
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்று நிறைமதி நாள். அரண்மனை சுகபோகங்களில் திளைத்திருந்த சித்தார்த்தன், புத்தனாக மாறுகிற தருணம். எல்லா உறவுகளையும் உதறியெறிந்துவிட்டு, துறவு மேற்கொள்ளக் கிளம்புகிறான் சித்தார்த்தன். தன் குதிரையில் ஏறி, ஊரைக் கடக்கிறான். ஊர் எல்லையில் அரசு ஆடைகளைத் துறந்து, மணிமுடியைக் கழற்றிவிட்டு, தன் உடைவாளை உருவி, தன் தலைமுடியைத் தானே மழித்துக்கொண்டு துறவுக்கோலம் பூணுகிறான். அந்தக் காட்சியைக் கண்டு, அவனது கண்டகக் குதிரை கீழே விழுந்து, மண்ணில் புரண்டு, அவன் பாதங்களை நாவால் தடவித் தடவி அப்படியே உயிரை விடுகிறது. புத்தரின் பெருந்துறவை `மகாபிநிஷ்கிரமணம்’ என்பார்கள். அந்தக் குதிரை சித்தார்த்தன் மீது கொண்டிருந்த பற்று, மனிதநேயத்துக்கும் மேலானது.
பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறான் கண்ணன். அஸ்தினாபுரத்தில் ஒருநாள் தங்கவேண்டிய நிலை. யார் வீட்டில் தங்குவது... `துச்சாதனனின் வீட்டில் கண்ணனைத் தங்கவைத்து உபசரிக்கலாம்’ என்பது துரியோதனனின் திட்டம். அஸ்தினாபுரத்துக்குள் நுழைந்தபோது, பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் ஆகியோர் வரவேற்கிறார்கள். பீஷ்மரும், துரோணரும், கிருபரும் ``கண்ணா… எங்கள் வீட்டுக்கு வா...’’ என்று அழைக்கிறார்கள். கண்ணன் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு சிறிய, எளிய குடிலைப் பார்க்கிறான்.
``அது யாருடைய வீடு?’’ கண்ணன் கேட்கிறான்.
``அது உன் வீடு கண்ணா...’’ என்கிறார் விதுரர்.
``அஸ்தினாபுரத்தில் எனக்கென்று ஒரு வீடு இருக்கிறபோது, நான் எதற்கு அடுத்தவர் வீட்டில் தங்க வேண்டும்?’’ என்று சொல்லிவிட்டு, அந்தக் குடிலுக்குப் போகிறான் கண்ணன். அந்தக் குடில் விதுரருடையது. ஆனால், பரந்தாமன் மேலிருந்த அன்பால் அதை, `கண்ணனின் குடில்’ என்று சமர்ப்பணம் செய்கிறார்.
ஒருநாள் புத்தர் தன் சீடர்களிடம், ``ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?’’ என்று கேட்டார்.
``நூறாண்டுகள்’’ என்று ஒரு சீடர் சொன்னார்.
``எண்பது ஆண்டுகள்’’ என்று மற்றொரு சீடர் சொன்னார்.
``எழுபத்தைந்து ஆண்டுகள்’’ என்றார் இன்னொருவர்.
``ஐம்பது ஆண்டுகள்’’ இது மற்றொருவர்.
அத்தனை பதில்களையும் மறுத்த புத்தர் சொன்னார்... ``மனித வாழ்வு நூறாண்டுகள் அல்ல. நூறு நிமிடங்கள் அல்ல. நூறு விநாடிகளும் அல்ல. ஒரு விநாடி.’’ ஒவ்வொரு விநாடியையும் அனுபவித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்வு.

சுகி சிவம் சிறந்த பேச்சாளர். அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை ஒருமுறை குறிப்பிட்டார். அவருக்குத் தெரிந்த சமூக சேவகர் ஒருவர், அவரைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். சுகி சிவம் அந்த மனிதரின் வீட்டுக்குப் போனார். அந்தக் குடும்பத்திலிருந்த எல்லோரிடமும் பேசிவிட்டு, அவர் விடைபெறுகிற நேரம். சமூக சேவகர் ``ஒரு நிமிடம்... இந்த அறைக்குள் வந்து என் மூத்த பிள்ளையை ஆசீர்வதித்துவிட்டுச் செல்லுங்களேன்’’ என்றார். உள்ளே சென்று பார்த்தார் சுகி சிவம்.
ஒரு படுக்கையில் மூளை வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் இல்லாத குழந்தை படுத்திருந்தது. இருபது வயதுக்குக் குறையாத இளைஞன் அந்தப் பிள்ளை என்றாலும், குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். அவனைப் பார்த்துவிட்டு, சுகி சிவம் அவனுடைய பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளைத் தேடினார்.
ஆனால் அந்தத் தந்தையோ, ``இப்படி ஒரு குழந்தையைப் பெற்றதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். காரணம், இந்தக் குழந்தையைப் படைக்கும்போது, `இப்படி மூளை வளர்ச்சியில்லாத குழந்தையை எந்தத் தாய் தந்தை பராமரிப்பார்கள்?’ என்று இறைவன் நினைத்திருப்பார். இதுபோன்ற குழந்தைகளைப் பொறுப்பும் பொறுமையும் உடைய தாயாலும் தந்தையாலும் மட்டுமே பராமரிக்க முடியும்.
குழந்தையின் மீது அதிக அன்பு காட்டும், குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்புணர்வுள்ள பெற்றோர் நாங்கள்தான் என்று தேர்வுசெய்து, எங்களுக்கு இந்தக் குழந்தையை அனுப்பிவைத்திருக்கிறார் கடவுள். அதனால் நாங்கள்தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நல்ல பெற்றோர்களாக இருப்பதற்குக் கடவுள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்’’ என்றார். துன்பத்தைக்கூட, இன்பமாக மகிழ்ச்சியாக எண்ணிப்பார்க்கும் அந்தப் பெற்றோரை எப்படிப் போற்றுவது?
ஆசிரியர் ஒருவர், இரண்டு மாணவர்களின் கைகளில் இரண்டு மலர்களுக்கான விதைகளைக் கொடுத்தார். இரண்டு பேரையும் அந்த விதைகளை நட்டு வளர்த்து, மலர்களைத் தரச் சொன்னார். சில நாள்கள் கழித்து ஒரு மாணவன், ஒரு வண்ணப் பூங்கொத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். இன்னொரு மாணவனோ, ``இரண்டே இரண்டு மலர்கள்தான் இருக்கின்றன’’ என்று கொண்டு வந்து கொடுத்தான்.
``என்ன காரணம்?’’ ஆசிரியர் கேட்டார்.
``மழையில்லை. மண் வறண்டிருந்தது. உரம் இல்லை. அதனால், இந்த விதை செடியாகி இரண்டு மலர்கள்தான் பூத்தன.’’
``நீ எப்படி வண்ணப் பூங்கொத்தாக ஆக்கினாய்?’’ மற்றொரு மாணவனை ஆசிரியர் கேட்டார்.
``நான் இந்த விதைகளோடு பேசுவேன். `நீங்கள் நன்றாக வளர்ந்து வருகிறீர்கள்’, `அதிக மலர்களைத் தருவீர்கள்’ என்றெல்லாம் தினமும் பேசுவேன். அதன் தாக்கம்தான் வறண்ட மண்ணிலும், நீரும் உரமும் இல்லையென்றாலும், இந்த விதைகள் வண்ணப் பூங்கொத்தாக மாறியிருப்பதற்குக் காரணம்.’’
நம் எண்ணம் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எதுவும் சாத்தியமே.
அன்னை தெரசா, தன் ஆசிரமத்திலிருக்கும் ஏழைகளைப் பராமரிப்பதற்காக, கடைத்தெருவில் கையேந்துவது வழக்கம். ஒருமுறை அவர் அப்படி யாசகம் கேட்டபோது, ஒரு கடைக்காரன், அந்த அன்புக்கரங்களில் வெற்றிலை எச்சிலைக் காரி உமிழ்ந்தான். தெரசா பதற்றமே படவில்லை. எச்சிலைக் கீழே போட்டார்; கைகளைத் துடைத்துக்கொண்டார். ``இது எனக்கு. என் பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுங்களேன்...’’ என்றார். அந்தக் கடைக்காரன் வெட்கத்தில் தலைகவிழ்ந்தான்.
ஒரு பள்ளி ஆசிரியை... அவருடைய வகுப்பு மாணவர்கள் இறுதி ஆண்டு முடிந்து விடைபெறுகிற நேரம். ஆசிரியை தன் மாணவர்களுக்குச் சில வாழ்த்து அட்டைகளைக் கொடுத்தார். ஒவ்வொரு மாணவனுக்கும் மூன்று அட்டைகள். எல்லா அட்டைகளிலும் ஒரே வாசகம்தான் எழுதப்பட்டிருந்தது. `நீ என் வாழ்வில் இனிமையை ஏற்படுத்தினாய்’ என்ற வாசகம் அது.
ஒரு மாணவன், தனக்குக் கிடைத்த வாழ்த்து அட்டைகளில் இரண்டை தனக்குத் தெரிந்த, தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் ஒருவருக்குக் கொடுத்தான். அவர் அதை வாங்கினார். `நீ என் வாழ்வில் இனிமையை ஏற்படுத்தினாய்’ என்ற வாசகத்தைப் படித்தார். நெகிழ்ந்துபோனார். மாணவன் போனதும், ஒரு கணம் யோசித்தார். தன்னிடமிருந்த வாழ்த்து அட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டுபோய் தன் மேலாளரிடம் கொடுத்தார். அந்த மேலாளர் அந்த அட்டையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அவரே அன்றைக்குத் தாமதமாகத்தான் வீடு திரும்பியிருந்தார். அந்த இரவில் மகனின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவர் அறைக்குள் நுழைந்தார். மகனை அழைத்தார். அவன் முகம் சோர்ந்துபோயிருந்தது. அப்பா, அவன் கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொண்டு அந்த வாழ்த்து அட்டையைக் கொடுத்தார். அவன் அதைப் பிரித்துப் படித்துப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கின.
``அப்பா… என்னை நீங்க நெசமாவே நேசிக்கிறீங்களா?’’
``என்னப்பா இப்படிக் கேட்டுட்டே... நான் வாழுறதே உனக்காகத்தானே...’’
மகன் அந்த அட்டையைத் திரும்பவும் ஒருமுறை எடுத்துப் படித்தான். கண்களில் கண்ணீர் கசிந்தது. ``ஏம்ப்பா... இத்தனை நாளா, இவ்வளவு பாசத்தை வெளியில காட்டாம வெச்சிருந்தீங்க? நல்லவேளை... உங்களுக்கு என் மேல பாசமே இல்லைன்னு நெனைச்சு, என் வாழ்க்கையையே முடிச்சுக்கலாம்னு முடிவெடுத்திருந்தேன். இப்போ அந்த முடிவை மாத்திக்கிட்டேன். இனிமே அப்பாவுக்கு ஏத்த பிள்ளையாக எப்பவும் இருப்பேன்.’’

அப்பா, மகனைக் கட்டியணைத்துக்கொண்டார். பிள்ளைக்குத் தன் மேலிருந்த பாசத்தைப் புரிந்துகொள்ளாமலும், தனக்கும் அவன்மீது பாசமிருந்தாலும் அதை வெளிப்படுத்தத் தெரியாமலும் வாழ்க்கை ஓடியிருக்கிறதே என்று வேதனைப்பட்டார்.
`நீ என் வாழ்வில் இனிமையை ஏற்படுத்தினாய்’ என்ற வாசகம் அவர் மகனின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு அப்பாவின் மடியில் அந்த அன்பு மகன் அமைதியாக உறங்கினான்.
தொழிற்சாலையின் இளநிலை உதவியாளரோ, `இது போன்ற பள்ளி மாணவர்களிடம் இன்னும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்துக்கொண்டார்.
மேலாளர் மனதிலும் மாற்றம். தன் மகன்மீது பாசம் காட்டினார். தன் மகனைப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக இருந்த, அந்த வாழ்த்து அட்டையை வழங்கிய இளநிலைப் பொறியாளர்மீது பாசம் காட்டினார். அன்றிலிருந்து அனைத்து ஊழியர்களிடமும் அன்பாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்.
அன்பின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டுதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னார்...
`வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையே இருக்கிற சுவரை விலக்குவோம்.
வீதிக்கும் வீதிக்கும் இடையே இருக்கிற திரையை விலக்குவோம்.
நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே இருக்கிற எல்லையை நீக்குவோம்.
மனிதம் வாழ வாழ்வோம்.
உலகம் உண்ண உண்போம்.
உலகம் உடுத்த உடுப்போம்.’
அதுதான் உண்மையான மனித வாழ்வு. அந்த வாழ்வை அமைக்க எல்லோரும் ஒன்று சேர்ந்து நடைபோடுவோம்.
- புரிவோம்...
படம்: கே.ராஜசேகரன்,
அடிகளாரைக் கேளுங்கள்
மதங்களைக் கடந்து அனைவருக்கும் நல்லனவற்றை போதிக்கும் தங்களைப் போன்ற துறவிகள் ஏன் அரசியல் வாழ்வில் ஈடுபடுவதில்லை?
- வி.தமிழரசி, உடுமலை
மக்களைச் செம்மைப்படுத்தும் மக்கள் நலம்சார்ந்த ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும்போது அரசியல் அவசியமற்றது.
அடுத்தவர் விரலை அறுத்துக்கொண்டால்கூட, தடவ சுண்ணாம்பு தராதவர்களெல்லாம் மணிக்கணக்கில் சாமி கும்பிடும்போது என்ன வேண்டிக்கொள்வார்கள்?
- வரதன், திருவாரூர்
மனிதநேயம் இல்லாதவர்களின் வழிபாடு அர்த்தமற்றது.
அன்போடு அரவணைத்து, ஆறுதல் கூறவேண்டிய கடவுள் புயல், மழை, பேய்க்காற்று, சுட்டெறிக்கும் வெயில், சூறாவளி என வறுத்தெடுக்கிறாரே... இனி வசந்தங்கள் வர வாய்ப்பே இல்லையா?
- ஸ்ரீராம், சேலையூர்
பூமியைச் சொர்க்கமாகத்தான் இறைவன் நம்மிடம் கொடுத்தார். இயற்கைத் தாயின் அன்பு முகத்தை, அழகு முகத்தை, கருணை முகத்தை மனிதன் சிதைத்துவிட்டான். அதன் விளைவுதான் புவி வெப்பமயமாதல், சூறாவளி, வெயில், புயல் எல்லாம். இயற்கைத் தாயின் மடியை (மண்ணை) பசுஞ்சோலை ஆக்குங்கள். காற்று, நீரை மாசுப்படுத்தாதீர்கள். நச்சுத் தன்மை உடையதாக ஆக்காதீர்கள். அப்படிச் செய்தால்தான் வசந்தம் நம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும்.
திருவண்ணாமலையில் எல்லா நாள்களும், பல இடங்களில் அன்னதானம் செய்கிறார்கள். இருந்தாலும், கோயிலைச் சுற்றி பிச்சைக்காரர்கள் மொய்க்கிறார்களே... ஏன் இந்த முரண்பாடு?
- அ.யாழினி பர்வதம், சென்னை-78
திருவண்ணாமலை கோயில் மட்டுமல்ல, மற்ற கோயில்களைச் சுற்றிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள். உழைக்காமல் பிச்சை எடுப்பவர்களுக்கு பொதுமக்கள் பிச்சை போட்டு ஊக்கப்படுத்தாமல் இருத்தல் நல்லது.
செம்மொழியாகவே விளங்கினாலும், தமிழ்வழியில் கல்வி பயில தமிழர்களே மறுக்கிறார்கள். தமிழ் வாசிக்கத் திணறுகிறார்கள். இந்த நிலைமை மாறுமா?
- பு.மீனா கணபதி, திருநெல்வேலி-6
தமிழ்மொழிப் பற்றை ஊட்டி வளர்த்திட வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.