
ஓவியம்: கேஷவ்

“காமராஜ் என்ன அலாதி? அவரை ஏன் உசத்தின்னு சொல்றே?” - மகா பெரியவாளின் இந்தக் கேள்விக்கு பவ்யமாகப் பதில் சொன்னார் பரணீதரன்: “ஒவ்வொருவனும் தூய்மையான மனசோட, நல்லவனா, ஒழுக்கமுள்ளவனா இருக்கணும்னு அவர் நினைக்கிறார். அரசியல்லே இருந்தாலும் பெரியவா சொல்றதைத்தான் அவரும் சொல்றார்...”

“ஏன் அப்படிச் சொல்றே?”
“அவர் ‘சத்திய சபா’ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கார். போன வாரம் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இனாகுரேஷன் ஆச்சு. அப்ப காமராஜ் பேசறப்போ, ‘நம்ம இளைஞர்களெல்லாம் நல்ல ஒழுக்கத்தோட வளரணும். அதுக்கு நம்ம நாட்டுப் பழைய கதைகளை அவங்களுக்கு நினைவுபடுத்தணும். புராணங்களையெல்லாம் தெருக்கூத்து மூலமா எடுத்துச் சொல்லணும். அந்தக் கதைங்கள்ல நல்ல நீதியெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்காங்க.

அரிச்சந்திரன் நாடகத்துல ‘பொய் சொல்லக்கூடாது. என்ன கஷ்டம் வந்தா லும் உண்மையையே பேசணும்ங்கற கருத்தை ரொம்ப வலியுறுத்திச் சொல்லியிருக்காங்க. அந்த நாடகத்தைச் சின்ன வயசுல பார்த்தப்போ, மோகன்தாஸ் காந்திக்கு வாழ்க்கைல உண்மையையே பேசணும்ங்கற எண்ணம் ஆழமா பதிஞ்சு போச்சு. அதனால உலகத்துக்கு ஒரு மகாத்மா கிடைச்சாரு. இது மாதிரியான நல்ல எண்ணங்களையும் நல்லொழுக்கங்களையும் போதிக்கற விஷயங்களைச் சின்னவங்க மனசுல பதியவைக்கிற மாதிரியான நாடகங்களைப் போட்டுக் காட்டணும்..’ என்றெல்லாம் பேசினார்.
பெரியவாளும் நம்ம பழைய கிராமியக் கலைகளையெல்லாம் மறுபடியும் செழிக்கச் செய்யணும்னுதானே சொல்றா...” என்று உணர்ச் சியுடன் பதிலளித்தார் பரணீதரன்.
“ஓ! அதனால்தான், காமராஜ் நான் சொல்றதை யெல்லாம் சொல்றார்ங்கறயா” என்று கேட்டுப் புன்னகைத்தார் மகா பெரியவா!
“பெரியவங்க எப்படியிருக்காங்க. இப்ப எங்க இருக்காங்க” என்று பரணீதரனிடம் தவறாமல் விசாரிப்பாராம் காமராஜர். “நீங்க ஒரு முறை வந்து பெரியவங்களைத் தரிசனம் பண்ணுங்களேன்..” என்று அழைப்பாராம் பரணீதரன். “எனக்கும் அந்த எண்ணம் இருக்கு. ஆனா, சந்தர்ப்பம் சரியா அமைய மாட்டேங்குது” என்பாராம் காமராஜர்.
அப்போது தேர்தல் நேரம். நிதி வசூல் பற்றியக் கூட்டம் ஒன்று காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் காமராஜரும் கலந்துகொண்டார்.
“இப்ப பெரியவங்க காஞ்சிபுரத்துலதான் இருக்காங்க. மீட்டிங் முடிஞ்சதும் நீங்க வந்தீங்கன்னா, அவங்களை தரிசனம் பண்ணலாம். வாங்களேன்...” என்று காமராஜரை அழைத்திருக்கிறார்கள்.
“இன்னிக்கு வேண்டாம். தேர்தல் விஷயமா வந்திருக்கேன். இந்த நேரத்துல பெரியவரைப் பார்க்கறது சரியா இருக்காது. வேற வேலையா வரும்போது அவரையும் பார்த்துட்டு வந்தோம்னு இருக்கக்கூடாது. அவரைப் பார்க்கறதுக்குன்னு வந்தாதான் மரியாதையா இருக்கும்” என்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு முறை. முதலமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக டெல்லிக்குச் சென்றார் காமராஜர்.

“நீங்க செஞ்சிருக்கறது பெரிய தியாகம்..” என்று அவரைப் பாராட்டினார் ஒருவர்.
“என்னைப் புகழறீங்களே... தியாகம்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? அது புரியணும்னா காஞ்சிபுரம் போங்க. காஞ்சிப் பெரியவர் மடாதிபதி பதவியைத் துறந்துட்டு, ‘தனியாப் போறேன்’னு ஒரு நாள் மடத்தை விட்டுட்டு நடந்தே போனாரே, அதுக்கு பேர்தான் தியாகம். சின்னப் பதவியை விட்டுட்டுப் பெரிய பதவிக்குப் போறது தியாகம் இல்லே.ராமன்கூட சின்னம்மா சொல்லித்தான் ராஜ்ஜியத்தைவிட்டுப் போனான். பெரியவரோ யார் சொல்லியும் போகலே... அவராவே எல்லாத்தையும் விட்டுட்டுப் போனாரு...” என்று பதில் கூறியிருக்கிறார் காமராஜர்.
மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் காலையில், மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார் காமராஜர்.
தகவல் அறிந்த பெரியவா, “அவருக்கு உடம்பு சரியில்லை. அவரை ரொம்ப தூரம் நடக்க வைக்காதீங்கோ. கார் எவ்வளவு தூரம் வர முடியுமோ, அத்தனை தூரம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்கோ. நடக்கற வழிலேயும் கல்லு முள்ளு இல்லாம செதுக்கிச் சீர்பண்ணி வையுங்கோ...” என்று தன் தொண்டர்களிடம் சொன்னதுடன், முன்னேற்பாடாக ஒரு ஸ்டூல் போட்டு வைக்கச் சொல்லியிருக்கிறார்.
தேச பக்தரும் பெரியவா பக்தருமான அரக்கோணம் ராஜகோபாலன், அப்போது திருவண்ணாமலையிலிருந்த காமராஜரை தரிசனத்துக்காக அழைத்து வந்திருக்கிறார்.
மகா பெரியவா உட்காரும்படி சைகை காட்டியும் உட்காரவில்லை காமராஜர். நின்று கொண்டேதான் இருந்திருக்கிறார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. விடைபெறும் முன், ‘`ஜனங்களெல்லாம் கஷ்டமில்லாம நல்லா இருக் கணும். பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணனும்” என்று கேட்டுக்கொண்டார் காமராஜர். பெரியவா கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.
பெரியவா கொடுத்த பிரசாதத்தைக் கார் பயணத்தின்போது, சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை. பக்கத்தில் உட்கார்ந் திருந்த ராஜகோபாலன், தான் வைத்துக் கொள்வதாகச் சொன்னபோதும் அவரிடம் கொடுக்கவில்லை. பிரசாதத்தை அரும்பெரும் பொக்கிஷமாகக் கருதி அதை தன் கையில் வைத்துக் கொண்டே திரும்பினாராம் காமராஜர்!
தேர்தல் முறை குறித்து மகா பெரியவா அருளியிருக்கும் விஷயங்களை மேலும் கொஞ்சம் அனுபவிப்போம்...

`இப்போது ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை ஜெனரல் எலெக்ஷன் (பொதுத் தேர்தல்) என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐந்து வருஷம் என்பது ஒருத்தன் நன்றாக முளைவிட, வேர் விட அவகாசம் தருகிற ‘டெர்ம்’ என்றே தோன்றுகிறது.
`வெல்ஃபேர் ஸ்டேட்’ என்பதாகப் பொதுஜன வாழ்வில் பலதுறைகளிலும் பிரவேசிப்பதற்குப் புதிதாக ஏற்பாடு வந்திருப்பதால், ஜனங்களிடம் ‘இன்னின்ன நல்லது பண்ணுவேன்; அதற்கு ப்ரதியாக இன்னது செய்யணும்’ என்று கையூட்டு வாங்க அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
‘இன்ன மாதிரி நீ செய்யா விட்டால் உன் தொழிலையோ இன்னொன்றையோ கெடுப்பேன்’ என்று மிரட்டித் தனக்குக் கட்டுப்பட்டிருக்குமாறு பண்ணவும் இப்போதைய புதிய ஏற்பாட்டில் அதிக இடமிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பல கட்சிகள் என்று ஏற்பட்டிருப்பதில் உண்டாகிற பரஸ்பரப் போட்டியில், தர்மத்தை விட்டாவது தன்னுடைய கட்சியை எப்படியாவது நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படத்தான் செய்யும். கட்சியால் தன்னையும், தன்னால் கட்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில், கட்சியின் பெயரைக் கொண்டு எங்கெங்கே லாபம் அடையமுடியுமோ அங்கேயெல்லாம் தன்னோடு நிற்காமல், தன்னுடைய சாய்காலைக்கொண்டு புத்ரர், பந்துக்கள் ஆகியோரையும் உள்ளே நுழைய விடுவது என்றானால் அப்புறம்... சொல்லணுமா? முறைகேட்டுக்கு முடிவேயில்லாமல்தான் ஆகும்!
தற்போது நம் குடியரசில் நடத்தவிருக்கும் முறையில் ஒரு சந்தேகம் வரலாம். அதாவது, ஒரு தேர்தல் நடக்கும்போது, அதிகாரத்திலுள்ள ராஜாங்கத்தினர் அந்தத் தேர்தலை நடத்துவ திலேயே, மற்ற கட்சிகளுக்கு இல்லாமல் தங்களுக்கு மட்டும் இருக்கற அதிகார பலம் முதலான ‘அட்வான்டேஜ்’களைக்கொண்டு, தங்களுக்குச் சாதகமாக ஏதேனும் பண்ணிக்கொண்டுவிட முடியுமோ என்று தோன்ற இடமிருக்கிறது.
கட்சி ஆட்சி என்று ஏற்பட்டு, ஏதோ ஒரு கட்சியின் நிர்வாகத்தில் அடுத்த தேர்தல் நடக்கிற தென்றால், கொஞ்சம் சஞ்தேஹாஸ்பதமாக ஏதோ தோன்ற இடமுண்டுதானே! (தேர்தலுக்குச் சில மாதம் முன்பே ஆளுங்கட்சிப் பதவியிலிருந்து விலகி, ஆலோசனைக் குழுவைக் கொண்டு ராஷ்ட்டிரபதியே ஆட்சி நடத்தி அதன் கீழ் தேர்தல் நடந்தால்தான் தூய்மையாக இருக்கும் என்ற ஒரு கருத்து குடியரசு பிறந்து பல்லாண்டுகளுக்குப் பின் எழுந்தது. ஆனால் ஸ்ரீசரணர்களோ குடியரசு பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே இத்திசையில் நம் சிந்தனையைச் செலுத்தும்முறையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்).
இதற்கு இடமே இல்லாதபடி, நடப்பு சபை மெம்பராயிருந்து ‘வாரியம்’ என்ற பல கமிட்டிகளில் ஏதாவதொன்றில் பதவி வகிப்பவர்களான இந்த முப்பதுபேருமே பதவி விலகிவிட வேண்டும். அதற்கப்புறம் அந்த ‘தர்ம க்ருத்ய சபைகள்’ எனப்படுவனவற்றின் பொறுப்பின் கீழேயே, மத்யஸ்தர்களைக் கொண்டே தேர்தல் நடத்த வேண்டும் என்று சாசனம் விதிக்கிறது’’.
இப்படி, பண்டையக் கால சாசனங்கள் சுட்டிக்காட்டிய தேர்தல் விதிமுறைகளைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் மகா பெரியவா. ராம ராஜ்ஜியம் பற்றியும் அலசியிருக்கிறார்.
ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்ய பாரம் நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவுமில்லாமல், முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்விகர்களின் வழியைப் பார்த்து அந்தப் படியே பண்ணினவர் ஒருவருண்டு என்றால் அது ராமச் சந்திர மூர்த்திதான்!
பொதுஜன அபிப்ராயத்தை ராமர் எப்படி வெகு முக்கியமான விஷயமாகக் கேட்டறிந்து வரச் செய்தார், அதற்காக எப்படித் தன்னுடைய பிரிய பத்தினியையே தியாகம் செய்தாரென்பது நமக்குத் தெரிந்ததுதானே? ஒரு நாய் கூட, ராமரிடம் நியாயம் கேட்க நேராக தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது. மனு தர்மப்படி பரிபாலனம் செய்த மனுநீதிச் சோழன், திருவாரூரிலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது, ஒரு மாடு ஆராய்ச்சி மணியை இழுத்துத் தன் கஷ்டத்தை விண்ணப்பித்துக்கொண்டது என்று கேட்டிருக்கிறோம்.
இப்படி, தங்கள் மனதிலிருப்பதை எவரும் ராஜாங்கத்தின் உச்சஸ்தானத்துக்குத் தெரிவிக்க இடம் தருவதுதான் ஜனநாயகம்!
- வளரும்...
வீயெஸ்வி