
படம் : சி.சுரேஷ் பாபு
ஒரு ஜாதகத்தில் லக்னமாகிய 1, 4, 7 மற்றும் 10-ம் இடங்களை கேந்திர ஸ்தானம் என்பார்கள். அதேபோல் 1 ,5, 9 ஆகிய இடங்களை திரிகோண ஸ்தானம் என்பார்கள். இந்த இடங்கள் குருபகவானின் பலம் பெற்று அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்குச் சிறப்பான குழந்தை வரம் வாய்க்கும்.
ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள், வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று, நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக் கடலை நைவேத்தியம் செய்து வழிபட்டு வரவேண்டும். இதன் மூலம் விரைவில் குழந்தைப் பாக்கியம் பெறலாம்.

அதேபோல், ஜாதகத்தில் 5-ம் இடம் என்பது புத்திர ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் முதல் சுப கிரகமான குரு, புத்திரக்காரகன் எனப்படுவார். புத்திரக்காரகனான குருவும் புத்திர ஸ்தானாதிபதியான 5-ம் வீட்டோனும் பலம் குறைந்து 6, 8, 12-ம் இடங்களில் இருக்கும்போது, புத்திரத் தடை ஏற்படும்.
இதுபோன்று மேலும் பல ஜாதகக் குறைபாடுகளால் புத்திர சம்பத்து இல்லாத தம்பதிகள், அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது சிறப்பு. அப்படி வலம் வரும்போது சொல்ல வேண்டிய `அச்வத்த ஸ்தோத்திரம்’ ஒன்று உண்டு. அதை ஜபித்துக்கொண்டே ஏழு எண்ணிக்கைக்கு குறையாமல், 108 எண்ணிக்கை வரையிலும் அரச மரத்தை வலம் வருவதால், விரைவில் புத்திர சம்பத்து உண்டாவதுடன், வயிற்றுவலி முதலான உபாதைகளும் நீங்கும்.
இந்த அச்வத்த ஸ்தோத்திரம் 11 ஸ்லோகங்கள் கொண்டது. இதை முழுவதையும் ஜபிக்க இயலாவிட்டாலும் 5-வது ஸ்லோகத்தை மட்டுமாவது ஜபித்து, அரச மரத்தை வலம் வந்து வழிபடலாம். அந்த ஸ்லோகம் உங்களுக்காக...
மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணுருபிணே
அக்ரத: ஸிவரூபாய வ்ருஷராஜாயதே நம:
கருத்து: அடியில் பிரம்மதேவ ரூபமாகவும், நடுவில் விஷ்ணு ரூபமாகவும், மேற்பகுதி சிவரூபமாகவும் திகழும்... மரங்களுக்கு அரசனான தங்களை வணங்குகிறேன்.
- அபர்ணா, சென்னை- 91