த்திடாது. நம் எல்லோர் மனதிலும், அவருடைய லட்சியம் இடம் பெற்று, பசியுற்றோர் பிணியினைப் போக்கும் வண்ணம் செயல்பட வேண்டும். அதுவே வள்ளலார் காட்டிய உன்னதமான இறைவழிபாடு ஆகும்.