மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 28

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் ( ரங்க ராஜ்ஜியம் )

ஓவியம்: அரஸ்

பிறப்போடு மூப்பொன்றில்லவன்றன்னைப்
பேதியா வின்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை
ஏழிசையின் சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள்
செம்பொன் செய் கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக்
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே!’

- பெரிய திருமொழியில்  திருமங்கையாழ்வார்.

ரங்க ராஜ்ஜியம் - 28

‘‘இறைநாமம் என்பது எல்லோருக்குமானது தானே? எல்லோரும்தானே அவன் மக்கள்’’ என்ற நீலனின் கேள்வியைச் செவிமடுத்த நம்பி, ‘‘நல்ல கேள்வி...’’ என்ற முன்னோட்டத்தோடு, விளக்கமாகப் பதில் சொல்லத் தொடங்கினார்.

“அஷ்டாட்சரம் என்பது சொல்வடிவில் உள்ள ஓர் ஆயுதமப்பா. ஆயுதம் என்பது வீரன் கையில் இருப்பதுதானே அழகு? அதேபோல், வேத சம்பந்தமுடையோர்க்கு அது முற்றான பலனைத் தருவதாய் உள்ளது. அவர்களாலேயே மன ஒருமைப்பாட்டுடன் தியானிக்க இயலும்...”

“அப்படியானால், வேதியர் அல்லாதோர்க்கு வைகுண்டத்தில் இடம் இல்லை என்றாகிறதே...?”

“அப்படியல்ல. இதைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரும் பொதுவாக மனித இனத்தவர் என்றபோதிலும், வர்ணங்களால் நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். அந்த வர்ணங்களைத் தோற்றுவித்ததும் அவன் செயலே! ‘பிராம்மணன், வைஸ்யன், ஷத்ரியன், சூத்ரன்’ என்று நான்கு வர்ணங்கள் உள்ளன.

எம்பெருமானின் பேச முடிந்த நாவின் அம்சமாய் பிராம்மணனையும் வலிமை மிகுந்த தோளின் அம்சமாய் சத்திரியனையும், உடலுக்கே உணவைப் பெற்று சக்தியளிக்கும் வயிற்றின் அம்சமாய் வைஸ்யனையும், உடம்பையே தாங்கி நிற்கும் கால்களின் அம்சமாய் சூத்ரனையும் அவனே படைத்தான். பின் இந்தப் படைப்புக்கேற்ப நியதிகளை வகுத்து மனுவானவர் சூத்திரம் உருவாக்கினார். அதற்கு மனுநீதி என்று பெயர்.

அதன்படி நாவின் அம்சமாய்ப் பிறந்தவன், வேதம் ஓதுதலை முதல் கடமையாகக் கொண்டு, அதற்கே தன் வாழ்வு என்று வாழவேண்டும். இவன், பிற கர்மங்கள் புரியத் தேவையில்லை. வேதம், யாகம், யோகம் என்று இவன் செய்யும் செயல்களால் நல்ல மழை உண்டாகும்; உயிர் களிடம் பகை உணர்வு நீங்கும்; பயிர்கள் செழிக்கும்.

ரங்க ராஜ்ஜியம் - 28



தோளில் தோன்றிய சத்திரியனுக்குத் திரேக பலம் பிரதானம். நீ கூட இந்த வகையைச் சேர்ந்தவனே! திரேக பலம் இருந்தால்தான் ஒரு நாட்டைக் கட்டிக்காக்க முடியும். நாட்டு மக்களைப் பசி-பட்டினியிலிருந்து பாதுகாத்து அவர்கள் நலமாக வாழ வகை செய்வது, சத்திரியனின் கடமை. அதேபோல் பொய், களவு, சூது இல்லாத நகரை உருவாக்கி, அதர்மத்தைத் தலைதூக்கவிடாமல் செய்து தர்மத்தை நிலைநாட்டுவதும் சத்திரியனின் கடமையே. இக்கடமையைச் செய்தாலே போதும், இறைவன் தேடி வந்து ஆட்கொள்வான். ஒரு வேதியனைப் போன்று சத்திரியன் செயல்படத் தேவையில்லை.

வைஸ்யன் என்பவன், மக்கள் வாழ்வதற்குத் தேவைப்படும் பொருள் களை வாங்கி விற்பவன். வயிற்றின் அம்சமாய் அவன் பிறக்க காரணமும் அதுவே. இவனாலேயே வர்த்தகம் உருவாகிறது. அந்த வர்த்தகத்தில் அவன் நேர்மையாகச் செயல் பட வேண்டும். அதுவே வைஸ்யனுக்கான தர்மம். அதில் நிலைத்திருந்தாலேபோதும்; இறைவனடியை அவன் தடையின்றி அடைந்துவிடலாம்.

அடுத்து சூத்திரன். நால்வகை பிறப்பாளர்களில் இவனே முதலாமவன் - பிரதானமானவன். சூத்திரனுக்குக் கணிதன் என்றொரு பெயரும் உண்டு. இவன் மண்ணோடு தொடர்புடையவன். மண்ணின் தன்மை அறிந்து அதைப் பாகுபடுத்தி - நன்செய், புன்செய், கலிர், கட்டை எனப் பிரித்து, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டு உணவை உருவாக்குபவன். நிலங்களில் கால்களால் நடமாடி உழுதே பணியாற்றுவர். எனவே இவன் எம்பெருமானின் திருவடி அம்சமாய்த் தோன்றியவன். பருவமறிதல், அளவறிதல், மண் தன்மை அறிதல் என்று அனைத்தையும் அறிந்து, அறிந்ததற்கேற்ப திட்டமிட்டு கணக்காய்ச் செயல்பட்டால்தான் பயிர்களைக் காப்பாற்றி களஞ்சியத்திலும் சேர்க்க முடியும். அந்தக் கணக்கைக் கொண்டிருப்பதாலேயே... கணக்கு சூத்திரமுடையது என்பதாலேயே இவன் சூத்திரன் எனப்பட்டான்.

ஒரு வைணவன் வரையில் அவன் பெரிதும் போற்றவேண்டியது திருவடிகளைத்தான். அந்த வகையில், மற்ற வர்ணத்தாரும் போற்றும் சிறப்புக்குரியவன் சூத்திரனே. இவன் இல்லையேல், உணவில்லை; காடு நகரம் எனும் பாகுபாடுமில்லை. இவன் உணவை உற்பத்தி செய்தால்தான் வைஸ்யனுக்கே வேலை. இவர்கள் இருவராலேயே ஒரு மக்கள் கூட்டம் வாழ்கிறது.

அந்த மக்கள் கூட்டத்தைப் பாதுகாப்பவனாய் இருப்பவனே சத்திரியன். இந்த மூன்று வர்ணத் தாரும் நலமாய், வளமாய், பலமாய், வாழ்ந்திட இறையருள் பிரதானம். அதை வற்றாது பாதுகாப்ப வனே அந்தணன் எனப்படும் பிராம்மணன் அல்லது வேதியன்.

அந்த வேதியன் வழி வந்தவன் நான். எனக்கான ஆன்மிகப் பணியைச் செய்தபடி இருக்கிறேன். நீயும் சத்திரியனுக்குண்டான உன் கடமையைச் செய். இதில் உன் இறைபாதை இன்று முதல் வைணவம். உனக்கான இறைவன் அந்தத் திருமால் எனும் மாலவன். அவனுக்கான நெறிமுறையே பஞ்ச சம்ஸ்காரம். இதில் மந்த்ரோபதேசம் நீங்கலாய் மற்ற எல்லாவற்றையும் நீ மட்டுமல்ல எவரும் பின்பற்றலாம்!”

ஆசார்ய நம்பி நால்வகை வர்ணங்களை விளக்கி, தன் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்திக் கொண்டார். நீலனுக்கும் ஒரு தெளிவு ஏற்பட்டது.

“குருவே! உங்கள் மூலமாய் நான் பூரணமான ஒரு சமூக நெறிப்பாட்டை உணர்கிறேன். ஆயினும், இவர்களில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற ஒரு போக்கும் மனிதர்களிடம் காணப்படுகிறதே... அது எதனால்?” என்று கேட்டான்.

மீண்டும் பதில் சொல்லத் தொடங்கினார் ஆசார்ய நம்பி.

“இது கலியுகம். மாயை மிகுந்தது நம் வாழ்வு. இப்போது நீ என்னோடு பேசியபடி இருக்கிறாய். நான் அறிந்ததை உபதேசித்தபடி இருக்கிறேன். இந்த நொடி நாம் வாழ்வதே வாழ்வு. சிறிது நேரத்தில் என்னுடனான உன் சந்திப்பு, என் பேச்சு என்று எல்லாமே நினைவு என்றாகிவிடும். அவற்றைத் திரும்பப் பெறவே முடியாது.

இப்படித்தான் ஒவ்வொரு நொடியும் உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று எவருக்கும் திண்ணமாய் தெரியாது. ஆயினும், மாயை நாம் காலகாலத்துக்கும் வாழப்போவது போல் ஒரு பிரமையை நமக்குள் உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரமையே, மனித மனங்களில் தவறான புரிதல்களையும் உருவாக்கிவிடுகிறது. இந்தப் புரிதல்களில்தான் பேதங்கள் உருவாகின்றன. நிறைய பொருள் உடைய ஒருவன் செல்வந்தன்; இல்லாதவன் ஏழை எனும் பாகு பாடு, நிலத்தில் பாடுபடுபவன் கீழானவன் - அமர்ந்து பாடுபடுபவன் மேலானவன் எனும் பாகுபாடு, வேதம் சொல்லத் தெரிந்தவனே மிக மேலானவர், மற்றையோர் தாழ்ந்தோர் எனும் பாகுபாடு... இவையெல்லாம் வாழ்வின் மாயை காரணமாக உருவான தவறான புரிதல்களால் ஏற்பட்டவையே! அவற்றில் உண்மையில்லை. நல்ல தெளிந்த அறிவுடையவனுக்குத் தெரியும்... இந்த உலகில் பெரிது, சிறிது என்று எதுவும் கிடையாது என்று!

தரையில் புழுதியில் பாதங்கள் பதிந்திருப்பதால் அவை கீழானவை; நறுமணமுள்ள தைலம் பூசப்படுவதோடு தங்கக்கிரீடத்தைத் தரிப்பதால் தலையே மேலானது என்று, ஒரு மனிதன் தன் உடலளவில் உறுப்புகளில் பாகுபாடு காண்பானா? நம் உடம்பைப் போன்றதே நம் சமூகமும். இதில் நம் உடல் உறுப்புகள் போன்றவையே வர்ணப் பிரிவுகள். இதில், மேல் கீழுக்கு ஏது இடம்? உடம்பின் ஒவ்வொரு திசுவும் எப்படி முக்கியமோ அப்படியே எல்லோரும்!”

“அற்புதம் குருவே! என் வாழ்வில் உங்களைச் சந்தித்த இந்த முதல் நாளிலேயே நான் பெரும் தெளிவைப் பெற்றுவிட்டேன். இதுநாள் வரை, உங்களைச் சந்திக்காமல் வாழ்ந்த வாழ்வில் அர்த்தமில்லை என்றும் உணர்கிறேன்.’’

“அப்படியெல்லாம் இல்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு. ஒரு மணிஅரிசியின் பின்புலத்தில் கூட விதைப்பு, வளர்ப்பு, அறுவடை, உமி நீக்கம், வியாபாரம் என்கிற செயல்களுக்கான காலக்கணக்கு உள்ளது.அப்படி இருந்தால்தான் அரிசி உருவாக முடியும். உன் உருவாக்கத்தின் பின்னாலும் இப்படி ஒரு கணக்கு உள்ளது. இனி, நீ எவ்வாறு வாழப் போகிறாய் என்பதில்தான் உன் சிறப்பும் உள்ளது.”

“ஒரு நல்ல சத்திரியனாய்... அதேநேரம் வைண வனாய், உங்களுடைய உகந்த சீடனாய் வாழ்வேன். அதில் தங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்.”

“மகிழ்ச்சி! உன்னால் உன் திருவாலி நாடு பெருவாலியாகவும் திகழட்டும்!”

“ஆனாலும் ஒரு விஷயத்தில் மட்டும் மனம் சமாதானம் அடையாமல் குழம்புகிறது குருவே!”

“எந்த விஷயம்?”

“நீங்கள், எனக்கில்லை என்று கூறிய மந்த்ரோபதேசம்.”

“நான் கூறவில்லை. அது விதிகளின் நிலைப்பாடு.”

“ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். அப்படி நீங்கள் என் பொருட்டு உபதேசித்தால் என்னாகிவிடும்? எல்லோர்க்கும் பொதுவென்று அதை ஆக்குவதில் பிழை எவ்வாறு உருவாகும்?”

“மிகச்சிறந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியே இப்போதுதானே பிறந்துள்ளது? இதற்கு விடை இப்போது என்னிடமில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் இதற்கு விடைகிடைக்கலாம்.”

“அப்படியானால், அப்படியோர் எதிர்காலத்துக் காக  நான்  காத்திருக்கவேண்டுமா?”

“ஆம்! இக்கேள்வி நீ என்னிடம் கேட்டக்கப் பட்டது மட்டுமல்ல, அந்த மாலவனிடமே கேட்டு விட்டதாகவே பொருள். உன் கேள்வியை நான் அவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறேன். ஏன் இப்படி ஒரு விதி, இதனால் உருவாகப் போகும் நன்மை எப்படிப்பட்டது, இது எதனால் எப்படி எப்போது மாறும்... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை, நீ இன்று முதல் வாழப்போகும் வாழ்வில் நிச்சயம் கிடைக்கும். யார் கண்டது... நியதியை உருவாக்கிய அவனே அதை உடைத்து, உனக்கு அவனேகூட மந்த்ரோபதேசம் செய்ய வரலாம்!''

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ரங்க ராஜ்ஜியம் - 28

சிவனும்  சிட்டுக்குருவியும்!

கா
ளமேகப் புலவர் சிவனையும் சிட்டுக் குருவியையும் சமமாக்கி சிலேடையாகப்  பாடிய போது, `பிறப்பு இறப்பில்' என்னும் பொதுவான வாசகத்தைக்  கூறுகிறார்.

``சிவனுக்கும் சிட்டுக்குருவிக்கும் இது எப்படிப்  பொருந்தும்?'' - எனக் கேட்டனர் சக புலவர்கள்.

“சிவன் என்றைக்கும் நித்தியமானவன்.  அவனுக்கு ஜனன, மரணமில்லை. எனவே, ‘பிறப்பு, இறப்பு இல்லை’ என்றேன். சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் வீட்டுத் தாழ்வாரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும். தாழ்வாரத்தை இறப்பு என்று கூறுவர். எனவே, சிட்டுக்குருவியின் பிறப்பு இறப்பில் என்றேன்” எனக் கூறினார் காளமேகம்.