மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 26

அன்பே தவம் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 26

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 26

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மகத்தான தலைவர்.  ஓராண்டு,  ஈராண்டல்ல... இருபத்தேழு ஆண்டுக்காலம் சிறையில் வாடியவர். நீண்ட போராட்டத் துக்குப் பிறகு அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்கிற தருணம். அப்போது ஆற்றிய உரையில் தன் சகாக்களைப் பார்த்து மண்டேலா சொன்னார்... ‘‘இந்தியா இருக்கும் திசையை நோக்கி வணங்கிவிட்டு, அதிகாரப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். ஏன் தெரியுமா... இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே வழிகாட்டிய அண்ணல் காந்தியடிகள் பிறந்த புண்ணிய பூமி அது.’’ மண்டேலா தொடங்கி மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர்வரை எத்தனையோ பேருக்கு காந்தி ஓர் உதாரண மனிதர். அவருக்கும் தமிழகத்துக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆத்மார்த்தமான ஒரு தொடர்பு உண்டு.  

அன்பே தவம் - 26

தென்னாப்பிரிக்கா. காந்தி வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் கூலித் தொழிலாளி  ஒருவர் காந்தியின் அலுவலகத்துக்கு வந்தார். அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக, தன் தலையிலிருந்த தலைப்பாகையைக் கழற்றினார். அதைக் கையில் வைத்துக்கொண்டு, காந்திக்கு முன்பாகக் கைகட்டி நின்றார். வந்தவர் ஒரு தமிழர். ஆங்கிலேய முதலாளி ஒருவரின் அடிமை ஊழியர், பெயர் பாலசுந்தரம். 

அவரைப் பார்த்தார் காந்தி. வாய், முகமெல்லாம் அடிபட்டுப் புண்ணாகியிருந்தன. ``யார் நீங்கள்... உங்களுக்கு என்ன வேண்டும்... எதுவாக இருந்தாலும் தலைப்பாகையைத் தலையில் கட்டிக்கொண்டு பிறகு பேசுங்கள்.’’

‘‘பெரிய மனிதர்களுக்கு முன்னால் தலைப் பாகையோடு இருக்கக் கூடாது. அது மரியாதை அல்ல.’’

‘‘நானும் உங்களைப்போலச் சாதாரண மனிதன்தான். அதிலும், உங்களைவிட வயதில் இளையவன். தலைப்பாகையைக் கட்டிக் கொள்வதாக இருந்தால் மேற்கொண்டு பேசுங்கள். இல்லையென்றால் வெளியே போய்விடுங்கள்.’’ 

அன்றைக்கு முதன்முறையாக ஒரு பெரிய மனிதருக்கு முன்னால் தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு நின்றார் பாலசுந்தரம். அவர் முகத்தில் மகிழ்ச்சி ததும்பிவழிந்தது. வாழ் நாளெல்லாம் அடிமையாக வாழ்ந்த ஒருவருக்கு, தானும் மனிதன், தனக்கும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதால் எழுந்த பெருமகிழ்ச்சி அது.

அன்பே தவம் - 26

தன் எஜமானரால் மனிதாபிமானமில்லாமல் நடத்தப்பட்ட, கடுமையாகத் தாக்கப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கை எடுத்து நடத்தினார் காந்தி. அதில் வெற்றியும் பெற்றார். அந்த வழக்கு, தென்னாப்பிரிக்காவுக்கே அவரை அடையாளம் காட்டுவதாக அமைந்துபோனது. ஓராண்டுப் பணியை முடித்துவிட்டு, இந்தியாவுக்குத் திரும்புவதாக இருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவில் நிலவிய சூழல், அங்கேயே அவரை 21 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொண்டது.

‘சத்தியாக்கிரஹா’ என்ற நூலில் காந்தியடிகள் இப்படிக் குறிப்பிடுகிறார்... `தென்னாப்பிரிக்காவில் பாலசுந்தரம்தான் என் கண்களைத் திறந்து விட்டவர். அவர்தான் எனக்கு ஆசிரியர். அவர்தான் என்னைப் போராளியாக மாற்றியவர்...’ பாலசுந்தரம் மட்டுமல்ல, தில்லையாடி வள்ளியம்மை, ஆங்கிலேயர்களின் சித்திரவதையால் 17 வயதில் இறந்துபோன நாகப்பன், 18 வயதில் இறந்துபோன நாராயணசாமி போன்ற தமிழர்களை அந்த நூலில் குறிப்பிடுகிறார் காந்தி.

தன்னை சத்தியாக்கிரகியாக மாற்றியவர்கள் தமிழர்கள்தாம் என்பதால், அவர்கள்மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடு.

அது, 1921ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி. மதுரை, மேலமாசி வீதியில், ராம்ஜி கல்யாண் சேட்ஜி என்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் தங்கியிருந்தார் காந்தி. அன்றைக்கு நடைபெறவிருந்த நெசவாளர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். காலையில் அறையைவிட்டு வெளியே வந்தார். அவரைப் பார்த்தவர்கள் அதிர்ந்துபோனார்கள். இடுப்பில் நான்கு முழ வேட்டி; மேற்சட்டை இல்லை.

‘‘இனி இதுதான் என் நிரந்தர உடை’’ என்றார் காந்தி.

``கதர் வாங்குங்கள்... கதர் உடை அணியுங்கள்’’ என்று பலருக்கும் அறிவுறுத்துவது காந்தியின் வழக்கம். ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர், ‘‘நீங்கள் எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். கதர் வாங்கும் அளவுக்கு எங்களிடம் காசில்லையே!’’ என்று கேட்டார்.  

அதற்குப் பிறகுதான் காந்தி தன் கோலத்தை மாற்றினார். எளிய ஆண்டிக்கோலத்தில் நான்கு முழ வேட்டியைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தார். நெசவாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். தன் வாழ்நாள் முழுக்க அந்தக் கோலத்துடனேயே இருந்தார். லண்டன் வட்ட மேசை மாநாட்டுக்கே அதே உடையோடுதான் போனார்.

தான் எதைப் பிறருக்கு உபதேசித்தாரோ அப்படியே வாழ ஆசைப்பட்டார். தீண்டாமையை எதிர்த்து ஒரு ரதயாத்திரை நடத்தினார். பூரி ஜகந்நாதர் ஆலயத்தினருகே ரதம் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கோயிலுக்கு கஸ்தூரிபா, மகனோடு சென்றுவிட்டு வந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ‘‘என் மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத அந்த ஆலயத்துக்கு எப்படி நீ செல்லலாம்?’’ என்று கடிந்துகொண்டார்.

காந்தியடிகள் மும்பையில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். சர்.சி.சங்கரன் என்ற காங்கிரஸ் தலைவர், ‘‘காந்திஜி, இந்தக் கள்ளுக்கடைப் போராட்டம் நாட்டில் பல சர்ச்சைகளை உருவாக்கிவருகிறது. அதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

அன்பே தவம் - 26

‘‘அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. அது, தமிழ்நாட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. ஒருவர், ஈ.வெ.ராமசாமியின் வாழ்க்கைத் துணைவியார் நாகம்மாள். இன்னொருவர், அவரின் தங்கை கண்ணம்மாள். அவர்கள்தாம் கள்ளுக்கடைப் போராட்டத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நிறுத்தும் உரிமை அவர்களுக்குத்தான் இருக்கிறது’’ என்றார் காந்தி.    அவரால் குறிப்பிட்டவர், தந்தை பெரியார்.

குன்றக்குடிக்கு அருகே சிராவயல் என்ற கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை ஓர் எளிய மனிதர் நடத்திக்கொண்டிருந்தார். அவரைத் தேடிப்போனார் காந்தி. ஆசிரமத்தின் செயல்பாடுகளைக் கண்டு வியந்துபோனார். அதை நடத்திவந்தவர் ஜீவா. அவரிடம், ‘‘உங்களுக்குச் சொத்து எவ்வளவு இருக்கிறது?’’ என்று கேட்டார் காந்தி.

‘‘இந்த தேசமே என் சொத்து.’’ 

‘‘இல்லை ஜீவா... நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்து.’’ இப்படி காந்தியடிகளை பாதித்த தமிழர்கள் ஏராளம்.

``உழைக்காமல் உண்பது திருட்டுக்குச் சமம்’’ என்பார் காந்தி.

செல்வந்தர் பிர்லா ஒருமுறை காந்தியிடம் கேட்டார், ‘‘மனிதன் உண்டு, உடுத்தி, இன்பமாக வாழ எவ்வளவு பணம் வேண்டும்?’’ 

‘‘எவ்வளவுக்குள் இன்பமாக வாழ முடியுமோ, அவ்வளவு இருந்தால் போதும்.’’

‘‘நிறைய சம்பாதித்து, அதிகமாகச் செலவிடுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?’’ 

‘‘இயற்கைத்தாய், ஒவ்வொருவருக்கும் சாதாரண வாழ்க்கைக்குவேண்டிய பொருள்களைத்தான் உற்பத்திசெய்கிறாள். எதையும் வீணடிப்பதை அவள் விரும்புவதில்லை. ஒருவர், தன் தேவைக்கு மேல் பயன்படுத்தினால், அது அடுத்தவருக்குக் கிடைக்காமல் போய்விடும். தேவைக்கு மேல் பயன்படுத்துபவன் என்னளவில் ஒரு கொள்ளைக்காரனே.’’

காந்தி சமத்துவ, சமூக அமைப்பை உருவாக்க விரும்பினார். காரல்மார்க்ஸ் விரும்பிய சமத்துவமும், காந்தி சமைக்கத் துடித்த சர்வோதயமும் வர்க்க பேதங்களற்ற வாழ்க்கை முறைதான். எந்த மாற்றமும் வன்முறைகளால் ஏற்பட முடியாது என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

‘‘நான் ஒரு வன்முறை தவிர்த்த கம்யூனிஸ்ட்’’ என்பார் காந்தி. 

நம் மகாசன்னிதானம், காந்தியடிகளின் பிறந்தநாள் அன்றுதான் சர்வமதப் பிரார்த்தனையோடு, குன்றக்குடி கிராமத்தின் சிறு சிறு தொழில்களின் வளர்ச்சிப் பணிகளை, முன்னேற்றப் பணிகளை ஆண்டாய்வு செய்வார்கள். திட்டக்குழுவின் பணிகள் நடைபெறும் அந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவரும் பங்கேற்பார். `இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில்தான் இருக்கிறது’ என்ற காந்தியின் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தியது குன்றக்குடி.

 ‘வாழ்க்கையின் வெற்றிக்கு, பொருளாதார மேம்பாட்டுக்கு, ஏழை-பணக்காரன் என்ற வேறுபாட்டை அகற்றுவதற்குக் கூட்டுறவுதான் சரியான வழி’ என்பது காந்தியின் நம்பிக்கை. அந்தக் கூட்டுறவுத் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட தொழிற்சாலைகள்தான் குன்றக்குடியில் இயங்கிவந்தன.

காந்தி, சுதந்திர இந்தியாவில் 125 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டார். ஆனால், `இந்தியா என்னோடு இல்லை’ என்ற விரக்தியைத்தான் வாழ்வின் இறுதியில் சந்தித்தார். முதல்நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீச்சுத் தாக்குதலிலிருந்து தப்பித்த காந்தி, தன் பேத்தி  மனுவிடம், ‘‘மனு… அந்த வெடிகுண்டுத் தாக்குதலிலேயே நான் இறந்திருக்க வேண்டும். யாராவது என்னை நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடவேண்டும். அப்போது நான் `ராம்... ராம்...’ என்று சொல்லிக்கொண்டே மண்ணில் விழுந்து மடிய வேண்டும். அப்படியொரு மரணத்தை நான் சந்தித்தால்தான் நான் மகாத்மா.  அப்படி நடக்கவில்லையென்றால், நான் மகாத்மா இல்லை என்பதை நீ கூரைமீது ஏறி நின்று கூவ வேண்டும்’’ என்றார்.

இந்த நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தநிலையிலும் இன்னமும் வறுமையை, ஏழ்மையை மாற்ற முடியாமல் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கிறது. ரூபாய் நோட்டுகளைக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, அதே ரூபாய் நோட்டிலிருந்தபடி சிரித்துக் கொண்டிருக்கிறார் காந்தி!

- புரிவோம்...

படம்: கே.ராஜசேகரன்

அடிகளாரைக் கேளுங்கள்

அன்பே தவம் - 26

அனைவரும் ருத்திராட்சம் அணியலாமா... அதை அணிவதற்கு ஏதாவது விதிமுறைகள் உண்டா?

- ஜி.கனகதுர்கா, பெரியகுளம்


“உரிய நியமங்களைக் கடைப் பிடிக்கும் அனைவரும் ருத்திராட்சம் அணியலாம்.”

திரைப்படம் பார்ப்பீர்களா... உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?

- எம்.வாசுதேவன், சென்னை-43

“திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லை.  வாழ்க்கையில் நடிக்காதவர்களைப் பிடிக்கும்.”

அந்தக் காலத்தில் ஆன்மிகவாதிகள் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கியதுண்டு. ஆனால், இப்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கிறதா?

- கே.லலிதா, திருச்சி-4

“ஆன்மிகமும் அரசியலும் தனித்தனியே இருப்பதே நல்லது”

`கோயில்கள் புனரமைப்பு’ என்கிற பெயரில் ஆகம விதிப்படி கட்டப்பட்ட கட்டடங்களை மாற்றி  அமைக்கிறார்களே... அது சரியா?

- வி.ரத்னவேல்,கோவில்பட்டி


“12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளுக்கு மாறுபாடு இல்லாமல் திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும். ஆகம விதிமீறல்கள் இல்லாமல் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.” 

இன்றைய இளைஞர்கள் மன அழுத்தம் தரும் வாழ்க்கைமுறையில் சிக்கியிருக்கிறார்கள். அதை அவர்கள் மாற்ற விரும்பினாலும், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்... இதற்கு என்ன செய்வது?

- காயத்ரி ரங்கன், வேலூர்


“யோகா, தியானம் இவற்றை முறையாகக் கற்பது, இனிய இசை கேட்டு மகிழ்வது, நல்ல நூல்களைப் படிப்பது, நல்ல உரைகளைக் கேட்பது முதலிய நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டால், அவை மன அழுத்தத்தை அடித்து விரட்டிவிடும்.”

இப்போதெல்லாம் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை சின்னச் சின்ன நோய்களுக்கெல்லாம் மிக அதிகமான மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். இனி மருந்துகள் இல்லாமல் வாழவே முடியாதா?

- வி.ராஜாராம், மதுரை-1


“முன்பு உணவே மருந்தாக இருந்தது.  இப்பொழுது மருந்தே உணவாக மாறிவிட்டது.  சரியான உணவும், உடற் பயிற்சியுமே முதல் மருந்து.  இரண்டும் சரியாக இருந்தால் மருந்து, மருந்துக்குக்கூடத் தேவையற்றதாகப் போய்விடும்.”

மெல்லத் தமிழ் இனி?

- பர்வதம் சங்கரன், போளூர்

“சாகாது.  `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது  வெற்று முழக்கமாக அல்லாமல், வெற்றி முழக்கமாக மாற வேண்டும். வீட்டிலும் நாட்டிலும் தமிழ் பரப்பப்பட வேண்டும். வளர்க்கப்பட வேண்டும்.”

விவசாயிகள் மற்றும் விவசாயத் தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

- விஜயா அருணாசலம், திருவண்ணாமலை


“விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவது தடுக்கப் பட வேண்டும். தரிசு நிலங்களெல்லாம் தங்கவயல் பூமியாக மாற வேண்டும். இளைய தலைமுறையினரின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்ப வேண்டும். விவசாய நிலங்களில் உற்பத்திப் பொருளுக்கு, உரிய விலையை விவசாயியே நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற வேண்டும்.”

இப்போதிருப்பவர்களில் உங்களைக் கவர்ந்த மேடைப் பேச்சாளர்கள்..?

- ஆர்.செந்தில், தூத்துக்குடி.


“இறையன்பு ஐ.ஏ.எஸ், தமிழருவி மணியன், சுகி சிவம்.”

 அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002  என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.