மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 26

இறையுதிர் காடு - 26
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 26

இறையுதிர் காடு - 26

இறையுதிர் காடு - 26

அன்று தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்ட அஞ்சுகனை, புலிப்பாணியும் தொடர்ந்தான். அவன் கண்களுக்கு அவர் எங்கோ செல்வது தெரிந்தது. சிறிது நேரம்தான் அவரும் பார்வையில் புலனானார். அதன் பிறகு மேகங்கள் மறைக்கத் தொடங்கிவிட்டன.

``புலி... நம் ஆசான் எங்கோ செல்கிறார்... பார்த்தாய்தானே?”

``ஆம்... நன்றாகத் தெரிந்தது. ஆனால், இதற்கு முன் இப்படி அவர் பறந்து சென்றதை நாம் யாருமே பார்த்ததில்லை. நமக்கே இது முதல் அனுபவம்.”

``உண்மை... நீ கூறுவது பெரும் உண்மை. அதே சமயம் இதற்குக் காரணமும் இருக்கிறது.”

``என்ன காரணம்?”

``நேற்று நாம் இந்த மலையகம் செல்ல நமக்கு அவர் உத்தரவிட்ட சமயம், நம்மைக் கட்டி அணைத்து உச்சிமோந்து தலையை ஊதிவிட்டது ஞாபகம் இருக்கிறதல்லவா?”

``ஆம்... அது ஒருவகை ஸ்பரிச தீட்சை.”

``அந்த தீட்சைதான் காரணம் என எனக்குத் தோன்றுகிறது.”

``இருக்கலாம்... அவ்வாறு அவர் என் வரையில் நடந்துகொண்ட பிறகு, பெரும் சுறுசுறுப்பை நான் உணர்ந்தேன். அதுமட்டுமல்ல, நேற்று இரவு கனவே இல்லாத உறக்கத்துக்கும் நான் ஆளானேன்.”

``அது ஒரு விஷயமா என்ன?”

``என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்... `கனவே இன்றி உறங்கி எழுவதே நல்லுறக்கம்’ என்பார் நம் ஆசானாகிய போகர். கனவுகள் இன்றி உறங்கி எழுபவரே தெளிந்த மனம்கொண்டவர் என்பது சித்தர்கள் உலகம் கொண்டுள்ள கருத்து.”

இறையுதிர் காடு - 26

``எனக்கும்கூட நேற்று இரவு உறக்கத்தில் கனவு எதுவும் வரவில்லை. உறக்கம் நீங்கி விழிக்கும்போது கண்களில் கலக்கமும் இல்லை. என் உடல் நிலையிலும் மனோ நிலையிலும் இப்படி ஒரு மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்றும் புரியவில்லை. இப்போது நீ சொல்வதை வைத்துப் பார்த்தால், நாம் நம் குருவால் பூரணமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். அவரின் ஆசி அலைகள் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்பதையன்றி வேறு காரணங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.”

``அவரிடமே இது தொடர்பாய்க் கேட்டு விளக்கம் பெறுவோம். எப்படியோ நாம் வந்த காரியம் நல்லவிதமாய் முடிந்தது. இந்த உதகநீரை நாம் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்” - அஞ்சுகனும் புலிப்பாணியும் பேசியபடியே நடந்தனர். பன்னிரண்டு குடுவைகள் அவர்களிடம் இருந்தன. அதன் சுமையோடு மலைச்சரிவுகளில் பார்த்துதான் இறங்க வேண்டும். பார்த்துப் பார்த்தே இருவரும் இறங்கினர்.

ஓர் இடத்தில் மலைப்பாம்பு ஒன்று, மான்குட்டி ஒன்றை விழுங்கியிருந்தது. அஞ்சுகனும் புலிப்பாணியும் பார்த்தபோது மானின் பின்னிரு கால்களின் குளம்பு பாகம்தான் தெரிந்தது. அந்த மான்குட்டி, மலைப்பாம்பின் அன்றைய உணவாகிவிட்டது. பார்ப்பதற்கே என்னவோபோல் இருந்தது. `மலைப்பாம்புக்கு உணவு கிடைத்தது என்று மகிழ்வதா, இல்லை ஒரு மான்குட்டியானது அந்தப் பாம்புக்கு இரையானதை எண்ணி வருந்துவதா எனத் தெரியவில்லை’ - அஞ்சுகன், ஒரு விநாடி அந்த மான்குட்டி இடத்தில் தன்னை வைத்துக் கற்பனை செய்துபார்த்தான். விகாரமான உணர்வுகளே மனதில் மூண்டன.

இறையுதிர் காடு - 26

``இந்தப் பாம்புதான் எவ்வளவு கொடியது!” என்றான் தெறித்துவிடும் விழிகளோடு.

``பாம்பு கொடியதா அல்லது அதை ஒரு மாமிசப் பட்சிணியாய்ப் படைத்த இறைவன் கொடியவனா?” என்று கேட்டான் புலிப்பாணி.

``இறைவன் கருணை மிகுந்தவனல்லவா?”

``அப்படியானால், இந்த மலைப்பாம்பை வேறு யார் படைத்திருப்பார்கள்?”

`` `இறைவனாலேயே சகலமும் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பார் நம் ஆசான். அப்படிப் பார்த்தால், இந்த மலைப்பாம்பும் நிச்சயம் அவன் படைப்பே.”

``என்றால்... ஓர் உயிர், தான் வாழ இன்னோர் உயிரை விழுங்குவது சரியா? இது எவ்வளவு பெரிய முரண்!”

``உண்ணும் உணவில் காய்கறிகளில்கூட உயிர் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், நாமெல்லாம்கூட உயிர் விழுங்கிகள்தான்.”

``குழப்பமாக  இருக்கிறதே... எது சரி?”

``நம் ஆசானிடமே இந்தக் கேள்விகளை முன்வைப்போம். `என் சீடர்கள், கேள்வி கேட்பவர்களாக இருக்க வேண்டும்’ என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். எனவே, அவர் விருப்பப்படி கேள்வி கேட்பவர்களாய் நாம் இருப்போம். அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்” - இப்படி அஞ்சுகனும் புலிப்பாணியும் ஒரு முடிவுக்கும் வந்தனர். இந்த வயதில் அவர்கள் நகரத்து ஜீவிகளாக இருந்திருந்தால் நிச்சயம் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள். தங்கள் எதிர்காலம், வரப்போகும் மனைவி, வாழப்போகும் விதம் என்று இவற்றைச் சுற்றித்தான் அந்தப் பேச்சும் இருந்திருக்கும்.
ஆனால், இவர்கள் ஒரு சித்த புருஷரின் சீடர்களாக ஆகிவிட்டனர். அதனாலேயே தங்களை மையமாக வைக்காமல், சுயநலமின்றிச் சிந்திக்கவும் பேசவும் இவர்களால் முடிந்தது.

கொட்டாரத்துக்குள் இருவரும் நுழைந்தபோது போகர் பிரான் இருக்க மாட்டார் என்று எண்ணியிருந்தனர். அருகில் இருக்கும் இடும்பன் குளத்துக்குப் போய் நீந்திக் குளிக்கும் ஓர் ஆசை இருவரிடமுமே உருவாகியிருந்தது. ஆனால், அவர்கள் கொட்டாரத்தில் போகர் பிரானைப் பார்க்கவும் ஆச்சர்யப்பட்டனர்.

`வான் மார்க்கமாய் எங்கோ சென்றாரே, ஆனால் இப்போது இங்கு இருக்கிறாரே?!’ ஆச்சர்யத்தை ரேகைகளாக்கி முகத்தில் ஓடவிட்டுக்கொண்டு, கொட்டார வழக்கப்படி மண்டியிட்டு வந்தனம் புரிந்தனர்.

``என்ன அஞ்சுகா, புலி... போன காரியம் பழமா?”

``பழமே குரு... மலையில் தங்களால் காப்பாற்றப்பட்ட வேலாமூப்பரின் சகாக்களான தொந்தனும் தோதனும் கண்ணில் பட்டனர். அவர்களே எங்களை உதகநீர் உள்ள பாறை நீர்த்தேக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்று, பெரிதும் உதவினர்.”

``அதன் பிறகு அவர்களோடு இணக்கமாய்ப் பேசியபடி கொண்டு சென்ற கட்டுணவை உண்டீர்கள் என்று சொல்லுங்கள்.”

``ஆமாம் குருவே... அவர்களும் கரிநாள் நிமித்தம் ஒரு வரையாட்டை வேட்டையாடி சுமந்து சென்றனர்.”

``மொத்தத்தில் இந்த மலைப் பயணம் உங்கள் வரையில் சிறப்பாக இருந்தது என்று கூறுங்கள்!”

``அதில் சந்தேகமேயில்லை. பலாவும் தேனும்கூட உண்ணக் கிடைத்தன. பல அதிசயக் காட்சிகளும் கண்ணில் பட்டன. அதனால் பல கேள்விகள் எழும்பின.”

``நல்லது. குடுவைகளை பத்திரமாய் வைத்துவிட்டு வாருங்கள். வந்து என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேளுங்கள்” என்ற போகர் அப்படியே திரும்பவும், வயதான ஒரு பெண்ணும் இளம் பெண் ஒருத்தியும் சோகமாய் நின்றபடி இருந்தனர்.

``யார் நீங்கள்?” என்று போகர் வினவவும் இருவரும் நெருங்கி வந்தனர். அவர்களில் அந்த இளம் பெண் கறுப்பு நிறத்தில், ஆனால் நல்ல கட்டுடலோடு இருந்தாள். அவள் தாயோ மாநிறமாய் ஒரு விவசாயக் குடிமகள்போல் அள்ளுக்கொண்டை போட்டு, காதில் குதம்பை சகிதம் கழுத்தில் மஞ்சள் தாலிக்கயிற்றோடு காட்சியளித்தாள். நெற்றியின் மையத்தில் ஆய்த எழுத்துபோல் பச்சை குத்தப்பட்ட மூன்று புள்ளிகள் திலகம்போல் காட்சியளித்தன. பருத்திச்சேலையைக் கொசுவமாய்க் கட்டியிருந்தனர்.

இளையவள், வெண்ணிறத்தில் கச்சை கட்டி முதுகுப்புறம் முடிச்சு போட்டிருந்தாள். அவள் கழுத்தில் பவள மாலை ஒன்று கிடந்தது. களையான முகம். கொண்டையாய் விழிகள், அடர்வாய் இடை வரை நீண்ட தலைமுடி, அச்சு செய்து அதில் அழுத்தி எடுத்தாற்போல் புஜம்.

``ஆண்டே... நாங்க பக்கமா ஆயக்குடி.”

``இங்கு வந்த காரணம்?”

``இவ என் ஒரே மக... பேரு பேச்சாயி.”

``ஓ... பேச்சாயிக்கு என்ன குறை?”

``இவ உடம்போட நிறம்தான் சாமி பெரிய குறை. எங்க தலப்பாடுகள்ல யாருமே இப்படி ஒரு கறுப்பு இல்லை. எப்படி இப்படிப் பொறந்தான்னும் தெரியல. என் கழுத்துப் புருஷன் என்னிய நம்பினாலும், ஊர்ல சிலர் நான் கள்ளமா கெட்டுப்போயித்தான் இவளைப் பெத்துட்டதா புரளி பேசுதுங்க. இவளுக்கு ஒரு கழுத்துப் புருஷனைக் கொண்டுவரலாம்னா, எல்லாரும் நிறத்துக்காகவே மறுப்புச் சொல்லி எல்லையிலேயே திரும்பிடுறாங்க. இவளும் மனசு ஒடிஞ்சு கள்ளிப்பால குடிக்கப் பார்த்தா... காலத்துல  பார்த்ததால, அதுல இருந்து காப்பாத்திட்டேன். ஆனா, காலத்துக்கும் எப்படிக் காப்பாத்தப்போறேன்னு தெரியல சாமி” - அந்த முதிர்ந்த பெண் பேச்சில், சமூக நிலையிலிருந்து அந்தப் பெண்ணின் நிலையும்  பளிச்செனத் தெரிந்தது. அஞ்சுகனும் புலிப்பாணியும் உதகநீர்க் குடுவைகளை வைத்துவிட்டு வந்திருந்தவர்களாய் அந்தக் கறுத்த பெண் நிமித்தம் போகர் கூறப்போவதைக் கேட்கத் தயாராக இருந்தனர்.

போகரும் புன்னகையோடு பதில் கூறத் தொடங்கினார்.

``கவலைப்படாதே... உன் வம்சாவளியில் உன் தாய் தொட்டு ஏழு தாத்தன் பாட்டிகளுடன் தந்தை தொட்டு ஏழு தாத்தன் பாட்டிகள் எனும் எண்ணிக்கையில் மொத்தமாய் இருபத்தெட்டுப் பேரின் பதிவுதான் இந்த உடம்பு. அதாவது பதினான்கு தாத்தாக்களும் பதினான்கு பாட்டிகளுமாய் இருபத்தெட்டுப் பேர். தாய் வழி தந்தை, தாய் வழி தாய், தந்தை வழி தந்தை, தந்தை வழி தாய் என நான்கு பகுப்பில் ஏழு தலைமுறைகளைக் கணக்கில்கொண்டால் இந்த இருபத்தெட்டு வரும்.

இந்த இருபத்தெட்டுப் பேரின் உடற்கூறு மற்றும் உள்ளக்கூறு என்று அவ்வளவும் இந்த உடம்பில் இருக்கின்றன. ஒரு பாட்டிபோல் தலைமுடி, ஒரு தாத்தாபோல் கால் விரல்கள், ஒரு பாட்டிபோல் உயரம், ஒரு தாத்தாபோல் தோலின் நிறம் என, இருபத்தெட்டுப் பேரின் பதிவுகள் நம் ஒவ்வொருவர் உடலிலும் நிச்சயமாக உள்ளன. அதேபோல் அவர்கள் செய்த நன்மை - தீமையின் கர்ம அளவும் நமக்குள் உள்ளது. இதில் தந்தை வழித் தாக்கம் அதிகம் இருக்கும். தாய் வழித் தாக்கம் குறைவாக இருக்கும்.

இந்தப் பெண் வரையில் இருபத்தெட்டுப் பேரில் ஏதோ ஒரு பாட்டி கறுப்பு நிறம்கொண்டவளாக இருந்திருக்க வேண்டும். அது சுக்கில சுரோணிதத்தில் ஒரு மைப்புள்ளி அளவின் லட்சம் பாகத்தில் ஒரு பாகத்தில் ஒளிந்திருந்து, புணர்ச்சியின்போது வெளிப்பட்டுதான் கருப்பிண்டம் உருவாகிறது. அதனாலேயே இவள் கறுப்பாக இருக்கிறாள்.

உண்மையில், கறுப்பும் வெளுப்புமே இயற்கை வண்ணம். அதையே உலகின் இரவும் பகலும் சொல்கின்றன. இதில் பகலாய் பரமனும், இரவாய் விஷ்ணுவும் விளங்குவதாய் வேதங்கள் கூறுகின்றன. இரவில் மனிதர்கள் படுத்து ஓய்வெடுப்பதையே விஷ்ணுவின் சயன கோலம் உணர்த்துகிறது. பகலில் ஓடி ஆடித் திரிந்து பலவாறு இயங்குவதையே சிவனின் நாட்டிய கோலம் உணர்த்துகிறது. நிரந்தரமான வண்ணம் இவை இரண்டுமே! ஏனைய வண்ணங்கள் இடையில் உருவானவை. அந்த வண்ணங்களும் நாள்பட நாள்பட கறுத்தும் வெளுத்துமே தம் இறுதி முடிவை அடைந்திடும்.

வண்ணங்களுக்கு, நீடித்த தன்மை கிடையாது; நிலைத்த தன்மையும் கிடையாது. கறுப்பும் வெளுப்புமே நிலையானவை. அதிலும் வெண்ணிறத்தைப் பேணுதல் சிரமமான ஒன்று. கறுப்புக்கு அந்தச் சிரமமே கிடையாது. அடுத்து உலகில் வந்து செல்வது ஒளி... நிரந்தரமானது இருட்டு எனும் கறுப்பே! அப்படிப்பட்ட நிரந்தரத்தன்மைகொண்ட நீ, மகிழ வேண்டுமேயன்றி வருந்தக் கூடாது” என்று நெடிய விளக்கம் தந்தார் போகர்.

அதைக் கேட்ட எல்லோருக்குமே பெரு வியப்பு. குறிப்பாக, ஒருவர் உடம்பு என்பதே அவர்களின் முன்னோர்கள் தொகுப்பு என்பது, எல்லோருக்கும் ஒரு வியப்புக்குரிய செய்தி. பிரமித்துப்போய்ப் பார்த்தனர் போகர் பிரானை.

``என்ன பார்க்கிறீர்கள்... உன்னை சமாதானப்படுத்த நான் இதைக் கூறவில்லை. கறுப்பாய் இருப்பதில் பல நன்மைகள் உள்ளன. முதலில் திருஷ்டித்தாக்கம் இருக்காது. அடுத்து தோல் ரோகங்கள் பெரிதாக ஏற்படாது. ஆனாலும் கண்களைச் சற்றுக் கரிப்பதால் இதை மனித மனம் வெறுக்கிறது. அவ்வளவுதான்.

அந்த வெறுப்பை, பிரியத்துக்கு மாற்றலாம். இந்தக் கறுத்த மேனியைச் செம்பொன்னாய் ஒளிரவும்வைக்கலாம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, என் போன்றோருக்கு! `கொட்டைக்கரந்தை செந்தூர கற்பகம்’ என்று ஒரு பஸ்பம் உள்ளது. அதை ஒரு மண்டலம் சாப்பிட்டால் போதும், இந்தக் கறுப்பு நிற தேகம் செம்பொன் நிற தேகமாகிவிடும். அதற்கு நீ இங்கே ஒரு மண்டலம் தங்கி இருந்து நான் சொல்லும் சில பணிகளையும் செய்ய வேண்டும். உனக்குச் சம்மதமா?” என்று கேட்டார் போகர். அந்தப் பெண்ணோ `சம்மதம்’ என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.

இன்று திவ்யப்ரகாஷ், அப்போதுதான் முருகனின் தரிசனத்தை முடித்துவிட்டு அடுத்து போகரின் தரிசனத்துக்காக வந்திருந்தார். அப்படி வந்த இடத்தில்தான் நேருக்குநேர் சந்திப்பு. அவருடன் அவரின் உதவியாளர் பகவதி முத்து என்பவர்.

சரியான உச்சிவேளை வேறு...

``அட பாரதியா... வா பாரதி, நீ எப்ப வந்தே?” என்று மிக இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தார் திவ்யப்ரகாஷ்.

``நான் இன்னிக்கு காலையில வந்தேன் ஜி” என்று பரிதவிப்போடு சொன்னவள் பார்வையோ நாலாபுறமும் துழாவியது.

``என்ன பாரதி... யாரைத் தேடுறே, இன்னும் யாராவது வந்திருக்காங்களா?”

``இல்லை சார்... பாரதியோட பேக் திருடுபோயிடுச்சு. அது இப்பதான் தெரியவந்தது” என்று அரவிந்தன் இடையிட்டான்.

அதற்குள் முத்துலட்சுமியும் அந்தச் செந்திலும் பாரதியை மிக நெருங்கியவர்களாய் ``மேடம்... இங்க மேல போலீஸ் கன்ட்ரோல் ரூம் இருக்கு. அங்க போய் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம் வாங்க” என்றான் செந்தில்.


``ஒரு நிமிஷம்...” என்ற திவ்யப்ரகாஷ், அந்தச் சூழலில் சற்று ஆளரவம் இல்லாத இடமாகப் பார்த்துப் போய் நின்றார். உதவியாளரும் அவரோடு சென்று நின்றார்.

``பாரதி, அவர் காரணமாத்தான் கூப்பிடுறார்” என்று அரவிந்தன் பாரதியோடும் முத்துலட்சுமி மற்றும் செந்திலோடும் அவர் இருந்த இடத்துக்குச் சென்றான்.

திவ்யப்ரகாஷ் தன் ஆற்றலைக் காட்டத் தீர்மானித்தவர்போல ``அந்த பேக் என்ன கலர்?” என்று கேட்டார்.

``பிளாக் கலர் லெதர் பேக்... ஒரு பக்கத்துல முயல் உருவம் இருக்கும்.”

``நோ பிராப்ளம்... கொஞ்சம் என்னையே உற்றுப்பார், உன்கிட்ட இருந்து திருடிய மனிதனை உன் மூலமா நான் இப்ப பார்க்கப்போறேன்.”

``என்ன சார் சொல்றீங்க... இது என்ன மேஜிக்?”

``நீங்க எப்படி வேணா சொல்லிக்குங்க மிஸ்டர்... மிஸ்டர் உங்க பேரை நான் தெரிஞ்சிக்கலாமா?”

``ஐ’யம் அரவிந்தன்... எழுத்தாளர்.”

``உங்கள சந்திச்சதுல சந்தோஷம். நமக்கு இப்ப டைம் இல்லை கமான்” - திவ்யப்ரகாஷ் பாரதியின் முகத்தை உற்றுப்பார்த்திட, அவளும் அப்போதைய நிலையில் வேறு வழியின்றி அவரைப் பார்த்திட, திவ்யப்ரகாஷ் சற்று விறைப்பாகி பாரதியைப் பார்த்தபடியே ``உன் கைய கொஞ்சம் நீட்டு...” என, அவள் நீட்டிய கையைத் தன் இரு கைகளால் பிடித்துக்கொண்டு கண்களை மூடினார்.

இறையுதிர் காடு - 26

பாரதிக்கு, அவர் தன் கைகளைப் பிடித்திருப்பது பிடிக்கவில்லை. ஆனால், ஒரு தொடர்புக்காக அவர் பிடித்திருப்பதை அவளால் யூகிக்க முடிந்தது.

சில நொடிகளில் கண்களைத் திறந்தவர் ``உன்கிட்ட இருந்து பேகைத் திருடியவன் ஒரு வழுக்கைத் தலை பிச்சைக்காரன். அவனுக்கு ஒரு கால் கொஞ்சம் ஊனம். சாய்ச்சு சாய்ச்சுதான் நடப்பான். அவன் இன்னும் மலையைவிட்டுக் கீழ இறங்கலை. படியில இறங்கிப் போய்க்கிட்டிருக்கான். போனா பிடிச்சுடலாம்” என்றார்.

அரவிந்தனுக்கு அவர் சொன்னதெல்லாம் ஏதோ டெலஸ்கோப் வழியாக தூரத்தில் போகிற ஒருவரைப் பார்த்துச் சொல்வதுபோல்தான் இருந்தது. அவர் சொன்னதை நம்பி ஓடவும் தோன்றவில்லை.

``என்ன, நான் சொன்னதுல நம்பிக்கை வரலையா? பரவால்ல... அவன் கட்டாயம் பிடிபடுவான். இப்படி நடக்கணும்கிறது ஒரு விதி. இதோட முடிவுல ஒரு நல்லதுதான் இருக்கு. போங்க... அடுத்து உங்களுக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அப்படியே செய்யுங்க. நான் என் வழியில போறேன். நான் முன்பே சொன்னதுபோல என்னைச் சந்திக்கிற சந்திப்பை, உன்னால மாத்தவே முடியாது. இதை நான் மமதையில சொல்லலை, நல்ல எண்ணத்துல சொல்றேன். உன்னால, என்னால, நம்மால ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகுது. அந்த முருகன் அருளால போகர் பிரான் அதை நடத்தப்போறார்.

இப்ப, இங்க நான் ஒரு முக்கியமான தகவல் சொல்றேன். மகா சமாதியாயிட்ட போகர், இந்த பூலோக நலனை உத்தேசிச்சு சமாதியிலிருந்து வெளியே வந்து சில காரியங்கள் செய்யறார். அப்படி வர்ற போகர் பிரானை தரிசிக்கிறதை, நான் என் வாழ்நாள் லட்சியமா நினைக்கிறேன். எனக்கு அந்தத் தரிசனம் உன்னாலதான் பாரதி கிடைக்கப்போகுது... உன்னாலதான் கிடைக்கப்போகுது!” என்று அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு, உதவியாளர் பகவதி முத்துவுடன் போகர் சமாதி நோக்கி நடந்தார்.

அவர் பேசியபோது போன் வரவே, செந்தில் ஒதுங்கியிருந்தான். முத்துலட்சுமிக்கும் போன் வந்து பேசியபடி இருந்தாள். இந்நிலையில் அந்தச் செய்தி அரவிந்தனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு செய்தியாக ஆகிவிட்டதுதான் விந்தை.

``என்ன பாரதி, இவர் இப்படிச் சொல்லிட்டுப் போறார்.”

``எனக்கும் குழப்பமாதான் இருக்கு அரவிந்தன். மனசுல இருக்கிறதை அப்படியே சொல்றவர்னு நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே.”

``அப்ப அந்தத் திருடனைப் பற்றிச் சொன்னது உண்மையா இருக்குமோ?”

``சார்... முதல்ல ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் கொடுப்போம். மற்றதை அங்கே பேசலாம்” - செந்தில் அவர்கள் மூவரையும் ஆபீஸ் ரூமையொட்டி உள்ள கன்ட்ரோல் ரூம் நோக்கி அழைத்துச் சென்றான்.

கன்ட்ரோல் ரூம் மைக்கில் அவ்வப்போது அறிவிப்பு செய்தபடி ஒரு போலீஸ்காரரும், சற்றுத் தள்ளி இன்னொருவரும் இருந்தனர்.

``சார், நான் தமிழ் வாணி ரிப்போர்ட்டர். என் பேர் செந்தில்.”

``என்ன, உள்ளே போக பாஸ் வேணுமா? ஆபீஸுக்குப் போய் பேஷ்காரப் பாருங்க.”

``தரிசனமெல்லாம் பண்ணியாச்சு சார். இப்ப கம்ப்ளெயின்ட் கொடுக்க வந்திருக்கோம்.”

``என்ன கம்ப்ளெயின்ட்?” - அவர் கேட்க, பாரதியே முன் சென்று நடந்ததைக் கூறி முடித்தாள்.

``ஆமா... அந்த பேக் திருடுபோய் எவ்ளோ நேரம் இருக்கும்?”

``இருபது நிமிஷம் இருக்கலாம் சார்.”

``இருபது நிமிஷம்... இருபது நிமிஷம்... நான் மலை ஏறிவரும்போது பத்து நிமிஷம் முந்தி என்னைப் பார்த்துட்டு வேகமா விலகிப்போனான் அந்தப் பழனி. அவன் கையிலகூட கறுப்பா எதையோ பார்த்த மாதிரி தோணுது. அவன் வேலையாத்தான் இருக்கணும்.”

``பழனியா..?” அரவிந்தன் முகத்தைச் சுணக்கிக்கொண்டு கேட்க,

``ஆமாம் சார்... எங்க லிஸ்ட்டுல பத்துப் பதினஞ்சு பெயர் இருக்கு. அதுல அவன் ஒருத்தன்.”

``அவன் தலை, வழுக்கைத்தலையா?”

``ஆமாம், அறுபது வயசாகுது. நூறு தடவை ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்டான். திருந்தத்தான் மாட்டேங்கிறான். ஆமா, அவனை நீங்க பார்த்தீங்களா?”

``இல்ல சார். ஒரு யூகத்துல கேட்டேன்.”

``அது எப்படி, யூகத்துல அவ்வளவு சரியா கேட்க முடியும்?”

``இங்க சாமியார் மாதிரி ஒருத்தர் வந்திருக்கார்... மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிடுவார். கம்ப்ளெயின்ட் கொடுக்க வரும்போது அவரைப் பார்த்தோம். அவர்தான் சொன்னார்.”

``யாரைச் சொல்றீங்க. திவ்யப்ரகாஷ்ஜியையா?”

``ஓ... உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

``எவ்வளவோ கேஸுக்கு அவர் எங்களுக்கு உதவி செய்திருக்கார். அவரா சொன்னது?”

``ஆமாம் சார்.”

``அப்ப டவுட்டே இல்லை. அவனேதான்! வாங்க என்கூட... கீழ அவன் எங்க எங்க இருப்பான்னு எங்களுக்குத் தெரியும். பர்ஸ் அடிச்சான்னா, முதல்ல பாருக்குத்தான் போவான்” - அந்த போலீஸ்காரர் அரவிந்தனை அழைத்தார்.
 
அரவிந்தன் செந்திலைப் பார்த்து பாரதியை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லிவிட்டு ``பாரதி, நான் போய் ரெண்டுல ஒண்ணு பார்த்துட்டு வரேன்” என்றான்.

``தம்பி, ஜாக்கிரதைப்பா...” என்றாள் முத்துலட்சுமி. அதே வேகத்தில் ``எதுக்குதான் இப்படி சோதிக்கிறான்னு தெரியலியே...” என்று திரும்பி கோபுரத்தைக் கலக்கமாய்ப் பார்த்தாள். அதற்குள் அரவிந்தனும் அந்த போலீஸ்காரரும் கீழே இறங்கத் தொடங்கினர்.

படியில் இறங்கும்போது அந்த போலீஸ்காரர் ``சார், அவனை எப்படியும் புடிச்சிடலாம் சார். புடிச்சப்புறம் உங்க பத்திரிகையில கொஞ்சம் விவரமா எழுதுங்க. எனக்கும் புரமோஷன் கிடைக்கும்” என்று தன் அதீத அக்கறையின் பின்னால் ஒளிந்திருந்த ஆசையை வெளிக்காட்டினார்.

``முதல்ல அவனைப் பிடிப்போம். பணத்தைவிட பாரதியோட செல்போன் ரொம்ப முக்கியம். ஆண்டிராய்டு போன். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், மெயில், மெஸ்ஸெஞ்சர்னு உள்ளே ஒரு உலகமே இருக்கு.”

``முந்தியெல்லாம் நம்ப வீட்டுப் பெரியவங்க தங்களோட கையில வெத்தலப் பெட்டிய வெச்சிருப்பாங்க. அதுலதான் அவங்க உசுரே இருக்கும். இப்ப வெத்தலப்பெட்டிக்குப் பதிலா போனு... நம்ப உசுரும் அதுக்குள்ளேதான் இருக்கு. நினைச்சா சிரிப்பு வருதுல்ல...”

அந்த போலீஸ்காரருக்கு, கொஞ்சம் சென்ஸோடு பேசவும் தெரிந்திருந்தது.

அரவிந்தனோ தடதடவென இறங்கினான். இடையிடையே `வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்கிற கோஷம் காதோரம் எதிரொலித்தது. மலை ஏறுபவர்களுக்கு இணையாக பிச்சைக்காரர்களும் இருந்து இடைமறித்தனர்.

அந்த போலீஸ்காரர், நாலாபுறமும் பார்த்தபடியேதான் இறங்கினார்.

``ஒன்ற கால்தான் சார் அவனுக்கு. ஆனா, அதை வெச்சுக்கிட்டே ஒரு நாளைக்கு ஒன்பது தடவை இந்த மலையை ஏறி இறங்கிடுவான்” என்று ரன்னிங் கமென்ட்ரி வேறு.

மேலே பாரதி முத்துலட்சுமியோடு சோர்வாக இறங்கிக்கொண்டிருந்தாள். அப்போது படியையொட்டி ஓரமாய் ஒரு கிழவி கையில் ஏராளமான பாசிமணி மாலைகள்!

``தாயி, ஒரு மாலை வாங்கு தாயி...” என்ற குரலால் பாரதியைத் தடுத்தாள். பாரதிக்கு மூடே இல்லை. ஆனால் முத்துலட்சுமி, குனிந்து மாலைகளை விரல்களால் தொட்டுப்பார்க்கத் தொடங்கினாள்.

``பாட்டி... அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல. கையில பர்ஸும் இல்லை. நீ கீழ இறங்குற வழியைப் பார்...” என்று கத்தினாள் பாரதி. ஆனால், அதற்குள் அந்தக் கிழவி எழுந்து தன் வசம் இருந்த மாலையை பாரதி கழுத்தில் போட்டுவிட்டு, ``இதைக் கழட்டாதே... அடுத்து பழநிக்கு வரும்போது நான் இங்கேயே இருப்பேன். அப்ப உனக்கு எவ்வளவு தரணும்னு தோணுதோ அவ்வளவு தா” என்றாள்.

``இது என்ன கடன்கார வியாபாரம். எனக்கு இதெல்லாம் பிடிக்காது” என்று மாலையைக் கழற்றப்போனாள் பாரதி.

``அம்மா... உன் கழுத்துல போடச்சொல்லி போகன்தாம்மா சொன்னான்.  அவுக்காதே, காட்டுக்குள்ள காணாத காட்சியையெல்லாம் காணப்போறே. அப்ப இதுதான் உனக்குக் காப்பு.”

``என்ன சொல்றே நீ... காட்டுக்குள்ள காணாத காட்சியையெல்லாம் நான் காணப்போறேனா... என்ன உளர்ற... யார் நீ?”

இறையுதிர் காடு - 26

``பதற்றப்படாதே... களவுபோனது திரும்பக் கிடைக்கும்போது எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்” - அந்தக் கிழவியின் பேச்சு, பாரதிக்குக் குழப்பத்தோடு எரிச்சலையும் தந்து, அந்த மாலையைக் கழற்றி வீசப்போனாள். அந்த நொடி அந்தக் கிழவி முகம், இறந்துபோன அவள் அம்மா முகத்தை அப்படியே ஞாபகப்படுத்தவும், பாரதியிடம் உடனே ஒரு தயக்கம்!

டாஸ்மாக் பார்!

உலகின் மிக அசுத்தமான ஒரு சொர்க்கம், அநேகமாய் அவர்களுக்கெல்லாம் அந்த இடமாகத்தான் இருக்க முடியும். ஒருவரிடம்கூட நிதானமில்லை. மனிதப்பிறப்பு எடுத்திருப்பதே குடிப்பதற்காகத்தான் என்பதுபோல் ஒரு தீவிரம் ஒவ்வொருவரிடமும்.

உள்ளே நுழைந்த அந்த போலீஸ்காரருக்கும் அரவிந்தனுக்கும் அந்தச் சூழல் கொடூரமாய்ப்பட்டது. போலீஸ்காரர் அந்தப் பழனியைத்தான் நாலாபுறமும் தேடினார்.

பிறகு, பார் பையன் ஒருவனிடம் ``டேய், அந்தப் பழனி வந்தானாடா?” என்று கேட்டார்.

``பாட்டில வாங்கிட்டு இப்பதான் சார் போறான்” என்ற பதில், அடுத்து அவன் எங்கே போயிருப்பான் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டது.

``காயலாங்கடைக்குத்தான் போயிருப்பான்” என்று சொல்லிக்கொண்டே ஒரு ஆட்டோ பிடித்து அந்த இடத்துக்குப் போனபோது, அந்தப் பழனி இன்னும் சிலரோடு ஒரு ரவுண்டு முடித்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராக இருந்தான். அந்த இடத்தில் பழைய பொருள்கள் ஏராளமாய், கோச்சு வண்டிச் சக்கரம் முதல் டிராக்டர் டயர் வரை... ஓர் இடத்தில் துவாரம் உள்ள அந்தப் பெட்டி!

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்;