மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 27

இறையுதிர் காடு - 27
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 27

இறையுதிர் காடு - 27

இறையுதிர் காடு - 27

அன்று அந்தப் பெண் கொட்டாரத்தில் தங்க சம்மதிக்கவும் அவள் தாயின் முகத்தில் சற்றே சலனம்... சற்றே மகிழ்வும்!

மகிழ்வுக்குக் காரணம், அவள் நிறத்தை போகர் பிரான் மாற்றிக்காட்டுவதாய்ச் சொன்னதுதான். சலனத்துக்குக் காரணமோ, ஒரு மண்டல காலம் இவளை விட்டு எப்படி இருப்பது, அக்கம்பக்கம் கேட்டால் என்ன சொல்வது என்பதுதான். அது புரிந்ததுபோல் பேசத் தொடங்கினார் போகர்.

``சலனப்படாதே! நீயும் இவளோடு இங்கே தங்கி இரு. உங்கள் இருவருக்கும் நான் சில பணிகளைத் தருகிறேன். தினமும் மலர்களைப் பறித்து மாலை கட்டுவது, பின் கொட்டாரத்தில் காய்கள் நறுக்குவது, மூன்றாவதாய் புடம்போடுவது என்று ஒரு செயல்முறை உள்ளது. அதை நான் பிரத்யேகமாக உங்கள் இருவருக்கும் சொல்லித்தருகிறேன். அதைச் செய்யுங்கள். இவை இந்தச் சித்த கொட்டாரத்துக்கு நீங்கள் செய்கின்ற சேவையாக இருக்கட்டும். பதிலுக்கு உங்கள் இருவரையுமே நான் பொன்மேனியர்களாய் ஆக்கிக்காட்டுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

``சாமி, நாங்க என்னத்தங்க சொல்வோம்... உங்களுக்கு உபகாரமா எங்களை இருக்கச் சொல்றது நாங்க செஞ்ச புண்ணியங்க’’ என்றார் அந்தத் தாய்க்காரி.

``அப்படியானால் இடும்பன் குளத்துக்குச் சென்று குளித்துவிட்டு, அப்படியே ஆவினன்குடிக்குச் சென்று உங்கள் கண்களில் படுகிற தெய்வங்களையெல்லாம் வணங்கிவிட்டு அங்கு இருக்கும் கோயிலிலிருந்து நேராக இடையில் எங்கும் அமராமல் இந்தக் கொட்டாரத்துக்கு வந்து, உணவு தயாராகும் அடுமனைக்குச் செல்லுங்கள். அங்கே உள்ள என் சீடர்கள், நீங்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்வார்கள். செய்யுங்கள்! முன்னதாக மூன்று விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். இங்கே யாரும் பெரியவரும் இல்லை... சிறியவரும் இல்லை. பொய் பேசுதல் கூடாது, அதிகாலைச் சூரியன் உதிக்கும் முன் கண்மலர்ந்துவிட வேண்டும். இவற்றை மறந்துவிடாதீர்கள்!’’

போகரின் உத்தரவைத் தொடர்ந்து அந்த இரு பெண்களும் புறப்பட்டுச் சென்றனர்.

எதிரில் அஞ்சுகனும் புலிப்பாணியும் பார்த்தபடியே இருந்தனர். போகர், அருகில் இருந்த ஒரு மரப்பலகை ஆசனம் மேல் போய் அமர்ந்தவராக ``பிறகு..?’’ என்றார்.

``குருபிரானே, உடலின் நிறம் என்பது கருப்பையில் தீர்மானமாவது என்று ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியிருக்க, செயற்கையாக நிறத்தை மாற்ற முடியுமா?’’ என்று அஞ்சுகன் நிறத்தைத் தொட்டுத்தான் பேச்சை எடுத்தான்.

போகர் பிரான் பதிலுக்குச் சிரித்தார். அவ்வளவுதான், அதுவே `முடியாத ஒரு செயலில் நான் இறங்குவதில்லை’ என்று அவர் சொல்வதுபோல் இருந்தது. அவனும் புரிந்துகொண்டான்.
``பிரானே, என்னைத் தவறாகக் கருதிவிடாதீர்கள். தாங்கள், அஷ்டமாசித்திகளை எல்லாம் அடைந்துவிட்ட ஒரு ஞானி. தங்களுக்குத் தெரியாதது இல்லை. நானோ உங்களின் சீடன். இப்படிக் கேள்விகளாய்க் கேட்டுத்தானே நான் எதையும் தெரிந்துகொள்ள முடியும்!’’

``அதிலென்ன சந்தேகம். சில சமயங்களில் வார்த்தைகளால் ஆன பதிலைவிட முகபாவனைகளைக் கொண்டு அளிக்கும் பதில் விசேஷமானது. அது கேள்வி கேட்டவரையே விடையைத் தேடச் செய்யும்.’’

``அப்படியானால், நான் முன்பு கேட்ட கேள்விக்கு விடை எனக்குள்ளேயே உள்ளதா?’’

இறையுதிர் காடு - 27

``உனக்குள்ளேயும் இருக்கிறது... எல்லோருக்குள்ளும் உள்ளது. இருந்தாலும் கூறுகிறேன். உடல் சார்ந்த அவ்வளவுமே பரம்பரைத் தொடர்ச்சிதான். அப்படிப்பட்ட உடலில் வரும் ரோகங்கள் மூன்றுவிதமானவை. ஒன்று, நித்யமானது. வந்தால் சாகும் வரை போகவே போகாது. இரண்டாவது, மத்யமானது. இது மருந்து சாப்பிட, கட்டுப்படும். மூன்றாவது, அநித்யம். எப்படி வந்ததோ அப்படி அதுவாகவே போய்விடும்.

இவற்றில் நித்ய ரோகத்தை ஒருவர் ஜாதகத்து திசை கொடுக்கும். மத்ய ரோகத்தை புக்தி கொடுக்கும். அநித்ய ரோகத்தை அந்தரம் கொடுக்கும். புற்று, வாதம், ஊனம், மகோதரம், குருடு போன்றவை திசை தருவதாகும். இதை மாற்றுவது கடினம். உப்புசம், காமாலை, பிளவை, சொறி, சிரங்கு, படை, ரத்தச் சீற்றமெல்லாம் புக்தி தருகின்ற ஒன்று. தலைவலி, காய்ச்சல், புளிச்ச ஏப்பம், அஜீரணம், ஜலதோஷம் போன்றவை அந்தரம் தருகின்ற ஒன்று. அந்தரம் என்பது, சில மணிநேரம் கொண்ட ஒரு கால கதி. அந்தக் காலகதி கழியவும், இவையும் நீங்கிவிடும்.

புக்தியும் சில பல நாள்கள்கொண்ட ஒரு காலகதி. அந்த நாள்கள் கழியவும் மாறிவிடும். திசை தருவதுதான் இதில் மிகக் கொடியது. அது தந்தால் தந்ததுதான்! அதை மாற்ற, பெரும் அருளாளர்களால் மட்டுமே முடியும். அதற்கு அவர்கள் ஜாதகத்தில் இடமிருக்க வேண்டும். இடமிருப்பவர்கள் அருளாளர்களைத் தேடி வந்துவிடுவார்கள். அதற்குரிய கோள் அவர்களைச் செலுத்தி அழைத்துவரும். இந்தப் பெண்ணையும் அப்படித்தான் ஒரு கோள் அழைத்து வந்தது. இதை, ஜாதகத்தைப் பார்த்தால் நாம் திட்டமாய்த் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் நன்மை தீமை என்று இரண்டையும் செய்பவனாகவே இருக்கிறான். யாராக இருந்தாலும் இந்த இரண்டைச் செய்யாமல் இருக்க முடியாது. துளியும் செயலின்றி தியானத்தில் அமர்ந்தால் மட்டுமே ஒரு மனிதன் நன்மை தீமை எனும் இரு வினைப்பாட்டிலிருந்து தப்ப முடியும். இந்த இரு வினைகளில் ஒரு தீவினைதான், அந்தப் பெண் அப்படிப் பிறக்கக் காரணம். இன்னொரு நல்வினைதான் அவள் என்னைச் சந்திக்கவும் காரணம். விளக்கமாய் நான் சொன்ன அவ்வளவு விஷயங்களும் நான் சிரித்த சிரிப்பில் பொதிந்துள்ளது. இதை என் சீடர்கள் நான் விரிவாகச் சொல்லத் தேவையின்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். என்னை எவர் ஒருவர் சந்தித்தாலும் சரி, என் விதிப்பாட்டில் அதற்கு இடமிருப்பதாகவே பொருள். இந்தப் பொதினியிலேயே எவ்வளவோ பேர் என்னைக் காணாதவர்களாய், கண்டாலும் உணராதவர்களாய், உணர்ந்தபோதிலும் தவறாய் உணர்ந்தவர்களாய் என்றே உள்ளனர். அப்படியிருக்க, என்னைச் சரியாக உணர்ந்து என் முன் வந்து கண்ணீர் சிந்த முடிகிறது என்றால், அது வினைப்பாடே! இவற்றையெல்லாம் நான் விளக்கமாய்க் கூறத் தேவையின்றி நீங்கள் நொடியில் உணருகின்றவர்களாக இருக்க வேண்டும்!’’

அஞ்சுகன், போகரின் நெடிய விளக்கத்தில் தெளிந்தான். அப்போது கிழார்களும் வந்து நின்றனர்.

``வாருங்கள்... இதுவரை நான் கூறி எழுதிய ஏடுகள், படிகள் எடுக்கப்பட்டு பத்திரமாக உள்ளனதானே?’’ என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் போகர்.

``எங்களிடம் தமிழ் இலக்கணம் கற்றிட வரும் மாணவர்களிடம் ஏடுகளைத் தந்து படிகள் எடுக்கச் சொல்லியுள்ளோம். அந்த வகையில் பிரானே, தாங்கள் இதுவரை சொல்லி வந்த அவ்வளவுமே ஒன்றுக்கு ஒன்பது படிகள் எனும் கணக்கில் தயாராகிவருகின்றன. தேவைப்படும்பட்சத்தில் நூறு படிகள் வரைகூட எடுக்க இயலும். அது தங்கள் சித்தம்’’ என்றார் வேல் மணிக்கிழார்.

``தற்போது ஒன்பது படிகள் எடுத்தாலே போதுமானது. அவசியம் ஏற்படும்பட்சத்தில் நான் கூறுகிறேன். என் சூத்திரங்கள், காயகற்பங்கள், பச்சிலை மூலிகை வைத்தியம், வாத சூத்திரம் ஆகியவை அதிக படிகள் கொண்டிருப்பது நல்லது. சேர சோழ பாண்டிய மண்டலங்களில் சித்த வேட்கை உள்ள இடங்களில் என் சீடர்களை அமர்த்தி, அவர்கள்வசம் இந்த ஏடுகளைத் தந்து காலத்தால் இவை பயன்பட வேண்டும் என்பதே என் பெருவிருப்பம். எனது `ஜனன சாகரம்’ எனும் நூலும், உபதேசமும், சப்த காண்டமும் என் பிரதான தலைமைச் சீடர்களிடம் இருக்க வேண்டும். புலிப்பாணி, நான் புதிதாக பூஜாவிதி என்னும் விதிமுறைகளை வகுக்க உள்ளேன். அவற்றை இந்தப் பொதினியில் இருந்தபடி நீயே பாதுகாத்துப் பின்பற்ற வேண்டும்.’’

போகர் சொல்வதையெல்லாம் கூர்ந்து கேட்ட அருணாசலக் கிழார் ``பிரானே, நெடுநாள்களாய் தங்களிடம் நாங்கள் ஒரு விஷயம் குறித்துப் பேச விரும்புகிறோம். ஆனால், எப்படித் தொடங்குவது என்பதில்தான் எங்களுக்குள் சற்றே தயக்கம்’’ என்றார்.

``நான்தான் எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளேனே!’’

``உண்மைதான்... ஒருவரின் அறிவுத்திட்பம் அவர் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார் என்பதைப் பொருத்தும் உள்ளதுதானே?’’

``அதிலென்ன சந்தேகம்?’’

``அங்கேதான் எங்களிடமும் தயக்கம்.’’

``என்ன தயக்கம்?’’

``எங்கள் கேள்வி, ஆசை மிகுந்த மனிதர்கள் நாங்கள் என உங்களைக் கருதச் செய்துவிடுமோ என்பதே எங்கள் தயக்கம்.’’

``ஆசையோடு வாழ்வதில் தவறில்லை. அந்த ஆசை நமக்கு இந்தப் பிறப்பிலிருந்து விடுதலை தர உதவுவதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். எனக்கும்கூட ஓர் ஆசை இருக்கிறது. ஞான வடிவான என் ஐயன் தண்டபாணியை, ஞானப்பழமான அந்தப் பழனியப்பனைச் சிலையாக வடித்து இந்த உலகை ஆனந்த உலகமாய் மாற்ற வேண்டும் என்பதே அது.’’

``அதை நாங்களும் அறிவோம். அதன் பொருட்டு ஒன்பது சீடர்கள் தயாராக இருப்பதை நாங்கள் எங்கள் `போக விலாசம்’ என்னும் ஏட்டில் பதிவுசெய்துவிட்டோம்.’’

``நீங்கள் அவர்கள் ஒன்பது பேரைத்தான் அறிவீர்கள்! அவர்கள் பின்னால் மேலும் 81 பேர் உள்ளனர். அவர்கள் நான் கேட்டிருக்கும் மூலிகைத் தாவரங்களைத் தேடி இப்போது பூவுலகமெங்கும் சுற்றித் திரிந்தபடியுள்ளனர். அநேகமாய் இன்னும் சில நாள்களில் அவர்கள் அந்தத் தாவரங்களோடு வந்துவிடுவர்.’’

``81 பேர் தாவரங்களைத் தேடிச் சென்றுள்ளார்களா?! அப்படி என்ன அந்தத் தாவரங்களில் உள்ளன என்பதெல்லாம் உங்களைப் போன்றோர் மட்டுமே அறிந்த ரகசியமாகும். அதைக் கூறுவீர்களா?’’

``எல்லாவற்றையும் கூறத்தானேபோகிறேன். ஒரு நல்ல சித்தன் ஜீவ சமாதிகொள்ளும் முன், தான் அறிந்த சகலத்தையும் உலகமறியச் செய்துவிட்டே இறப்பான். நான் அவர்களில் முதலாமவன்.’’

``மிகுந்த மகிழ்ச்சி பிரானே... நாங்கள் கேட்க விரும்பியதையும் இப்போதே கேட்டுவிடுகிறோம்.’’

``கேளுங்கள்... கேளுங்கள்...’’

கிழார்கள் அப்படி எதைக் கேட்கப்போகின்றனர் என்று அஞ்சுகனும் புலிப்பாணியும்கூடத் தயாராயினர்.

``பிரானே... கறுத்த உடலைப் பொன்னாய் மாற்ற வழி உண்டு என்று கூறினீர் அல்லவா?’’

``ஆமாம்... அதை நீங்கள் காணவும்போகிறீர்கள்.’’

``உடம்பையே பொன்னாக்கும்போது, உலோகத்தையும் ஆக்க முடியும்தானே?’’

``நிச்சயமாக முடியும்... அதைத்தான் ரசவாதம் என்கிறோம்.’’

``தாங்கள் அந்த ரசவாதம் அறிந்தவர் என்பதையும் நாங்கள் ஒரு சம்பவம் வாயிலாக அறிய நேர்ந்தது.’’

``அதற்கென்ன இப்போது?’’

``முதலில் அந்தச் சம்பவத்தைக் கூறிவிடுகிறோம்... பிறகே நாங்கள் அறிந்துகொண்டதைப் பற்றித் தங்களிடம் தெளிவாகப் பேசவியலும்.’’

``சரி, அது என்ன என்று கூறுங்கள்.’’

``வேதியர் ஒருவரின் இல்லத்துக்குத் தாங்கள் சென்று, அவர்கள் வறுமையைப் போக்கிட எண்ணி அவர்கள் இல்லத்தில் இருந்த பாத்திரங்கள் அவ்வளவையும் தருவித்து, அவற்றைப் புடமிட்டுத் தங்கமாக ஆக்கினீர் என்பது உண்மையா?’’

கிழாரின் கேள்வி முன் போகர் பிரான் மிகக் கூர்மையாகக் கிழார்களைப் பார்த்து ``உங்களுக்குத் தங்கம் வேண்டுமா?’’ என்று மட்டும் கேட்டார். கிழார்களிடம் ஒருவித இன்பத் திகைப்பு.

இன்று  துவாரமுள்ள பெட்டிக்குப் பக்கமாய்ப் பலவித பழைய பொருள்கள். சூட்கேஸ், லெதர் பேக், தகரப்பெட்டி என்று பலவிதமான பெட்டிகள். அரவிந்தன் பார்வை அந்தப் பெட்டிமேல் நிலைக்குத்தி நின்றது. பெட்டியின் துவாரங்களுக்குக் கீழே இருந்த `திருப்புளி திவாகரம்’ என்ற எழுத்துகளும் கண்ணில் பட்டன.

அரவிந்தன் கவனம் முழுவதும் பெட்டிமேல் சென்றுவிட்ட நிலையில், உடன் வந்த போலீஸ்காரர் அந்தத் திருட்டு பழனியைப் பாய்ந்து பிடித்திருந்தார். போதை சற்று ஏறியிருந்தபடியால், அவனால் அங்கிருந்து ஓட முடியவில்லை. உடன் இருந்த அந்தக் காயலாங்கடைக்காரனும் சிக்கிக்கொண்டான். பேக் அருகிலேயே இருந்தது.

``ஏன்டா, நீ திருந்தவே மாட்டியாடா... ஒரு இடத்துல உட்கார்ந்து பொழைக்கவே உன்னால முடியாதா?’’ என்று போலீஸ்காரர் அவனை மொத்த ஆரம்பித்திருந்தார். அவனிடம் பெரிதாய் எதிர்ப்பில்லை. கடைக்காரனும் போலீஸிடம் சிக்கிவிட்டதற்காக பதற்றமோ வருத்தமோ படவில்லை.

இறையுதிர் காடு - 27

``ஏய் ஏட்டு... என்ன பெரிய உலகமகா யோக்கியன் மாதிரி அட்வைஸ்லாம் பண்றே? ஆமா... எப்படிய்யா மோப்பம் புடிச்சி வந்தே, நீ ஒண்ணும் அவ்வளவு பெரிய சுள்ளான் இல்லியே?’’ என்ற கடைக்காரன் கேள்வி, அந்த போலீஸ்காரரைக் குறுகச்செய்தது. நல்லவேளை அரவிந்தன் காதில் அதெல்லாம் விழவில்லை. அவன் அந்தப் பெட்டியைத் தொட்டு அதன் மேல்பாகத்தைத் திறக்கவும் திறந்துகொண்டது. உள்ளே பெட்டி காலியாக இருந்தது. கிட்டத்தட்ட பாரதியின் வீட்டில் உள்ள பெட்டியைப்போலவே அந்தப் பெட்டி இருந்தது. அதே மரம்... விபூதி வாசம் மட்டும் வரவில்லை. அரவிந்தனின் கைகள், அந்தத் திருப்புளி திவாகரம் என்னும் எழுத்தை வருடின. போலீஸ்காரரும் மெல்ல அதை கவனித்தார்.

``சார்... என்ன சார் அந்தப் பெட்டியையே பார்த்துக்கிட்டிருக்கீங்க. இங்க வாங்க சார்... இவன்கிட்ட இருக்கிற பேக்கை வாங்கி, எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க சார்’’ என்றார். அவனும் மெல்ல நகர்ந்து வந்து போலீஸ்காரர் நீட்டிய பேக்கை வாங்கி உள்ளே பார்த்தான்.

``ஆயிரம் ரூவா மட்டும் எடுத்திருக்கேன். மத்தபடி ஒரு நயா பைசா குறையாது. எல்லாமே அப்புடியே இருக்கும் ஆங். அந்த செல்போனை எடுத்து ஆஃப் பண்ணிட்டு பேட்டரியையும் புடுங்கிப் போட்டுட்டேன். இப்பல்லாம் இதானே எங்களுக்கெல்லாம் ஆப்பு வெக்குது’’ என்று அரவிந்தன் பேக்கைப் பார்க்கும்போது அவன் மிக சகஜமாய்ச் சொன்னான்.

அரவிந்தனும் நிமிர்ந்தவனாய் ``இந்தப் பெட்டி எப்படி இங்கே வந்துச்சு... இதை யார் திறந்தது?’’ என்றுதான் ஆரம்பித்தான்.

``என்ன சார் நீங்க... பேக் சரியா இருக்கான்னு பார்க்கச் சொன்னா, பெட்டிய பத்திக் கேக்கிறீங்க! எல்லாம் களவாண்டுட்டு வர்றதுதான் சார். பாருங்க - எல்லாமே உடைக்கப்பட்டிருக்கும். இது பார்க்கதான் காயலாங்கடை. நிஜத்துல இது களவாணிப்பய கடை. இதோ, இந்த நாய்தான் இதுக்கு முதலாளி. விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் மாதிரி, இந்தத் திருட்டு நாயிக்கு கோல்டு ஃபிரேம் கண்ணாடி... பார்க்கிறதைப் பாருங்க’’ என்றபடியே கடைக்காரனின் பின் மண்டையில் அடித்தார் அந்த கான்ஸ்டபிள்.

``தாபாரு... இந்த அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். இவன் திருடிட்டு என் கடைக்கு வந்தா இவனைக் கேளு. இந்தத் திருட்டுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஞாபகம் வெச்சுக்கோ.’’

``ஆமா... நீ யோக்கிய மகாதிலகம். இவன் மட்டும்தான் அயோக்கியன்.’’

``சார் ப்ளீஸ்... நான் இவங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும். ரொம்ப முக்கியமான விஷயம்.’’

``அப்படி என்ன சார் விஷயம்?’’

``இந்தப் பெட்டிய இவங்க எப்படித் திறந்தாங்கன்னு தெரியணும்.’’

``இதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பண்ணப்போறீங்க?’’

``இதே மாதிரி ஒரு பெட்டி எங்ககிட்ட இருக்கு. அதை எங்களால திறக்க முடியலை சார்.’’

``அப்படியா... அப்ப உங்களுக்கு வேப்பமரத்தடி சுப்பையா சாமிய தெரியுமா?’’ - காயலாங்கடைக்காரன் நறுக்கென்று கேட்டான்.

``அது யார் சுப்பையா சாமி... அதுவும் வேப்பமரத்தடி சுப்பையா சாமி?’’

``நெய்க்காரப்பட்டி ரோடுல வேப்பமரத்துக்குக் கீழ ரோடு ஓரமா குடிசை போட்டுக்கிட்டு குறி சொல்லிக்கிட்டிருந்தாரே சார்.’’

``ஆமாம்... அவர்தான் போய்ச் சேர்ந்துட்டாரே!’’

``இது அவர்கிட்ட இருந்த பெட்டி... அவர் போய்ச் சேரவும், அவர் வெச்சிருந்து பூஜை செஞ்ச சாமி படம், அது இதுன்னு அம்புட்டையும் போறவங்க வர்றவங்கல்லாம் ஆட்டைய போட்டப்ப, ஒருத்தன் இந்தப் பெட்டியைத் தூக்கிட்டான். ஆனா, அவனால இதைத் திறக்க முடியலை. என்கிட்ட வந்தான். என்னாலயும் முடியலை. கடைசியில உடைக்க முடிவுசெஞ்சப்ப, நம்ம கண்ணாயிர பண்டாரம் சாமிதான் வந்து திறந்து கொடுத்தாரு. ஆனா, உள்ளே ஒரு புண்ணாக்கும் இல்லை. நாலஞ்சு காவி வேட்டி, ஒரு ருத்ராட்ச மாலை, காஞ்சிபோன வில்வக்காயுங்க. இப்புடி எல்லாமே சாமியார் சமாசாரமா இருந்துச்சு. கூடவே ஒரு டைரி இருந்துச்சு. அத்த அந்தப் பண்டாரம் எடுத்துக்கிட்டார். ருத்ராட்ச மாலையையும் அவரே போட்டுக்கிட்டார். வேட்டியையும் அவரே எடுத்து மேலே போத்திக்கிட்டு பழநி மலையப் பார்த்துக் கன்னத்துல போட்டுக்கிட்டு கண்ணீர்விட்டு அழுதார். அப்புறம் எதுவும் பேசல... போயிட்டார்.’’

அந்தக் காயலாங்கடைக்காரன் நடந்ததை சரளமாய்ச் சொல்லவும், போலீஸ்காரர் அரவிந்தனைத்தான் அடுத்து பார்த்தார். அவனோ ``அந்தப் பண்டாரம் மட்டும் எப்படி அவ்வளவு சுலபமா திறந்தார்?’’ என்றுதான் கேட்டான்.

``அது ஒரு கணக்காம்! இந்த ஓட்டைக்குள்ளே இருக்கிற திருகாணியங்களை எம்புட்டு திருகணும்னு ஒரு கணக்கு இருக்கும்போல... ஒரு ஓட்டையில பத்து வட்டம்னா இன்னொரு ஓட்டையில ஆறு வட்டமோ ஏழு வட்டமோ... இப்படி இந்தப் பத்து ஓட்டையிலயும் மாறி மாறி திருப்புளிய வெச்சு திருகினாரு. அவரா கை விரலக்கொண்டே கணக்கெல்லாம் போட்டாரு. கடைசியா ஒரு வழியா திறந்தாரு! நான்கூட இது என்னாப்பா மெக்கானிசம்... இப்ப பாங்க்ல இருக்கிற நம்பர் லாக் சிஸ்டம்லாம் ஒண்ணுமில்லபோலன்னுகூட நினைச்சேன்.

பர்மாவுல இருந்து தமிழ்நாட்டுக்குக் கப்பல்ல வந்தவங்க, அந்தக் காலத்துல இந்த மாதிரி பெட்டியிலதான் அவங்க நகைநட்டை வெச்சு எடுத்துக்கிட்டு வருவாங்களாம். யாராலயும் திறக்க முடியாது. கப்பல் புயல்ல சிக்குனாலும், பெட்டி தண்ணியில மிதந்துக்கிட்டு இருக்கும் மீட்டுடலாமாம்! இப்படி இந்தப் பெட்டியைப் பத்தி என்னென்னவோ சொன்னவரு, சுப்பையா சாமிகூட பர்மாவுல இருந்து இந்தப் பழநிப்பக்கம் பொழைக்க வந்தவருன்னு சொன்னாரு.

அங்கே யுத்தம் நடந்தப்ப, இவரோட குடும்பமே ஒட்டுமொத்தமா அழிஞ்சிடுச்சாம். கண் எதிர்ல பொண்டாட்டி புள்ளைங்க சாவறதைப் பார்த்த இவருக்கு மட்டும் ஒரு சின்ன காயம்கூட ஏற்படலையாம். மனசு வெறுத்துபோய் அப்பவே சாமியாரா மாறிட்டாராம். இந்தப் பழநிக்கு வந்தவரு அப்படியே பித்து பிடிச்ச மாதிரி சுற்றித் திரிஞ்சு, கடைசியில யார்கிட்டயோ ஜோசியம் கத்துக்கிட்டு, குறிசொல்லிப் பொழப்பு நடத்துனாராம்’’ - காயலாங்கடைக்காரன் பேசிக்கொண்டே வெகு இயல்பாக அங்கும் இங்கும் கிடந்த சில பழைய டயர்களை நிமிர்த்தி, உருட்டி ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அடுக்கிக்கொண்டே, குடித்த டாஸ்மாக் பாட்டிலின் மிச்சத்தையும் குடித்தவனாக பாட்டிலை அங்கு உள்ள ஷெட்டின் ஒரு திட்டு மேல் எடுத்து வைத்தான். அங்கே முன்பு குடித்திருந்த பல பாட்டில்கள் இருந்தன. அவன் எதையுமே பயனற்றதாய்க் கருதுபவன் அல்லன் என்பதை, தன் உடல்மொழியால் சொன்ன விதம் அரவிந்தனை மிகவும் கவர்ந்துவிட்டது.

இறையுதிர் காடு - 27

``ஆமா... இப்ப அந்தப் பண்டாரத்த நான் பார்க்க முடியுமா?’’ என்று கேட்டான்.

``அவரு இப்ப இந்தப் பழநியில அவ்வளவா இருக்கிறதில்லை. ஒட்டன்சத்திரம் ரூட்ல குழந்தை வேலப்பர் கோயில் பக்கமா திரியுறதா கேள்வி. ஆமா, அவரைப் பார்த்து என்ன பண்ணணும், குறி கேக்கணுமா... இப்பல்லாம் அவர் யாருக்கும் குறியும் சொல்றதில்லை. ஆனா, எனக்குச் சொன்னாரு. கடைசி வரையில இந்தப் பாழாப்போன பழைய சாமானோடுதான் நான் கிடந்து சாவேனாம். போன ஜென்மத்துல நான் ஒரு வழிப்பறித் திருடனா இருந்தேனாம். வெடுக்கு வெடுக்குன்னு பல பொம்பளைங்க கழுத்துத் தாலியப் புடுங்கினேனாம். அவங்க விட்ட சாபம்தான், நான் உருப்படாம இப்படியே இருக்கேனாம். குறிசொல்றேன்னு அவர்பாட்டும் அடிச்சு உட்டாரு. ஆனா, ஒரு விஷயம் ரொம்ப கரெக்டா இருந்துச்சு. எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அதுல நான் உடம்புல ஒட்டுத் துணிகூட இல்லாம நிர்வாணமாத்தான் இருப்பேன். அதை அவரு ரொம்ப சரியா சொன்னாரு!’’

ஒரு திருட்டைப் பிடிக்க வந்த இடத்தில் விஷயம் வேறு மாதிரி போவதில், போலீஸ்காரரிடம் ஒரு சுணக்கம்.

``சார்... இவனையெல்லாம் ஒரு மனுஷன்னு நினைச்சு இவன்கிட்ட போய்ப் பேசிக்கிட்டிருக்கீங்களே சார். திருட்டு நாயிங்க சார். இவன் களவாணின்னா, இவன் கூட்டுக் களவாணி சார். பாருங்க சார்... எவ்வளவு பொட்டிங்க. அவ்வளவும் யாரோடதோ... அசந்தா தூக்கிட்டு வந்துடுவாங்க.’’

``அது சரி... நீங்க உங்க வேலைய சரியா பார்த்தா, இவங்க இப்படி வளர்ந்திருக்க முடியுமா?’’

``அட, என்ன சார் பொசுக்குன்னு இப்புடிச் சொல்லிட்டீங்க!’’

``வேற எப்படிச் சொல்ல..? எனிவே... இங்க வந்ததுல எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. ஹேண்ட் பேக்கும் திரும்பக் கிடைச்சிடுச்சு. சந்தோஷம்’’ என்றபடி அந்தப் பழனி என்கிறவனைப் பார்த்தபோது பழனி போதையில் உட்கார்ந்த இடத்தில் சுருண்டிருந்தான்.

அரவிந்தனுக்குச் சிரிப்புதான் வந்தது.

``என்ன சார் சிரிக்கிறீங்க?’’

``நான் அழுதா நல்லா இருக்காது சார். அதான் சிரிச்சேன். உங்களுக்கும் ரொம்ப நன்றி. நான் இப்ப அந்த சுப்பையா பண்டாரத்தைப் பார்க்கணும். ஆமா, அந்தக் குழந்தை வேலப்பர் கோயிலுக்கு எப்படிப் போகணும்?’’

``அப்ப, இவனுங்களை என்ன சார் பண்ண?’’

``விட்டுடுங்க... இவர் வாஸ்தவத்துல எனக்கு உதவிதான் செய்திருக்கார். உங்க செக்யூரிட்டி சிஸ்டத்தை நல்லா டைட் பண்ணுங்க. இவங்க மாறிடுவாங்க. மாறலேன்னாகூட ஒண்ணும் தப்பில்லை. திருட்டு ஒரு கலை. அது இவனால வாழ்ந்துட்டுப்போகட்டும்.’’

அரவிந்தன் பல பொருளில் பேசியது அந்த போலீஸ்காரருக்குப் புரியவில்லை.

``அப்ப இதையெல்லாம் நீங்க உங்க பத்திரிகையில எழுத மாட்டீங்களா?’’ என்று சற்றே அப்பாவியாகக் கேட்டார்.

அரவிந்தன் சிரித்தபடியே காயலாங்கடைக்காரன் அருகே சென்று ``இந்தப் பெட்டியை நான் எடுத்துக்கட்டுமா?’’ என்று கேட்டான்.

``தாராளமா எடுத்துக்குங்க சார்... எங்கள விட்டுடுன்னு சொன்னீங்க பாருங்க - அதுக்கே நான் உங்க கால்ல விழுந்து கும்புடணும். ஆனா ஒண்ணு சார்... இந்தப் பெட்டி, சாமியார் பெட்டி. அவரும் இப்ப உசுரோடு இல்லை. அதனால இதை யாருமே வாங்கப் பிரியப்படலை. நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க. பார்த்துக்குங்க சார்’’ என்று இரண்டுங்கெட்டானாய்ச் சொன்னான்.

``என் வரையில இந்தப் பெட்டிக்குள்ள நிறைய கதைங்க இருக்கு. அது எனக்கு வேணும் - நான் திரும்ப வருவேன். வரும்போது எடுத்துக்கிட்டுப் போறேன்... என்ன?’’

``சார், நீங்க எப்ப வேணா வாங்க. நான் இங்கேயேதான் இருப்பேன்.’’

காயலாங்கடைக்காரன் குவார்ட்டர் சரக்குக்கு எல்லாம் மயங்கும் எல்லையைக் கடந்துவிட்டவன் என்பது அவனது பேச்சில் நன்றாகவே தெரிந்தது. அந்தப் பழனி, இப்போது தரையில் ஒரு சிலுவை கிடப்பதுபோல் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டியபடி படுத்திருந்தான்.

இறையுதிர் காடு - 27

`என்னவோ வாழ்க்கை!’ அரவிந்தனுக்குள் இப்படித்தான் தோன்றியது.

அந்த லேடி டாக்டரின் ஊர்ஜிதத்தைத் தொடர்ந்து, சாருபாலாவை அந்தச் சூழலையும் மீறிக் கட்டிக்கொண்டு நெகிழ்ந்தான் சாந்தப்ரகாஷ். முறையான பரிசோதனைகளும் கண்காணிப்பும் இனி அவசியம் என்று டாக்டர் தொடரவும் ``இது எங்களுக்குக் கிடைச்சிருக்கிற புதையல் டாக்டர். நிச்சயம் ஜாக்கிரதையா என் சாருவை நான் பார்த்துப்பேன். ஆக்சுவலி நான் இவ மயக்கத்தை ஜெட்லாக் எஃபெக்ட்னுதான் நினைச்சேன். பட் இட் ஈஸ் எ வெட்லாக் எஃபெக்ட்’’ என்று சற்று கவிதையாகவும் பேசினான்.

அந்த டாக்டர் சற்றே தயங்கியவராய் ``ஓ... இவங்க இப்பதான் கன்சீவ் ஆகியிருக்காங்களா?’’ என்று கேட்டார். `இல்லை எங்களுக்கொரு பிள்ளை இருக்கிறான்’ என்று சொல்வதற்காக சாரு வாயைத் திறக்கவும் அவள் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுத்த சாந்தப்ரகாஷ், ``நோ டாக்டர்... வி ஹேடு ஒன்லி ஒன் சன்! பட்... ஹி ஈஸ்... அவன் இப்ப உயிரோடவே இல்லை’’ என்று பேடன் ரூஜில் விட்டுவிட்டு வந்த ஆகாஷைச் சாகடிக்கவும், சாருபாலாவுக்கு உச்சந்தலையில் சிறு ஆணி நறுக்கென இறங்கியதுபோல் இருந்தது.

அதன் பிறகு ``ஐ’ம் ஸாரி!’’ என்ற டாக்டரிடமிருந்து விடுபட்டு காரில், பல்லாவரத்தில் உள்ள அந்த பிரமாண்ட ஜமீன் பங்களா போய்ச் சேரும் வரை சாருபாலா ஒரு வார்த்தை பேசவில்லை. உயிரோடு ஒரு பிள்ளையைத் தனக்குள் கொல்ல அவளால் முடியவில்லை. காரும் பங்களா முகப்பில் நின்றது.

- தொடரும்

- இந்திரா சௌந்தர்ராஜன்; ஓவியங்கள்: ஸ்யாம்