
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்
வாழ்க்கை என்பது நீண்ட நெடிய பயணம். வாழ்க்கைப் பயணத்தில் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. சில விபத்துகள் காயங்களை ஏற்படுத்தினாலும், மனித நேயத்தை அடையாளப்படுத்திவிடுவதும் உண்டு.

1999-ம் ஆண்டில் ஒரு சாலைவிபத்தை நாம் எதிர்கொண்டோம். செல்போன், தொலைபேசி வசதிகள் இல்லாத காலம். ஒரே நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட இரவுக்கூட்டங்களில் பேசிவிட்டு, காரில் வந்துகொண்டிருந்தோம். குன்றக்குடிக்குச் சில கிலோமீட்டர் தொலைவில் வந்தபோது, கும்மிருட்டில் கார் உருண்டு விபத்து ஏற்பட்டது. அரைத்தூக்கத்திலிருந்த நாம் அலறியடித்துக்கொண்டு எழுந்தோம். காரை ஓட்டிக்கொண்டிருந்த நம் உதவியாளரின் `ஐயோ...’ என்ற அலறல் கேட்டது. காரின் முன்பகுதியில் மோதி, ரத்தவெள்ளத்தில் அவர் மிதந்துகொண்டிருந்தார். பதறிப்போய், வெளியே இறங்கி இங்குமங்கும் ஓடினோம். விளக்கு வசதியில்லாத காட்டுப்பகுதி அது. எங்கிருக்கிறோம், என்ன நேரம்... எதுவும் தெரியவில்லை.
தூரத்தில் ஒரு குடிசையில் விளக்கு எரிவது தெரிந்தது. அதை நோக்கி ஓடினோம். அங்கே ஒரு மூதாட்டி மட்டும் இருந்தார். வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் போயிருந்தார்கள்.
மீண்டும் காருக்கு அருகே வந்து நின்றோம். அந்த நேரத்திலும் சாலையில் நிறைய கார்கள் சென்றன. ஒவ்வொன்றையும் வழிமறித்து, உதவி கேட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை. பாரம் சுமந்த லாரிகளும் கார்களும் பாராமுகமாக நம்மைக் கடந்து சென்றன. வெகுநேரத்துக்குப் பிறகு ஒரு கார் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கினார். நம்மை அடையாளம் கண்டுகொண்டார். ``குன்றக்குடி சாமியா நிற்பது... என்ன நடந்தது... என்ன உதவி வேண்டும்?’’ என்று கேட்டார்.
``அருகிலிருக்கிற மருத்துவமனைக்கு இவரைக் கொண்டு போக வேண்டும்’’ என்று நம் உதவியாளரைக் காட்டிய நாம், அப்போதுதான் கவனித்தோம். உதவ நின்ற காருக்குள் ஒரு கர்ப்பிணி இருந்தார். அந்தப் பிரசவவலித் துடிப்பிலும், ``சாமியைக் காப்பாற்றுங்கள். அவரோடு இருப்பவரைக் காப்பாற்றுங்கள். நான் இறங்கிக்கொள்கிறேன்’’ என்று முனகியபடி சொன்னார் அந்தப் பெண்.
நம்மால் பேச முடியவில்லை. காரிலிருந்து அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுச் செல்ல நமக்கு மனமில்லை; அவர்களுக்கோ நம்மைவிட்டுச் செல்ல மனமில்லை. எல்லோரும் ஒரே காரில் பயணம் செய்தோம். மனதில் அன்பிருந்தால், எவ்வளவு சின்னஞ்சிறு இடத்திலும் நாம் ஒதுங்கிக்கொள்ள முடியும் என்பதை உணர்த்திய தருணம் அது.
ஓட்டுநருக்கு அருகே நாம் அமர்ந்திருந்தோம். நமக்கருகே நம் உதவியாளர். பின்னிருக்கையில் அந்தப் பெண்ணும் அவரின் பெற்றோரும் இருந்தார்கள். அது, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் என்ற சிவாச்சார்யாரின் கார். பிரசவத்துக்கு, விபத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு, உயிருக்குப் போராடுபவர்களுக்கு என அனைத்து அவசர உதவிகளுக்கும் யார் கேட்டாலும் தன் காரைத் தந்துவிடும் மகத்தான மனம் படைத்தவர் அவர்.
உள்ளே பிரசவவலியில் துடித்துக்கொண்டிருக்கும் பெண்; ரத்தம் வழிய நம் தோளில் சாய்ந்துகிடந்த நம் உதவியாளர் ராமசாமி. வழியெங்கும், ‘பயப்படாதே ராமசாமி... நீ பிழைச்சுடுவே’ எனச் சொல்லிக்கொண்டே வந்தோம். நம் தலையிலும் காயம் ஏற்பட்டு, ரத்தம் வருவதை அப்போதுதான் நாம் கவனித்தோம்.
திருப்புத்தூரிலுள்ள மருத்துவமனைக்குப் போனோம். அந்தப் பெண்ணை மகப்பேற்றுப் பிரிவில் சேர்த்தோம். முதலுதவிக்காக நம் உதவியாளரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துப் போனோம். அங்கே அவருக்கு ஆரம்பகட்ட முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவர் ஒருவர் நம்மை கவனித்தார். ``சுவாமிகளையும் கவனியுங்கள். அவர்களுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவரைக் காப்பாற்றும் வேகத்தில் இப்போது நிதானமாக இருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை தந்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.
முதலுதவிக்குப் பிறகு, அந்த கார் மதுரை நோக்கிச் சென்றது. மதுரை மருத்துவமனைக்குள் நுழைந்ததும், நம் உதவியாளரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க முயன்றோம். ஆனால், காரைவிட்டு இறங்கியதும், நம்மால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. மருத்துவமனைப் பணியாளர்கள் நம்மைச் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துப் போனார்கள். நம் நினைவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. தீவிர மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு நாள்கள் கழித்துத்தான் நமக்கு நினைவு திரும்பியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள், `இது ஓர் அதிசய நிகழ்வு. இவ்வளவு காயம்பட்டிருந்த நிலையிலும் இவர் ஓடி ஓடி, ஒருவரைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது நம்ப முடியாத உண்மை’ என்றார்கள்.
சிகிச்சைக்குப் பிறகு நம் திருமடத்துக்குத் திரும்பும்போது, ஒரு நற்செய்தி. நமக்கு உதவிய அந்தப் பெண் சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிறர் உயிரைக் காக்க வேண்டும் என்கிற உறுதியிலிருந்தார். ஒரே நேரத்தில் அந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டார். அவர் பெற்ற குழந்தைக்கு, சிவபெருமான் யாரை `அம்மா...’ என்று அழைத்தாரோ, அந்தப் `புனிதவதி’ அம்மையாரின் பெயரைவைத்திருந்தார்.
‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்றார் திருவள்ளுவர். யார் உயிர் வாழ்கிறார்கள்? ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, சுவாசம் சீராக இருந்தால் உயிருக்கு பாதிப்பில்லை. ஆனால், வள்ளுவர் சொல்கிறார்... `இதயம் சரியாகத் துடித்தாலும், ரத்த ஓட்டம் உடலில் நன்றாக இருந்தாலும், சுவாசக்காற்று சீராக இருந்தால் மட்டும் நாம் வாழ்கிறோம் என்று அர்த்தமில்லை. நம் இதயத்தில் அன்பு இருக்க வேண்டும். அதுதான் நாம் உயிர் வாழ்கிறோம் என்பதற்கான அர்த்தம்.’

சாலைகளில் எத்தனையோ விபத்துகளைப் பார்க்கிறோம். உடனே `ஐயோ... பாவம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறோம். அவருக்கு உதவி செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வார்த்தைகள் நமக்குப் போதுமானதாக இருக்கின்றன. விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முயற்சி செய்பவர்கள்தாம் உண்மையில் அன்புடையவர்கள். ஆங்கிலத்தில், `Sympathy Vs Empathy’ என்று சொல்வார்கள். `Sympathy’ என்பது ‘ஐயோ பாவம்’ என்று இரக்கப்படுவது. இது ஒருபோதும் பிறரின் துன்பத்தை மாற்றாது. அதை மாற்ற முயலுவதுதான் `Empathy.’ விபத்தில் சிக்கிக்கொண்ட ஓர் உயிரைக் காக்க நம்மால் முடிந்த முதலுதவிகளைச் செய்வதுதான் Empathy. கருணையைச் செயலாக மாற்றுவது. அன்பைத் திருப்பணியாகச் செய்வது. அந்த நிலையை நோக்கி நாம் நகர வேண்டும்.
குஜராத்தில் பூகம்பம். பெருஞ்சேதம். நைனேஸ் தவே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி களத்தில் இறங்கியிருந்தார். ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்துகிடந்த சடலங்களை அப்புறப்படுத்தி, காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி வந்தது. அது, செய்தித்தாளில் வெளியாகியிருந்தது. அவரின் தந்தையும், ஒரே மகனும் அதே பூகம்பத்தில் சிக்கி, இன்னொரு பகுதியில் இறந்துபோயிருந்தார்கள். ஒருகணம் தடுமாறினார். பிறகு அவர் அந்தச் செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு, தன் களப்பணியைத் தொடர ஆரம்பித்தார். சொந்த சோகத்தை உள்ளே புதைத்துவிட்டு, மற்றவர்களின் துயர் தீர்க்கக் களமிறங்கிய அந்த அதிகாரி நம்மை மலைக்கவைக்கிறார். இதை, தான் எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார் வெ.இறையன்பு.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை சுனாமி உலுக்கிப்போட்டிருந்த நேரம். நாகை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சித்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம். ``நாங்கள் உதவி செய்யக் காத்திருக்கிறோம்’’ என்று சொன்னோம்.
``இங்கு பணமோ, பொருள்களோ, உணவோ, உடைகளோ தேவையில்லை. ஊர், தெருக்கள் முழுக்கப் பிணக்குவியல்கள். அவற்றை அப்புறப்படுத்த ஆட்கள் இருக்கிறார்களா... இருந்தால் வாருங்கள்’’ என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டார்.
`சடலங்களை அப்புறப்படுத்தும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்’ என்ற செய்தி திருமடத்திலிருந்து குன்றக்குடி முழுக்கக் காட்டுத்தீயாகப் பரவியது. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து நின்றார்கள். அவர்களோடு நாகை நோக்கிப் புறப்பட்டோம்.
நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எங்களுக்குப் பாதுகாப்பு மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்திவிட்டுத்தான் அந்தப் பகுதிக்குள்ளேயே எங்களை அனுமதித்தார்கள். காற்றெல்லாம் துர்நாற்றம். அழகான கடல் அலங்கோலமாகத் தெரிந்தது. சிதறிக்கிடக்கும் சடலங்கள். தண்ணீரில் ஊறி, அழுகி, நாறிப்போன சடலங்கள் மாமிச மலைகளாகக் குவிந்திருந்தன. இளைஞர்கள் பொருட்படுத்தவில்லை. களத்தில் இறங்கினார்கள்.
அவர்களில் டாக்டர் பாலகிருஷ்ணன் என்பவர் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சிக்கூடத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். பல அரிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். அவரும் டிரவுசரை அணிந்துகொண்டு, அழுகிய சடலங்களைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு வேளாங்கண்ணி தேவாலயத்தின் பாதையில் நடந்து போனார்.
ஓரிடத்தில் இளைஞன் ஒருவன் விரக்தியோடு வானத்தை அண்ணாந்து பார்த்து அமர்ந்திருந்தான். சில இடங்களில் இயந்திரங்கள் மனிதச் சடலங்களைப் புதைத்துக்கொண்டிருந்தன. ஊருக்குள் ஒரு மயானம் இருக்கும். ஊரே மயானமாகிவிட்டால் என்ன செய்வது?
அந்த இளைஞனிடம், ``என்னப்பா இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?’’ என்று கேட்டோம். அவன் ஒவ்வொரு குழியாகக் காட்டிச் சொன்னான்... ``இது என் அப்பா. இது என் அம்மா. இது என் அண்ணன்...’’ அவனுடைய ஒட்டுமொத்த உறவுகளும் குழிகளில் இருப்பதைக் காட்டினான். வானத்தையும் கடலையும் வெறித்தபடி, அவ்வப்போது குழிகளையும் பார்த்தபடி அவன் அமர்ந்திருந்தான்.
சடலங்களாகப் பச்சிளங் குழந்தைகள்; திருமணத்துக்குத் தயாராக இருந்த பெண்கள்; இளைஞர்கள்; முதியவர்கள்... இயற்கையின் கோர தாண்டவத்தால் எத்தனை பேர் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள்... வேளாங்கண்ணி வாசலிலும் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியைச் செய்தோம். நாகூர் தர்காவுக்கு அருகேயும் சடலங்கள் கிடந்தன; அங்கேயும் அதே பணி. கன்னியாகுமரி கடற்கரைக்கு அருகேயும் சடலங்கள்... அங்கும் அதே பணி.
இந்த நிகழ்வு தரும் செய்தி ஒன்றுதான்.
‘மனிதர்களே மனிதர்களே...
மரணத்துக்கு இந்து இல்லை,
இஸ்லாம் இல்லை,
கிறிஸ்துவம் இல்லை;
அது எல்லோருக்கும் பொதுவானது.
நீங்களும் வாழும்போது பொதுவாக வாழ்ந்து காட்டுங்கள்.’
வாழ்க்கையில் இயற்கை கற்றுத்தரும் பாடத்தை மனிதன் உணர்ந்துகொள்ள வேண்டும். மனிதன் இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த நிலைநோக்கி மானுடம் அன்பு கலந்த பாதையில் பயணம் செய்ய வேண்டும்.
- புரிவோம்..
அடிகளாரைக் கேளுங்கள்?
1. ஞானம் என்றால் என்ன... முக்தி என்றால் என்ன?
- கே.எஸ்.ஜீவமணி, சேலம்-3
ஞானம், தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கிப் பயணம் செய்வது. அறிந்ததில் அறியாதவற்றை அறிந்துகொள்வது. தன்னை உணர்வது ஞானநிலை. வாழும்போதே
அடைவது ஞானம். முக்தி, பிறப்பறுப்பது. பரிபூரண நிலையை அடைவது.
2. ஆன்மிகம் வெறும் மனம் சார்ந்த நம்பிக்கை என்பது என் கருத்து. தங்களைப்போல நானும் அனுபவரீதியாக இறைவனை உணர ஆன்மிகத்தில் வழி உண்டா?
- செல்வகுமார், சென்னை (வாட்ஸ் அப்)
இறை அனுபவம் ஒவ்வொருவருக்கும் வாய்த்திருக்கிறது. அதை உணர நம்பிக்கை தேவை.
3. நியாயங்களுக்காகப் போராடினால் கடவுள் துணை நிற்பார், சரி. ஆனால், போராடவேண்டிய நிலையை ஏன் தோற்றுவிக்கிறார்?
- சிபிசரண், சென்னை (வாட்ஸ் அப்)
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை சாரமற்றது; சுவையற்றது. பிரச்னைகள் மூலம் தீமையை அழிக்க நல்லவர்களை கடவுள் கருவியாகப் பயன்படுத்துகிறான்.
4. குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றுள்ளனவா... பெற்றிருந்தால் எங்கு கிடைக்கும்?
- வே.தமிழ்தாசன், சவேரியார்பட்டணம்.
மணிவாசகர் பதிப்பகம் ‘குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை’ என்று அனைத்து நூல்களையும் பதிப்பித்துள்ளது.
5. இலங்கையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் தீவிரவாதம்...
- த.சூரியதாஸ், சிலட்டூர்
மதங்கள் அன்பின் அடித்தளத்தில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணராதவர்களின் கொடுஞ்செயல்.