மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 25

இறையுதிர் காடு - 25
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 25

இறையுதிர் காடு - 25

அன்று உயிர் பிழைத்த வேலாமூப்பர், அதன்பிறகு போகரின் மிகுந்த நன்றிக்குரியவர்களில் ஒருவராகவும் ஆகிவிட்டார்.

``எமனைப் பார்த்துட்டேன் சாமி... ஆனா, பிடிச்சி இழுத்துட்டு வந்துட்டீங்களே...” என்று காலில் விழுந்தும் வணங்கினார்.

அவர் மட்டுமா? அந்த மலைவாழ் மக்கள் அத்தனை பேருமே வணங்கினர். அவர்களில் தொந்தனையும் தோதனையும் கொட்டாரத்துக்கு வரச்சொல்லி அடிப்படையான மருத்துவப் பயிற்சியையும் அவர்களுக்கு அளித்து, மூலிகைகள் பலவற்றை அடையாளம் காட்டி, அதைப் பயன்படுத்தும் முறையையும் சொல்லிக்கொடுத்தார்.

இறையுதிர் காடு - 25

அந்தத் தொந்தனும் தோதனும், இப்போது புலிப்பாணியும் அஞ்சுகனும் கடந்து சென்ற அந்த மலைத்தலத்தில் கண்ணில் பட்டதுதான் ஆச்சர்யம். புலியும் அஞ்சுகனும், தொந்தன் தோதனைக் கட்டி அணைத்து மகிழ்ந்தனர்.

``நீங்க எங்க இந்தப் பக்கம்?” என்று கேட்டான் தொந்தன்.

புலிப்பாணியும் உதகநீர் தேடி வந்ததை விளக்கினான்.

``இதற்கு நீங்க வரத்தான் வேணுமா என்ன..? நாங்க வரும் சமயம் எங்ககிட்ட சொன்னா, நாங்களே கொண்டுவந்திருப்போமே!” என்று தங்களின் விசுவாசத்தைக் காட்டினான் தோதன்.

``எங்கள் ஆசான், காரணமில்லாமல் சிறு காரியத்தையும் செய்ய மாட்டார். இப்படி நாங்கள் வந்து தேடுவதும் ஒரு பயிற்சியாக எங்களுக்கு அமைகிறதே” என்றான் அஞ்சுகன்.

``அதுவும் சரிதான். வாங்க எங்களுக்குத் தெரிஞ்ச பாறைத் தேக்கங்களைக் காட்டுகிறேன். அதில் எதில் இடி விழுந்தது என்பதைப் பார்த்துதான் நாம் அறிய வேண்டும்” என்ற தோதன், ஒரு பாறைத் தேக்கம் நோக்கி நடந்தான். அவன் கையில் சிறிய அளவிலான வில்லும், முதுகின் மேல் நீண்ட ஒரு மூங்கில் துண்டே அம்பறாத்தூணியாகவும் இருந்தது. அதில் கருங்காலி மரத்தின் சுண்டுவிரல் பருமன் அளவிலான அம்புக்குச்சிகளும் முகப்பில் விஷமுள் தைப்போடு காணப்பட்டன. சில அம்புக்குச்சிகள் கத்தியால் சீவப்பட்டு ஊசிபோல் காணப்பட்டன. வில்லின் வளைந்த முதுகு, பச்சை மூங்கிலால் ஆள்காட்டி விரல் பருமனில் இருந்தது. விசை பூட்டும் குந்தபாகம், செம்புக் கம்பியால் அமைந்திருந்தது. அதைப் பார்த்து அஞ்சுகன் ஆச்சர்யமானான்.

``இது என்ன உலோகம்?” என்று கேட்டான்.

`` `செம்பு’ என்றார் அந்தக் கருவைக் கம்மாளர்.”

``அவர் எங்கு இருக்கிறார்?”

``தரப்பாட்டில்தான்.”

``தரப்பாட்டிலென்றால்..?”

``மலை இல்லாத சமதள நிலப்பரப்பைத்தான் இவர்கள் `தரப்பாடு’ என்கின்றனர். அதாவது மலையகங்களையொட்டிக் கீழே உள்ள கிராமங்கள் என்று பொருள்” என்றான் புலி.

``அப்படியானால், கிராமங்களுக்குச் செல்வார்களா இவர்கள்?”

``பண்ட மாற்றுக்குச் சென்றுதானே தீர வேண்டும்.”

``அப்படி எதையெல்லாம் எடுத்துச் செல்வீர்கள்?”

அவர்கள் பேசியபடி உதகநீர் உள்ள இடம் தேடி நடந்தனர். தொந்தன், அஞ்சுகன் கேள்விக்கு பதில் கூறலானான்.

``அரிசி, பருப்பு, மண்பாண்டம், எங்க கழுதைகளுக்குச் சேணம், பெண்டுகளுக்கு உடுப்பு, பந்தத்துக்கும் மீனைப் பொரிக்கவும் எண்ணெய், வடுகன்களுக்கு (குழந்தைகள்) பொரியும் வெல்லமும், வஞ்சிமாருக்கு (இளம் பெண்கள்) வளவி, உருளி, ஈருவாளின்னு எல்லாத்துக்கும் தரைப்பாட்டுக்குத் தானேங்க போகோணும்..!” - அவனது தமிழ்ப் பேச்சில் சில இடங்களில் இழுவை இருந்து, அது ஒருவித ராகமாய் வெளிப்பட்டது.

``அது சரி... நீங்கள் மலையிலிருந்து எதைக் கொண்டு செல்வீர்கள்?” - அஞ்சுகன் கேட்டான்.

``பலாப்பிஞ்சு, மலைவாழை, தேனு, மரப்பிசினு, சாதிக்காய், மாசிக்காய், சந்தனக்கட்டை, பூச்சாங்கொட்டை, முள்ளிக்கிழங்கு, குமுட்டிக்காய், இப்புடி எங்க மலைத்தாயி அள்ளித் தர்ற எல்லாம்தான்.”

``அப்ப இப்ப தரைப்பாட்டுக்கு அதாவது ஏதாவது கிராமத்துக்குத்தான் கிளம்பினீர்களா?”

``இல்லீங்கோ... மிளாக்குட்டி இல்லாட்டி வரையாடு புடிக்க வந்தோங்க. கரிநாள் வருதுல்ல... எல்லாரும் கூடி கும்மி போட்டு ஆட்டுக்கறிய ஆக்கித் திம்போம்.”

``ஓ... சூரிய ஆதிக்கம் மிகுந்த நாளில் மாமிச உணவா... பலே!” என்றான் புலிப்பாணி.

``என்ன சொல்கிறாய் புலி?”

``கரிநாள் என்றால் ஜோதிடரீதியாக சூரிய ஆதிக்கம் மிகுந்த நாள் எனப் பொருள் அஞ்சுகா. அன்று உடம்பில் உஷ்ணம் மிகுந்து சுரப்பிகளின் சுரப்பும் அதிகமாய் இருக்கும். மாமிசத்தைச் செரித்திட அமிலச்சுரப்பும் உமிழ்நீர்ப் பெருக்கமும் அவசியம். கரிநாளன்று மனித உடலில் அது இயல்பாக அதிகம் இருக்கும். அந்த நாளில் ஆமை ஓட்டைக்கூட அவித்துச் செரிக்கலாம் என்று வேடிக்கையாகக் கூறுவர். உணர்வுபூர்வமும் அதிகம் இருக்கும். இதனால் அறிவுபூர்வமான நற்காரியங்களை இந்த நாளில் செய்ய மாட்டார்கள்.”

``அட... கரிநாள் என்பதன் பின்னால் இப்படி ஒரு செய்தியா?”

``ஒவ்வொரு நாளுக்குமே தனித்த குணமும் சக்தியும் உண்டு என்பதே ஜோதிட சாத்திரம் கூறிடும் உண்மை அஞ்சுகா...”

``கேட்கிறேன் என்று தவறாகக் கருதாதே... இந்த நாள்களை நாம்தான் அடையாளப்படுத்திக் கிழமைகளாலும் தேதிகளாலும் அதை விளிக்கிறோம். மற்றபடி சூரிய உதயம், பிறகு அந்திமம், பிறகு இரவு என வானில் எந்த மாற்றமும் இல்லை. என் வரையில் எல்லா நாள்களும் ஒன்றுபோலத்தான் உள்ளன. ஆனால் நீயோ, ஒவ்வொரு நாளுக்கும் தனித்த குணமும் சக்தியும் இருப்பதாகக் கூறுகிறாய். இதை எப்படி அறிவது?”

``நல்ல கேள்வி... பார்ப்பதற்கு பொழுதுகள் ஒன்றுபோல் புலனாகலாம். ஆனால், அந்தப் பொழுதின் ஏழு கோள்களின் ஆதிபத்யம் ஊடே நட்சத்திர ஆதிபத்யம் மற்றும் அந்த நாளுக்குரிய கிழமையின் ஆதிபத்யம், தனிப்பட்ட முறையில் பார்க்கும் மனிதனின் பிறப்பையொட்டிய தசாபுக்தி மற்றும் அந்தரம் ஆகியவை அந்தப் பொழுதுக்குள் இரு கண்களுக்குப் புலனாகாத ஒருவகை அலைவரிசையாய் உள்ளது. நாம் சுவாசிக்காமல் வாழ முடியாது. அந்த வகையில், அதுவும் நம் சுவாசத்தோடு கலந்து சுவாசப் பை வரை சென்று பிறகு ரத்தத்தில் கலந்து ஓடி நம் மூளையையே அது தன்வசப்படுத்திக்கொள்கிறது. மூளைதானே சிந்தனை மற்றும் சகல எண்ணங்களுக்கும் மூலம். நாமும் அந்த பாதிப்போடுதான் பலவிதமான எண்ணங்களுக்கு ஆளாகிறோம்.”

``இதை எப்படி நம்புவது?”

``ஏன் நம்மால் ஒரே மனப்போக்குடன் எப்போதும் சலனம் சஞ்சலம் இன்றி வாழ முடிவதில்லை? ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கும்போது அதிலேயே அப்போது இருப்பதுபோலவே எப்போதும் ஏன் இருக்க முடிவதில்லை? சிறிய விஷயங்களில்கூட நாம் ஏன் பல முடிவுகள் எடுக்கிறோம். தெள்ளத்தெளிவாய் துளியும் குழப்பமின்றி சலனமே இல்லாமல் ஒரு யோகிபோல் வாழ நம்மால் முடிவதில்லையல்லவா?”

``மனமானது அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம் சூழல் அல்லவா?”

``சூழல் ஒரு காரணம், அவ்வளவுதான். இதுபோல் பல காரணங்களும் உள்ளன.”

``இதையெல்லாம் யார் கண்டுபிடித்தது?”

``நம் குருவான போகர்போல பல சித்த புருஷர்கள் மற்றும் ரிஷிகள், முனிகள்தாம்... வேறு யார்.”

``சித்தர், ரிஷி, முனி... என்ன பெரிய வேறுபாடு?”

``எவர் உதவியுமின்றித் தன்முனைப்பால் தன்னை அறிந்தவன் சித்தன். ஒரு மந்திர உச்சாடனத்தால் பலம் பெற்றுப் புலன்களை வென்றவர் ரிஷி. மனத்தை மௌனத்தில் ஆழ்த்தி நெடிய தவத்தில் இருப்பவர் மௌனி. அவரே காலத்தால் முனிவரானார்.”

``அப்படியானால் நம் போகர் பிரான் தன் முனைப்பால் தன்னையறிந்த சித்த புருஷரா?”

``ஆம்... முதலில் தன்முனைப்பு, பிறகு குரு வணக்கம். அதன்பிறகு இப்படித்தான் வாழ வேண்டும் எனும் நெறிமுறை. இந்த மூன்றையும் கலந்தால் அவரே நம் குரு!” - இப்படி அவர்கள் பேசிக்கொண்டே நடந்ததில் உதகநீர் தேங்கிக் கிடந்த ஒரு பாறை நீர்த்தேக்கம் கண்ணில்பட்டது. அதில் சில தவளைகள் இறந்து மிதந்துகொண்டிருந்தன. அதை எடுத்து அதன் வயிற்றை அமுக்கிப் பார்த்தபோது கல்போல் இருந்தது.

``இது உதகநீரேதான்... நாங்க இதைக் கண்டா எறச்சி வெளியேத்திடுவோம். இல்லாட்டி மிருகங்க குடிச்சிட்டு செத்துப்போவும். இது எங்கவரையில நஞ்சு” என்றான் தோதன்.

``அதுவும் சரிதான்... ஆனால், இது வேறுவிதமாய்ப் பயன்படும் என்பது நீங்கள் அறிய வழியில்லை. உங்கள் மலைவாழ்வில் கல்வி கேள்விக்கே இடமில்லையே... உங்கள் வாழ்வென்பது வெறும் அனுபவ அறிவால் ஆனதுதானே?” என்று ஒரு பதிலைக் கேள்விபோல் கேட்டுக்கொண்டே, கொண்டுவந்திருந்த சுரைக்குடுவையில் அந்த நீரை எடுத்துக்கொண்டனர்.

கரும்பச்சை நிறத்தில் இருந்த அந்த நீரில் குனிந்து நீர் மொள்ளும்போது முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க முடிந்தது. குறிப்பாக, கொந்தனும் தோதனும் இடுப்பில் கை வைத்துக்கொண்டு குனிந்து முகத்தைப் பார்த்ததோடு, வாய் திறந்து பல்வரிசையைப் பார்த்தனர். ஒரு பரவசம் வேறு அவர்களிடம்!

``என்ன தொந்தா, உங்கள் இருப்பிடங்களில் கண்ணாடி இல்லையா?” என்று அதைப் பார்த்துக் கேட்டான் அஞ்சுகன்.

``அப்புடின்னா?”
``கண்ணாடி தெரியாது... கண்ணாடி..?”என்று ஆச்சர்யமாகக் கேட்டான் புலிப்பாணி.

``புலிப்பாணி... நம் பொதினியிலேயே பலருக்குக் கண்ணாடி ஓர் அரிய பொருள். ஆனால், நம் கொட்டாரத்தில் அது நிறைய உள்ளது. அதற்குக் காரணம், நம் ஆசானின் சீன தேசப் பிரவேசம்தான்” என்றான் அஞ்சுகன்.

``உண்மைதான்... கண்ணாடி, மெழுமண் குப்பிகள் (பீங்கான்), பொன்முட்டைக் கிழவர் பொம்மை, மரக்கூழ்த் தாள் இவை எல்லாமே நம் கொட்டாரத்தில் மட்டுமே உள்ளன. ஆவினன்குடி கஜானாவில் அறிவிப்புகளுக்குத் துணிகளும் பலகைகளும்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. கன்னிவாடிக்குச் சென்ற சமயம், எல்லைக்கற்களில் கலிங்க மைதான் (துணியைப் பொசுக்கிச் சாம்பலாக்கி அதில் கரிசாலைச் சாறு கலந்து விரல் நுனியால் தொட்டு எழுதுவர்) என் கண்ணில்பட்டது. திருமேனி வேழரின் படுக்கை அறையில் ஒரு கண்ணாடி இருக்கக் கண்டேன்” என்று குடுவையில் நீர் நிரப்பியபடியே சொன்னான் புலிப்பாணி.

இறையுதிர் காடு - 25

இப்படிப் பேசியபடியே உதகநீரை எடுத்துக்கொண்டுவிட்டு மீதம் அதில் நீர் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்ட புலிப்பாணி ``கழுதைகளோடும் மரக்கலங்களோடும் வந்து ஆசான் கேட்ட அளவுக்கு நீரைக் கொண்டு சென்றுவிட வேண்டும்” என்றான்.

அதன்பிறகு அங்கிருந்தபடியே சுற்றுச்சூழலை ரசித்துவிட்டு, சுமந்து வந்திருந்த வெல்ல அவல்பொரியையும் பேயன் வாழையையும் அப்படியே அருகில் அமர்ந்து சாப்பிட்டனர். அதைக் கொட்டாரத்தில் கொம்பேறி மணியன் சமைத்திருந்த விதம் தொந்தன், தோதனை மிகக் கவர்ந்துவிட்டது.

அவலை வறுத்து அவிப்பதிலும் அதோடு வெல்லப்பாகைக் கலப்பதிலும் ஒரு கணக்கு உள்ளது. பிறகு அதோடு தேங்காய்ப்பூவையும் தூவிக் கலந்து இஞ்சித்துண்டுகளை ஒரு மிளகு அளவு நறுக்கிச் சேர்த்துக் கிளறி, பிறகு இலைக்கும்பாவில் கொட்டி அப்படியே மேலே ஓர் இலையால் மூடி அதன்மேல் பேயன் வாழைப்பழங்களை வைத்து அப்படியே துணி போட்டுக் கட்டி தூக்கு மூடி போட்டுத் தந்ததைச் சுமக்கத் தேவையேயில்லை; அது மாலைபோல் அல்லவா தோளில் கிடக்கும்!

சன்னமான ஒரு விருந்தோம்பலுக்குப் பிறகு உதகநீருடன் அவர்கள் புறப்பட்டனர். கோவேறு கழுதைகளுடன் வரும்போது தடம் மாறிவிடக் கூடாது என்பதன் பொருட்டு, கல் தடயங்களை உருவாக்கியபடியே அந்த ஆனைமலையை விட்டு இறங்கத் தொடங்கினர். இந்த வேளையில் ஒரு வரையாடு கண்ணில் படவும், தொந்தன் போட்ட கூர்மையான கருங்காலிக்குச்சி அதன் தொடைப் பரப்பைத் துளைத்து அந்த ஆடு அவன் வசப்படும்படி ஆனது. அம்புக்குச்சியைப் பிடுங்கிப் போட்டவன் ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, தங்கள் மந்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். ``கரிநாளை நன்கு உண்டுகளித்து அனுபவியுங்கள்’’ என்ற புலிப்பாணி, ``அந்த நாளில் நம் ஆசான் மட்டும் பெரிதாக எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார். உபவாசம் இருப்பார்” என்றான்.
``ஆம்... என்னையும் தியானத்தில் இருக்கச் சொல்வார். ஏதும் காரணம் உண்டா?” என்று கேட்டான் அஞ்சுகன்.

``ஒரே காரணம்தான்... நம் ஆசானுடைய அடுத்த பெரும் முயற்சி என்பது, தண்டபாணித் தெய்வத்தை நவபாஷாணங்களால் சிலையாக உருவாக்குவதுதான். அதற்காக அவர் நம்மைப் பெரிதும் தயார்படுத்திவருகிறார். ஒன்பது பாஷாணங்களுக்கும் நாம் ஒன்பது பேர் எப்போதோ தேர்வாகிவிட்டோம். ஆனால், அதற்கு நாம் மட்டும் போதாது. நாம் பாஷாணங்களை ஆசான் சொல்லும் இடத்துக்குச் சென்று எடுத்து வரப்போகிறவர்கள் மட்டுமே.

இந்தப் பாஷாணங்களோடு மூலிகைகளின் சாறுகள் மற்றும் இந்த உதகநீர் கலந்து புடம்போடுவது என்று ஒரு வழிமுறை உள்ளது. புடம்போடும்போது சுவாசக்கட்டு அவசியம். ஏனென்றால், உயிரைக் குடிக்கும் விஷவாயு தோன்றும். அதை சுவாசித்துவிடக் கூடாது. நம்மால் பெரிதாக சுவாசத்தைக் கட்ட முடியாது. ஆனால், இமயத்திலோ மூணரை நாழிகைக்காலம் சுவாசம் கட்டும் அளவு பயிற்சி பெற்ற பல சித்த புருஷர்கள் உள்ளனர்” என்ற புலிப்பாணியை, நடந்தபடியே வியப்புடன் பார்த்த அஞ்சுகன், ``அப்படியானால் இமயத்திலிருந்து சித்த புருஷர்கள் நம் பொதினிக்கு இதற்காக வரப்போகின்றனரா?” என்று கேட்டான். கேட்டவாறே மேலே யதார்த்தமாய்ப் பார்த்தான்.

போகர் பிரான் ஒரு பறவைபோல் கைகளை அசைத்து எங்கோ செல்வது அவன் கண்களில்பட்டது.

இன்று சாருபாலாவின் மயக்கம், சாந்தப்ரகாஷை சற்றுப் பதற்றமடையவைத்தது. தன்மேல் மயங்கி விழுந்தவளைச் சற்றுத் தாங்கிப் பிடித்து, பிறகு படுக்கவைத்தவன், பாட்டில் தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்து அவளை எழுப்பப் பார்த்தான்.

``சாரு... ஏய் சாரு... கமான் டார்லிங்! கண்ணத் திறந்து பாரு...’’ என்று கன்னத்திலெல்லாம் தட்டினான். அவளும் மெல்ல கண்களைத் திறந்தாள். மிகச்சோர்வாகப் பார்த்தாள்.

``சாரு... என்ன ஜெட்லாக்கா? கமான், நல்லா காலை நீட்டி அப்படியே படு. எனக்கு இப்ப நீயும் உன் ஆரோக்கியமும்தான் முக்கியம். பங்களா, சமாதி எல்லாம் அப்புறம். இந்தா, இந்தத் தலையணையைத் தலைக்கு வெச்சுக்கோ” - சாந்தப்ரகாஷ் அருகில் இருந்த பெட்டிலிருந்து தலையணையை எடுத்து வந்து, அவள் தலையைத் தூக்கிவைக்க முனைந்தான். அப்போது அவளுக்கு வாந்தி வருவதுபோலவும் இருக்கவே, எழுந்து பாத்ரூம் நோக்கி ஓடினாள்.

``சாரு... என்ன பண்ணுது? ரிசப்ஷனுக்கு போன் பண்ணி பக்கத்துல டாக்டர் யாராவது இருக்காங்களான்னு விசாரிக்கட்டுமா?” என்று கேட்கும்போதே வாந்தி எடுத்தவள், அதே வேகத்தில் `அதெல்லாம் வேண்டாம்’ என்பதுபோல் கையை ஆட்டித் தடுத்தாள்.

அந்த ஏ.சி அறைக் குளிரிலும் முத்து முத்தாய் வியர்த்துவிட்டிருந்தது. துப்பட்டாவால் துடைத்துக்கொண்டே பைப்பைத் திறந்து வாய் கொப்புளித்தாள். அப்படியே முகம் கழுவிக்கொண்டாள். பிறகு, எதிர்க் கண்ணாடியில் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள். மெல்ல அவள் கன்னக்கதுப்புகளில் புன்னகை வந்து ஒட்ட முயல்வதுபோல் ஒரு சுருக்கம்.

அப்படியே திரும்பினாள். சாந்தப் ரகாஷோ அங்கு இருக்கும் இன்டர்காமில் ரிசப்ஷனைத் தொடர்புகொண்டிருந்தான். அவனை நோக்கி நடந்து வந்தவள், போன் ரிசீவரை அவனிடமிருந்து வாங்கி, அதன் இடத்தில் வைத்தாள். அவன், அவளை ஆச்சர்யமாகவும் சற்றே பதற்றமாகவும் பார்த்தான். அவள் வாஞ்சையாக அவன் தலைமுடியை வருடினாள். பிறகு மெல்லிய குரலில் ``நம்ப தலைமுறை முடிஞ்சு போயிடலை சந்து... ஐ ஹேவ் கன்சீவ்டு” என்றாள். அவனுக்கு, தன் கழுத்தில் ஆகாயத்திலிருந்து ஆளுயர மாலை ஒன்று விழுந்ததுபோல் இருந்தது.

ழநி!
பேருந்துநிலைய முகப்பிலேயே காத்துக்கொண்டிருந்தான் ரிப்போர்ட்டர் செந்தில். பாரதி, அவனைப் பார்த்ததில்லை. போனில் பேசிய அளவில்தான் பழக்கம். எனவே, அவள் கார் நம்பரை கவனித்துக் கச்சிதமாய் கையைக் காட்டித் தடுத்து நிறுத்தினான். அவளே ஓட்டி வந்ததில் ஓர் ஆச்சர்யம் அவன் நெற்றி மேல் ஓடியது.

``கெட் இன்... ஹோட்டலுக்குப் போவோம் முதல்ல” என்றாள். ஏறிக் கொண்டவனிடம் ``செந்தில்... சார்தான் எழுத்தாளர் அரவிந்தன்” என்றாள்.

``சார் நீங்களா..?!” என செந்தில் அதிகபட்ச ஆச்சர்யமும் மகிழ்ச்சியு மானான். இடையில் ஒரு தடை... டோல் போல் வசூல்! ஆனால், வசூலித்தது ஒரு மஞ்சள் பை வைத்திருக்கும் ஒருவன்.

முகத்தைக்கூடப் பார்க்காமல், ஒரு சிட்டியை பாரதி முன் நீட்டினான். பாரதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது.

``என்னய்யா இது?” என்று டாப் கியரில் ஆரம்பித்தாள்.

அதற்குள் செந்தில் அவனிடம் ``யோவ் பிரஸ்ஸுய்யா... போய்யா அப்பால” என்று கத்தவும், ஒரு மாதிரி பார்த்தபடி விலகினான்.

``என்ன செந்தில் இது... யார் இவங்கல்லாம்?”

``மேடம், இங்க இப்படித்தான் மேடம். கேட்டா `லட்சக்கணக்குல கான்ட்ராக்ட் எடுத்திருக் கோம்’னு ஆரம்பிச்சிடுவாங்க மேடம்.”

``அது சரி... எதுக்கு எடுத்தாங்க. அந்த சிட்டைல ஆதரைஸ்டு சீலே இல்லை.”

``இங்க ரெண்டு, மூணு குரூப் இருக்கு மேடம். வட்டம், மாவட்டம்னு வரிசையா வந்துடுவாங்க. விடுங்க! பிரஸ், போலீஸ், அப்புறம் கட்சிக்கொடியோட வந்தா ஒதுங்கிக்குவாங்க.”

``ஆரம்பமே ரொம்பத் தப்பா இருக்கே!”

``இதெல்லாம் ஒண்ணுமேயில்லை மேடம். இறங்கி நடந்தா இங்க தப்பான விஷயம்தான் அதிகம் கண்ணுல படும்.”

``இதையெல்லாம் நீங்க எழுதி அனுப்பலாமே?”

``எத்தனை தடவ மேடம் எழுதறது..? இவங்களுக்கு அதெல்லாம் மறத்துப்போச்சு மேடம்” -செந்திலின் பதிலைத் தொடர்ந்து, பாரதி டிரைவ் செய்தபடியே பக்கத்தில் அமர்ந்திருந்த அரவிந்தனைத்தான் பார்த்தாள்.

`உன் க்ஷேத்திரத்தின் லட்சணத்தைப் பார்த்தியா... கடவுள் நிஜமாக இருந்தால் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பாரா?’ என்று அந்தப் பார்வையை மொழிபெயர்க்கலாம். அரவிந்தன் அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

அதற்குள் அந்தச் செந்தில், ``மேடம், ரைட்ல திரும்புங்க... அதோ ஹோட்டல்...’’ என்று காட்டினான். ஹோட்டல் முகப்பில் காரை வளைத்து நிறுத்துவதற்குள் விழி பிதுங்கிவிட்டது. பத்து கார்களுக்கான பார்க்கிங் பிளேஸில் இருபதுக்கும்மேல் கார்கள்!

காரைவிட்டு இறங்கிய நொடி, நான்கைந்து பிச்சைக்காரர்களின் கரங்கள் பாரதி முன் நீண்டன. அதிலும் ஒருவன், முருகன் வேடத்தில் ஒரு கையில் வேலோடு மறுகையை நீட்டியபடி இருந்தான்.
அந்த முருகனை ஓங்கி அறையலாமா என்றுகூடத் தோன்றியது. நல்லவேளை, அரவிந்தன் பத்து ரூபாயைத் தந்துவிட்டு ரிசப்ஷன் நோக்கி பாரதியோடு நடந்தான்.

``இதுக்குத்தான் அரவிந்தன் `நான் வர மாட்டேன்’னு சொன்னேன். இது ஒருவிதமான பக்தி சீட்டிங்... இதுக்குப்போய் பணத்தைக் கொடுத்து என்கரேஜ் பண்றீங்களே” என்றாள்.

``அநாவசியமா உணர்ச்சிவசப்படாதே! இந்த ஊரோட பிழைப்புக்கான ஒரே ஆதாரம் அந்த முருகன். அதுக்கு ஆதாரம், அவன் மேல எல்லோரும் வெச்சிருக்கிற பக்தி. இது பெரிய ஸ்தலமாவும் இருக்கிறதால ஃப்ளோட்டிங் பாப்புலேஷன்ல திணறக்கூடிய ஒரு ஊராவும் இது இருக்கு. ஏற்றத்தாழ்வுள்ள சமூகம் நம் சமூகம். ஆகையால, பிச்சை, சுரண்டல் ஏமாத்துறதுன்னு எதுக்கும் இங்க குறையே இருக்காது. இங்க எங்கேயும் தப்பு நடக்கக் கூடாதுன்னா, நம்ப நாட்டுல எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்கணும். சொஸைட்டியே மாறினாத்தான் இங்க மாற்றம் வரும். நம்ப ஸ்டேட்லயே அது இல்லை... நாட்லயும் அது இல்லை. அப்புறம் இந்த ஊர்ல மட்டும் எப்படி வரும்?” - அரவிந்தன் யதார்த்தத்தைச் சொன்னானா அல்லது சகஜமாக எடுத்துக் கொண்டானா என்பது தெரியாதபடி பேசினான்.

அவன் சரியான பதில் சொன்னதுபோலவும் இருந்தது; சமாளித்ததுபோலவும் இருந்தது. அதற்குள் பாட்டி முத்துலட்சுமி இருக்கும் அறையே வந்துவிட்டது.

உள்ளே முத்துலட்சுமி, முரசு தொலைக் காட்சியில் பழைய பாடல்களைப் பார்த்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தாள். எல்லோரும் உள்ளே வரவும் தலையில் கட்டுடன் எழுந்து நின்றாள்.

இறையுதிர் காடு - 25

``பாட்டி...”

``வந்துட்டியா கண்ணு.”

``ஆமா... இந்தக் கண்ணு, மூக்குக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. எப்படியோ என்னை இங்க வரவெச்சுட்டே, உனக்குத் திருப்திதானே?”

``வந்ததும் வராததுமா குதிக்காத பாரதி. முதல்ல உக்காரு. தம்பி, நீயும் உக்காருப்பா” - முத்துலட்சுமி அருகில் இருந்த ஒரு சோபாவைக் காண்பித்தாள். அரவிந்தனும் அமர்ந்தான்.

``மேடம், காபி சொல்லட்டுமா?” என்று இடையிட்டான் செந்தில்.

``இங்க நல்லாருக்குமா?”

``நல்லாருக்கும். கும்பகோணம் டிகிரி காபி.”

``சொல்லுங்க செந்தில்... காபி வரதுக்குள்ள நான் பிரஷ் பண்ணிடுறேன். ஆமா, எங்களுக்கு ரூம் போடலியா செந்தில்?”

``பக்கத்து ரூம்தான் மேடம். ரெடியா இருக்கு.”

``ஓ, தேங்க்யூ. அப்ப அரவிந்தன், நீங்க அந்த ரூமுக்குப் போய்க் குளிச்சிட்டு ரெடியாகுங்க. நானும் ரெடியாகுறேன்.”

``மேடம், இன்னிக்கு உங்க புரொக்ராம் என்ன... மலைக்கு சாமி கும்பிடப் போறோமா?”

``போறோமாவா... அதுக்குத்தானே சென்னையில இருந்தே வந்திருக்கோம். நீ என்னப்பா இப்படிக் கேட்டுட்டே?”

``அப்படின்னா, நான் முன்னால போய் ஆபீஸரைப் பார்த்து ஏற்பாடு பண்ணணும்.”

``எதுக்கு?”

``வி.ஐ.பி தரிசனத்துக்குத்தான் மேடம்.”

``வேண்டாம்... யார்கிட்டேயும் எந்த உதவியும் கேட்க வேண்டாம். சொல்லப்போனா நான் யாருங்கிறதே தெரியக் கூடாது. நான் கண்ணால பார்க்கிற, எனக்கு ஏற்படுற அவ்வளவு அனுபவங்களையும் எழுதப்போறேன். புரியுதா செந்தில்?”

``புரியுது மேடம்.”

``நீங்க சும்மா, கூட வாங்க...”

``ஓகே மேடம்.”

``பாரதி, கூட்டம் ரொம்ப அதிகம்மா. என்னால தர்மதரிசன க்யூவுல எல்லாம் நடக்க முடியாதுடி. இந்தக் கிழவிக்காகக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு. ஒரு பத்திரிகை ஆசிரியரா வராத. என் பேத்தியா என்கூட வா. முருகனை மட்டும் மனசுல நினைச்சு வா” - கெஞ்சத் தொடங்கி விட்டாள் முத்துலட்சுமி.

``டோன்ட் ஒர்ரிம்மா... உங்களுக்கு நான் இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க” என்றான் அரவிந்தன். அப்படியே ஒரு மெல்லிய புன்னகையோடு பாரதியைப் பார்த்தான். அவன் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவது, எதனாலோ அவளுக்குப் பிடித்திருந்தது. பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்பு மட்டுமே அவளிடம்!

முருகன் சந்நிதி!

ஒருபுறம் தள்ளுமுள்ளுக் கூட்டம். இன்னொரு புறம் காசு கொடுத்த கூட்டம். நடுவில் ராஜ அலங்காரத்தில் அந்த நவபாஷாண முருகன். கிட்ட நெருங்கவும், கன்னத்தில் பலமாகப் போட்டுக்கொண்டாள் முத்துலட்சுமி.

``அய்யா... என் மகன் எழுந்து நடமாடணும். என் பேத்தி நல்ல இடத்துல வாழ்க்கைப்படணும். இனி எங்க குடும்பத்துல எந்தத் தப்பும் நடக்கக் கூடாதுய்யா...” முத்துலட்சுமி, பாரதி காதுபடவே வேண்டிக்கொண்டாள்.

அரவிந்தனும் உருக்கமாய்க் கும்பிட்டான். ஏனோ பாரதிக்கு கைகளைக் கூப்பக்கூட மனம் வரவில்லை. அவள்வரையில், எல்லோரிடமும் பக்தி என்கிற பெயரில் பயமும் சுயநலமும்தான் தெரிந்தன.


ஒருவர் 2,000 ரூபாய் நோட்டுக்கட்டை முருகன் முன் காட்டி, படபடவெனக் கன்னத்தில் போட்டுக்கொண்டார். அந்தப் பணத்தில்தான் அவர் தொழில் தொடங்கப்போகிறாராம். தப்பாகப் போய்விடக் கூடாதாம். லாபத்தில் முருகனுக்கும் ஒரு பங்கு!

பாரதிக்குக் கோபமும் வந்தது; சிரிப்பும் வந்தது. மெல்ல நகர்ந்து வெளியே வந்தபோது, `தர்மம் தாயே..!’ என்று பல கைகள். சிலர், கர்ம சிரத்தையாக ஐந்து, பத்து என்று அவர்களுக்குத் தரவும்செய்தனர். அப்படியே போகரின் ஜீவ சமாதி இருக்கும் பக்கம் செந்தில் அழைத்துச் சென்றான். முகப்பில் நல்ல கூட்டம். உள் புழுக்கத்துக்கு இதமாக வீசும் காற்றிடமும் சற்றுக் குளுமை. சிறிது நேரம் அங்கேயே நிற்கலாமா என்றுகூடத் தோன்றியது.

ஆனால் அரவிந்தன், ``பாரதி, முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கோம். கமான்” என்று போகரின் சமாதி உள்ள சந்நிதிக்குள் அழைத்தான். அவளும் அவனோடு நடந்தாள்.

இறையுதிர் காடு - 25

உள்ளே பூசாரிபோல் ஒருவர் இருந்து விபூதி கொடுத்துக்கொண்டிருந்தார். ஊதுவத்தி வாசம் கமழ்ந்தபடி இருக்க, எதிரே ஜீவசமாதி மேல் தீபச்சுடர் ஒளியில் வலம்புரிச் சங்கு, ஓர் அம்மன் உருவம் மற்றும் பலவிதமான மலர்ச் சிதறல்களுக்கு நடுவில், பாரதி தன் வீட்டில் கண்ட அந்த நெடிய சர்ப்பம் மெல்லப் படம் விரித்துப் பார்ப்பதுபோல் தோன்றியது. கண்களைக் கசக்கிக்கொண்டாள். நல்லவேளை, அப்படியெல்லாம் இல்லை. திரும்பி அரவிந்தனையும் பார்த்தாள். அவனும் அவளைப்போலவே பார்த்தான். அப்படியே அவள் தோளைப் பார்த்தவன் ``எங்க பாரதி உன் பேக்?” என்று கேட்டான். சற்றுப் பின்னால் இருந்த முத்துலட்சுமிக்கும் செந்திலுக்கும்கூட திக்கென்றது.

அப்போதுதான் அது களவாடப்பட்டதே பாரதிக்குத் தெரிய வரவும், பெரும் அதிர்ச்சி. அதில்தான் செல்போனிலிருந்து ஏ.டி.எம் கார்டு வரை எல்லாம் உள்ளன.

பதறியபடி வெளியே வரவும், எதிரில் முருக தரிசனம் முடிந்து போகரை தரிசிக்க வந்தவராய் அந்த யோகி திவ்யப்ரகாஷ்!

- தொடரும்

- இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: ஸ்யாம்