மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 34

அன்பே தவம் - 34
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 34

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 34

ண்ணகி, கோவலன் தன்னை விட்டுப் பிரிந்த நிலையிலும், இல்லறத்துக்குரிய மாண்புகளைக் கொண்டிருந்தாள். குறிப்பாக, கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்துவிட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு, தேவந்தி என்பவர், `கோவலனைத் திரும்ப அடைவதற்கு வழியிருக்கிறது. சோமகுண்டம், சூர்யகுண்டம் ஆகியவற்றில் மூழ்கி, காமவேளை வணங்கினால் கோவலனைத் திரும்ப அடையலாம்’ என்கிறார்.

ஒரே வார்த்தையில் `பீடன்று’ என்று மறுக்கிறாள் கண்ணகி. கடவுளிடம்கூடத் தன் கணவனைப் பற்றிக் குறைகூற விரும்பாத மாண்பில் உயர்ந்து நிற்கிறாள். கணவன் பிரிந்து சென்ற சோகத்தை மறந்து, அதைப் பிறருக்குத் தெரியாமல் மறைத்து, சிரித்துப் பேசி, புன்னகைபூத்த முகத்தோடு கோவலனின் மாண்பைக் காக்கிறாள்.

ராமன், தசரதனின் ஆணையை ஏற்றுக்கொண்டு காடு நோக்கிப் புறப்படத் தயாரானான். சீதையும் ராமனோடு உடன்செல்லத் தயாரானாள். சீதையிடம், `காடு சுடும்’ என்று சொன்னான் ராமன்.

 `நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்று கேட்டாள் சீதை. `நீங்கள் இருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி. உங்களைப் பிரியும் துன்பத்தைவிட அது பெருந்துன்பமாக இருக்காது.’ 

அசோகவனத்தில் இருந்தபோது சீதை ஒரு காட்சியைப் பார்த்தாள். ஒரு குளவி, புழு ஒன்றை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது. அருகிலிருந்த திரிசடையிடம், `இந்தக் குளவி, புழுவை ஏன் துரத்துகிறது?’ என்று கேட்டாள்.

அன்பே தவம் - 34

`அந்தக் குளவி, புழுவைக் கொட்டிக் கொட்டி, அதையும் குளவியாக மாற்றிவிடும். ஏன் தெரியுமா... அந்தப் புழுவுக்குக் குளவியைத் தவிர வேறு எதுவும் தெரியாது. குளவியைக் கொட்ட கொட்ட அந்தப் புழுவும் குளவியாக மாறிவிடும்’ என்றாள் திரிசடை.

இதைக் கேட்டு சீதை அழுதாள். ‘அந்தப் புழுவுக்கு இந்தக் குளவியைப் பற்றிய சிந்தனையைத் தவிர வேறு எதுவுமில்லை. அதைப்போல எனக்கு ராமனைத் தவிர வேறு சிந்தனை இல்லை. `ராமா... ராமா...’ என்று சதா சர்வகாலமும் ராமனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக நான் பெண் தன்மையை இழந்து ராமனைப்போல் ஆணாகிவிடுவேனோ...’

 `கவலைப்படாதே. நீயோ `ராமா... ராமா...’ என்று சிந்தித்து ராமனாக மாறுவாய். உன் ராமன் `சீதை... சீதை...’ என்று நினைத்து சீதையாக மாறுவான். அப்போதும் உங்கள் இல்லறம் இனிக்கும்; தொடரும்’ தேற்றினாள் திரிசடை. இதுதான் அன்பு வாழ்க்கை.

  காசியில் பாரதியின் வாழ்க்கை தேசியமும் தெய்விகமும் கலந்த வாழ்க்கையாக மாறியது. அப்போது சில உறவினர்கள் செல்லம்மாவிடம் பாரதியைப் பற்றி அவதூறு சொன்னார்கள். கவலைப்பட்ட செல்லம்மா பாரதிக்குக் கடிதம் எழுதினார்.

 பாரதி மறுமொழி எழுதினார். `எனது அருமைக் காதலி செல்லம்மாவுக்கு, என்னைப் பற்றி யாரோ உன்னிடம் தவறாகச் சொல்லி யிருக்கிறார்கள். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. கவலை தோன்றும்போதெல்லாம் தமிழைப் படி. கவலையை மறப்பாய்.’

 எட்டையபுரம் ஜமீன்தார் சென்னையில் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்தார். பல புலவர்கள் கலந்துகொண்டார்கள். பாரதியும் கலந்துகொண்டார். புலவர்கள் சன்மானம் பெற்று, அதில் தங்கள் மனைவிகளுக்குப் பொன்னையும் வைரத்தையும் பட்டுப் புடவைகளையும் வாங்கிக்கொண்டு போனார்கள். தன் வீட்டருகே இருக்கும் புலவர்களின் மனைவிமார்கள் பட்டுப்புடவை உடுத்தி, நகைகள் அணிந்துவருவதைப் பார்த்த செல்லம்மா, பாரதியின் வருகைக்காக ஏக்கத்தோடு காத்திருந்தார். பாரதி வந்தார், இரண்டு குதிரை வண்டிகளில். ஒரு குதிரை வண்டியில் பாரதி, மற்றொன்றில் சில மூட்டைகள். செல்லம்மாவுக்கு ஒரு சுங்கிடிப் புடவையையும், தன் சின்னம்மாவுக்கு ஒரு சுங்கிடிப் புடவைவையும் கொடுத்துவிட்டு, மூட்டைகளைப் பிரித்தார் பாரதி. செல்லம்மாவின் கண்கள் ஆவலோடு விரிந்தன. அத்தனையும் புத்தகங்கள். 

`செல்லம்மா... பொன்னை, மணியை, வைரத்தை, பட்டுத்துணிகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், இவையெல்லாம் கலைமகளின் கடாட்சங்கள். கிடைத்த நேரத்தில் வாங்கிவிட வேண்டும்’ என்றார் பாரதி.

 இப்போது செல்லம்மா கவலைப்பட்டார். கணவர் புத்தகங்கள் வாங்கியதற்காக அல்ல. இனிமேல் அவர் இவற்றிலேயே மூழ்கி நேரத்தைச் செலவிடுவார். போதாக்குறைக்கு நம்மையும் அழைத்து, தான் படித்ததையெல்லாம் விளக்கிச் சொல்வார் என்பதற்காக.

பாரதியின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா, அவரைச் சந்திக்க வந்தார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு, வெளிநாடு செல்ல இருப்பதாகவும், கிறித்தவ மதத்தைத் தழுவிவிட்டதாகவும் சொன்னார். நண்பருக்குப் பணம் கொடுப்ப தற்காக, பணம் ஏதும் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார் பாரதி. அதைப் பார்த்த செல்லம்மா, `சற்றுப் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு வெளியே போனார். திரும்பி வந்தவர், கணிசமான ஒரு தொகையை சுரேந்திரநாத் ஆர்யாவிடம் கொடுத்தார்.

அன்பே தவம் - 34

`என் தங்கைக்கு நன்றி’ என்றார் ஆர்யா.    

`எப்படி செல்லமா பணத்தைப் புரட்டினாள்?’ என்று யோசித்தார் பாரதி. செல்லம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவரின் காதிலிருந்த தங்கக் கம்மல் இல்லை என்பது. இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை, பணத்தால் நிச்சயிக்கப்படுவதல்ல. மனத்தால் நிச்சயிக்கப்படுவது.

 அவர்கள் லட்சியத்தில் இணைந்த தம்பதி. ஒருநாள் அன்பு வாழ்க்கையில் விரிசல். அவர்களின் திருமண வாழ்க்கை தொடங்கிய போது, மணப்பெண்ணின் தாயார் இருவருக்கும் சேர்த்து ஒரு பரிசு கொடுத்தார். `இரண்டு பேரின் பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கைத் தொடங்கியிருக்கிறேன். வங்கிக்கணக்குப் புத்தகம் இது. ஒரு நிபந்தனை. உங்களில் யாருக்காவது மகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்தால், அதற்காக வங்கிக்கணக்கில் பணம் போட வேண்டும்.’

அது வங்கிக்கணக்கு அல்ல. வாழ்க்கைக் கணக்கு. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வழி. சேமிப்பையும் மகிழ்ச்சியையும் ஒன்றிணைப்பதற்கான வழி.

ஒரு கட்டத்தில், உறவில் குறுக்குச் சுவர்கள் எழுந்துவிட்ட நிலையில், இருவரும் பிரிந்துவிடத் தீர்மானித்தார்கள். இதையறிந்த மணமகளின் தாயார் இருவரையும் அழைத்தார். 

`உங்கள் திருமண நாளில் ஒரு பரிசுப்பொருளைக் கொடுத்தேன்.  இருவரும் சேர்ந்து இயக்கும் வங்கிக்கணக்கு. நீங்கள் பிரிவதென்று முடிவெடுத்துவிட்டீர்கள். அந்தக் கணக்கைப் பார்த்து, யார் யார் எவ்வளவு பணம் போட்டீர்களோ, அதைப் பிரித்து எடுத்துக்கொண்டு சந்தோஷமாகப் பிரிந்து செல்லுங்கள்’ என்றார்.

கணவன் வங்கிக்குப் போனான். கணக்கைச் சரிபார்த்தான். ஆச்சர்யம் பெருகியது. அவன் எப்போதெல்லாம் வங்கியில் பணம் செலுத்தினான் என்பதைக் குறிப்பெழுதி வைத்திருந்தான். அவள் படித்து உயர்கல்விப் பட்டம் பெற்றபோது... அவளின் பிறந்தநாளன்று... அவர்களின் திருமண நாளன்று...

அதேபோல, மனைவியும் கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தபோது பணம் போட்டி ருந்தாள். அவனின் பிறந்தநாளன்றும் பணம் செலுத்தியிருந்தாள்.

இருவரும் நன்கு யோசித்தார்கள். `இருவரும் இணைந்து வாழ்வோம்’ என்று முடிவெடுத்தார்கள். மேலும் ஐம்பதாயிரம் ரூபாயைச் செலுத்தி, வங்கிக்கணக்கை முடித்துக் கொள்ளாமல் வாழ்க்கைக் கணக்கைத் தொடங்கினார்கள்.

ஒருநாள், கபீர்தாசரைப் பார்க்க பல பக்தர்கள் வந்திருந்தார்கள்.  எல்லோரும் புறப்பட்டுச் சென்ற பிறகும், ஒருவர் மட்டும் தனியே அமர்ந்திருந்தார். அவரின் முகவாட்டத்தைப் பார்த்து, `என்ன பிரச்னை?’ என்று கேட்டார் கபீர்தாசர்.

 `என் மனைவிக்கும் எனக்கும் எப்போதும் சண்டை. அமைதி யில்லை. பிரச்னை தீர வழி சொல்லுங்கள்.’

கபீர்தாசர் எதுவும் பேசவில்லை. மாலை நேரம் அது. நல்ல வெளிச்சமும் இருந்தது. இருந்தபோதும் கபீர்தாசர் தன் மனைவியை அழைத்து, `விளக்கை ஏற்றிக்கொண்டு வா’ என்றார்.

அவர் மனைவி பதில் பேசாமல் ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு வந்து, அவரருகே வைத்துவிட்டுப் போனார். சிறிது நேரம் கழித்து, கபீர்தாசருக்கும் வந்திருந்தவருக்கும் பால் கொண்டு வந்து வைத்தார்.

இருவரும் பாலைக் குடித்தார்கள். பாலில் உப்பு கலந்திருந்தது. அந்தப் பாலை மகிழ்ச்சியாக அருந்தினார் கபீர்தாசர்.

உள்ளேயிருந்து, `பாலுக்குச் சர்க்கரை போதுமா?’ என்ற அவர் மனைவியின் குரல் கேட்டது.

`நன்கு தித்திப்பாக இருக்கிறது. போதும்’ என்றார் கபீர்தாசர்.

வந்தவர் புரிந்துகொண்டார். `நான் கிளம்புகிறேன்’ என்றார்.

`என்ன... ஒன்றும் சொல்லாமல் போகிறீர்களே...’ என்று கேட்டார் கபீர்தாசர்.

`யார் மீதும் குற்றம் சொல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. `மனைவியின் குற்றத்தைப் பெரிதாக்கக் கூடாது’ என்று நீங்கள் கற்றுத்தந்துவிட்டீர்கள். நான் வருகிறேன்.’

ஒருநாள் புத்தர், தன் சீடர் ஆனந்தனுடன் நடந்துபோய்க்கொண்டிருந்தார். வழியில், புத்தரின் புகழ் பிடிக்காத ஒரு முரடன் வந்தான். அவரைப் பார்த்து முறைத்தான். பிறகு அவர்மீது காறித் துப்பினான். சற்றும் சலனப்படாத புத்தர் அதைத் துடைத்துவிட்டு, ‘நீங்கள் இன்னும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார்.

ஆனந்தனுக்குக் கோபம் பொங்கியது. ‘நீங்கள் அனுமதி கொடுங்கள். இவனுக்குத் தக்க பாடம் புகட்டுகிறேன்’ என்று உறுமினார்.

‘ஆனந்தா… இவர் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார். அதைச் சொல்ல இவருக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. தான் நினைத்ததை வெளிப்படுத்த இப்படிச் செய்துவிட்டார். இது இவரின் தவறல்ல. வார்த்தைகள் பலவீனமானதே காரணம்...’ என்று சொன்னபடி நடந்து போனார்.

இதை முரடனும் கேட்டுக்கொண்டிருந்தான். இரவெல்லாம் அவனுக்கு உறக்கம் வரவில்லை. காலையில் புத்தரைத் தேடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்தான். கதறியபடி மன்னிப்பு கேட்டான்.

அன்பே தவம் - 34

‘இப்போதும் இவருக்கு வார்த்தைகள் வரவில்லை. ஏதோ சொல்ல நினைக்கிறார். அதை வெளிப்படுத்தும் சொற்கள் இவரிடம் இல்லை’ என்று ஆனந்தனிடம் சொன்னார் புத்தர்.

 வார்த்தைகள் பலவீனமானவை. அன்பு வெளிப்படும்போது வார்த்தைகள் வர மறுக்கும். அதைப்போல, கோபம் கொப்பளிக்கும்போதும் வார்த்தைகள் தடுமாறும். வரக் கூடாத வார்த்தைகள் வந்துவிடும். மனம் சமநிலையில் இருப்பதுதான் எப்போதும் நல்லது.

திருநீலகண்ட நாயனார் என்ற அடியவர் தன் திருமண வாழ்வில் தடம்புரண்டார். மனைவியை விட்டுவிட்டு வேறோர் இல்லத்தை நாடினார். இதையறிந்த அவரின் வாழ்க்கைத் துணைவி, `நீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்’ என்றார்.

இப்படி அந்த அம்மையார் கூறிய அன்று முதல் தன் காதல் வாழ்வை, திருமண வாழ்வை, தன் அன்பு மனைவியை நாடாத வாழ்வாக வாழ்ந்தார் திருநீலகண்டர். ஒருமுறை தடம்புரண்ட அவர், வாழ்நாள் முழுதும் நெறியோடு இருந்தார்.

 ஆனாலும், மனைவி செய்த சத்தியத்தால் மனைவியைத் தீண்டாமலேயே வாழ்ந்தார். இறைவன், இருவரின் பிணக்கையும் அறிந்து, திருநீலகண்ட நாயனாரையும் அவர் மனைவியையும் சேர்த்துவைப்பதற்கு ஒரு திருநிகழ்வை நிகழ்த்தினார்.
 
ஆக, கணவன் மனைவி வாழ்வு என்பது அன்பின் அடித்தளத்தில் இணைந்த லட்சிய வாழ்வு. அதனால்தான், பேரறிஞர் அண்ணா, ‘கெட்டுப்போனவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. விட்டுக்கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை’ என்று சொன்னார். இது அரசியல் வாழ்க்கைக்கும் பொருந்தும். அன்பார்ந்த குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும். அப்படி லட்சிய வாழ்க்கை வாழ்கிறவர்கள் என்றும் வெற்றிப்பாதையில்தான் பயணம் செய்வார்கள்.

- புரிவோம்...

படம்: கே.ராஜசேகரன்