மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 28

அன்பே தவம் - 28
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 28

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 28

ன்னையர் தினம் வரவிருக்கிறது. நம் எவராலும் ஒதுக்கிவிட முடியாத பெருமைக்கு ரிய பேரன்பு, தாய்மை. `அம்மையே அப்பா ஒப்பிலா மணியே...’ என்று இறைவனைப் பாடும்போது மாணிக்க வாசகர், முதலில் அம்மையைத்தான் அழைக்கிறார். ‘அம்மை’ என்பது அன்புச் சொல். ‘அம்மா’ என்ற சொல், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்த உயிர்ச்சொல். உலகையே காக்கும் இறைமை என்பது தாய்மையே! 

உலகத்தில் அனைத்தையும் துறந்துவிட்ட துறவிகளால்கூட துறக்க முடியாதது தொப்புள்கொடி உறவு. ஆதிசங்கரர், துறவுப் பாதையில் அடியெடுத்துவைக்க அன்னை ஆர்யாம்பாளிடம் அனுமதி கேட்டார். அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில், சங்கரரின் நிர்பந்தத்தால், ‘`மகனே... நீ சந்நியாசி ஆனாலும், என் வாழ்வின் கடைசி விநாடி உன் மடியில்தான் முடிய வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால் நீ துறவி ஆகலாம்’’ என்றார்.  

அன்பே தவம் - 28

அன்னையின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு ஆதிசங்கரர் சந்நியாச தர்மத்துக்குச் சென்றார். காலச்சக்கரம் உருண்டோடியது.  ஒருநாள் திடீரென அன்னை நினைவுக்கு வந்தார். அவர், வாழ்வின் கடைசி தருணத்திலிருப்பது தெரிந்தது. அன்னையைக் காண ஓடி வந்தார். தாயைத் தூக்கித் தன் மடியில் கிடத்திக்கொண்டார். அன்னை ஆர்யாம்பாள், அவரின் மடியிலேயே அடங்கினார். அன்னைக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடனை நிறைவேற்றத் தயாரானார் ஆதிசங்கரர். ஊரும் உறவும் தடுத்தன. `சந்நியாச தர்மத்துக்குச் சென்றவருக்கு இறுதிக்கடன் நிறைவேற்ற உரிமை இல்லை’ என்றது.

அதையெல்லாம் பொருட்படுத்த வில்லை ஆதிசங்கரர். அன்னையைத் தோளில் தூக்கிக்கொண்டு கொல்லைப்புறத்துக்குப் போனார். தாயின் சடலத்தை இறக்கிவைத்து, ``அக்னி தேவனே, சந்நியாச தர்மத்தைத் தாங்கி நிற்கும் நான், இதுவரை உனக்கு அவிர் பாகம் அளிக்கவில்லை. இன்று என் தாயின் தேகத்தை உனக்கு ஆகுதியாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்’’ என்றார்.

அன்னை ஆர்யாம்பாளின் உடலை நெருப்பு சூழ்ந்தது. ஆதிசங்கரர், ஊன் உருக உயிர் உருக, ஐந்து பாடல்களில் தன் சோகம் முழுவதையும் இறக்கிவைத்தார். அந்தப் பாடல்கள் `மாத்ருகா பஞ்சகம்’ என்று அழியாப்புகழ்பெற்றன. ``அம்மா, எப்போது என்னைப் பார்த்தாலும், பாசம் ததும்பிப் பெருக, `முத்தே, மணியே, ராசாவே, செல்வமே, என் கண்ணே...’ என்றெல்லாம் இதயம் நிறைய, உன் இனிமையான இதழ் திறந்து கொஞ்சுவாயே... என்னை வாழ்த்தி மகிழ்ந்த அந்த வாய்க்கு இன்று அரிசியை அள்ளிப்போடும் நிலையில் இருக்கிறேனே. அம்மா, உன் வயிற்றிலிருந்த என்னை ஈன்றெடுக்கும் தருணத்தில் வலி தாங்க முடியாமல் எப்படிக் கதறி அழுதிருப்பாய்... அன்னையே... என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்...’’ என்று அந்தப் பாடலில் கரைந்து உருகுகிறார் ஆதிசங்கரர். 

தெரு மண்ணில் உருண்டு, குப்பை மேட்டில் புரண்டு, காடு, மேடுகளில் அலைந்து திரிந்து, பெருந்துறவியாக விளங்கியவர் பட்டினத்தார். அவர் தாயார் மறைந்தபோது, சிதை இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தார். சிதையைத் தள்ளிவிட்டுவிட்டு, அன்னையின் உடலைப் பச்சை மட்டையில் கிடத்தி, ஞான நெருப்பால் எரியச் செய்தார்.

அன்பே தவம் - 28



`ரட்சகன் ராமன் வருவான்’ என்று பல ஆண்டுகள் கல்லாகக் காத்துக் கிடந்தாள் அகலிகை... கௌதம முனிவரின் மனைவி.  ராமன் பாதம் பட்டால், அவள் உயிர்த்தெழுவாள். கருவில் சுமந்து ராமனைப் பெற்ற தாய் கோசலை. கருத்திலேயே சுமந்து பெற்ற தாய் அகலிகை. ராமன் தோன்றுவதற்கு முன்பே அவன் வரவுக்காகக் காத்திருந்தவள். ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என்று ராமனைப் பேசவைக்கிறார் கம்பர். அதாவது, நெஞ்சில் பிழையில்லாதவள். அதனால்தான் அவளை `அன்னை’ என்று அழைத்தான் ராமன்.

காடு நோக்கிப் போவதற்கு முன்னர் கோசலையிடம் ஆசி பெற வந்தான் ராமன். `பரதனுக்கு ஆட்சி’ என்றதும், ராமனிடம் ‘நின்னிலும் நல்லன் பரதன்’ என்றாள். ஆனால், அதே நேரத்தில் ராமன் காடு செல்ல வேண்டுமா என்ற ஏக்கமும் இதயத்தில் எழுந்தது. தன்னைத் தேற்றிக்கொண்டு, ‘தந்தையின் ஆணைப்படி நடந்துகொள்’ என்று சொன்னாள்.

கைகேயியும் ராமனைத் தன் பிள்ளையாகவே நேசித்தவள்தான். அவளைக் கூனி எப்படி மாற்றினாள்? அன்றைய பொருளாதாரக் கட்டமைப்பை, அன்றைய ஆட்சி அதிகார அமைப்பை நினைவூட்டினாள். `உன் மகன் பரதனுக்கு நாடு இல்லையென்றால், ஆட்சி, அதிகாரம், செல்வமெல்லாம், ராமனிடம்தான் சென்று சேரும். உனக்கு ஏதேனும் தேவை யென்றால்கூட நீ கோசலை வீட்டுக் கதவைத்தான் தட்ட வேண்டும்.’ அவ்வளவுதான். ராமனைத் தன் மகனாக நினைத்தவள் சற்று நேரத்தில் தடுமாறிவிட்டாள். இது, கைகேயின் நிலை.

சுமித்திரை… இலக்குவனையும், சத்ருக்கனையும் பெற்ற தாய். சுமித்திரையிடம் விடைபெறச் செல்கிறான் லட்சுமணன். `மகனே… அண்ணனுக்குத் தம்பியாகப் போகாதே. பணிவிடை செய்யும் பணியாளனாகப் போ. அண்ணனோடு திரும்பி வா. அது முடியவில்லை யென்றால், அண்ணனுக்கு முன்னால் உலகை விட்டுப் போ…’ என்கிறாள் அந்தத் தாய்.

தராசுத் தட்டுகளில் நிறுத்துப் பார்த்தால், ஒரு தாயின் அன்பு இன்னொரு தாயைவிட விஞ்சி நிற்கும். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, கண்மூடும் கடைசி நிமிடத்தில் தன் தாயைத்தான் நினைத்தாராம்.

எம்.ஜி.ஆர்., தன் அன்னையின் மீது அளவு கடந்த அன்புகொண்டவர். தாய்மையின் அருமையை, தன் ரசிகர்களுக்கும் திரைப்ப டங்களின் மூலமாக வலியுறுத்தியவர்.  

கலைஞர் கருணாநிதி, எதற்கும் கலங்காதவர். தன் தாய் அஞ்சுகம் அம்மையாரின் பிரிவின்போது கலங்கிப்போய்ச் சொன்னார்... ‘அம்மா… நீ கடைசி மூச்சு விடுத்தபோது, நீ என்னைப் பிரிந்துவிட்டாய் என்றுதான் கதறினேன். அது கடைசி மூச்சல்ல, காலியாகிவிட்ட என் சுவாசப்பைக்கு நீ அளித்த உயிர் மூச்சு. அந்த மூச்சை எனக்கு அளித்து, என்னை வாழவைக்க என்னோடு வந்துவிட்டாய்; கலந்துவிட்டாய். நான் கொண்ட லட்சியத்துக்காக மேலும் பல கொடுமைகளைச் சந்திக்க நான் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்று எண்ணிவிட்டாய்போலும். அதனால்தான் எனக்கு உயிர் தந்து, உன் கண்ணை மூடிக்கொண்டு என் கண்ணால் பார்க்கிறாய். உன் வாயை மூடிக்கொண்டு என் வாயால் பேசுகிறாய். `அம்மா’ என்கிறேன். குரல் தழுதழுக்கிறது. உன் நாவுக்குள்ள நயம் முற்றிலும் எனக்குக் கிடைக்க அருள்புரிவாய் அம்மா...’

கோச்செங்கட் சோழ நாயனாரின் தாயார் கமலவதியார். அவரின் மகப்பேறுகாலத்தில், `இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால், இந்தக் குழந்தை எண்ணற்ற ஆலயத் திருப்பணிகளைச் செய்யும்’ என்று சோதிடர்கள் கணித்துச் சொன்னார்கள். உடனே, தன்னைக் தலைகீழாகக் கட்டச் சொல்லி, ஒரு நாழிகை கழித்து கோச்செங்கட் சோழ நாயனாரைக் கமலவதியார் ஈன்றெடுத்தார். பிறந்த குழந்தையின் கண்களெல்லாம் சிவந்திருந்தன. அதைக்கண்ட கமலவதியார், ‘என் கோச் செங்கண்ணானோ...’ என்று சொல்லிக்கொண்டே உயிரைப் பிரிந்தார். தன் குழந்தை ஆலயத் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காகத் தன் உயிரையே தந்தார் அந்தத் தாய்.

அன்பே தவம் - 28

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் `வீடில்லா புத்தகங்கள்’ என்ற நூலில், `அன்புவழி’ என்ற கட்டுரையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே காலை ஆறு மணியளவில் ஓர் அம்மா எட்டு வயதுப் பையனை இடுப்பில் சுமந்துவருகிறார். போலியோ தாக்கி மெலிந்த கால்கள். இடுப்பு ஒடுங்கியிருக்கிறது. சற்றே பெரிய தலை. சுருங்கி ஒடுங்கிப்போன முகம். அந்தத் தாய் கடற்கரை மணலில் அவனை அமர்த்திவிட்டு, அருகே குழி தோண்டி, இடுப்பளவுள்ள குழிக்குள் அவனை நிற்கவைக்கிறார். பிறகு சுற்றிலும் மண்ணைப் போட்டு மூடுகிறார். அவனருகே அமர்ந்துகொண்டு ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.

அருகே போகிறார் ராமகிருஷ்ணன். `என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்.

‘பையனுக்குக் கால்கள் சரியில்லை. போலியோ வந்து முடங்கிப் போச்சு. `ஈர மண்ணில் நிக்கவெச்சா சரியாகிடும்’னு சொன்னாங்க. தினமும் கூட்டிட்டு வந்து நிக்கவைக்கிறேன். ஒரு மணி நேரம் நிக்கணும். அதான்... அவனுக்குக் கதை படிச்சு சொல்றேன். அதைக் கேட்டுக்கிட்டே வலி மறந்து நிற்பான். நாங்க பார்க்காத வைத்தியம் இல்லை. பிள்ளைக்குக் குணமாகலை. பெத்த மனசு கேட்க மாட்டேங்குது. தினமும் கோடம்பாக்கத்துலேருந்து பஸ் பிடிச்சு பையனைக் கூட்டிட்டு கடற்கரைக்கு வந்து, நாலு மாசமா மணல்ல நிக்கவைக்கிறேன்.  பாவம் புள்ளை... வலியைப் பொறுத்துக்கிட்டு நிக்கிறான்’ என்று மெல்லிய குரலில் புலம்புகிறார் அந்தத் தாய். 

‘கவலைப்படாதீங்க. உங்க மகனுக்கு நிச்சயம் குணமாயிடும்’ என ஆறுதல் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அந்தத் தாயின் முகத்தில் நிமிட நேர மலர்ச்சி தோன்றி, மறைகிறது. வேறு எவர் தரும் நம்பிக்கையையும்விட தாயின் நம்பிக்கை மேலானது. அதுதான் ஒரு மனிதனை வலுவேற்றி, வளரச் செய்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மேரி ஜார்விஸ் (Anna Marie Jarvis) என்பவரின் பெருமுயற்சியால்தான் இன்று உலகமெங்கும்  அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் 28ஆவது அதிபர் தாமஸ் வுட்ரூ வில்சன் 1914, மே 9ஆம் தேதி பிரகடனம் செய்தார். மே மாதம், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணம், அன்னா ஜார்விஸ், தன் அன்னையின் மீது கொண்ட அளப்பரிய அன்பு. உன்னதமானது தாயின் அன்பு. அதற்கு இணையானது உலகத்தில் எதுவுமில்லை.

- புரிவோம்...

படம்: கே.ராஜசேகரன்,

அன்பே தவம் - 28

அடிகளாரைக் கேளுங்கள்

இறைவன் இருப்பதை அறிவியல்ரீதியாக யாரும் நிரூபிக்கவில்லையே... ஏன்?

- வி.எம்.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்.


சர்க்கரையின் தித்திப்பை ஒவ்வொருவரும் தாமேதாம் உணர முடியும். அதுபோல் இறைமை உணர்வை அவரவர் அனுபவத்தால்தான் உணர முடியும்.  ஆன்மார்த்த உணர்வை அறிவியல்ரீதியாக எப்படி நிரூபிக்க இயலும்?

 `மறந்தும் பிறன்கேடு சூழற்க...’ தங்களின் குருநாதருக்குப் பிடித்த குறள் என்று படித்திருக்கிறேன். தங்களுக்குப் பிடித்த குறள்?

 - லோகநாதன்.ர.கி.,திருநெல்வேலி-11


நம் குருநாதருக்குப் பிடித்த மற்றொரு குறள்...

`குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.’

நமக்குப் பிடித்த குறள்...
`பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.’

சொர்க்கம், நரகம் என்பவை உண்மையிலேயே இருக்கின்றனவா?

- அ.முரளிதரன், மதுரை-3.


சொர்க்கமும் நரகமும் நம்மிடம்தான் இருக்கின்றன.  பிறர் வாழ வாழும்போது வாழும் இடத்தைச் சொர்க்கமாக்கும்.  பிறர் வாட வாழ்ந்தால் நரகத்தை உருவாக்கும்.

கொலை, வதம், சம்ஹாரம்... விளக்கம் தேவை.

- என்.பாலகிருஷ்ணன், மதுரை-1


கொலை – ஆசை, கோபம், பொறாமை போன்ற காரணங்களால் ஒரு உயிரைக் கொல்லுதல்.

வதம், சம்ஹாரம் உலக நன்மைக்காக இறைவன் தீயவரைத் தண்டித்தல்.

கோயிலில் வழங்கப்படும் திருநீற்று மிச்சத்தைத் தூணில் அல்லது மாடத்தில் கொட்டிவிடுகிறார்கள். தீபாராதனை இல்லாத நேரத்தில் அதையும் சிலர் எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். இது சரியா?

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.


திருநீறு பக்தி பிரசாதம்.  நம்மைக் காக்கும் கவசம். பூசினால் சரி. அது எவர் காலிலும் மிதிபட்டுவிடக் கூடாது.

‘பெண் விடுதலை’, `பெண்களுக்குச் சம உரிமை’ என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. பெண் விடுதலையும் பெண்களுக்குச் சம உரிமையும் கிடைப்பதால் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய நன்மை என்ன?

- எம்.அகிலன், திருநெல்வேலி-5


பெண் வீட்டில் மட்டும் பாதி அல்ல.  நாட்டில் பாதி. சமூகத்தில் பாதி. `கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?’ என்றான் பாரதி. பெண் விடுதலையில்தான் உலகம் முழுமையடைகிறது.

அன்பே தவம் - 28

அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002  என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.