மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள்: பொம்மு - 28

Human Gods Stories - Bommu
பிரீமியம் ஸ்டோரி
News
Human Gods Stories - Bommu

தெக்கத்திப் பக்கத்துல பல ஊர்கள்ல இவன்தான் ஊர்க்காவலன்.

அந்தப் பாளையத்தோட ராஜா பேரு பொம்மன்னன். ரொம்ப காலமா புள்ளைபாக்கியம் இல்லை. செய்யாத தருமமில்லை... பண்ணாத தானமில்லை... வேண்டாத கோயிலில்லை. கடைசியா, அந்த ஜக்கம்மாவே உயிர்த்து வந்த மாதிரி தேவதை கணக்கா வந்து பெறந்தா பொம்மு. பொம்முவை ஊரே தங்கமாக் கொண்டாடுச்சு.

இந்தப் பாளையத்துல நெடுங்காலமா காவலாளியா வேலை பாக்குறான் சின்னான். ‘வடக்கத்தி தேசத்துல ஒரு குக்கிராமத்துல பெறந்தவன். நெடுங்காலம் அவனுக்குக் குழந்தையில்லை. தோல் தொழிலாளியான அவன், ஒருக்கா ஆவாரம்பட்டை வெட்ட, காட்டுக்குள்ள போகும்போது ஒரு குரங்குக்கொய்யாப் பத்தைக்குள்ள தங்கத்தாம்பாளத்துல பட்டுத்துணியில சுத்தி ஒரு குழந்தை கெடந்துச்சு. அதைத் தூக்கிட்டு வந்துட்டான். ‘குழந்தை ஏது’ன்னு கேள்வி வரும்னு ராவோட ராவா சின்னானும் செல்லியும் கிளம்பி இந்தப் பாளையத்துக்கு வந்துட்டாக’னு சொல்லக் கேள்வி. ‘வீரையன் இவுகளுக்குப் பெறந்த புள்ளை இல்லை’னும், ‘காட்டுக்குள்ள கண்டெடுத்த புள்ளை’யினும் சிலபேர் சொல்றாக. 

ஆனா, செல்லியும் சின்னானும் உசுருக்கு உசுரா புள்ளைய வளத்தாக. வயசு 18 ஆகியும் வேலைவெட்டிக்குப் போகாம வேட்டை, மல்யுத்தம்னு சுத்திக்கிட்டுத் திரியுறாம் பய.

ஒருக்கா, ராணியும் பொம்முவும் காட்டைச் சுத்திப்பாக்க போனப்போ, ஒரு ராஜநாகம் ரெண்டு பேரையும் மறிச்சிருச்சு. காவலுக்குப் போன பயலுகள்லாம் பயந்து ஒதுங்கினப்போ, சின்னான் தனியாளா நின்னு நாகத்தை குத்திக் குதறி போட்டுட்டான். அவனை அரண்மனைக்குக் கூப்பிட்டு, பொன்னும் பொருளும் குடுத்து பாராட்டுனாரு ராஜா. ராணிக்கும் பொம்முவுக்கும் தனிக் காவலுக்கு சின்னானையே நியமிச்சுட்டாரு.

Human Gods Stories - Bommu
Human Gods Stories - Bommu

காலம் அது பாதையில ஓடிக்கிட்டுக் கெடக்கு. நேத்துவரை  பட்டுப்பாவாடை- சட்டை போட்டுக்கிட்டு குழந்தையாத் திரிஞ்ச பொம்மு, ஆளாகி நிக்குறா. மாமங்காரன் பச்சைமட்டை வெட்ட, பொம்முவுக்கு ஊருக்கு வெளியால குச்சு தயாராச்சு. சின்னானைக் கூப்பிட்டு, `பொம்மு தீட்டு கழிஞ்சு வர்ற வரைக்கும் குச்சு வாசலை விட்டு அங்கேயிங்கே அகலப்புடாது... காத்துக்கறுப்பு அண்டாம புள்ளையைப் பாத்துக்கணும்'னு சொல்லி குச்சுக்காவலுக்கு அனுப்பி வெச்சாரு. அதை தெய்வ வாக்கா எடுத்துக்கிட்டு ராத்திரி பகலா குச்சுக்கு வெளியிலயே கெடந்தான் சின்னான்.

ஒருநாள், சின்னானுக்கு உடம்பு முடியாமப் போச்சு. எழுந்து நிக்கவே உடம்புல தெம்பு இல்லை. “மகனே... குச்சுக்குள்ள இளவரசி இருக்கா. ஈ, எறும்பு அண்டாமப் பாத்துக்கணும்”னு வீரையன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சான்.

பொழுது சாஞ்சுச்சு... விட்டுவிட்டு வேட்டுப்போட்டு பயமுறுத்துது இடி. ஒருபக்கம் கொளுத்திப்போட்ட தீக்குச்சி கணக்கா வெட்டி வெட்டி வெளிச்சத்தைப் பாச்சிட்டுப்போகுது மின்னல். குச்சி குச்சியா வந்து உடம்புல விழுகுது மழை... காத்தொரு பக்கம் ஊதிக் கிளம்புது. வீரையனால வெளியில நிக்க முடியலே. ‘ஆபத்துக்குப் பாவமில்லை’னு குச்சுக்கதவைத் தட்ட ஆரம்பிச்சான். உள்ளேயிருந்து பொம்மு, “சின்னாண்ணே... என்னாச்சு”னு கேட்டா. “நான் சின்னான் இல்லை... சின்னானோட மவன் வீரையன்... எங்க அப்பனுக்கு கடுங்காச்சல்... நான்தான் காவலுக்கு நிக்குறேன். வெளியில மழை கொட்டுது. கதவைத் தெறந்தா ஒரு மூலையில ஒண்டிக்குவேன்”னான் வீரையன்.

பொம்முவுக்கு மனசிறங்கிப்போச்சு. `வெளுத்துக்கட்டுற மழையில எப்படி நிக்க முடியும்... உள்ளே வந்து செத்த ஒண்டிக்கட்டுமே'னு கதவைத் தெறந்தா. முறுக்கேறுன தேகத்தோட மழையில நனைஞ்சு வசீகரமா நின்னான் வீரையன். பொம்முவுக்கு வெக்கத்துல முகம் சிவந்துபோச்சு. காத்தோட வேகத்துக்கு அங்கேயும் இங்கேயும் அலையற பந்த வெளிச்சத்துல ஒருத்தருக்கொருத்தர் திருட்டுத்தனமா பாத்துக்கிட்டாக. அந்தப் பார்வையிலேயே மனசு ரெண்டும் இடமாறிப் போச்சு. வெளியில மழை விட்டாலும், குச்சுக்குள்ள காதல் தூற ஆரம்பிச்சிருச்சு.

நாலைஞ்சு நாள்ல சின்னான் குணமாகி காவலுக்கு வந்துட்டான். ஆனாலும், வீரையன் குச்சுப் பக்கமாவே சுத்திக்கிட்டுத் திரிஞ்சான். குச்சு ஓலையை விளக்கிக்கிட்டு பொம்மு வீரையனோட கண்ணால பேசிக்கிட்டுக் கிடந்தா. அந்தச் சின்ன இடைவெளியில காதல் வேர்விட்டு வேகவேகமா வளர்ந்து நிக்குது.

தீட்டுக் காலம் முடிஞ்சிருச்சு. ராஜா மேளதாளத்தோட குச்சுக்குப் போயி மகளை அழைச்சுக்கிட்டு வாரான். பவள நிறத்துல பட்டுத்தாவணியும் பாவாடையும் போட்டு ராஜகுமாரி ஊர்வலமா அரண்மனைக்குக் கிளம்பிட்டா. கழுத்து, காதெல்லாம் பொண்ணாலயும் மணியாலயும் முத்தாலயும் அலங்கரிச்சிருக்காக. எல்லா அணிகலனையும் தாண்டி, பொம்மு முகம் வாடிக்கெடக்கு.  `இனிமே வீரையனை எப்படிப் பாக்கப்போறோம்... அவன் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பாக்கமுடியலேயே' - அழுகை கண்ணை முட்டிக்கிட்டு நிக்குது. திரும்பித் திரும்பி பாக்குறா. வீரையனைக் காணோம். மனசு கெடந்து அடிச்சுக்கிது.

அரண்மனைக்கு வந்தும் வீரையன் நினைப்பாவே இருக்கு. தோழி மூலமா வீரையனுக்கு தூதுவிட்டா. நந்தவனத்துக்கு வெளியே யாருமில்லாத எடத்துல ரெண்டு பேரும் சந்திச்சாக. வீரையனைப் பாத்ததும் கட்டி யணைச்சுக் கதறி அழுதா    பொம்மு. “உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது... என்னை கூட்டிக்கிட்டுப் போயிடு”ன்னா.

பொம்முவைக் காதலிக்கிற விவரம் தெரிஞ்சாலே ராஜா கழுத்தறுத்துப் போட்டுருவான். வேற வழியில்லை. கட்டுக்காவலைத் தாண்டி ரெண்டுபேரும் ஒருநா ராத்திரி பாளையத்தை விட்டே பறந்துட்டாக.

Human Gods Stories - Bommu
Human Gods Stories - Bommu

இளவரசியைக் காணோம்னு பாளையமே அல்லோலகல்லோலப்படுது. ராஜா, தோழிகளைக் கூப்பிட்டு என்ன, ஏதுன்னு விசாரிச்சான். நடந்ததெல்லாம் சொல்லிட்டாக. சின்னானையும் செல்லியையும் கொண்டாந்து நிறுத்துனாக. “உஞ்சாதி என்ன... தராதரம் என்ன... உம்புள்ளை செஞ்ச காரியத்தைப் பாத்தியா”னு கேட்டான் ராஜா. பதில் சொல்லத் தெம்பில்லாம தலைதொங்கி நின்னான் சின்னான். சின்னானையும் செல்லியையும் பாதாளச்சிறையில அடைச்சான் ராஜா.

எல்லாப் பாளையத்துக்கும் செய்தி அனுப்புனாக. நாலு பக்கமும் வீரர்களை அனுப்பி வீரையனைப் பிணமாவும், பொம்முவை உயிரோடவும் புடிச்சுக்கிட்டு வர உத்தரவு போட்டான் ராஜா.

ஓடிப்போன வீரையனும் பொம்முவும் தெற்குப் பக்கமா போயி காட்டுக்குள்ள இருந்த ஒரு பழங்குடிக குடியிருப்புல தஞ்சம் புகுந்தாக. கிராமத்துப் பெரியவுக, யாரு என்னன்னு விசாரிச்சாக. வீரையனும் பொம்முவும் நடந்த கதையெல்லாம் சொன்னாக.  ரெண்டு பேருக்கும் ஊருக்கு மத்தியில ஒரு குச்சுக் கட்டிக் குடுத்து நல்லவிதமாப் பாத்துக்கிட்டாக.

அந்தக் குடியிருப்போட கொத்தல்லிக்கு ஒரு மவ. பேரு வெள்ளையம்மா. ஒருக்கா, காட்டுக்குள்ள வேட்டையாடப் போனாம் வீரையன். விறகொடிக்கப் போன வெள்ளையம்மாவை ஒரு யானை மறிச்சிருச்சு. வீரையன் அந்த யானையோட போராடி வெள்ளையம்மாவை மீட்டான். அந்தக் கணத்துல இருந்து வெள்ளையம்மாவுக்கு வீரையன் மேல ஆவல் வந்திருச்சு. பத்திரமா கொண்டுவந்து வெள்ளையம்மாவை வீட்டுல விட்டான். வெள்ளையம்மா, கனவுல தாலிகட்டி அவங்கூட  நினைவுல வாழத் தொடங்கிட்டா.

இந்தக் கதை இப்படி ஓட, ஓடிவந்த புள்ளைகளைத் தேடி பொம்மன்னனோட ஒரு படை காட்டு கிராமத்துக்கு வந்திருச்சு. வீரையன் தப்பிச்சு ஓடி வெள்ளையம்மா வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டான். ஆனா, வீரையனை சுத்தி வளைச்சுட்டாக. கையில, காலுலயெல்லாம் விலங்கு மாட்டி, நடத்தியே கூட்டிக்கிட்டு வந்தானுக வீரையனை. கூட குதிரை வண்டியில பொம்முவும் வாறா.

அரண்மனையில நீதிக்கூண்டுல நிறுத்துனாக வீரையனை. எந்த விசாரணையும் இல்லை. “ராஜா வீட்டு உடமையில கைவச்ச குத்தத்துக்காக மாறுகால் மாறுகை வாங்குங்க”னு உத்தரவைப் போட்டுட்டு அரண்மனைக்குள்ள போயிட்டான் ராஜா. ராணி, பொம்முவை இழுத்துக்கிட்டு பின்னாலேயே போயிட்டா.

வெட்டுக்காரன் வாளைத் தீட்டி கூர் பாத்துக்கிட்டு களத்துக்கு வந்துட்டான். வீரையனை மல்லாக்கப் படுக்க வெச்சு அசையாம கட்டியிருக்கானுவ. எல்லாப்பேரும் பாக்க, நடுவீதியில வெச்சு, மாறுகால் மாறுகை வாங்கிப்புட்டானுக. ரத்தம் பெருக்கெடுத்து ஓடுது. மெள்ள மெள்ளக் குருதியெல்லாம் கொட்டி அடங்கிப்போனான் வீரையன்.

வீரையனோட உடலைத் தகனம் பண்ண ஏற்பாடு நடக்குது. ஊருக்கு நடுவுல உடலை வெச்சு முட்டுக்கட்டி பத்த வெச்சுட்டாக. தீ கொளுந்துவிட்டு எரியுது. திடீர்னு அரண்மனைக்குள்ள இருந்து பதறியடிச்சுக்கிட்டு ஓடியாறா பொம்மு. ஓடியாந்த வேகத்துல அந்தத் தீக்குள்ள பாய்ஞ்சா. அப்படியே தீயோட தீயா எழுந்து அவளை அள்ளி அணைச்சுக்கிட்டு விழுந்து பொசுங்குது வீரையனோட உடம்பு. நொடிப்பொழுதுல, தீக்குள்ள பாஞ்ச மகளைக் காப்பாத்த மாட்டாம ராணியும் ராஜாவும் தவிச்சுப்போய் நிக்குறாக. ஊரே கதறி அழுவுது.

வீரையனும் பொம்முவும் செத்துப்போன செய்தி கேட்டு உடைஞ்சு போனா வெள்ளையம்மா. மனசுக்குள்ள வீரையனை வரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தவ. சோறு தண்ணி எறங்கலே. மனசுக்குள்ள வீரையன் முழுசா உக்காந்துக்கிட்டு எறங்க மறுக்கிறான். அவனில்லாத வாழ்க்கையை நினைக்க முடியலே.  வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல வாளெத்துச் சீவிக்கிட்டு வெள்ளையம்மாவும் செத்துப்போனா.

இந்தச் சம்பவம் நடந்தப்புறம், பாளையத்துல நிறைய கெட்ட சம்பவங்கள் நடக்குது. மன்னனுக்கு ராஜபிளவை வந்து படுத்த படுக்கையாயிட்டான். ராணியும் தீராத நோயில விழுந்துட்டா. பசி, பட்டினின்னு மக்களெல்லாம் தவிக்கிறாக. அல்பாயுசுல போய்ச்சேந்த வீரையனும் பொம்முவும்தான் இதுக்கெல்லாம் காரணம்னு புரிஞ்சுக்கிட்ட அரசன், கூடவே வெள்ளையம்மாளையும் சேத்து மூணு பேருக்கும் சிலையெடுத்து, பாளையத்தோட எல்லையில நிறுவி, சாமியாக் கும்பிட்டு முப்பூசை போட ஆரம்பிச்சான். மக்களும் அவுகளைக் கும்பிட ஆரம்பிச்சாக. அதுக்கப்புறந்தான் பூமி குளுந்துச்சு. நோய் நொடியெல்லாம் நீங்கி அரசனும் மக்களும் நல்லாயிருந்தாக.

வீரையங்கிற பேரே இப்போ மறைஞ்சு போச்சு. இப்போ எல்லாரும் அவனை ‘மதுரைவீரன்’, ‘மதுரை வீரன்’னு கூப்பிடுறாக. தெக்கத்திப் பக்கத்துல பல ஊர்கள்ல இவன்தான் ஊர்க்காவலன். கூடவே இந்தப் பக்கம் பொம்மு, அந்தப் பக்கம் வெள்ளையம்மான்னு ரெண்டுபேரும் சிரிச்ச முகத்தோட நின்னுக்கிட்டிருக்காக!

- வெ.நீலகண்டன்,   ஓவியம் : ஸ்யாம்,   படம் : க.சதீஷ்குமார்