மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 23

அன்பே தவம் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 23

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 23

தியப் பொழுது. சுட்டெரிக்கும் வெயில். வெப்பக் காற்றின் வேகம் தாளாமல், மரம் செடி கொடிகளிலிருந்த இலைகளெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தன. குன்றக்குடி சண்முகநாதப் பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக நடந்து வந்துகொண்டிருந்தார் பழனியப்ப செட்டியார். ஓரிடத்தில் அந்தக் காட்சியைப் பார்த்தார். ஒரு மூதாட்டி, தன் நடுங்கும் கரங்களால் ஒரு குச்சியைவைத்து, மண்ணைத் தோண்டி, பள்ளம் பறித்துக்கொண்டிருந்தார். கொளுத்தும் கோடை, கடப்பாரையாலேயே சிரமப்பட்டுப் பள்ளம் தோண்டும் அளவுக்கு இறுகிப்போயிருந்த மண், தன் தளர்ந்த கரங்களால், வெற்றுக்குச்சியால் பள்ளம் பறித்துக்கொண்டிருந்த மூதாட்டி... பழனியப்ப செட்டியாரால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை.

``ஏனம்மா... இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

``ஐயா... கோடையில் வறட்சி என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. தாகம் நமக்கு மட்டுமல்ல. ஆடு மாடுகளுக்கும் இருக்குமல்லவா...  அவற்றின் தாகம் தீர்க்க இந்த இடத்தில் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் நன்றாக இருக்குமே என்று பள்ளம் தோண்டுகிறேன்.’’ 

மெய்சிலிர்த்துப்போனார் பழனியப்ப செட்டியார். கால்நடைகளுக்காகக் கருணை பொங்கும் அந்தத் தாயுள்ளம் அவர் இதயத்திலும் இரக்கத்தைச் சுரக்கச்செய்தது. அடுத்த நாளே வேலையை ஆரம்பித்தார். அதே இடத்தில் ஒரு குளத்தை வெட்டினார். கற்களால் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட பிரமாண்டமான குளம் உருவானது. அதுவல்ல அவரது சாதனை. அந்தக் குளத்துக்குத் தன் பெயரை வைக்காமல், `பழனியாயி ஊருணி’ என்று அந்த மூதாட்டியின் பெயரையே வைத்தார். 

இன்றைக்கும் சின்னக் குன்றக்குடியில் `பழனியாயி ஊருணி’ இருக்கிறது;  இதனருகிலுள்ள மண்டபத்தில் தைப்பூசத்தின் 10-ஆம் திருநாளன்று குன்றக்குடி அருள்தரு சண்முகநாதப் பெருமான் எழுந்து, அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். 

 தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை சிறப்பாக இருந்திருக்கிறது.  தமிழகத் திருக்கோயில்களில், திருக்குளங்கள் வெகு கவனமாகப் பராமரிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில், எல்லாத் திருக்கோயில்களிலும் கற்சுவர்களைக் கொண்டு மிகப் பிரமாண்டமாகத் திருக்குளங்களை அமைத்திருக்கிறார்கள் தமிழர்கள்.  திருக்கோயில்களிலிருந்து வெளியேறும் மழைநீரையும், அந்தந்த ஊரில் பெய்கிற மழைநீரையும் வாய்க்கால்கள் வழியாக ஓடச்செய்து, கோயில் குளத்தை நிரப்பும் தொழில்நுட்பத்தோடு குளங்களை அமைத்திருக்கிறார்கள். 

அன்பே தவம் - 23

வைகையை நீர்ப்பெருக்கெடுத்து ஓடவைக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதிலுக்குப் பிறகு வருவோம். சோம.இராமசாமி... காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், புவியியல் ஆய்வாளர். தடம் மாறிய நதிகளைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்திருப்பவர். `சிவகங்கை மாவட்டத்தில் பூமிக்கடியில் தண்ணீர் கடலைப்போல் இருக்கிறது’ என்று தன் செயற்கைக்கோள் ஆய்வு வழியே நிரூபித்திருப்பவர். அவர், சில டெல்டாக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சரி... டெல்டா என்றால் என்ன? ஆறு, மலை போன்ற உயரமான இடத்தில் தோன்றி, பள்ளத்தை நோக்கி ஓடி வரும். அப்போது அதிக வேகத்தோடு, வண்டல் உள்ளிட்டவற்றை அடித்துக்கொண்டு வரும். ஆறு, அது முடிவடையும் இடத்தில் பரந்து விரிந்து தன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும்; அதனால், அது அடித்துக்கொண்டு வந்த பொருள்கள் அங்கேயே படிந்துபோகும். அப்படிப் படிந்த பொருள்கள் நாளடைவில் ஒரு நிலப்பரப்பாக உருவாகும். அந்த நிலப்பரப்புதான் டெல்டா.  

சோம.ராமசாமியின் ஆய்வுப்படி, மதுரையிலிருந்து புறப்படும் வைகை நதி சிவகங்கை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் அருகே கடலில் கலக்கிறது.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மதுரைவரை இருந்தபோது, வைகை நதி தனது முதல் டெல்டாவை மதுரைக்கு மேற்கே கொட்டி மறைந்திருக்கிறது.

பின்னர் கொச்சி - ராமேஸ்வரத்துக்கு இடையே பூமி மேலே எழும்பியதால், கடல் பின்வாங்கி திருப்புவனத்தில் நிலை கொண்டிருந்தது. அதனால் வைகை அங்கு தனது இரண்டாவது டெல்டாவை உருவாக்கி மறைந்திருக்கிறது.

    கடல் மேலும் பின்வாங்கி பரமக்குடியை அடைந்து, பின்னர் அங்கிருந்து மேலும் பின்வாங்கி தற்போதைய ராமநாதபுரம் - மண்டபத்தை அடைந்தது. அதனால் பரமக்குடியை அச்சாகவைத்து மிகப் பெரிய தனது மூன்றாவது டெல்டாவை அங்கிருந்து ராமநாதபுரம்வரை உருவாக்கியிருக்கிறது வைகை.

     இந்த டெல்டாக்கள் மதுரைக்கு மேற்கேயும், திருப்புவனத்திலும், பரமக்குடியிலும் அச்சுகளை வைத்து விரித்ததுபோல உருவாகியிருக்கின்றன. அதாவது, பனை ஓலை விசிறி வடிவில் டெல்டாக்களையும், விசிறியின் நரம்புகள் போன்ற கிளை நதிகளையும், அந்தப் பகுதிகளில், ஒன்றன் பின் ஒன்றாக வட்ட வடிவில்  ஆயிரக்கணக்கான  பிறை வடிவக் குளங்களையும் உருவாக்கி, அவற்றில் இந்தக் கிளை நதிகள் வெள்ளத்தைக் கொட்டியிருக்கின்றன. இதனால் மதுரைக்கு மேற்கேயுள்ள சிறிய முதல்  டெல்டாவில் சில குளங்களும், திருப்புவனத்திலுள்ள இரண்டாவது டெல்டாவில் சுமார் 70 - 100  பிறைவடிவக் குளங்களும், பரமக்குடி-ராமநாதபுர மூன்றாவது  டெல்டாவில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பிறைவடிவக் குளங்களும் உருவாகியிருக்கின்றன. இது ஓர் இயற்கையின் அற்புதம். ஆனால், இந்தக் கிளை நதிகள் அனைத்தும் புதையுண்டுவிட்டன; பிறை வடிவக் குளங்களும் மண் செரிமானமடைந்து, தூர்ந்துபோயிருக்கின்றன. இந்தப் புதையுண்ட கிளை நதிகளையும்  குளங்களையும் புத்துயிர் பெறச் செய்தாலே போதும்... வறண்ட வைகையில் நீர்வளம்  பெருகிவிடும்.

நம் ஆதீனம், எப்போதுமே நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை காட்டிவந்திருக்கிறது. திருமடத்துக்கு எதிரேயிருக்கிறது, மன்னர்கள் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட மருதாபுரித் திருக்குளம். இதைத் தூர் வாரியபோது, 700-க்கும் மேற்பட்டவர்கள் முன்வந்து வேலை செய்தார்கள். அதைத் தற்செயலாகப் பார்த்த  அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சண்முகம் இரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். குன்றக்குடியிலிருக்கும் சரவணப் பொய்கை, வையாபுரிக் குளம், நல்ல தண்ணீர்க் குளம், ஊருணி, பெரிய கண்மாய், சாலிக் கண்மாய்... எல்லாமே தூர்வாரப்பட்டு, பராமரிக்கப்படு கின்றன.  இவை தவிர, 22-க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. நல்ல தண்ணீர்க் குளத்துக்குப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருக்கோயில் சீதளிக் குளம் அரசின் நிதி உதவியோடு முழுமையாக, கட்டுமானச் சுவர்கள் கட்டப்பட்டுச் சீரமைக்கப்பட்டது.

குன்றக்குடியில் நீர் பிரி முகடு மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். மண்ணை உழவுசெய்தல், பல வகை மரக்கன்றுகளை நடுதல், கசிவுநீர்க் குட்டைகள் அமைத்தல் முதலியவை அதன் முக்கிய அம்சங்கள். கசிவுநீர்க் குட்டையைச் சுற்றி 10 ஏக்கர் அளவிலுள்ள மரங்களின் வேர்களுக்குத் தண்ணீரைக் கொண்டுபோய்ச் சேர்த்து, அவற்றை, வறட்சியால் பட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இந்தப் பணிகளுக்காக மாநில அளவில் பாராட்டும் பெற்றது, நமது ஆதீனம். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டக் காரணம் இருக்கிறது. நாம் ஒவ்வொருவருக்குமே நீர் குறித்த அக்கறை, இன்றைய அவசியத் தேவை.

தமிழ்நாட்டில் ஓராண்டுக்குக் கிடைக்கும் நீரின் அளவு கோதாவரியில் மூன்று நாள்கள் ஓடும் வெள்ளத்தின் அளவு, கங்கை நதியில் ஐந்து நாள்கள் ஓடும் வெள்ளத்தின் அளவு. `தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரில் 65% விவசாயத்துக்கும், 20% தொழிற்சாலைகளுக்கும், 10% குடிநீருக்கும், 5% இதர உபயோகத்துக்கும் செலவிடப்படுகிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

உலகம் முழுக்க, சுகாதாரமான நீரில்லாமல், 84 கோடியே 40 லட்சம் பேர் வாழ்கிறார்கள்; நீர் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை மரணமடைகிறது. உலக அளவில் குழந்தை இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக இருக்கும் வயிற்றுப்போக்கு சுகாதாரமில்லாத நீரால் ஏற்படுவதே. நீர் தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. 

இந்தியாவில் சில இடங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு... சில பகுதிகளில் வறட்சி... காரணம் என்ன? பேராசிரியர் சோம.ராமசாமியே அதற்கும் விளக்கம் தருகிறார்... `இமாலயப் பகுதிகளில் பனி உருகுவதாலும், கோசி நதியில் கோசிக் கூம்புப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்துவருவதாலும் உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.  இந்தியப் புவித்தட்டு இமயமலையுடன் மோதுவதால், பிரம்மபுத்திரா நதிப் பள்ளத்தாக்கு வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகிறது. வெடிப்புகளின் வழியே பூமி அசைவதால், இந்தியாவின் பல நதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. நதிகளில் உருவாகும் வளைவுகளால் டெல்லி யமுனை நதி, குஜராத் மாநிலத்தின் நர்மதை நதி முகத்துவாரங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. பூமி கீழே இறங்கிக்கொண்டே இருப்பதால் மைசூர் மற்றும் திருச்சிராப்பள்ளிப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது.’

கேரளாவில் 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், சென்னை மாநகரைச் சூறையாடிய வெள்ளம் ஆகியவற்றுக்கு இயற்கைச் சீற்றம் காரணம். மனிதனின் வளர்ச்சித் திட்டங்களின் இடையூறுகளால் தூண்டப்படும் வெள்ளமும் உண்டு.  
 
குழாயடியில் சண்டை நடைபெறுவதுபோல், மாநிலங்களுக்கிடையே தண்ணீர்ச் சண்டை தீவிரமாக நடைபெறுகிறது.  கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் காணாமல் போய்விட்ட தாகப் புகார் கொடுக்கும் அளவுக்குச் சமூகம் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சியெடுத்துக்கொண்டே இருக்கிறோம். நிலத்தடி நீர் மட்டம் வெகுபாதாளத்துக்குச் செல்வதால் ஏற்படும் ஆபத்து நமக்குப் புரிவதில்லை. `ஹரியானாவில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டதால், நில அசைவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சினால், அதற்குச் செயற்கையாக வெள்ள நீரைக்கொண்டு செறிவூட்டி, உயரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தேவை ஏற்படுகிறது.

செட்டிநாட்டு வீடுகளின் முற்றங்கள், மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அதைப்போல் இனி கட்டப்படும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட வேண்டும்.

குளங்கள், கண்மாய்களின் வரத்துக் கால்கள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றன.  குளத்துக்கும் கண்மாய்க்கும் இடையே தண்ணீர் விழுந்து ஓடிவரும் பகுதியை `நீர்ப் புரளி’ என்பார்கள். இன்று நீர்ப் புரளிகள், வீடுகளாக மாறிவிட்டன.  வயல்கள், வீட்டடி மனைகளாக மாறிவிட்டன.  கிராமங்கள், நகர்களாக உருவாகிக்கொண்டிருக்கின்றன.  இந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன? தண்ணீர்த் தட்டுப்பாடு. கிராமங்களில் குளங்களில் தண்ணீரில்லை.  தார்ச்சாலைகளை  இணைத்திருக்கிறோம்; தண்ணீர்ச் சாலைகளை நாம் இணைத்திருக்கிறோமா... ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஓடும் நதிகளையாவது இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்திருக்கிறோமா?

நதி நீர் இணைப்பு இன்றைய அவசியத் தேவை. நீர்நிலை ஆதாரங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.  அதோடு, `மழைநீர் நம் உயிர்நீர்’ என்று செயல்படவேண்டியிருக்கிறது. 

`தண்ணீர் பட்ட பாடு’, `தண்ணீரைப்போல் செலவழித்தான்’ என்றெல்லாம் சொல்வார்கள். இன்றைக்கு நிலைமை தலைகீழ். தண்ணீரை, தங்கத்தைப்போலப் பாதுகாக்கவேண்டிய வர்களாக நாம் இருக்கிறோம்.

பெய்யும் மழைநீர், பூமிக்கடியில் செல்லும் மழைநீர், நிலத்தால் உறிஞ்சப்படும் மழைநீர், நிலத்திலிருந்து உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் நீர்... எல்லாவற்றையும் கணக்கீடு செய்யவேண்டியிருக்கிறது. உறிஞ்சப்படும் நிலத்தடி நீருக்கு இணையாக நிலத்தடி நீரைப் பேணிப் பாதுகாக்கவேண்டியிருக்கிறது. இந்தக் கணக்கில் தடுமாறினால், இயற்கை நம்மை ஏமாற்றிவிடும்; பேராபத்தில் தள்ளிவிட்டுவிடும். இந்தத்  தொலைநோக்குப் பார்வை வேண்டும். நீர் ஆதாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் அவசரக் கடமை... நினைவில்கொள்வோம்!

- புரிவோம்...

அடிகளாரைக் கேளுங்கள்

ஆன்மிகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு; வேறுபாடு?
அரவிந்தன், திருவண்ணாமலை

ஆன்மிகம், அக (உள்ள) மேம்பாட்டுக்கு; அறிவியல் புற மேம்பாட்டுக்கு. உலகம் வளர்ச்சியடைய, இரண்டும் வளர்ச்சிபெறவேண்டியது அவசியம்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் முக்கியத்துவம் என்ன?
செந்தாமரை, மேலப்பாவூர்


தாய்மொழி வழியே கல்வியும் அறிவியலும் போதிக்கப்படவேண்டியது மிக அவசியம். வளர்ந்த நாடுகள் அனைத்தும் தாய்மொழி வழியேதான் கல்வி கற்பிக்கின்றன. 

அன்பே தவம் - 23

இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன்  மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில், அவர்களால் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது என்பது சாத்தியமா?
சந்திரன், திருவள்ளூர்

பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் பணிச் சுமைகளுக்கிடையே குழந்தைகளுக்காக நேரத்தை அவசியம் ஒதுக்க வேண்டும்.  அன்பும் அக்கறையும் எப்போதும் அவர்களிடம் காட்டுதல் வேண்டும். குழந்தைகள் தவறு செய்யும்போது திருத்த வேண்டும். குழந்தைகளிடம் அன்பும் அரவணைப்பும் அவசியம். கனிவும் கண்டிப்பும் கட்டாயம்.

‘அன்பே சிவம்’ என்கிறது நம் ஆன்மிகம். எனில், கடவுள் வழிபாடு என்ற ஒன்று தனியாக அவசியம்தானா?
சிதம்பரம், கடலூர்

`கடவுள் வழிபாடு’ என்பதே அன்பை மையமாக வைத்துத்தான். கடவுள் வழிபாட்டையும் அன்பையும் பிரிக்க இயலாது. பிரிக்கக் கூடாது.

அன்றைக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர், கடவுளுக்கு நிகராகப் போற்றப்பட்டார். ஆனால், இன்று ஆசிரியர்களை மதிக்காத போக்கு காணப்படுகிறது. காரணம், குழந்தைகளின் வளர்ப்பு முறையா அல்லது ஆசிரியர்களின் செயல்பாட்டில் உள்ள குறைகளா?
சந்தான கிருஷ்ணன், அரியலூர்


ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி. அது, குறைய வேண்டும்.

வளரும் தலைமுறையினர், இன்றைக்கு சமூகத்தில் காணப்படும் கேடுகளுக்கு பலியாகாமல், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
சித்திரகுமார், அரியமங்கலம்   


ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, நேர்மை ஆகியவற்றை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க…’ என்கிறது திருக்குறள். பிறருக்கு மறந்தும்கூட கேடு நினைக்கக் கூடாது.

`இன்றைக்கு இருக்கும் கல்வி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்’ என்பது பலருடைய கருத்தாக உள்ளது. மாற்றங்கள் தேவைதானா, அவை எப்படிப்பட்ட மாற்றங்களாக இருக்க வேண்டும்?
புதியவன், நாகப்பட்டினம்


மதிப்பெண்களுக்கான கல்வியாக மட்டும் இல்லாமல், மனித மேம்பாட்டுக்கான கல்வியாக அவசியம் இருக்க வேண்டும். தேர்வுக்கான கல்வியாக மட்டும் இல்லாமல், வாழ்க்கைக்கான கல்வியாக இருக்க வேண்டும்.

ஒருவருடைய சிறப்பு, அவர் பிறந்த குலத்தால் அமைவதா அல்லது அவர் இந்தச் சமூகத்துக்கு ஆற்றிய நற்பணிகளால் ஏற்படுவதா?

அன்பழகன், செஞ்சி


‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ – பிறப்பால் அனைவரும் சமம். அன்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றால் மனிதன் தானே  உயர்கின்றான்.

யற்கையை நேசிப்பவர்களும், இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களும் தண்ணீரின் அருமை தெரிந்தவர்கள். `நம் வாழ்க்கைச் சூழலில் தண்ணீருக்கு வேறு மாற்றே இல்லை’ என்பதை அழுத்தமாக உணர்ந்துவைத்திருப்பவர்கள். அதற்கு வாழும் உதாரணம், கமலா பூஜாரி (Kamala Pujari).

அன்பே தவம் - 23

ஒடிசாவின் கோராபுத் (Koraput) மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு (2018), கமலாவின் 69ஆவது வயதில், அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு. வெற்று வார்த்தையல்ல... உண்மையிலேயே பட்டியலிட முடியாத அளவுக்கு வெகு நீளமானது கமலாவின் சாதனை. இயற்கை வேளாண்மையை முன்னெடுத்தார். அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளையும் இயற்கை வேளாண்மைக்குத் திருப்பினார்; தன் பகுதியிலிருந்த விவசாயிகளெல்லாம் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிடக் காரணமாக இருந்தார்; அதற்காக கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்றிருக்கிறார்; நூற்றுக்கணக்கான அரிய ரக உள்நாட்டு நெல் ரகங்களைப் பாதுகாத்த பெருமைக்குரியவர். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்காகவே உள்ளூரில் ஒரு விதை வங்கியையே நடத்திவருகிறார். நெற்பயிர்களைப் பாதுகாப்பதும் இயற்கை வேளாண்மையும் அவருக்கு இரு கண்கள் போன்றவை.

தன் பங்குக்கு ஒடிசா மாநில அரசு, ஐந்து பேர் கொண்ட திட்டக்குழுவில் கமலாவை உறுப்பினராக்கி, பெருமைப்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத் திட்டக்குழுவில் ஒரு பழங்குடியினப் பெண் உறுப்பினராவது இதுவே முதன்முறை. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு பத்திரிகையாளர் `இந்தக் குழுவில் இருந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். கமலா பூஜாரி பதில் சொன்னார்... ``மரியாதைக்குரிய ஓர் அரசுப் பணி எனக்குக் கிடைக்கும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. எல்லா கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கப் பாடுபடப் போகிறேன். அதுதான் என் முதல் வேலை.’’

அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.  அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரை கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், ,757, அண்ணாசாலை, சென்னை - 600002  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.