மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 28

இறையுதிர் காடு - 28
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 28

இறையுதிர் காடு - 28

இறையுதிர் காடு - 28

அன்று கிழார்கள் மூவரும், போகர் பிரானை சற்றே புன்னகை, சற்றே பேராசை, சற்றே தயக்கம் என்று மூவகை நிலைகளில் பார்த்தனர்.

``என் கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படிப் பார்த்தால் எப்படி... உங்களுக்குத் தங்கம் வேண்டுமா என்றுதானே கேட்டேன்?’’ என்று போகர் நிமிண்டவும் அருணாசலக்கிழார் திருவாய் மலரத் தொடங்கினார்.

``ஐயனே, இப்போதுள்ள மானுட சமூகத்தில் நானும் சரி, இவர்களும் சரி, தமிழ் மறைகளைக் கற்றவர்கள். உங்களால் ஓரளவு உலகப் பார்வைக்கும் ஆளானவர்கள். உங்கள் சிந்தையில் உள்ளதையெல்லாம் உலகம் அறியுமுன் நாங்கள் அறிந்தவர்களாகிவிடுகிறோம். நிச்சயமாக உங்கள் பேராலான நூல் ஏடுகள் காலங்களை வென்று வாழ்ந்திடும். அதைப் படியெடுத்தவர்கள் எனும் முறையில் நாங்களும் உங்களோடு சேர்ந்து சிந்திக்கப்படுவோம். அம்மட்டில் நாங்கள் பாக்கியசாலிகள்.

ஆயினும் தங்கம் என்று வரும்போது ஓர் ஆசை உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை. நாங்கள் இன்னும் முழுவதுமாய்ப் பக்குவப்படவில்லையோ என்றும் கருத நேரிடுகிறது. இதனால் எங்கே எங்களைத் தவறாக தாங்கள் கருதிவிடுவீர்களோ என்கிற அச்சம் மற்றும் தயக்கமே நாங்கள் மருண்டு நிற்கக் காரணம்.’’

``கிழார்களே, எதற்கு இத்தனை பீடிகை? தங்கம், சித்த உலகையே மயக்கி, பல சித்த புருஷர்களை வைத்திய வகையறியா பைத்தியமாகவே ஆக்கியுள்ளது. நீங்கள் எம்மாத்திரம்!’’ - போகர் அப்படிக் கூறவும் கிழார்களிடம் திகைப்பு.

``வைத்திய வகையறியா பைத்தியங்கள் என்றால்?’’

``ஒரே ஓர் எழுத்தில் ஓர் ஓரம் சுழித்துக்கொண்டால், வைத்தியம் பைத்தியமாகிவிடும்.’’

``சற்று, புரியும்படி சொன்னால் மகிழ்வோம்.’’

``இவ்வளவுதானா உங்கள் மொழிப் பரிச்சயம். தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?’’

``இருநூற்று நாற்பத்தேழு.’’

``அதில் உயிர் எழுத்து?’’

``பன்னிரண்டு.’’

``ஏன் அதை உயிர் எழுத்து என்றனர்?’’

போகர் எங்கோ ஆரம்பித்து எங்கோ போவதுபோல் கிழார்கள் உணர்ந்தனர்.

``பிரானே, தங்கத்தில் தொடங்கிய பேச்சு, தமிழ்ப்பக்கம் சென்றுவிட்டதன் காரணம் புரியவில்லை.’’

இறையுதிர் காடு - 28

``காரணமில்லாமல் நான் பேசுவதேயில்லை. வெறிதே கதைக்க இந்தக் கொட்டாரத்தில் இடமுமில்லை. ஒரு நாளைக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்சென்று நூற்று இருபது ஆண்டுகள்
வாழத் தேவையான அவயவங்களை நமக்களித்து அதை `பிறப்பு’ என்றாக்கியிருக்கிறான் இறைவன். இதில் கதைப்புகள் நிமித்தம் மூச்சைச் செலவிடுதல் காலவிரயமாகும். அது ஆயுளைக் குறைத்துக்கொள்ளும் செயல். இதைத் தற்கொலைக்கு இணையாகக் கருத வேண்டும்.

விரயத்தில் மிகுந்த மதிப்புடையது, காலவிரயமே. அதனாலேயே ஒரு நொடிப்பொழுதின் மதிப்பை உணர்த்த, சித்த உலகம் ஒரு நொடிக்கு ஒரு தங்கச்சொட்டு என்று வடிவமளித்துள்ளது.’’
``அருமை... அற்புதம்... ஒரு நொடி மதிப்பை இதைவிட உயர்வாகக் கூற முடியாது.’’

``இப்படி உணரத் தெரிந்த உங்களுக்கு, வைத்தியம் பைத்தியம் எப்படிப் புரியாமல்போயிற்று?’’

``வை, பை என்னும் எழுத்தில் `வ’ என்னும் எழுத்து `ப’ ஆகியுள்ளது. `வ’வில் முன் சுழிப்பு உண்டு. `ப’வில் அது இல்லை. இதைத்தான் தாங்கள் குறிப்பிட்டீர்களா?’’

``ஆம்... சுழி தன் இயக்க கதியைக் குறிப்பதாகும். அந்தச் சுழிப்பு நீங்கும்போது தன் இயக்க கதியும் நீங்கிவிடுகிறது. பைத்தியம் என்பது, தன் இயக்க கதியற்றவர்களைக் குறிக்கிறது.’’

``உண்மைதான், தான் யார் என்றே தெரியாமல் அர்த்தமில்லாத அசைவை உடையவர்கள்தானே பைத்தியங்கள்.’’

``அப்படியானால், தங்கம் ஒருவனை பைத்தியமாக ஆக்கிவிடுமா என்ன?’’ - ஒரு கிழார் மிக வேகமாய் இடையிட்டார்.

``உறுதிமிக்க சித்தம்கொண்ட சித்தனையே அது பித்தனாக்கியுள்ளது. நீங்கள் எம்மாத்திரம் என்று அதனாலேயே கேட்டேன். எழுத்துகள் குறித்துக் கேட்டதன் பின்பும் காரணமுண்டு. எழுத்துவடிவை நீங்கள் எந்த அளவு உணர்ந்துள்ளீர்கள் என்பதற்காகவே அப்படிக் கேட்டேன். தமிழ் உயிர் எழுத்தின் வரிவடிவம் அப்படியே மனித வாழ்வைப் பிரதிபலிப்பதைக் கூர்ந்து நோக்கினால் உணரலாம். `அ’ எனும் எழுத்து ஓர் உடல் அழுதபடி பிறப்பதைக் குறிக்கிறது. `ஆ’ என்பது, வலியின் குரல். வலிதான் வலிமை தரும். பிறந்த குழந்தை வலிகளைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. `இ’ என்பது இருப்பைக் குறிக்கிறது. `ஈ’ என்பது ஈதலின் முதல் எழுத்து. நம் வாழ்வில் நாம் கொடுப்பதே நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஒருவன் தனக்குத்தானே ஒன்றைக் கொடுத்துக்கொள்ள முடியாது. பிறருக்குக் கொடுப்பதன் மூலமே தனக்கானதை ஒருவன் அடைய முடியும். நமக்கு இன்று ஒன்று கிடைக்கவில்லை என்றால், நாம் அதை நாம் வாழ்ந்தநாளில் அதைப் பிறருக்குக் கொடுக்கவில்லை என்பதே பொருள்.

`உ’ என்பது உண்ணத் தொடங்கிவிட்டதையும் தவழ் நிலையில் தலைநிமிர்ந்து பார்ப்பதையும் குறிக்கிறது, `ஊ’ என்பது, முதுகில் வாழ்க்கைச் சுமைகளோடு ஊர்ந்து தவழத் தொடங்கிவிட்டதைக் குறிக்கிறது. `எ’ பின்னர் எழுவதையும் `ஏ’ ஏற்பதையும், `ஐ’ சகலத்திலும் ஐக்கியமாகத் தொடங்கிவிட்டதையும், ஒ, ஓ எனும் எழுத்துகள் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் ஓடத் தொடங்கிவிட்டதையும் குறிக்கின்றன. பிறப்பு என்பது, ஒருவகையில் பிணியே. இதில் பெரும்பிணி வயிற்றுப்பசி. எனவே, பிணிக்கு மருந்தாய் `ஔ’ விளங்குகிறது. ஆய்த எழுத்து, முதுமையில் நாம் கோல்கொண்டு தரைமேல் நிற்பதை உணர்த்துகிறது. இரு கால்களும் கோலுமே மூன்று புள்ளிகள்!’’ - போகர் கூறி முடிக்கவும், கிழார்கள் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக்கொண்டனர்.

``என்ன பார்க்கிறீர்கள்?’’

``இந்த விளக்கம் புதியது. பொருத்தமாகவும் உள்ளது. நம் எழுத்தின் வரிவடிவம் நம் வாழ்வின் வடிவத்தை மறைமுகமாய் உணர்த்துகிறது என்றால், திட்டமிட்டு இதை உருவாக்கியதுபோல் தோன்றுகிறது. அப்படித் திட்டமிட, சராசரி அறிவு போதாது. பேரறிவு வேண்டும் என்றும் தோன்றுகிறது.’’

``பேரறிவு இறைவனுக்கு மாத்திரமே உண்டு. எனவே, நம் மொழியை `கடவுள் மொழி’ என்பதில் கடுகளவும் பிழையில்லை.’’

``இந்தச் சிந்தனைகள் தங்கத்தோடு எப்படிப் பொருந்துகின்றன?’’

``நல்ல கேள்வி... இவ்வுலகம் உலோகங்களாலேயே உருப்பெறவல்லது. அந்த உலோகங்களில் காலதேசவர்த்தமானங்களால் துளியும் தன்னிலை மாறாததுதான் தங்கம்.’’

``தன்னிலை மாறாதது என்றால்?’’

``ஏனைய உலோகங்கள் அழிவிற்கேற்ப உருமாற்றம், அணுச்சிதை மாற்றம் என்று பல மாற்றங்களுக்குள்ளாகிவிடும். தங்கம் மட்டும் பஞ்சபூதங்களால் துளியும் தன்னிலை மாறாது. அதன் அணுக்கூட்டு அப்படியே இருக்கும். இதனாலேயே உயர்ந்த குணப்பாடுடைய மனிதர்களை `தங்கமான மனதுடையவர்’ என்று பாராட்டும் ஒரு போக்கும் தோன்றியது.’’

``அருமை... அருமை.. ஆயிரமாயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்தாலும் தங்கம் தங்கமாகவே உள்ளது. ஆனால், ஏனையவை பலவாறு மாறிவிடுகின்றன.’’

``ஆம்... இதனாலேயே அழிவற்றவனான இறைவனின் தன்மையைக்கொண்டுள்ள இதையும் இறைமதிப்போடு பார்த்து இதற்கும் இறைத் தொடர்புகளை உருவாக்கினோம். இதன் பொருள் மதிப்பை உணர்த்த, இதை `லட்சுமி’ என்றும் அழைக்கின்றனர்.’’

``அப்படியானால், தங்கம்மேலான ஆசையை கடவுளின் மேலான ஆசை என்று கூறலாமா?’’

``அங்கேதான் சிக்கலே ஆரம்பமாகிறது.’’

``சிக்கலா?’’

``ஆம். சிக்கலேதான். இதற்கு இறைத்தன்மை மட்டுமே இருக்கிறது. ஜடமாதலால் குணமில்லை. ஆனாலும் ஆசையைப் பிறரிடம் தூண்டுவதால், ஆசை இதன் குணம் என்றாகி, இது மண்ணில் கிடக்கும் வரை அழிவின்றியும் மனிதர்களிடம் சிக்கும்போது அழிவுக்கு உரியதாகவும் ஆகிவிடுகிறது.’’

``புரியவில்லை ஐயனே!’’

``மண்ணில் கிடக்கும்போது தன்னிலை மாறாத தங்கப்படிமமாகவே உள்ளது. மனிதனின் கைக்கு வந்தவுடன் அவன் இதை உருக்கியும் தட்டியும் நகை செய்யும்போது அணு அணுவாய்ச் சிதையத் தொடங்கிவிடுகிறதல்லவா?’’

``பிரானே, தங்கத்தைத்தொட்டுதான் எத்தனை சிந்தனைகள்! இதை நாங்கள் அடைய விரும்புகிறோம். மண்ணில் உள்ள இதைத் தேடி அடைவது எங்கள் வரையில் கடினம். ரசவாதம் மூலம் ஏதேனும் ஓர் உலோகத்தை, குறிப்பாக செம்பைத் தங்கமாக்கிட முடியும்தானே?’’

``அது சித்தனுக்கு மட்டுமே சாத்தியம்!’’

``என்றால்?’’

``ஆசையுள்ள மனிதனுக்கு அவன் கர்மவினைக்கேற்பவே தங்கம் கிட்டும். அளவற்ற தங்கத்தை ஒரு மனிதன் எந்த நாளும் அடைய முடியாது.’’

``சித்தனுக்கு மட்டும் அது எப்படிச் சாத்தியமாகிறது?’’

``ஆசை சார்ந்த சகலத்தையும் எவன் ஒருவன் விட்டொழிக்கிறானோ, அவனே சித்தன். `பற்றறுத்தல்’ என்று இதற்குப் பெயர்.’’

``அப்படியானால், தங்களுக்கு எந்த ஆசையும் கிடையாதா?’’

``போகன் என்னும் என் பொருட்டு எனக்கு எந்த ஆசையும் இல்லை கிழார்களே. ஆனால், என் சீடர்களுக்கு குரு என்ற வகையில் என் சீடர்கள் பொருட்டு, அவர்களுக்கான உறவுகள் மற்றும் அவர்கள் வாழ்ந்திடும் உங்கள் சமூகம் பொருட்டு எனக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அந்தக் கடமைகளை நீங்கள் `ஆசைகள்’ என்று சொல்வதானால் சொல்லலாம்.’’

``எப்படியோ உங்களுக்கும் ஆசை இருக்கிறது என்பதுதானே இறுதியான முடிவு.’’

``ஆனாலும் என்னால் ஒரு மலைப் பாறையிலிருந்து மண் துகள்கள் வரை சகலத்தையும் தங்கமாக்க முடியும்’’

- போகர் உறுதிப்பட கூறியதில் ஓர் அழுத்தம் தெரிந்தது. அதுவரை அமைதியாக அங்கு நின்று சகலத்தையும் கேட்டபடியிருந்த அஞ்சுகனுக்குள் இப்போது ஒரு கேள்வி.

``ஆசானே...’’ எனத் தொடங்க, அவரும் ஏறிட்டார்.

``ஒரு சந்தேகம்.’’

``தங்கம் குறித்தா?’’

``ஆம்.’’

``தங்கம் பற்றிப் பேசவும் உனக்கும் அதன்மீது ஆசை வந்துவிட்டதா? சரி, கேள்.’’

``எனக்குத் தங்கம்மீது ஆசையில்லை ஆசானே! உங்கள் கடமை என்று நீங்கள் கருதும் தண்டபாணித் தெய்வம் குறித்தே இப்போது என்னுள் கேள்வி.’’

``என்ன அது?’’

``இறைத்தன்மை படைத்த இந்தத் தங்கத்தால் தண்டபாணிச் சிலையைச் செய்ய விரும்பாமல், `நவபாஷாணங்கள்’ எனப்படும் விஷத்தால் தாங்கள் சிலை செய்ய விரும்புவது எதனால்?’’ - அஞ்சுகன் கேட்டு முடித்த மறுநொடி, போகர் அவனை அருகில் அழைத்துக் கட்டிக்கொண்டார். அவனுக்கும் சிலிர்ப்பு ஏற்பட்டது.

``அருமை அஞ்சுகா... அருமை! சரியான கேள்வியை நீ கிழார்கள் முன்னிலையில் கேட்டுவிட்டாய். மதிப்பிற்குரிய தங்கம், மண்ணில் புதைத்திடும் பாஷாணம் எனும் இரண்டில் பாஷாணம் அவன் வரையில் வடிவமாகப்போவது எதனால் என்கிற உன் கேள்வி அசாதாரணமானது. தங்கத்தின் குணம் ஆசையைத் தூண்டுவது. பாஷாணமோ உயிர் பயமூட்டும். முருகன் எனும் தண்டபாணி மூலம் உயிர் பயமூட்டுதல்தான் என் முதல் நோக்கம். இந்த உயிர் பயம் நீ நினைக்கின்ற பொருள்கொண்டதல்ல. இறப்புக்குப் பிறகு நம் உயிர் என்னாகுமோ ஏதாகுமோ என்று ஒரு பயம் எல்லோரிடமும் உள்ளதல்லவா... அந்த பயம்!’’ - போகர் பெரிதாக ஒரு ரகசியத்தையே போட்டு உடைக்கப்போவதை, கிழார்கள் அனுமானித்துவிட்டனர்.

இறையுதிர் காடு - 28

இன்று சாந்தப்ரகாஷ் அந்தப் பிரமாண்ட ஜமீன் பங்களாவைப் பார்த்தபோது, அந்நாளைய சில எண்ணங்கள் பிம்பங்களாய்த் தோன்றத் தொடங்கின. ஏனோ மரத்தில் உள்ள மாங்காயைக் கல்லால் அடிக்கப்போய் காம்பறுந்து விழுந்த அந்த மாங்காய்தான் முதலில் ஞாபகம் வந்தது. கையில் எடுத்தபோது காம்பில் கசிந்த பால் பிசின்போல் ஒட்டியதும், மாங்காயின் பச்சையும் சிவப்பும் கலந்த வண்ணமும் அப்படியே மங்காமல் நினைவில் நிமிர்ந்தன. அதன் பிறகு சில்லென்ற கடப்பைக்கல் தரை, அதற்கும் பிறகு அந்த ஊஞ்சல் - ஆடும்போது அது எழுப்பும் சத்தம். `க்ரைய்ங்... க்ரைய்ங்... க்ரைய்ங்..!’ வாழ்க்கையில் பிற்போக்குத்தனம் கூடாததாக இருக்கலாம். ஆனால், எண்ணங்களில் எப்போதும் பின்னால் போய் நினைத்துப்பார்ப்பதுதான் இன்பமானதாக உள்ளது.

இரும்புகிராதிக் கதவு பூட்டப்பட்டு முன்னால் ஒரு போர்டு தொங்கியது. அதில் `அனுமதியின்றி யாரும் உள்ளே வரக் கூடாது’ என்ற வாசகம். அந்த வாசகம் சாருலதாவை எதுவும் செய்யவில்லை. தன் செல்போன் மூலம் உள்ளிருக்கும் வாட்ச்மேன் தாத்தாவைத் தொடர்புகொள்ளவும், சிறிது நேரத்தில் அவர் உடல் முழுக்க போர்வையைச் சுற்றிக்கொண்டு தடுமாறியபடியே வந்தார்.

``அம்மா வந்துட்டீங்களா... ஐயா வந்துட்டீங்களா?’’

``அதான் வந்து நிக்கிறோமே... கதவைத் திறங்க.’’

``மன்னிக்கணும்யா... இந்த கேட்டோட பூட்டுச்சாவி என்கிட்ட இல்லை. இங்கே ஒரு பீகார்காரன்தான் இப்ப காவல்காக்கிறான். என்னைப் போகச் சொன்னாங்க. நான்தான் கால்ல கையில விழுந்து ஒட்டிக்கிட்டு இங்கையே கிடக்கிறேன்.’’

``அப்ப, நாங்க எப்படி உள்ளே வர்றது?’’ என்று கேட்டாள் சாருபாலா.

``தப்பா எடுத்துக்காட்டி, நான் ஒரு வழி சொல்லவா?’’

``என்ன?’’

``பின்பக்கம் வாங்க... அங்கே சமாதியையொட்டி சுவர் எட்டிக் குதிக்க முடியும்.  பல பேர் நம்ம சித்தராசாவை அப்படித்தான் வந்து கும்புட்டுட்டுப் போறாங்க.’’

``வாட்... சுவர் எட்டிக் குதிக்கிறதா?’’ - ஷாக் அடித்ததுபோல் கத்தினான் சாந்தப்ரகாஷ்.

``தப்பா எடுத்துக்காதீங்கய்யா... இந்த பீகார்காரன் இப்ப எங்கே போனான்னு தெரியலை. நம்ப அவசரத்துக்கு நாம நெளிவு சுளிவா நடந்துகிறதுல தப்பில்லை’’ - தாத்தாவின் பேச்சு, சாருபாலாவை இளக்கி சாந்தப்ரகாஷைப் பின்பக்கம் அழைத்துச் சென்றது. கச்சிதமாய் அப்போது ஒரு பெண் ஏறிக் குதித்தபடியிருந்தாள்.

``சாரு... இட்ஸ் ரிடிகுலஸ்! இது நம்ம பங்களா... நம்ம பங்களாவுக்குள்ள நாமளே திருடங்களைப்போல சுவர் ஏறிக் குதிச்சு... வாட் எ பிட்டி... வாட் எ பிட்டி!’’

``அதுக்குப் பேர்தான் சாந்து, தலையெழுத்துங்கிறது. பேசாம ஏறு... போகப்போக எல்லாம் சரியாயிடும்.’’

``என்ன தலையெழுத்தோ... யார் இந்த ஃபார்மை கண்டுபிடிச்சாங்களோ தெரியலை. இந்த உலகத்துல 750 கோடிப் பேர் இப்ப இருக்கோம். இந்த 750 கோடிப் பேர் தலையிலயும் ஒரு ஃபீட்பேக் இருக்குன்னா கற்பனை பண்ணவே என்னால முடியலை. நிஜமா சொல்றேன், கடவுளா இருக்கிறதுதான் ரொம்ப கஷ்டம்’’ என்றபடியே சுவர் அருகே சென்று, தன் மதிப்புமிகுந்த பேன்ட்-ஷர்ட் உரச ஏறிக் குதித்தான். அவளும் குதித்தாள். பார்க்கும் தூரத்தில் சமாதி தெரிந்தது. மெல்ல நடந்தனர்.

அந்தத் தாத்தா அதற்குள் சமாதி அருகே வந்துவிட்டார். சமாதி, புதிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஊதுவத்தி வாசத்துடன் கண்ணில்பட்டது. சாந்தப்ரகாஷுக்கு வித்தியாசமான ஒரு சூழலில் நிற்பது புரிந்தது.

``விழுந்து கும்புடுங்க... எம்புட்டு காலம்... எம்புட்டு மாசம்!’’ - தாத்தா தூண்டிவிட, சாருலதா முதலில் விழுந்தாள். அடுத்து அவன். நிமிர்ந்தவள் கண்களில் நீர். சாந்தப்ரகாஷ் கண்கள்கூடக் கலங்கிவிட்டன.

தாத்தா, சமாதி மண்ணை எடுத்து இருவர் நெற்றியிலும் கோடுபோல் பூசிவிட்டார். காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மரங்களிடம் இதமான ஆட்டம். கருங்குருவி ஒன்று கத்திக்கொண்டிருந்தது.
``அய்யா, வாங்க விருட்சங்க பக்கம் போகலாம்’’ என்று தாத்தா நெடுக வளர்ந்திருக்கும் மரங்களை நோக்கி அழைத்துச் சென்றார்.

தாத்தாவின் கைக் கட்டைவிரல் நெற்றிமேல் பட்ட நொடியிலிருந்தே சாந்தப்ரகாஷிடம் ஒரு மாற்றம். காது கேட்பதில் திடீரென ஓர் ஒலித்திறன் கூடல். `ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...’ என்று எங்கோ சிலர் கூட்டுக்குரலில் பிரார்த்தனை செய்வது தன் காதில் விழுவதுபோல்கூட ஒரு பிரமை.

இறையுதிர் காடு - 28

``அய்யா... நீங்க பெரிய தப்புப்பண்ணிட்டீங்க. இந்த பங்களாவை வித்தது பெரிய தப்புங்க. இது உங்க சொத்து இல்லீங்க... இந்த உலகத்தோட சொத்து’’ என்று நடக்கும்போது தாத்தா சொன்னதில் பல பொருள்.

``என்னன்னு சொல்ல? இதை வாங்கினவன் அப்படியே போட்டுட்டான். இனி அவனால இங்கே ஒரு செங்கல்லைக்கூட உருவ முடியாது. நீங்க போய், திருப்பிக் கொடுத்துடுன்னா கொடுத்துடுவான்யா’’ என்றும் தொடர்ந்த தாத்தாவின் குரல், சாந்தப்ரகாஷை யோசிக்கவைத்தது.

``தாத்தா... நாங்க திருப்பி வாங்கத்தான்போறோம். வித்ததுகூடத் தப்புதான். இருந்தாலும் இதனாலதான் பல நல்லதும் நடந்தது. கனவுல இவர் தாத்தா வந்தார்... அவரைப் பார்க்க முடிஞ்சதே! எல்லாத்துக்கும் மேலாக, கல்யாணமாகி 21 வருஷம் ஆகிட்ட நிலையில நான் திரும்பவும் தாயாகப்போறேன் தாத்தா. திரும்பவும் தாயாகப்போறேன்’’ - சாருபாலா உணர்ச்சிவசப்பட்டாள். அது அந்தக் கிழவன் முகத்தில் சலனத்தை உருவாக்கியது. மகிழவேண்டிய நேரத்தில் மகிழாமல் எதனால் இந்தச் சலனம்?

``அப்ப உங்களோட முதல் பிள்ளை இப்ப...’’ என்று பாதி கேட்டு, பாதி கேட்காமல் விடவும் சாருவும் சாந்துவும் பதில் கூற மாட்டாமல் பார்வை யுத்தம் செய்தனர்.

``நீங்க மௌனிக்கிறதுல இருந்தே எனக்குத் தெரிஞ்சுபோச்சு. அய்யா... உங்க கொள்ளுத்தாத்தாவுக்கும் கல்யாணமான வருஷம் ஒரு புள்ளையும், 21-ம் வருஷம் ஒரு புள்ளையும் பிறந்துச்சு. முதல்ல பிறந்தது திருநங்கையானதால்தான் அவரும் சாமியார் ஆனாரு. அதுக்குப் பிறகு அவர் நட்டவைதான்  இதோ இந்த மரங்கள். இதுக்குத் தன் கையால நாள் தவறாம தண்ணி விடுவாரு. இதெல்லாம் பொதிகை மலைக் காட்டுல போகர் சாமி தன் கையால கொடுத்த மரக்கன்றுங்க. இப்ப நீங்க சொல்லவும் எல்லாம் ஞாபகம் வருது. அப்ப எனக்கு நாலு வயசோ, அஞ்சு வயசோ... அவர் வாழ்ந்த வாழ்க்கையை, கிட்ட இருந்து பார்த்த ஒரே சாட்சி இப்ப நான் மட்டும்தான்’’ - அவர் சொல்லச் சொல்ல... சாந்தப்ரகாஷுக்கு தன் தலைமேல் மரக்கன்றுகள்கொண்ட கூடை ஒன்றை ஒரு சிவலிங்கத்தோடு சுமந்துகொண்டு மலைச்சரிவுகளில் இறங்குவதுபோல் ஒரு நினைப்பு. இப்படியெல்லாம் இதற்கு முன் நினைத்ததுமில்லை, தோன்றியதுமில்லை.

தலைசுற்றத் தொடங்கியது. அப்படியே பக்கத்து மகிழமரத்தின் பருத்த தண்டுபாகம்மேல் சரிந்து அமர்ந்தபடியே மயங்கிவிட்டான் சாந்தப்ரகாஷ்.

``அய்யோ என்னாச்சு இவருக்கு... சாந்து... சாந்து...’’ என்று சாருபாலா பதைத்திட... ``பதற்றப்படாதே, இங்க இப்படி நடந்தா பழைய ஜென்ம ஞாபகங்கள் திரும்புதுன்னு அர்த்தம். தாயி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே, மூத்தவன் திருநங்கை ஆயிட்டானா?’’ என்று தயக்கமின்றிக் கேட்டார்.

```நீங்க கேட்டது சரி தாத்தா. என் மகன் இப்ப என் மகனில்ல’’ - சாரு விசும்பத் தொடங்கினாள்.

``தப்புப் பண்ணிட்டீங்கம்மா... இதை வித்துட்டு இந்த நாடே வேண்டாம்னு போனது உங்க முதல் தப்பு. அடுத்து ஏழு தலைமுறை அனுபவிக்கவேண்டிய பாவத்தை அவர் நீங்க யாரும் அனுபவிக்கக் கூடாதுன்னு நினைச்சு பல விஷயங்களைச் செஞ்சுவெச்சார். ஆனா, எதையும் கேட்காம இந்த நாட்டை விட்டே போய், கடைசியில அய்யாவுக்கு ஆன மாதிரியே உங்களுக்கும் ஆயிடிச்சேம்மா.’’
``உண்மைதான்... ஆனா, அடுத்து ஒண்ணு பிறக்கப்போவுதே!’’

``அதுவும் வரப்போற காலத்துல அப்படி ஆகிட்டா?’’

``நோ... அப்படிச் சொல்லாதீங்க. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது. அதுக்கு நான் என்ன செய்யணும்?’’

``ஓ... இப்படி நீங்க வந்து கேட்பீங்க... அதுக்கு பதில் சொல்லணும்னுதான் நான் இன்னமும் உசுரோட இருக்கேனா?’’

``என்ன சொல்றீங்க தாத்தா?’’

``இனிமேதாம்மா சொல்லவேபோறேன். அதுக்கு முந்தி, உன் கையால ஒரு காரியம் செய்யறியா?’’

``என்ன தாத்தா?’’

``பக்கத்துல கிணறு இருக்கு. கயிறு கட்டின குடமும் கூடவே இருக்கு. அதால தண்ணி இறைச்சு இதோ ஒரு வரிசையில இருக்குதே இந்த மரங்க... இதுக்கு நீ தண்ணி விடணும்.’’

``விடுறேன் தாத்தா... விடுறேன்.’’

``அப்ப, முதல்ல அதைச் செய். இவர் கொஞ்ச நேரம் கழிச்சு எழுந்திருப்பாரு. அப்ப அடுத்து என்ன செய்யணும்னு சொல்றேன்’’ - தாத்தா கூறிவிட்டு, பக்கமாய் மரத்தின்மேல் சாய்ந்து அமர்ந்துவிட, சாருபாலா என்கிற அந்த கர்ப்பவதிப் பெண் தண்ணீர் விடப் புறப்பட்டாள்.

லாட்ஜில் அறைக்குள் நுழைந்த அரவிந்த், முதல் காரியமாக பேக்கை பாரதியிடம் தந்து சரிபார்க்கச் சொன்னான். அவளும் பார்த்துவிட்டு ``எல்லாம் சரியா இருக்கு அரவிந்தன். பணம் மட்டும் குறையுது. அப்படித்தான் ஆகும்னு எனக்கும் தெரியும்’’ என்றாள் மகிழ்வாக.

``தம்பி, அவன் போலீஸ்ல சிக்கிட்டானா... மலையில அந்தப் பெரியவர் சொன்னது சரியா இருந்துச்சா?’’ என்று முத்துலட்சுமியும் கேட்டாள்.

``அவனேதாம்மா... அந்த திவ்யப்ரகாஷ் கொஞ்சம் கிரேட்மேன்தான்’’ என்றவன், அப்போதுதான் அந்த மாலையை அவள் கழுத்தில் பார்த்தான்.

``இது என்ன பாரதி புதுசா?’’

``ஏன் கேட்கிறீங்க... மலை மேல ஒரு கிழவி வம்பா போட்டுவிட்டுட்டா. கேட்டா, `போகன் போடச் சொன்னான். நீ மலை, காடெல்லாம் சுத்தணும்’னு ஏதேதோ சொல்றா.’’

``அது யார் கிழவி?’’

``மலைமேல் கிழவிங்களுக்கா பஞ்சம். ஆனா, நான் அவங்க பேச்சை கேர் பண்ணலை அரவிந்தன். இப்ப நீங்க கேட்கவும்தான் ஞாபகம் வருது. ஒரு பொருளை விக்க, இப்பல்லாம் எந்த எல்லைக்கும் போறாங்க’’ - என்றபடியே அந்த மாலையைக் கழற்றப்போனவளை, பாட்டி வேகமாய்த் தடுத்தாள்.

``கழட்டாதே... அதுபாட்டும் இருந்துட்டுப்போகட்டும்.’’

``அது என் சௌகர்யம். இதுல எல்லாம் தலையிடாதே’’ என்றவள் வீசி எறிந்தாள். அப்போது பார்த்து, சற்று விலகிப்போய் டேபிள் மேல் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறக்கத் தொடங்கியிருந்த அரவிந்தன் கழுத்தில் அது திட்டமிட்டுப் போட்டதுபோல் விழுந்தது.

அவனுக்கே அதில் வியப்புதான். மிகச்சரியாக  அப்போது பாரதிக்கு போனில் அழைப்பு. காதைக் கொடுத்தவள் அதிர ஆரம்பித்தாள். மறுபுறத்தில் அவள் அப்பாவின் உதவியாளன் கணேசபாண்டியன்.

``பாப்பா... ஐயா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிடுவார்போல இருக்கு பாப்பா. டாக்டருங்க கூப்பிட்டு `24 மணி நேரம்தான்’னு சொல்லாமச் சொல்லிட்டாங்க’’ என்ற குரல், ஸ்பீக்கர் போன் வழி எல்லோரையுமே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

- தொடரும்

- இந்திரா சௌந்தர்ராஜன்; ஓவியங்கள்: ஸ்யாம்