மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 31

அன்பே தவம் - 31
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 31

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

ன்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார்... ``சன்னிதானம் எந்த மேடைப் பேச்சில் பேசினாலும், தவறாமல் ஒரு திருக்குறளையாவது மேற்கோள் காட்டிவிடுகிறீர்கள். தமிழ்மொழியின் செறிவு சொல்லி மாளாதது. அத்தனை அற்புதமான பாடல்களும் உவமைகளும் இருக்க, நீங்கள் ஏன் திருக்குறளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?’’

அன்பே தவம் - 31

தமிழில் காதல், வீரம், சோகம், அக வாழ்க்கை, புற வாழ்க்கை, ஆன்மிகம், போர்ப்பரணி என எல்லாவற்றுக்கும் நூல்கள் இருந்தாலும், நீதி நூல்கள் மிகக் குறைவு. ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் வழிகாட்டுவது குறள் ஒன்றே. இந்த பதிலை அவருக்கு விளக்கிச் சொன்னேன்.     

சங்ககாலம். அதியமான் அவைக்கு வந்தார் ஔவை. மரணத்தை, மூப்பைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி அதியமானுக்குக் கிடைத்திருந்தது. அவன் அதை, தான் உண்ணாமல் ஔவைக்குத் தந்தான். எதற்காக... ஔவை நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதற்காகவா... இல்லை. அருமைத் தமிழ்மொழி இந்த மண்ணில் நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதற்காக. 

இருபதாம் நூற்றாண்டு... ஆங்கில ஏகாதிபத்தியம், இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த காலம். ‘என் தமிழின் எல்லா எழுத்துகளும் வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்துகள்’ என்றான் பாரதி. அதனால்தான் தன் மீசைகூட வெள்ளையைச் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக நம்மிடமிருந்து வெகு சீக்கிரம் விடைபெற்றுக்கொண்டான்.  

பாரதியைத் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வந்தார். `என் தமிழ்மக்கள் அறியாமையில் உறங்கிக்கிடக்கிறார்களே... இவர்களின் அறியாமைக்கு ஆணிவேர்  படிப்பறிவின்மை. இதைக் கருவறுக்க வேண்டுமே...’ என்று துன்பப்பட்டார். அதற்கு அவரே வழி சொல்கிறார்... ‘இன்பத்தமிழ்க் கல்வி எல்லோரும் கற்றவர் என்ற நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும். சுகம் உண்டாகும்.’
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தமிழ், ஒருகாலத்தில் அரண்மனையில் வசித்தது; இன்னொரு காலத்தில் ஆலயத்தில் வசித்தது; மற்றொரு காலத்தில் நாட்டு விடுதலைக்குத் தன்னைத் தாரை வார்த்தது; பாரதிதாசன் காலத்தில் கடைக்கோடித் தமிழனின் பந்தியில் பரிமாறப்பட்டது. இப்படிப் பல தளங்களைக் கடந்துவந்திருக்கும் தமிழ் மொழியில் எந்தத் தனிமனிதனுக்கும் துதி பாடாமல், எந்த அரசுக்கும் வெண்சாமரம் வீசாமல், எந்தச் சமயத்தின் அடையாளத்தையும் அணிந்துகொள்ளாமல், உலக மானுடத்தின் உயர்வுக்காகப் பாடிய ஒப்பற்ற நூல் திருக்குறள் ஒன்றுதான்.

அன்பே தவம் - 31

வாழ்க்கையில் நம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒருவர் தீர்வு சொல்வார். நெகிழ்ந்து சொல்வார். மகிழ்ந்து சொல்வார். கனிந்து சொல்வார். அவர்... திருவள்ளுவர். திருக்குறளில் ஒரே ஓரிடத்தில்தான் தன்னை மறந்து ஆணையிடுவார். ‘மனித குலமே... மனித குலமே... கற்க, கற்க’ என்பார். `கசடறக் கற்க. கசடறக் கற்றதன் வழி நிற்க’ என்பார். கற்றலின் பயன் அறிவு. உண்மையில் எது அறிவு?

திருவள்ளுவர் தெளிவாகச் சொல்கிறார். `மனிதகுலத்துக்கு நேற்றும் துன்பம் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். நேற்றைய துன்பத்தை எது இன்று இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ, அதற்குப் பெயர்தான் அறிவு’ என்கிறார். `அறிவு அற்றம் காக்கும் கருவி’, `துன்ப நீக்கத்தின் மருந்து’ என்கிறார். `அலைகள் ஓய்வதில்லை’ என்பதைப் போல, அறிவுலகத்தின் பயணம் எப்போதும் முற்றுப் பெறுவதில்லை. 

எம்.ஏ படித்த இளைஞன் ஒருவன் கிராமத்துக்கு வந்தான். செக்கு ஆலையைப் பார்த்தான். அங்கே இரண்டு மாடுகள் செக்கைச் சுற்றிக்கொண்டி ருந்தன. ஒரு பெரியவர் செக்கிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டிருந்தார். அவன் அந்த மாடுகள் சுற்றி வருவதைப் பார்த்தான். மாடுகளை அந்தப் பெரியவர் கண்டுகொள்ளவேயில்லை.

பெரியவர் அருகில் இளைஞன் சென்றான். ‘ஐயா... மாடுகளை கவனிக்காமல் எண்ணெய் எடுத்துக்கொண்டி ருக்கிறீர்களே... அவை சுற்றி வராமல் நின்றுவிட்டால் உங்களுக்கு எப்படித் தெரியும்?’ 
‘தம்பி... மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டிருக்கி ன்றன. அவற்றின் சத்தத்தை வைத்தே மாடுகள் சுற்றி வருவதை அறிந்து கொள்வேன்.’ 

இளைஞன் விடவில்லை. ‘ஐயா... மாடுகள் ஒரே இடத்திலேயே நின்றுகொண்டு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படித் தெரியும்?’

பெரியவர் அந்த இளைஞனை ஏற இறங்கப் பார்த்தார். ‘தம்பி... மாடு அப்படியெல்லாம் செய்யாதப்பா.’

‘ஏனய்யா?’ என்று கேட்டான்.

‘அது எம்.ஏ படிக்க வில்லையப்பா.’

இதைத்தான் பாரதி, `படித்தவன் சூது பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று சபித்தான்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.’


ஆயுதத்தை எடுத்துத் தாக்கினால்தான் கொலை என்று பொருளல்ல. பஞ்சத்தால், பட்டினியால் ஒருவரைச் சாகடிப்பதும் கொலைக்குச் சமம் என்கிறார் திருவள்ளுவர். வாழ்வின் அத்தனை சிக்கல்களுக்கும் திருவள்ளுவர் வழிகாட்டுகிறார். ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று உரத்து ஒலிக்கிறார். அதைப்போல, துறவு அறத்தைச் சொல்கிறார்.    
 
`துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண் டற்று.’

 துறவு, உண்மைத் துறவாக இருக்கிறபட்சத்தில், அதன் பெருமையை அளவிட முடியாது.  இதுவரை இந்த உலகத்தில் இறந்தவர்கள் எவ்வளவு பேர் உண்டோ, அதை எப்படி எண்ணிக் கணக்கிட முடியாதோ, அதைப்போலத்தான் துறந்தவர் பெருமை. `நீ ஏற்றுக்கொண்ட அறம் எதுவோ, அதற்கு உண்மையாக வாழ்ந்து காட்டு’ என்கிறார்.

கிரேக்க அறிஞர் டயோ ஜனிஸ், ஒருநாள் காலை உணவுக்காக அவரை விதை களைக் கழுவிக்கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த அரிஸ்பெடீஸ், ‘என்ன டயோ ஜனிஸ், காலை நேர உணவுக்காக அவரை விதைகளைக் கழுவிக் கொண்டிருக்கிறாயே... என்னைப்போல நீ மன்னரைப் பாராட்டிக்கொண்டிருந்தால், இதுபோன்ற அவலம், அவரைக்காயைத் தின்ன வேண்டிய அவசியம் வந்தி ருக்காதே. அறுசுவை உணவை உண்டிருக்கலாமே’ என்றார்.

டயோஜனிஸ் சொன்னார்... ‘அரிஸ்பெடீஸ், நீ என்னைப் போல அவரைக்காயை உண்ணப் பழகியிருந்தால், தேவையற்றோரைப் புகழ்ந்து வாழ வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காதே.’

இதுதான் துறந்தநிலை. சுகங்களுக்காக, பணத்துக்காக ஆசைப்பட்டு, தன்னைத் தொலைப்பதல்ல துறவு. உறவால் விரிந்தும், உணர்வால் மலர்ந்தும், பிறர் வாழ வாழ்வதுதான் உண்மைத் துறவு. அதைத் திருவள்ளுவர் அடையாளம் காட்டினார்.
 
‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்’


என்கிறார். 

நம் நண்பர், கண் முன்னே நாம் குடிக்கும் குவளைத் தண்ணீரில் நஞ்சைக் கலந்துதருகிறார். குடிப்பதா, வேண்டாமா... திருவள்ளுவர் சொல்கிறார்.

`உனக்கு நட்பு வேண்டுமா... உயிர் வேண்டுமா... நட்பு தேவையென்றால், நஞ்சைக் கலந்த நீரைக் குடித்துவிடு. நட்புக்காக உயிரைத் தியாகம் செய்.’ தனிமனிதனை, பொறுமையின் உச்சத்தில் சகிப்புத்தன்மையின் உச்சத்தில் வாழச்சொன்னவர், கோபப் படுகிறார். எப்போது?

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்’


என்கிறார். பிச்சையெடுத்து வாழ்கிற வாழ்க்கைக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர் மாற்றப்பட வேண்டும் என்கிறார். இதுதான் திருவள்ளுவர் காட்டுகிற நெறி.  

அன்பே தவம் - 31

2011-ம் ஆண்டின் ஒரு புள்ளி விவரப்படி, 2,083 சிறுவர்கள் சிறுவர் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டிருக்  கிறார்கள். அவர்களில் 1,170 பேர் தொடக்கநிலைக் கல்வி மாணவர்கள். 617 பேர் தொடக்கநிலைக் கல்விக்கும் மேல்நிலைக் கல்விக்கும் இடைப்பட்ட மாணவர்கள். 56 பேர் மேல்நிலைக் கல்விக்கு மேல் படித்துக் கொண்டிருப் பவர்கள். 240 பேர் கல்வியறிவு பெறாதவர்கள். இந்த இளம் குற்றவாளிகளின் புள்ளிவிவரம், நம் கல்விமுறை அறநெறிச் சிந்தனைகளை விதைப்ப திலிருந்து தவறிவிட்டது என்பதையே காட்டுகிறது. 

 இந்தக் கருத்தை மனதில் வைத்து, ராஜரத்தினம் என்பவர் ஒரு பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்தார். அந்த வழக்கில், `இளம் குற்றவாளிகள் பெருகுவதற்குக் காரணம், அறச்சிந்தனைகள் நம் பள்ளி வகுப்பறைகளில் இடம் பெறவில்லை என்பதுதான். அவற்றை மாணவர்களிடையே பரப்புவதற்கு நம் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் திருக்குறளை முழுமையாகக் கற்கவைக்க வேண்டும்’ என்ற வாதத்தை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் மகாதேவன், `ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் அதன் இளைய தலைமுறையின் கையில்தான் இருக்கிறது. அவர்களைச் சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியது அரசின் கடமை. திருக்குறளுக்கு மேலான அறநூல் வேறு எதுவுமில்லை. எனவே, பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை அறத்துப் பாலையும் பொருட்பாலையும் மாணவர்கள் அவசியம் கற்க அரசு ஆவன செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

நாம் நம் குழந்தைகளை மருத்துவராக்கலாம். பொறியா ளராக்கலாம். வழக்கறிஞராக் கலாம். தொழிலதிபராக்கலாம். முதலில், அவர்களை மனிதர்களாக ஆக்க வேண்டும். மதிப்பெண்களைப் பெறுவது மட்டும் கல்விமுறை அல்ல. மனிதத்தை வளர்ப்பதுதான் உண்மையான கல்விமுறை. அந்தக் கல்விமுறையில் நம் இளைய தலைமுறையை வளர்த்தெடுக்க, அனைவருக்கும் திருக்குறளைக் கற்பிக்க வேண்டியது அவசியம். பெற்றோர்களும் ஆசிரியர் களும் இந்தக் கடமையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

திருக்குறள் என்பது காட்டு வழிப் பாதையின் கைவிளக்கு. கடல்வழிப் பாதையின் கலங்கரை விளக்கு. மலைவழிப் பாதைக்குக் குன்றின் மேலிட்ட ஒளிவிளக்கு. அந்த ஒளி விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு, இளைய தலைமுறை மானுடத்தின் வீதியில் பரக்கப் பயணிக்கட்டும்!

- புரிவோம்...

படம்: கே.ராஜசேகரன்

அடிகளாரைக் கேளுங்கள்?

பெண்ணின் மறுமணத்தை தடபுடலாகக்
கொண்டாடுவது சரியா?


- எஸ்.மோகன், கோவில்பட்டி

முதல் திருமணமாயினும் மறுமணமாயினும், எளிமையாகக் கொண்டாடுவதே சிறந்தது.

வெவ்வேறு கொள்கைகொண்ட பெரியார்-குன்றக்குடி அடிகளார் நட்பு குறித்து...?

- செந்தில் கென்னடி, திருப்பூர்

இருவேறு துருவங்களில் பயணித்த இருவரின் மையப்புள்ளி மனிதகுல மேம்பாடு.

நாத்திகம் பேசுபவர்களை ஆன்மிக வழிக்குக் கொண்டுவர வழி சொல்வீர்களா?

- கே.எஸ்.கோவர்த்தனன், ஸ்ரீரங்கம்

மனிதநேயத்தைச் சிந்திக்கும் எவரும் ஆன்மிகப் பாதையில்தான் பயணம் செய்கிறார்கள்.

இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு `இரை’ தேடுவதே சவாலாக இருக்கும்போது, அவர்களால் `இறை’யைத் தேடுவது சாத்தியமா?

- எஸ்.இராதாகிருஷ்ணன், கம்பம்

வாழ்க்கைக்குப் பொருள் தேவை (உணவு). வாழ்வதிலும் பொருள் தேவை (இறைமை).

தீவிரவாதம் மூலம் மதத்தை வளர்க்க முடியுமா?

- ஜீவன் (வாட்ஸ் அப்)

தீவிரவாதம், பயங்கரவாதம் எதுவும் மதத்தை வளர்க்கும் வழி ஆகாது.

நமது தேர்தல் முறையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

- அ.குணசேகரன், புவனகிரி

தேர்தல் முறையில், பணநாயகத்துக்கு இடமில்லாத ஜனநாயகமே வேண்டும்.

அன்பே தவம் - 31

அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002  என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.