மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 24

அன்பே தவம் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 24

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 24

செட்டிநாடு... தமிழ்ப் பண்பாட்டின் தனி வீடு. தமிழர் நாகரிகத்தின் மணிமுடி. அள்ள அள்ளக் குறையாத அமுதத்தமிழை வளர்த்த பூமி. ஆன்மிகம், கலை, கல்வி இவற்றையெல்லாம் செழிப்புற வளர்த்த புண்ணிய நிலம். வற்றாத கொடையளித்த வள்ளல் பெருமான்களைத் தந்த மண்.  அப்படி செட்டிநாட்டு பூமி வழங்கிய கொடை வள்ளல்களில் ஒருவர், அழகப்பச் செட்டியார்.

`கோடி கொடுத்த கொடைஞர்’, `குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்’ என்றெல்லாம் வள்ளல் அழகப்பர் போற்றப்படுகிறார். ஏன்? அவருடைய சொந்த ஊரில், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குக் கட்டட வசதி இல்லை. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரண்மனை போன்ற, கலைநயம் மிக்க தன் வீட்டை ஏழைப் பிள்ளைகள் படிப்பதற்காக அரசுக்கு தானமாகக் கொடுத்தார் அழகப்பர்.

ஏழைப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அவர் அள்ளி வழங்கிய நிதிப் பட்டியல் வெகு நீளமானது. அது, நாடு விடுதலை அடைந்திருந்த தருணம். `கல்வி வெளிச்சம் தேவை’ என்ற முழக்கத்தைக் கல்வியாளர்கள் எங்கும் விதைத்துக்கொண்டிருந்த நேரம். `இங்கிலாந்து, இந்தியாவை அடிமை நாடாக நடத்தியதற்கான அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மைதான்’ என்று கல்வியாளர்கள் நாடெங்கும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அந்நாளைய துணைவேந்தர் ஏ.இலட்சுமணசுவாமி முதலியார் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். 

``இந்தியா விடுதலை அடைந்துவிட்டது. சுதந்திர இந்தியாவில் கிராமப்புற மக்கள் கல்வி பயில்வதற்குப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்குச் செல்வந்தர்களும் வசதி பெற்றவர்களும் உதவ முன்வர வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார். 

அந்தக் கூட்டத்தில் அழகப்பரும் அமர்ந்திருந்தார். இந்த வேண்டுகோளைக் கேட்டதும் சட்டென்று எழுந்தார். துணைவேந்தரின் அருகே போனார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து, ``காரைக்குடியில் கலைக் கல்லூரி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்'’ என்று சொல்லி ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்தார்.  

அன்பே தவம் - 24

`அன்ன சத்திரங்கள் கட்டுவதும், ஆலயங்கள் எழுப்புவதுமே கோடி புண்ணியம்’ என்று நம்பிக்கொண்டிருந்த சமூகத்தில், `அதைவிடக் கோடி புண்ணியம் உண்டு. அது ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று சொன்ன பாரதியின் வாக்கை நனவாக்கிக் காட்டினார் அழகப்பர்.  

இந்திய நாடாளுமன்றத்தில் நேரு ஓர் அறிவிப்பு செய்தார். `எந்த மாநிலம் பதினைந்து லட்ச ரூபாயும், முந்நூறு ஏக்கர் நிலத்துக்கு உரிய ஆவணத்தையும் வழங்குகிறதோ அங்கே ஓர் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்துத் தரப்படும்.’
 
அறிவிப்பு வெளியானதும், அழகப்பர் ஒரு கணம்கூடத் தாமதிக்கவில்லை. உடனே கிளம்பி டெல்லிக்குப் போனார். நேருவைச் சந்தித்தார். பதினைந்து லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும், முந்நூறு ஏக்கர் நிலத்துக்கான ஆவணத்தையும் கொடுத்தார். அப்படி அழகப்பரால் உருவானதுதான் `காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்.’   

கல்லும் முள்ளும் நிறைந்த களர் நிலமான காரைக்குடியைக் கல்வி நகரமாக மாற்றிய பெருமை வள்ளல் அழகப்பரையே சாரும். தொடக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகம் எல்லாம் உருவாகக் காரணமாக இருந்தார்... இவற்றுக்கெல்லாம் மணிமகுடமாக மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம். இந்தியாவில் தனிமனிதக் கொடையில் தொடங்கப்பட்ட ஒரே ஆய்வு மையம். அவர் கொடைக்கு ஈடு இணை இல்லை.

அவர் நடத்திவந்த எத்தனையோ தொழில்களில் விமான சேவையும் ஒன்று. அதன் பெயர் `ஜூபிடர் ஏர்வேஸ்.’ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டபோது, நம் படை வீரர்களுக்கு மருந்தையும் உணவையும் எடுத்துச் செல்ல ஜூபிடர் ஏர்வேஸ் விமானத்தைக் கொடுத்து உதவினார் அழகப்பர். அந்த நேரத்தில் அவருடைய ஒரு விமானம், மலைமுகட்டில் மோதிப் பெரிய விபத்தை எதிர்கொண்டது. அதனால் அவருக்குப் பல கோடி ரூபாய் இழப்பு. ஆனால், அதைப் பற்றி அவர் கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. தொடர்ந்து அவருடைய விமானம் இந்திய தேசிய ராணுவத்தின் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. 

ஒருமுறை மும்பைக்குப் போனார் அழகப்பர். அங்கே `ரிட்ஸ்’ என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று உண்டு. பெரும் பணக்காரர்கள் தங்கும் விடுதி. அதனுள்ளே எளிய, சாதாரணமான தோற்றத்தோடு நுழைந்த வள்ளல் அழகப்பரை ஏற இறங்கப் பார்த்தார் விடுதி மேலாளர்.

``ஓர் அறை வேண்டும்’’ என்று கேட்டார் அழகப்பர்.

``உங்களுக்கெல்லாம் அறை கிடையாது.’’ மேலாளரிடமிருந்து துடுக்காக பதில் வந்தது.

விடுதியின் நான்குபுறத்தையும் தன் கண்களால் அளந்தார் அழகப்பர். ``இங்கே எத்தனை அறைகள் இருக்கின்றன?’’ என்று கேட்டார்.

``ஏன்... இந்த விடுதியை விலைக்கு வாங்கப்போகிறீர்களா என்ன? அறை இல்லையென்றால், கிளம்பவேண்டியதுதானே...’’  என்று ஏளனமாகச் சொல்லிவிட்டார் மேலாளர்.   

அன்பே தவம் - 24

அழகப்பர், ரிட்ஸ் விடுதியிலிருந்து வெளியே வந்தார். ஹோட்டல் முதலாளியின் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்தார். அங்கே போனார். அந்த முதலாளி, அழகப்பரை நன்கு அறிவார். அவரைப் பார்த்ததும் பதறிப்போனார். வணங்கி, வரவேற்றார்.

``உங்களுடைய ஹோட்டலை நான் வாங்கிக்கொள்கிறேன். அதற்கு எவ்வளவு பணமோ அதை இந்தக் காசோலையில் நிரப்பிக் கொள்ளுங்கள்’’ என்று ஒரு வெற்றுக் காசோலையைக் கொடுத்தார். 

முதலாளி உடனே மேலாளரை வரவழைத்தார். ``ஹோட்டலை அழகப்பர் விலைக்கு வாங்கிவிட்டார். எல்லாச் சாவிகளையும் இவரிடம் கொடுத்துவிடுங்கள்’’  என உத்தரவிட்டார்.

இதைக் கேட்டு ஆடிப்போனார் மேலாளர். அவருக்கு அழகப்பரின் பெருமை அப்போதுதான் புரிந்தது. ``ஐயா… என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று உருகிப்போய்ச் சொன்னார் மேலாளர்.

``யாரையும் உருவத்தை வைத்து எடைபோடாதீர்கள். பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்’’ என்ற அழகப்பர், விடுதியின் சாவிகளை அவரிடமே கொடுத்தார். ``நீங்களே மேலாளராகத் தொடர்ந்து இருங்கள்...’’ என்றும் சொன்னார். அழகப்பருக்கு வாரி வழங்குகிற வள்ளல் தன்மையும் உண்டு. தன்மானத்தை, சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத குணமும் உண்டு என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஒருமுறை தன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார் அழகப்பர். வழியில் ஒரு ரயில்வே கேட், ரயில் கடப்பதற்காக மூடியிருந்தது. அவருடைய கார் கேட்டுக்கு அருகே காத்து நின்றது. கொளுத்தும் நண்பகல் வெயில். ஓர் ஏழை மூதாட்டி காரருகே வந்தார். அவர் இடுப்பில் ஒரு கூடை. அது முழுக்க வாடாத வெள்ளரிப் பிஞ்சுகள். கார்க் கதவைத் தட்டி, ``ஐயா... வெள்ளரிப் பிஞ்சு வேணுமா? இன்னிக்குப் பொழப்பே நடக்கலை… காலணாவுக்காவது வாங்கிக்கங்களேன்’’ என்றார். 
அந்தக் குரலைக் கேட்டதுமே அழகப்பருக்கு இரக்கம் சுரந்தது. கார்க் கண்ணாடியை இறக்கி விட்டார். அவருடைய கரம் மூதாட்டியிடமிருந்து வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கிக்கொண்டது. ஒரு நூறு ரூபாய்த்தாளை கிழவியின் கையில் திணித்தார் அழகப்பர்.

``ஐயா... மகராசா… நூறு ரூபாயா... என்கிட்ட சில்லறை இல்லையே...’’ 

``சில்லறையெல்லாம் வேணாம். நீயே வெச்சுக்கோம்மா.’’

அவர்தான் வள்ளல் அழகப்பர் என்பதைத் தெரிந்துகொண்ட மூதாட்டி, அவர் கரத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார். அதோடு நிற்கவில்லை மூதாட்டி. அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கூவி அழைத்தார். அவர்களுக்குத் தன் கூடையிலிருந்த வெள்ளரிப் பிஞ்சுகளையெல்லாம் வாரி வாரிக் கொடுத்தார்.

அழகப்பர் கேட்டார். ``என்னம்மா.. எல்லா வெள்ளரிப் பிஞ்சுகளையும் இலவசமா கொடுத்துட்டீங்களே…’’ 
 
``மகராசன் வள்ளல் கைபட்ட காசு என்கிட்ட வந்ததால, எனக்கும் வள்ளல் தன்மை வந்துடுச்சு...’’ சிரித்தபடி சொன்னார் மூதாட்டி.

அவ்வப்போது கல்லூரி உறவுகளை, தன் குடும்ப உறவுகளாக நினைத்து விருந்துகளை நடத்துவார் அழகப்பர். அந்த நேரத்தில் கல்லூரிப் பணியாளர்கள் அனைவரும் இருக்கிறார்களா என அவரின் கண்கள் அலைபாயும்.
 
ஒருநாள் விருந்துக்கு, கல்லூரியின் கழிவறையைத் தூய்மை செய்யும் கடைநிலை ஊழியர்கள் இருவர் வரவில்லை.

``சுப்பையாவும் கருப்பனும் எங்கே?’’ 

``அவர்கள் வீட்டிலிருக்கிறார்கள். அவர்களுக்கு விருந்து நடப்பது தெரியாது’’ என்று யாரோ சொல்ல, அவர்களை அழைத்துவரத் தன் காரைக் கொடுத்துவிட்டார் அழகப்பர். 

அழகப்பரின் கார், குடிசைப் பகுதிக்குள் நுழைந்தது. கார் சத்தம் கேட்டதும் சுப்பையாவும் கருப்பனும் ஓடி வந்தார்கள். 

``ஐயா அழைத்து வரச் சொன்னார்’’ என்று ஓட்டுநர் சொன்னார்.

``ஐயய்யோ... முதலாளி கார்லயா... நாங்க ஏற மாட்டோம். நீங்க முன்னாடி போங்க. நாங்க பின்னாலேயே ஓடி வந்துர்றோம்.’’

ஓட்டுநர் விடவில்லை. ``உங்களுக்காக ஐயா சாப்பிடாமல் காத்திருக்கிறார். நீங்கள் வந்தால்தான் விருந்து. காரில் ஏறுங்கள்…’’

கடைசியில் இருவரும் கார் டிக்கியில் அமர்ந்துவர ஒப்புக்கொண்டார்கள். அன்றைக்கு அவர்கள் வந்த பிறகுதான், விருந்தைத் தொடங்கினார் அழகப்பர்.

கவிஞர் முடியரசன், வள்ளல் அழகப்பரைப் புகழ்ந்து கவிதைகள் எழுதியிருக்கிறார். `அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்...’ என்கிற கவிதையில் முடியரசன் இப்படிக் குறிப்பிடுகிறார்... ‘அள்ளி அள்ளி வழங்குதற்குக் கையைத் தந்தார். அழகாகப் பேசுவதற்கு வாயைத் தந்தார். எல்லோருக்கும் வாரி வழங்குவதற்காக உள்ளத்தில் துணிவைத் தந்தார். அவரது உடம்பை கொடுநோய்க்குத் தந்தார். தன் செல்வத்தையெல்லாம் ஏழை மக்களின் கல்விக்குத் தந்தார். கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்றபோது, `உயிர் இருக்கிறதே’ என்று சாவுக்குத் தன் உயிரைத் தந்தார்...’

சில செல்வந்தர்கள் தங்களிடமிருக்கும் செல்வத்திலிருந்து சிறிது தர்மம் செய்வார்கள். அழகப்பரோ தன்னிடம் இருப்பதையெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு, செல்வத்தைத் தேடினார்.  ஏழைகள்மீது அழகப்பர் காட்டிய கருணையின் காரணமாகத்தான் அவரை `சமதர்ம முதலாளி’ என்று அழைத்தார் நேரு. இப்படி அவரைப் பற்றி எத்தனையோ நல்ல நல்ல செய்திகள்... அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருந்தது அவர், மக்களிடமும் சமூகத்திடமும்கொண்டிருந்த அப்பழுக்கில்லாத அன்பு.

- புரிவோம்...

படம்: கே.ராஜசேகரன்,

ஓவியம்: பாலகிருஷ்ணன்

அடிகளாரைக் கேளுங்கள்

ஆன்மிகத்தின் மூலம் மக்களுக்கு நல்ல நெறிகளை உணர்த்தவேண்டிய நிலையில் இருப்பவர்களே, மக்களிடையே பேதங்களைத் தூண்டுவது ஏற்கத் தக்கதுதானா?

- ஹரிணி, பாபநாசம்

``ஆன்மிகம் என்பது பேதங்களை வளர்ப்பது அல்ல. மனித மனங்களை ஒன்றுபடுத்துவது. இதைத்தான் `சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’ எனக் கேட்ட அப்பர் பெருமானும், எல்லா மக்களுக்கும் மந்திரத்தை உபதேசித்த இராமானுஜரும் நமக்கு அடையாளம் காட்டி யிருக்கிறார்கள். ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்பதே திருமந்திரம் காட்டும் வழி. `அண்டை அயலாரின் துன்பங்களைத் தம்முடைய துன்பமாக எண்ணிப் பார்ப்பவரே ஆண்டவனுக்கு ஈமான்’ என்று கூறும் இஸ்லாத்தும், ‘எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தபோதும் அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமே இல்லை' என்று விவிலியம் கூறுவதும் பேதங்களற்ற நிலையைத்தான் வலியுறுத்துகின்றன.''

அன்பே தவம் - 24

இன்றைக்கு ஒருவர் நல்லவராக இருப்பது அவசியமா, வல்லவராக இருப்பது அவசியமா?

- மரியா, பெங்களூரு


``நல்லவராக இருந்தால், வல்லமை தானே வந்துவிடும்.  வல்லமை என்பது பிறரை ஆள்வது மட்டுமல்ல, பிறருக்காக வாழ்வது. அப்போதுதான் நல்லவர் வல்லவராகவும், வல்லவர் நல்லவராகவும் இருக்க முடியும்.''

இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?

- ராஜசேகரன், தொண்டி


``பெரியோர்களை, பெற்றோர்களை எக்காலத்தும் மதித்தல் வேண்டும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, ஒழுக்கம், மனிதநேயம் முதலிய நற்பண்புகள் நிறைந்தவர்களாக வாழ வேண்டும்.''

முற்றிலும் வணிகமயமாகிவிட்ட இன்றைய உலகத்தில் மனிதர்களிடையேயும் வணிக நோக்கமும் தன்னலப் போக்கும் பெருகிவிட்டன. இந்நிலை மாற என்ன வழி?

- சித்ரா, அரியக்குடி


``வாழ்க்கைக்குப் பொருள் தேவை. அதைப்போல வாழ்வதிலும் பொருள் தேவை என்பதை உணர வேண்டும்.''

வீட்டு வேலை, அலுவலகப் பணி என்று பெண்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அவர்கள் அதிலிருந்து விடுபட என்ன வழி?

- கவிதா, வேளாங்கண்ணி


``பெண்கள் தங்கள் மனச் சுமைகளைக் குடும்பத்தாரிடம், கணவரிடம், தோழியிடம் பகிர்ந்துகொள்ளலாம். பகிர்தல் துன்பத்தைக் குறைக்கும். மகிழ்ச்சியைப் பெருக்கும்.''

தங்கள் குருநாதர் பற்றி..?

- சிவன், திருச்சிற்றம்பலம்

``கடைக்கோடி மக்களும் கடைத்தேற சமயத்தையும் சமூகத்தையும் இருவிழிகளாக எண்ணிப் பணியாற்றியவர்.  திருமடத்தின் கதவுகளை எல்லா மக்களுக்கும் திறந்துவிட்டவர். மடத்தின் தாழ்வாரத்தைத் தாண்டி மக்களை நோக்கிப் பயணித்த நல்லிணக்க நாயகர். ஏழை வீட்டு அடுப்புகளில் எரியும் நெருப்பின் வெளிச்சத்தில் ஆன்மிக ஒளியைக் கண்டவர். வறியவர்களின் வயிற்றுப் பசியை அணைப்பதை வேள்வியாகக்கொண்டவர். மனிதகுலத்தை சமத்துவத்தின் பாதைக்கு அழைத்துச் சென்ற தமிழ் மாமுனிவர்.''

  அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.

சோறு முக்கியம் பாஸ், நான்காம் சுவர், கேம் சேஞ்சர்ஸ் ஆகியவை அடுத்த இதழில் இடம் பெறும்.