
”தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்
மானுடம் வென்றதம்மா...’ அழுத்தமாகச் சொல்கிறார் கம்பர். ராமன் ஆட்சி துறந்து, கானகம் நோக்கி நடக்கிறான். நடக்க, நடக்க அவன் உறவுகள் விரிகின்றன;
உடன்பிறப்புகள் பெருகுகிறார்கள். குகனை உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்கிறான்; அவன் காட்டு மனிதன். அடுத்து சுக்ரீவன் உடன்பிறப்பாகிறான்;

அவன் விலங்கினம். அடுத்து, விபீடணன்; அவனோ அரக்கர் இனத்தைச் சேர்ந்தவன். ஆக, உயிர்கள் பட்டியலில் இருக்கிற அனைத்தையும் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்கிறான் ராமன்.
கம்பரின் ராமகாதையில் மானுடம் வெற்றி பெறும் காட்சிகளை நிறைய பார்க்க முடிகிறது. ராமன் வனவாசம் செல்ல, பரதனுக்குத் தங்கத் தாம்பாளத்தில் மணிமகுடம். அதை மறுதலித்துவிட்டு, `அண்ணன் ராமன்தான் அரியணை ஏற வேண்டும்’ என்று விரதம் பூணுகிறான் பரதன். அதனால்தான், கம்பர்,
‘தராசுத் தட்டில் ஒருபுறம் ராமனை வைத்து, மறுபுறம் பரதனை வைத்து எடைபோட்டால் பரதனுக்கு சரிநிகர் சமானமாக ஆயிரம் ராமர்கள் தேவைப்படுவர்’ என்கிறார்.
‘ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ?’ என்று புகழ்கிறார். எதற்காக... ஆட்சி துறந்ததற்காக மட்டுமல்ல; மனிதத்தை ஏந்திப் பிடித்ததற்காக.
நம் கண்கள் எதற்காக? கருணை பொங்க வேண்டும், அதற்காக. நம் வார்த்தைகள் எதற்காக... மனக்காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் தருவதற்காக. வாழ்க்கை புதிர் நிறைந்தது;
சிக்கல்கள் நிறைந்தது. அவற்றிலிருந்து எப்படி விடுபடுவது?
ஒரு தந்தை, தன் மகளுக்கு விளையாட்டுப் பொருள் வாங்க, கடைக்குப் போனார். கடையில் ஒரு புதிர் பொம்மை இருந்தது.
அதை எடுத்தார்; அதிலிருந்த புதிரை விடுவிக்க முயன்றார். அவரால் முடியவில்லை. அவர் அறிவுஜீவி, முனைவர் பட்டம் பெற்றவர்.

அவராலேயே புதிருக்குப் பதில் காண இயலவில்லை. அதனால், ``இந்த பொம்மை வேண்டாம்’’ என்றார்.
``நீங்கள் மட்டுமல்ல, யாராலும் இந்தப் புதிரை விடுவிக்க முடியாது’’ என்றார் கடைக்காரர்.
``பிறகெதற்கு இதைக் குழந்தைகளிடம் கொடுத்து, சோர்வடையச் செய்கிறீர்கள்?’’
``இது குழந்தையைச் சோர்வடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கை என்பது புதிர் நிறைந்தது. அதில் பல மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரிவதில்லை.
ஆனால், அதை விடுவிக்க நம்மால் முடியும். அன்பு ஒன்றால் முடியும். இதைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரத்தான் இதை நாங்கள் விற்றுக்கொண்டிருக்கிறோம்.’’
அந்த அப்பா மகிழ்ச்சியோடு அதை வாங்கிச் சென்றார்.
மனிதர்கள் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்... செல்வம், புகழ், பதவி... இவற்றின் உயரத்தில்தான் மனித மதிப்பீடுகள் அமைகின்றன.
தகுதியும் திறமையும் உண்மையான விருப்பு வெறுப்பற்ற கண்ணோட்டத்தோடு பார்க்கப் படுவதில்லை.
ஒரு தாய் ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டன.
``அம்மா, ஆண்டவன் படைப்பில் ஓரவஞ்சனை... நம்மை மட்டும் அவலட்சணமாகப் படைத்து விட்டான்.’’
தாய் ஒட்டகம் தேற்றியது. ``பார்த்தாயா... நமக்கு எவ்வளவு உயரமான கால்கள்!’’
``குச்சி குச்சியான, உயரமான கால்கள்... ஹூம்...’’
``கண்ணே… பாலைவனத்தில் புதைமணலில் நாம் வேகமாக நடப்பதற்கும் ஓடுவதற்கும் இந்தக் குச்சி போன்ற கால்கள்தான் பயன்படுகின்றன.’’
``நமக்கு மட்டும் தட்டை மாதிரி அருவருப்பான பற்கள்... இல்லையா அம்மா?’’
``பாலைவனத்தில் நிறைய முட்செடிகள். அவற்றை மென்று தின்பதற்காகத்தான் இந்தப் பற்கள்.’’
``அம்மா... சாக்கு போன்ற கடினமான தோல் நமக்கு. நன்றாகவா இருக்கிறது?’’
‘`பாலைவனத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம் இருக்கும். இரண்டையும் எதிர்கொண்டு வாழ்வதற்காகத்தான் சாக்கு போன்ற முரட்டுத் தோலை இறைவன் கொடையாக அளித்திருக்கிறான்.’’
``சரியம்மா… தட்டை போன்ற பற்கள், சாக்கு போன்ற தோல், குச்சி போன்ற கால்கள்... ஆண்டவன் பாலைவனத்தில் வாழ்வதற்காகத் தந்தார். ஆனால், நாம் இப்போது எங்கே இருக்கிறோம்... ஒரு நகரத்தில், மிருகக்காட்சி சாலையில்.’’
தாய் ஒட்டகம் பதில் பேசவில்லை.
கடுங்குளிரை, அடிக்கும் சூறைக் காற்றை, கொட்டும் மழையை எதிர்கொண்டு வாழ்வதற்கு இறைவன் நமக்குத் தக்க தகவமைப்புகளைத் தந்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு நாம் எதிர்த் துருவத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கோடை வெயில் பொறுக்காமல், குளிர்சாதனத்துக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறோம்.
குளிர்ப் பிரதேசங்களிலோ குளிர்சாதனப் பெட்டிகளும், குளிரூட்டிகளும் உறங்கிக்கொண்டிருக்கின்றன; வெப்பமூட்டிகள் வேகமாக வேலை செய்கின்றன.
இது என்ன முரண்பாடு? எதிர்த் துருவத்திலேயே வாழ்க்கை போவதால்தான், வாழ்க்கை புதிர் நிறைந்ததாக இருக்கிறது.
ஒரு பெரியவர், எந்த வீட்டில் மரணம் நடந்தாலும், அவர் வந்ததைக் காட்டிக்கொள்வதற்காக வீட்டு வாசலில் அவர் பயன்படுத்திய கைத்தடியை வைத்துவிட்டு வந்துவிடுவார்.
அவரும் ஒருநாள் உலகை விட்டு விடைபெற்றார். அன்றைக்கு அவர் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான கைத்தடிகள் கிடந்தன. நாம் யாரைச் சம்பாதிக்கிறோம்...
மனிதர்களையா, மற்றவற்றையா... நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
திருவரங்கத்தில் பெரியநம்பிகள் என்ற பெரியவர் இருந்தார். மனித உரிமை மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாறனேரி நம்பிகள் என்பவருக்கு
இறுதிக்கடனை நிறைவேற்றினார் என்று அவரை ஊர்ப் பெரியவர்கள் ஒதுக்கிவைத்தார்கள். `திருவரங்கத்துத் தேர் அவர் வீட்டு வாசலில் நிற்காது’ என்றார்கள்.
தேர் வலம்வந்த தினத்தில், பெரிய நம்பிகளின் மகள் அந்துழாய், ஆடி அசைந்து வந்த தேரைப் பார்த்தாள். ``அரங்கா… ஊர்தான் எங்களைப் புறக்கணித்தது. நீயுமா?’’
என்று சொல்லிக் கண்ணீர் மல்கக் கேட்டாள்.
அன்றைக்கு எந்தப் பெரியநம்பிகள் வீட்டு வாசலில் நிற்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டதோ, அங்கே அரங்கனின் தேர் அச்சு முறிந்து,
நாள் முழுக்க நின்றது. அப்போதும் ஊர்ச்சபை பெரியநம்பிகளோடு வாதம் செய்தது. ``நீங்கள் எப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாறனேரி நம்பிகளுக்கு இறுதிக்கடன் செய்யலாம்?’’
``கடவுள் உயர்ந்தவரா... மனிதர்கள் உயர்ந்தவர்களா?’’ பெரியநம்பிகள் கேட்டார்.
``கடவுள்தான் உயர்ந்தவர்.’’
``மனிதர்கள் உயர்ந்தவர்களா... விலங்கினங்கள் உயர்ந்தவையா?’’
`மனிதர்கள்தாம் உயர்ந்தவர்கள்.’’
``எம்பெருமான் ராமன், ஜடாயு என்ற பறவை உயிரினத்துக்கு இறுதிக் கடன் நிறைவேற்றியிருக்கிறார். நான் மாறனேரி நம்பிகளுக்கு இறுதிக்கடனை நிறைவேற்றியது தவறா?’’
மனிதநேயம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் எல்லாச் சமயங்களும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

மகா பிரளயம் தோன்ற இருப்ப தற்கான ஓர் அறிவிப்பு. ``இன்னும் சில நிமிடங்களில் இந்த உலகம் அழிந்துவிடும். யாரையும் காப்பாற்ற முடியாது. என்னால் முடிந்தது...
ஏழு பேரை மட்டும் காப்பாற்ற முடியும். அவர்களை அடுத்த கிரகத்துக்கு அழைத்துச் செல்வேன். அவர்கள், தங்களுக்குப் பிடித்த ஒரு பொருளை மட்டும் கையில் எடுத்து வரலாம்’’
என்றது தேவதை.
அடுத்த நிமிடம், தேவதையின் சிறகைப் பற்றிக்கொள்ள மிகப்பெரிய போட்டி. முதலில் தேவதையின் சிறகை ஓர் இளைஞன் பற்றிக் கொண்டான்;
அவன் கையில், இறந்து போன அவன் காதலியின் உடைந்த வளையல் துண்டு. அடுத்து ஒரு கவிஞன் சிறகைப் பற்றிக்கொண்டான்;
அவன் கையில், அச்சுக்கு வராத அவன் கவிதைத் தொகுப்பு. ஒரு நோயாளி, தட்டுத் தடுமாறி சிறகைப் பற்றிக்கொண்டான்; அவன் கையில் மருந்து புட்டி.
அடுத்து ஒரு பெண்மணி; அவள் கையில் ஒரு வங்கியின் கடன் அட்டை. இப்போது கூட்டத்திலிருந்து கோஷம்... `அடுத்த கிரகத்தை வெல்ல இருக்கிற தலைவர் வாழ்க!’
ஓர் அரசியல் தலைவர் தொண்டர்கள் புடைசூழ வந்தார். தேவதையின் சிறகைப் பற்றிக்கொண்டார். கையில் கட்டியிருந்த தங்கக் கைக் கடிகாரத்தைக் கூட்டத்தை நோக்கி வீசியெறிந்தார். களிம்பு ஏறிப்போன ஒரு பழைய கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டார். அதில் அவரின் ஸ்விஸ் பேங்க்கின் ரகசியக் கணக்கு துடித்துக்கொண்டிருந்தது.
``இன்னும் ஒருவர் மட்டும் வரலாம்’’ என்றது தேவதை. கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி. தன் செல்ல நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, தளிர்நடை போட்டு வந்தாள்.
``என் நிபந்தனை உனக்குத் தெரியுமா... வருபவர், பூமியிலிருந்து ஒரு பொருளைத்தான் கொண்டு வரலாம். நீ கொண்டுவருவது பொருளல்ல. நாய்க்குட்டி. உயிர். அதைக் கீழே இறக்கிவிடு.
நீ மட்டும் வரலாம்’’ என்றது தேவதை.
``நான் இறங்கிக்கொள்கிறேன். என் செல்ல நாய்க்குட்டி உங்களோடு வரட்டும்’’ என்றாள் அந்தச் சிறுமி.
தேவதையின் சிறகுகள் சிலிர்த்தன. அந்த வேகத்தில் சிறகுகளைப் பற்றிக்கொண்டிருந்த அனைவரும் கீழே விழுந்தார்கள்.
அந்தச் சிறுமியையும் நாய்க்குட்டியையும் தூக்கிக்கொண்டு பறந்தது தேவதை. இதயத்தில் அன்பு கசியும், பாசம் பொங்கும் இடம்தான் சொர்க்கம்.
ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு நாடகம். அதில் பல மாணவர்கள் பங்கேற்றார்கள். அதிகம் பேசாத ஒரு மாணவனுக்கும் வாய்ப்பு கொடுக்க நினைத்தார் ஆசிரியர்;
கொடுத்தார். சூசையப்பரும் புனித மாதாவும் தங்குவதற்கு விடுதியில் இடம் கேட்டு வருகிற காட்சி. விடுதியிலிருந்து வெளியே வந்து, `இங்கே இடமில்லை’ என்று அந்த மாணவன் சொல்ல வேண்டும்.
நாடகம் அரங்கேறியது. சூசையப்பர், கர்ப்பிணி மாதாவை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு விடுதியாகச் செல்கிறார். இடமில்லை.
அதிகம் பேசாத, மந்த புத்தி மாணவனின் விடுதிக்கும் வருகிறார். `இடமிருக்கிறதா?’ என்று கேட்கிறார்.
மாணவன் ஒரு கணம் பேச்சற்று நிற்கிறான். திரை மறைவிலிருந்து ஆசிரியர், ‘விடுதியில் இடமில்லை என்று சொல்’ என்று எடுத்துக் கொடுக்கிறார்.
மாணவனுக்கு இருவரையும் பார்த்ததும் பேச்சே வரவில்லை. அவன் கண்களுக்கு இருவரும் நடிகர்களாக அல்ல... சூசையப்பரும் புனித மாதாவுமாகவே தெரிகிறார்கள்.
உறுதியான குரலில் அவன் சொன்னான். `இங்கே இடமில்லை. என் வீட்டில் இடமிருக்கிறது. வாருங்கள்.’
`அன்பு’ என்பது வெற்றுச் சொல் அல்ல; பிறரிடம் செலுத்தி, பெறவேண்டிய பேரனுபவம்!
- புரிவோம்...
படம்: கே.ராஜசேகரன்,
அடிகளாரைக் கேளுங்கள்?
நிறைய பேர் நம்மைப் பயன்படுத்திக்கொண்டு, நல்ல நிலைக்கு வந்தவுடன் நம்மையே அவமானப்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- லஷ்மி, சென்னை.
இதுதான் உலகம். நாம் ஒருவருக்கு உதவி செய்தால் முதலில் நாம் அதை மறந்துவிட வேண்டும். உதவி பெற்றவர்கள் நம்மை உதாசீனப் படுத்துவதையும் மறந்துவிட வேண்டும்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

எப்படிப்பட்ட தான தர்மம் உயர்வானது... ரத்த தானம், உடல் உறுப்பு தானம் இவை யெல்லாம் இறைவனின் செயல்பாட்டுக்கு எதிரானதுதானே?
- டி.ஜெய்சிங் கோயம்புத்தூர்.
அன்னதானம், அறிவுதானம், ரத்ததானம், உடல் உறுப்புதானம் என அனைத்தும் உயர்வானவைதான். ஒரு உயிரைக் காப்பாற்ற, வாழவைக்கச் செய்யப்படுகிற எந்த தானமும் கடவுளின் செயல்பாட்டுக்கு எதிரானதல்ல.
இன்றைக்கு மக்களிடையே சகிப்புத் தன்மை என்பது இல்லை. இது சுயமரியாதை யின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளலாமா?
- ஆறுமுகம், தருமபுரி.
சகிப்புத்தன்மை இல்லாமலிருப்பது தன்னலத்தின் வெளிப்பாடு.
கோயில் உள்ளேயிருக்கும் உண்டியலில் போடும் காணிக்கையைக் கோயில் முன் கையேந்தும் நபர்களுக்குக் கொடுப்பது புண்ணியம்தானே?
- பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்
கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது தவறில்லை. உழைக்க வாய்ப்பிருந்தும் உழைக்காமல் பிச்சை எடுப்பதைத் தொழிலாகக்கொண்டவர் களுக்கு தானம் செய்வது, உழைக்காமல் உண்ணும் சோம்பேறித்தனத்தை வளர்க்கும்.
அதற்குப் பதில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யலாம்.
மனிதனுக்குப் பசி ஏற்படாதிருந்தால், அவனது செயல்பாடு எப்படி இருந்திருக்கும்... இறைவன் மறுப்பாளர்களும் இவ்வுலகில் அனைத்து நலங்களுடனும்தானே இருக்கிறார்கள்?
- டி ஜெய்சிங், கோயம்புத்தூர்.
இயற்கைக்கு மாறுபட்டு, பசி உணர்வு இல்லாமலிருந்தால், `உழைக்கத் தேவை இல்லை’ என்ற உணர்வு உள்ள கூட்டம் உருவாகலாம். தாய், தன் குழந்தைகளைப் பேதம் பார்ப்பதில்லை. அப்படித்தான் இறைவனும் தன்னை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று பேதம் பாராமல் அனைவரையும் ஒருசேரப் பார்க்கின்றான்.
அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.