
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

ஏப்ரல் 12, 2015. அன்றைக்கு பாரிஸ் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் உலகின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துபோனது. ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல மூலைகளில் மாரத்தான் பந்தயம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. பாரிஸில் நடந்த அந்தப் பந்தயம் மட்டும் உலகின் கவனத்தை ஈர்த்தது ஏன்? காரணம், அதில் கலந்துகொண்ட ஒரு பெண்.
அவர் பெயர் சியாபதோ சானே (Siabatou Sanneh), வயது 43. ஆப்பிரிக்கக் கண்டத்திலிருக்கும் காம்பியா நாட்டிலிருந்து வந்திருந்தார். சுமார் 42 கி.மீ தூர மாரத்தான்... எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, சியாபதோ மட்டும் நடந்துகொண்டிருந்தார். அவர் தலையில் ஒரு பிளாஸ்டிக் கேன். அதில் 22 லிட்டர் தண்ணீர் இருந்தது. அது மட்டுமல்ல, அவர் கழுத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த அட்டையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது... `ஆப்பிரிக்காவில் பெண்கள் தண்ணீருக்காக இவ்வளவு தூரம் நடக்கவேண்டியிருக்கிறது. இந்த தூரத்தைக் குறைக்க எங்களுக்கு உதவுங்களேன்.’
அன்றைக்கு சியாபதோ மாரத்தான் போட்டியை முழுமையாக முடிக்கக்கூட இல்லை. சுமார் இரண்டு மணி நேரம் நடந்திருப்பார். அதற்கும் பத்திரிகையாளரிடம் காரணம் சொன்னார்... ``இன்னிக்கி எடை கொஞ்சம் அதிகமா இருந்தது. அதான் நடக்க முடியலை.’’
ஏழு வயதிலிருந்து தண்ணீருக்காக ஐந்து மைல் தூரம் நடப்பது சியாபதோவுக்குப் பழகிவிட்டிருந்தது. குடிப்பதற்கும் சமைப்பதற்கும் துணி துவைப்பதற்கும் தேவைப்படும் தண்ணீருக்காக ஒரு நாளில் ஒரு முறையல்ல... பலமுறை அவர் அத்தனை மைல் தூரம் நடக்கவேண்டியிருந்தது. ``இதுதான் எங்கள் தினசரி வாழ்க்கை. தண்ணீர் எடுத்து வருவதைத்தான் நாள் முழுக்கச் செய்துகொண்டிருக்கிறோம். முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால், மழை நாள்கள் மோசமானவை. தண்ணீர் சுத்தமானதாக இருக்காது. அதனாலேயே குழந்தைகளுக்கு ஜுரம், வயிற்றுப்போக்கு என என்னென்னவோ வந்துவிடும்’’ என்று மனம் வெதும்பிச் சொன்னார் சியாபதோ.

அன்றைக்கு அந்தப் பெண்மணி எடுத்த முயற்சிக்குக் கிடைத்தது வெற்றி. உலகின் பல மூலைகளிலிருந்தும் நிதி உதவிகள் குவிந்தன. `வாட்டர் ஃபார் ஆப்பிரிக்கா’ என்ற அமைப்பு நிதி திரட்டி, உதவ முன்வர, தண்ணீருக்கு வழி பிறந்தது. காம்பியாவிலிருக்கும் எத்தனையோ பெண்கள் சியாபதோவால் பலனடைந்தார்கள். சியாபதோவின் வீட்டிலிருந்து சில அடிகள் தூரத்திலேயே அடிகுழாய் வந்துவிட்டிருந்தது.
தண்ணீர் அத்தியாவசியமானது என்று தெரிந்திருந்ததால்தான் அப்பர் பெருமான் ‘மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்’ என்று பாடினார். அதாவது, இறைவனே இடியும் மின்னலும் மழையுமாக இருக்கிறார். மாணிக்கவாசகர் விண்ணிலும் மண்ணிலும் காற்றிலும் நீரிலும் நெருப்பிலும் இறைவனைப் பார்த்தார்.
‘விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது’
என்றார் திருவள்ளுவர். மழை பெய்யவில்லையென்றால் பூமியில் பசும்புல்லைக்கூடப் பார்க்க முடியாது. தானமும் தர்மமும் நடைபெறாது.
``உலகம் நல்லதா... கெட்டதா?’’ ஒரு ஞானியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான் ஒருவன்.
ஞானி ``பூனையின் பல் நல்லதா... கெட்டதா?’’ என எதிர்க்கேள்வி கேட்டார்.
உண்மை இதுதான். பூனையின் பற்களைப் பற்றிச் சுண்டெலியிடம் கேட்டால், `ஐயோ... அது எமனின் குடியிருப்பு’ என்று பயந்தபடி சொல்லும். அதே கேள்வியை ஒரு குட்டிப் பூனையிடம் கேட்டால், ‘பூனையின் பற்களா... அவை எங்களைப் பாதுகாக்கிற கவசம்’ என்று சொல்லும். தன் கூர்மையான பற்களால், பாதிப்பு ஏற்படாமல், மெதுவாகக் குட்டிப் பூனையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தூக்கிச் செல்வது தாய்ப் பூனையின் பாசம். உலகமும் இப்படித்தான். நன்மையே நடைபெற வேண்டும் என்றால், இயற்கையின் ஒத்திசைவு நமக்குத் தேவைப்படுகிறது.
தண்டியடிகள் என்ற நாயனார் திருவாரூர் கமலாலயத்தின் குளத்தைத் தூர் வாரினார். அவரை அந்தப் பணியைச் செய்ய விடாமல் தடுத்தார்கள் சிலர். தண்டியடிகளுக்குப் பார்வை இல்லை. அந்த அடியவர், திருக்குளத்தின் உள்ளே ஒரு கல்லை நட்டு அதில் ஒரு கயிற்றைக் கட்டி, கரையில் இன்னொரு நட்ட கல்லோடு அதைப் பிணைத்திருப்பார். பிறகு, குளத்துக்குள் இறங்கி நடந்து சென்று தூர்வாரும் திருப்பணியைச் செய்தார்.
அவரை அந்தப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தார்கள் சில சமணர்கள். அவரைத் தள்ளிவிட்டார்கள்; அவரின் மண்வெட்டியையும் கூடையையும் பறித்து எறிந்தார்கள்; அவமானப்படுத்தினார்கள். தண்டியடிகள், ஆண்டவனிடம் மனம் நொந்து முறையிட்டார். அன்று இரவு இறைவன், நாயனாரின் கனவில் தோன்றினார். `அன்பனே, கவலையுறாதே. உன் கண்கள் ஒளிபெற அருள் செய்வோம்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அதே நேரத்தில், சோழ மன்னனின் கனவிலும் தோன்றி, `அடியவர் செய்யும் திருப்பணிக்கு இடையூறு நேர்கிறது. அதைச் சரி செய்க’ என்று ஆணையிட்டார். மறுநாள் மன்னன், தண்டியடிகளைச் சந்தித்தான். விவரம் கேட்டறிந்தான். சமணர்களை அழைத்து, `என்ன நடந்தது?’ என்று விசாரணை செய்தான். சமணர்கள், `இந்த அடியவர் பார்வை பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டுப் போய்விடுகிறோம்’ என்று உறுதி கூறினார்கள்.
தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் சென்றான். மன்னன் கரையிலே நின்று, `தண்டியடிகளே, சிவனருளால் பார்வை பெறுதலைக் காட்டுக’ என்றான்.
நாயனார் மனமுருகி, `நான் சிவபெருமானுக்குத் தொண்டு செய்வது உண்மையாயின், இத்திருக்கோயிலின் திருத்தொண்டைச் செய்வது உண்மையாயின் பார்வை பெறுதல் வேண்டும்’ என்று வேண்டினார். அற்புதம் நிகழ்ந்தது. அவர் கண்ணொளி பெற்றார். தண்டியடிகள் திருவாரூர்த் திருக்குளத்தில் தம் திருத்தொண்டைத் தொடர்ந்தார்.
திருவாரூர்த் திருக்கோயில்... `கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி’ என்னும் பெருமைக்குரியது. இரு பெரிய ஆழித் தேர்கள்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம். 1992-ஆம் ஆண்டு நம் மகாசன்னிதானம், திருவாரூர்த் தொழிலதிபர் மைதீன் கோவிந்தராசனைச் செயலராகக் கொண்டு,பொதுமக்களின் ஆதரவோடு, இயந்திரங்கள் இன்றி, மனித உழைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, கமலாலயத்தில் தூர் வாரும் பணியைச் செய்தார்கள். பின்னர் தமிழக அரசின் நிதி உதவியும் அந்தத் தூர் வாரும் பணிக்குக் கிடைத்தது. நீர் ஆதாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்கிற அழுத்தமான நோக்கம் மட்டுமே நம் மகாசன்னிதானத்துக்கு இருந்தது.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, இறைவனே அதைத் தடுப்பதற்குத் தன்னார்வத் தொண்டராக, ஓர் ஏழைக் கிழவிக்குக் கூலியாளாகப் பணி செய்தார்.
இவையெல்லாம் நம் நீர் ஆதாரங்கள், சமய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தன என்பதற்கான அடையாளங்கள். குறிப்பாக, நம் நதிக்கரை நாகரிகங்கள் தமிழர் பண்பாட்டுத் தொட்டில்கள். காவிரி ஆற்றங்கரையிலிருக்கும் எண்ணற்ற ஆலயங்கள், நமக்கு ஆன்மிகத்தை, நாகரிகத்தை, வாழ்வியலைக் கற்றுத் தந்திருக்கின்றன.
ஒரு ஞானியிடம், ``நாங்கள் தீர்த்த யாத்திரைக்குச் செல்கிறோம்’’ என்றார்கள் சீடர்கள். ஞானி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து, நீராடும்போது பாகற்காயையும் சேர்த்து நீராட்டிவிட்டுத் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி சொன்னார். சீடர்கள் எல்லாத் தீர்த்தங்களிலும் தங்களோடு, பாகற்காயையும் மூழ்கவைத்து எடுத்தார்கள். தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பினார்கள்.
``எல்லாத் தீர்த்தங்களிலும் இந்தப் பாகற்காய் நீராடியதா?’’ குருநாதர் கேட்டார்.
``ஆமாம்.’’
குருநாதர் அந்தப் பாகற்காயைச் சமைக்கச் சொன்னார். அந்தப் பாகற்காய் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. சீடர்களின் முகத்தில் கசப்பின் உணர்வு.
``எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடிய பிறகும், பாகற்காய் ஏன் இனிப்பாக மாறவில்லை?’’ ஞானி கேட்டார். சீடர்களிடம் பதிலில்லை.
இப்படித்தான், கசப்பைச் சுமந்துகொண்டிருக்கும் பாகற்காயைப்போல நாமும் மனதில் கசடுகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். இதயத்தில் அன்பு ஒளியை ஏற்றிவைக்க முடியாதவர்களால், எல்லா இடங்களிலும் இறையருளை தரிசிக்க முடியாது. இதயத்தில் அன்பு ஒளியை ஏற்றிவைத்தால், இதயத்துக்குள் இருக்கும் மாசுகள் அகன்றால், அது அன்பு மயமாக இருந்தால் புனித நீராடிய மகத்துவத்தைப் பெறுவோம்.

இந்தியாவின் புகழ்மிக்க கங்கைக் கால்வாய்த் திட்டத்தை உருவாக்கிய பேயர்டு ஸ்மித் என்ற ஆங்கிலேயப் பொறியாளர், கரிகாலன் கட்டிய கல்லணையை வந்து பார்த்தார். சில நிமிடங்களில், ``மானுடத்தின் மிகப் பெரிய பொறியியல் சாதனை’’ என்று தன்னை மறந்து வியந்து கூறினார். கரிகாலனின் கல்லணை, அறிவியல் தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்தில் நிகழ்ந்த அபார சாதனை.
தண்ணீர்... பாய்ந்தால் ஆறு; ஓடினால் ஓடை; வீழ்ந்தால் அருவி; நின்றால் குளம்; நிறைந்தால் ஏரி; கடந்தால் கடல். தண்ணீர் ஒன்றுதான்... பெயர் மட்டும் வெவ்வேறு.
பழந்தமிழர்கள் நீர்நிலைகளுக்கு அகழி, அருவி, ஆறு, ஏரி, கடல் என்று அளித்த பெயர்கள் நமக்குப் பழக்கமானவை. கடலருகே தோண்டிக் கட்டிய கிணற்றுக்கு `ஆழிக் கிணறு’ என்று பெயர். பல வகைகளில் பயன்படும் நீர்த்தேக்கம் `இலஞ்சி.’ மக்கள் பருகும் குடிநீருக்காகப் பயன்படுத்தும் நீர்நிலை `ஊருணி.’ பூமிக்கடியிலிருந்து வரும் தண்ணீர் `ஊற்று.’ வாய்க்கால் வழியே ஓடுவது `ஓடை.’ சரளை நிலத்தில் அகச்சுவர் கட்டிய கிணறு, `கட்டுக் கிணறு.’
பாண்டி மண்டலத்தில் ஏரியைக் `கம்வாய்’ என்பார்கள். அது பின்னாளில் `கண்மாய்’ ஆனது. உடைப்பு எடுக்காமல் உறுதியாகக் கட்டப்படும் பாசன நீர்த்தேக்கம், `கலிங்கு.’ நீர் ஓடும் வழி, `கால்வாய்.’ பெரும் குட்டை, `குட்டம்.’ சிறு குட்டை `குட்டை.’ குளிக்கும் சிறிய நீர்நிலை, `குண்டம்.’ குளிப்பதற்கு ஏற்ற சிறிய குளம் `குண்டு.’ குடைக் கிணறு `குமிழி.’ ஆர்ட்டிஷியன் கிணறு, `குமிழி ஊற்று.’ ஓர் ஒழுங்கில் அமையாத நீர்நிலை `கூவம்.’ ஆழமற்ற கிணறு `கூவன்.’ பெருங்கிணறு, `கேணி.’ தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை `சிறை.’ மலையில் இயற்கையாக அமைந்த நீர் நிலை, `சுனை.’ பாசிக்கொடி மண்டிய குளம் `சேங்கை.’ தொண்டை மண்டலத்தில் ஏரிக்குப் பெயர் `தாங்கல்.’ கோயிலருகே உள்ள நீராடும் குளம் `திருக்குளம்.’ தெப்பம் சுற்றி வரும் குளம் `தெப்பக்குளம்.’ மைய மண்டபத்தோடுகூடிய, தாமரை முதலிய நீர்த் தாவரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை நீர்நிலை `பொய்கை.’ ஆற்றிலுள்ள அபாயமான பள்ளம், `மடு.’
அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் `இராஜராஜேச்சரம்’ என்ற நூலில் சோழர்கள் வடிவமைத்த நீர்நிலைகளைப் பற்றி விளக்குகிறார். ஏரிகள், ஒவ்வோர் ஆண்டும் தூர் வாரவேண்டிய அவசியமே இல்லாதவாறு வடிவமைக்கப்பட்டன. ஏரியின் முகத்துவாரத்தில் `குமிழித் தூம்பு’ என்ற ஒன்று இருக்கும். மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது, நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீரில் நீந்தி, முகத்துவாரத்தை அடைந்து, குமிழித் தூம்பை மேலே தூக்குவார். அதனடியில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் துளை வழியே நீர் வெளியேறிவிடும். அதற்கு ‘நீரோடித் துளை‘ என்று பெயர். கீழேயிருக்கும் துளையில் நீர் சுழலும். அது சுழலும்போது, ஏரியின் சேற்றுப் பகுதி அதன் வழியே வெளியேறிவிடும். அதற்குப் பெயர் `சேறோடித் துளை.’ இது, பொங்கி வரும் நீரிலுள்ள சேற்றை வெளியே அனுப்பிக்கொண்டே இருக்கும். அந்த வெள்ளத்தில் உபரித் தூர் வெளியேறுவதால், ஏரிகளில் தூர் அடையாமல், நீரோடு சேர்ந்து வெளியே சென்றுவிடும். இதனால் ஏரியைத் தூர் வாரவேண்டிய அவசியம் இல்லாமல் எப்போதும் அது தூய்மையாகவே இருக்கும். எப்பேர்ப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம்! தண்ணீர், அதன் அவசியம், அதை ஏன் சேமிக்க வேண்டும், எப்படிச் சேமிக்கலாம்... பேச நிறைய இருக்கின்றன. அடுத்த இதழில் பார்க்கலாமா?
- புரிவோம்...
- படம்: கே.ராஜசேகரன்