மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 3

புண்ணிய புருஷர்கள்
News
புண்ணிய புருஷர்கள்

புண்ணிய புருஷர்கள் - 3

புண்ணிய புருஷர்கள் - 3

மாமண்டூர். காஞ்சி-வந்தவாசி சாலையில், 10 கி.மீ. தொலைவிலுள்ளது. பல்லவர் காலத்து குகைக்கோயில்களால் பிரசித்திபெற்ற இவ்வூரை தரிசிக்க அடியார்கள் சிலருடன் சென்றிருந்தேன்.

அங்கே, சித்திரமேகத் தடாகத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, பொழுது நண்பகலைத் தாண்டிவிட்டது.உமிழ் நீரும் வற்றிப்போகும் அளவுக்குக் கொடுமை யான வெயில். பசி வேறு  வயிற்றைக் கிள்ளியது. அருகில் எங்கும் உணவகங்களோ கடைகளோ கிடையாது. செய்வதறியாது தவித்திருந்த வேளையில், உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படையில், நானும் உடன் வந்த அடியார்களும் அருகிலிருந்த சீனிவாசன் என்ற அன்பரது வீட்டுக்குச் சென்றோம். எங்களைக் கண்டதும் ஓடிவந்து வரவேற்றார். கை, கால் கழுவ நீர் தந்து, நெற்றியில் பூசிக்கொள்ளத் திருநீறு தந்து,  உள்ளே நுழைந்ததும் குளிர்ச்சியான மோர் தந்து உபசரித்தார். அந்த நேரத்தில் அமிர்தமெனக் கருதி மோரைப் பருகி மகிழ்ந்தோம். உள்ளம் குளிர்ந்தது; தாகம் தணிந்தது. அதுமட்டுமா? சிறிது நேரத்தில் சுடச்சுட உணவும் தயார் எங்களுக்காக!

புண்ணிய புருஷர்கள் - 3

எந்த ஹோட்டலிலும் கிடைக்காத அற்புத உணவு அது; சொந்த வீட்டிலும் கிடைக்காத உபச்சாரம் அது! அன்பர் சீனிவாசன் ஐயாவும் அவரின் மனைவியாரும் அப்படித் தாங்கினார்கள்.இத்தனைக்கும் எங்களை முன்பின் அவர்களுக்குத் தெரியாது. இருந்தும் அவர்களின் பரிவும் உபசரிப்பும் எங்களை வியப்பில் நெகிழவைத்தன. இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்தோம். உள்ளூர் மக்கள் சொன்ன தகவலோ, எங்களின் வியப்பைப் பன்மடங்காக்கியது!

`இறையடியார்கள் எல்லோருக்கும் இவர் வீடு, அன்னம் பாலிக்கும் சத்திரம்' என்பதே ஊர் மக்கள் சொன்ன தகவல்!

அன்பால் கட்டப்பட்ட அந்த எளிய வீடும் குடும்பமும் மனதில் ஆழப் பதிந்துபோனார்கள். விளைவு... இதோ மற்றொரு புண்ணிய புருஷரை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறோம்.

விரும்புகிறீர்களோ, இல்லையோ... ஈசன் உங்களை ஆட்டுவிக்கத் தொடங்கினால், அதன்படித்தான் நீங்கள் வாழ்ந்தாகவேண்டும். படித்தவர் - படிக்காதவர், ஏழை - பணக்காரர் என்ற எந்த பேதமும் இறைவனுக்கு இல்லை என்பதற்கு நல்ல உதாரணம் அன்பர் சீனிவாசன். இறையடியாருக்கு அன்னம் பாலிப்பது ஒன்றே தனது வாழ்நாள் கடமை என்று வாழும் எளிய மனிதர். `பிச்சை எடுத்தாவது இறையடியாருக்குத் தொண்டு செய்வேன்' என்று வைராக்கியத்தோடு, சமகாலத்தில் வாழும் அடியார்க்கு அடியார்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்திலுள்ள தூசி மாமண்டூரில் வசிப்பவர் சீனிவாசன். ஐந்தாவது வரை படித்துவிட்டு, மேற்கொண்டு படிப்பு வராததால், விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.

நீறணிந்த அடியார் யார் வந்தாலும் எந்நேரமும் அமுது படைத்தல், வாரத்தில் 4 நாள்கள் உழவாரம் எனத் தொடர்கின்றன இவருடைய திருப்பணிகள். இவரோடு இவர் மனைவியும், இரண்டு பிள்ளைகளும்கூட  இறைத்தொண்டாற்றி வருகிறார்கள். 10 ஆண்டுகளாக இவர் செய்துவரும் இடைவிடாதத் திருப்பணிகளால் ஏற்றம் பெற்ற ஆலயங்கள் அநேகம். மண்ணின் மணம் கமழும் கிராமிய மொழியில் இவர் பேசிக்கொண்டிருந்தால், நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். வெள்ளந்தியான மனிதர்!

“பத்து வருஷத்துக்கு முன்னாடி என் மனைவி லட்சுமிதான் முதலில் இறைப்பணிக்காக ஆலயங்கள் செல்லத் தொடங்கினார். அப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து, அவரைத் திட்டவும் செய்திருக்கிறேன். மெள்ள மெள்ள நானும் சிவனடியாராக மாறி, அந்தச் சிவனையே தாய், தகப்பனாக வரித்துக்கொண்டது, அந்தச் சிவனருளால்தான்.

நான் தீட்சை பெற்று சிவனைப் பூசிக்கத் தொடங்கியபோது, உற்றார் உறவினர்கள் எல்லாம், ‘வீட்டில் சிவனை வணங்கக்கூடாது. சிவன் எல்லாவற்றையும் தொடச்சி வெச்சுடுவார்’ என்றெல்லாம் குறை கூறினார்கள். `ஈசன் வழியில் சென்று நான் தேறினால், என்னோடு வாருங்கள்; இல்லையென்றால் நான் உங்களுக்கில்லை என்று விட்டுவிடுங்கள்' என்று உறுதியாகக் கூறிவிட்டேன். ஈசனின் திருவுளம்... இப்போது, எவர் சொல்லாமலும் என் அண்ணன் குடும்பம், என் தாயார் என்று எங்கள் குடும்பமே கண்ட மணி (ருத்ராட்சம்) கட்டிக்கொண்டு, சிவன் திருப்பணிக்கு வந்துவிட்டார்கள்.

சின்ன வயதில் அப்பாவோடு மாடு ஒட்டிக் கொண்டு காஞ்சிபுரம் போவேன். திரும்புவதற்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அனுப்புவார் அப்பா. எனக்கு பஸ் ஏறிச் செல்வதெல்லாம் தெரியாது என்பதால், நடந்தே மாமண்டரூக்கு வந்துவிடுவேன். அப்படியிருந்த என்னை, இந்த அன்னம் பாலிக்கும் புண்ணியத்தால் காசி, ஹரித்வார் என தேசமெங்கும் சுற்றி வரச் செய்துவிட்டார் என் சிவன்'' என்று சிலிர்த்துப் போகிறார், அன்பர் சீனிவாசன். 

புண்ணிய புருஷர்கள் - 3

அமுது படைக்கும் அரும்பணியை ஐயா சீனிவாசன் ஏற்றது எப்படி?

“கூழுக்கும் கஞ்சிக்கும் ஏங்கிக்கிடந்த எளியவன் ஐயா இந்த அடியேன்; இன்று அடியார்க்கு அமுது படைக்கும் நிலையை என் தகப்பன் கொடுத்திருக்கிறான். என் மனைவி லட்சுமி ஆடு மாடு மேய்த்துக்கொண்டிருந்த எளிய பெண்மணி. இன்று அவர் செய்யும் சிவபூஜையைக் கண்டு என் உறவுகள் வியந்துபோகிறார்கள். மற்றவர்களைப் போல எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால், என் ஈசனை எழுதியும் பேசியும் ஆராதித்திருப்பேன். ஒன்றுமறியாத இந்த எளியவனை ஆட்கொண்ட என் ஈசன், எல்லோருக்கும் சமைத்துப் போடும் பணியைக் கொடுத்திருக்கிறார். அதுவும் நன்மைக்கே” என்று தொடங்கி, தாம் அமுது படைக்க வந்த விதத்தைக் கூற ஆரம்பித்தார்.

“முன்பு, எங்கள் அடியார்க் குழு உழவாரப்பணி செய்யும்போதெல்லாம் ஹோட்டலிலிருந்து உணவு வாங்கிச் சாப்பிடுவோம். அது பெரும் பொருள் செலவைத் தந்ததோடு, உடலுக்கும் ஏற்புடையதாக இல்லை.  அப்போது அடியார்கள் சொன்ன யோசனையின்படி, அங்கேயே உணவு சமைத்து அவர்களுக்குப் படைக்க ஆரம்பித்தேன். எங்கு போனாலும் அடியார்களுக்கு உணவு படைப்பது என் வேலை என்றானது.

இன்று இந்த வட்டாரத்தில் எங்கு சிவப்பணி நடந்தாலும் அங்கு சென்று உணவு படைக்கிறேன். அதுபோலவே, என் வீடு தேடி எந்த அடியார் வந்தாலும் அமுது படைக்கத் தொடங்கினோம்.''

எத்தகைய பெரும் தொண்டு?! இளையான்குடி மாற நாயனார், சிறுத்தொண்டர் போன்றோர், சிவனடியார்களைச் சிவமாகவே கருதி, அவர் களுக்கு அன்னமிட்டு தொண்டு செய்து பேறு பெற்றவர்கள். அவர்களை நேரில் தரிசிக்காத குறையை, அவர்கள் காலத்தில் வாழக்கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைக்கின்றன, அன்பர் சீனிவாசனின் பணிகள் என்றே சொல்லவேண்டும்.

அதேநேரம், தற்காலத்தில் அனுதினமும் அடியார்க்கு அன்னம் பரிபாலிப்பதில் பொருளாதாரம் சார்ந்த சிரமம் அதிகம் உண்டே என்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. அதுகுறித்து சீனிவாசன் ஐயாவிடமே கேட்டோம்.

``மூன்று மாடுகளும், சிறிய கீரைத் தோட்டமும் எங்களுக்கு இருக்கின்றன. அவற்றின் மூலம் வரும் வருமானம் மற்றும் நானும் என் மனைவியும் கூலி வேலைக்குச் செல்வதால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, இயன்றவரையிலும் இந்தப் பணியைச் செய்து வருகிறோம்.

காலையில் 5 மணிக்குத் தொடங்கும் எங்கள் பணி, நேரம் காலம் பார்க்காமல் தொடரும். ஆலயத் திருப்பணிகள், அன்னம் பாலிப்பது, மரங்கள் நடுவது என்று சுழன்றுகொண்டே இருப்பதால், சிலநாள்களில் கூலி வேலைக்கும் போக முடியாது. ஆனாலும் எப்படியோ எங்களின் தொண்டு தடைபடாமல் தொடர்கிறது'' என்கிறார்.

அவரும் குடும்பத்தாரும் ரேஷன் அரிசி உணவையே உண்கிறார்கள். ஆனாலும் அடியார் களுக்குத் தரமான பொன்னி அரிசியில்தான் உணவு படைக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தோடு, பல இரவுகள் பட்டினி இருந்திருக்கிறார்கள் என்றாலும், பசி வேளையில் வந்த அடியார்களைத் தவிக்கவிட்டதில்லை என்று அறிந்தபோது நெகிழ்ந்துபோனோம்.

``எனக்கென்று எந்த ஆசையும் தேவையும் இல்லை. ஆண்டவன் இன்று என்னை மகிழ்ச்சி யாக வைத்திருக்கிறான். கடுமையாக உழைக்க பலம் அளித்திருக்கிறான். இறைவனைப் போன்ற குருவை என்னருகே கொடுத்திருக்கிறான். கனிவான குடும்பத்தையும் அடியார் கூட்டத்தையும் அளித் திருக்கிறான். வேறு என்ன வேண்டும்'' என்று புன்னகைக்கிறார் சீனிவாசன்.

இவரின் ஒரே வேண்டுதல் என்ன தெரியுமா?

``ஆயிரம் முறை கூட உன் திருவடியில் விழுகி றேன் எம் ஈசனே. ஆனால் பொருள் இல்லை என்று எவரிடமும் என்னை கையேந்த விட்டுவிடாதே’ என்று அனுதினமும் வேண்டுகிறேன். இதுவரை என் அப்பன் அப்படி என்னைத் தவிக்கவிட்டதே இல்லை.  ஒருமுறை வீட்டில் அமுது படைக்க அரிசி இல்லை. கையில் பணமும் இல்லை. ஈசனிடம் மனமுருகி வேண்டினேன். வெளியில் வந்தால், எங்கள் அடியார்க் கூட்டத்து அன்பர் ஒருவர், தான் பணி புரியும் இடத்தில் கூடுதல் பணி செய்த தற்காகக் கிடைத்த பணம் என்று கூறி அன்னம் பாலிக்க வைத்துக் கொள்ளுமாறு ஐந்தாயிரம் ரூபாயை வற்புறுத்திக் கொடுத்தார்.

இதுதான் ஈசன் கருணை! அவன் துணையிருக்க எதுதான் செய்ய முடியாது. இங்கு அமுதுண்ண வரும் எந்த அடியாரிடமும் நாங்கள் எதுவும் பெறுவதில்லை. யாராவது பணம் கொடுத்தாலும் மறுத்துவிடுவோம். நடமாடும் தெய்வங்களான அடியார்களுக்கு உணவிடும் பணியில் கிடைக்கும் திருப்தி கோடி பெறுமல்லவா!''

தவசி என்றால் சமையல் செய்பவர் என்றும் பொருள். அதுவே தவ முனிவருக்கும் பொருந்தும். சீனிவாசன் என்ற இந்தத் தவசியும் வாழ்வாங்கு வாழட்டும் என்று இதயம் நெகிழ வணங்கி விடை பெற்றோம்.

-  அடியார்கள் வருவார்கள்...

-மு.ஹரிகாமராஜ்

படங்கள்: பெ.ராகேஷ், ரா.கண்ணன்

`

புண்ணிய புருஷர்கள் - 3

`நவீன யுகத்தின் புதிய தொண்டர் புராணம்!'

வணக்கம். `புண்ணிய புருஷர்கள்' தொடரைப் படித்தேன்; மகிழ்ந்தேன். எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவப்பணி ஆற்றும் அன்பர் ரஜினியின் தொண்டின் சிறப்பறிந்து மெய்சிலிர்த்தேன்.

பன்னிரு திருமுறை நூல்களில் திருத்தொண்டர் புராணத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. இதற்கு மட்டுமே `பெரிய புராணம்' என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. சிவத்தொண்டர்களைப் பற்றிக் கூறுவதாலேயே இப்படியான சிறப்பு.

"உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்,
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே"


என்று அடியவர்களின் பெருமையைக் கூறுவார் ஒளவை. அடியவர்களால்தான் ஆண்டவனுக்கே பெருமை.

`கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்' என்று அடியவர் பெருமையைப் போற்றுகின்றது சிவபுராணம்.  அந்தக் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி, இன்றைக்கும் அடியார் பெருமக்கள் பலர், வெளி உலகுக்குத் தெரியாமல் சித்தம் முழுவதும் சிவப்பரம்பொருளையே நினைத்து சிவத் தொண்டாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், அன்பர் ரஜினியின் மலர்த் தொண்டினைப் படித்தபோது, இருள் சூழ்ந்த அதிகாலைப் பொழுதிலேயே மலர் பறித்து ஈசனுக் குப் பூஜை செய்த புலிக்கால் முனிவரின் நினைவே  எனக்குள் எழுந்தது. எல்லாம் சிவம் என்று அவன் மீதான பக்தியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் அன்பர் ரஜினியின் சிவத் தொண்டை வெளியுலகுக்குத் தெரிவித்த சக்தி விகடனுக்கு வாழ்த்துகள்.

ஆரவாரமில்லாமல் திருப்பணி செய்கின்ற பல உண்மையான அன்பர்களை, தொண்டர்களை அவர்களுடைய அரும் பணிகளை இந்தத் தொடர் நிச்சயமாக ஊக்கப்படுத்தும்.

அத்துடன், இந்தத் தொடர்  நவீன யுகத்தின் திருத்தொண்டர் புராணமாக மிளிரும்; உலகெங்கும் உள்ள சிவனடியார்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெறும்.

முன்னூர் கோ. இரமேஷ்.
ஆன்மிக எழுத்தாளர்.