
வரதராசன், குளச்சல்
கர்நாடகத்தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வீர சைவம் வளர்த்த பசவேசரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி:
அவரது மாளிகைக்கு முன்னால் வீர சைவ அடியார்கள் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற இரண்டு திருடர்களில் ஒருவர், ‘‘நீங்கள் ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டனர்.
‘‘மகேசுவர பூஜைக்காக அமர்ந்திருக்கிறோம்!’’ என்றார் வீர சைவ அடியார்களில் ஒருவர்.
மகேசுவர பூஜை என்றால், ஈஸ்வரனுக்கு பகல் உணவு படைத்தல். அங்கிருந்த அடியார்கள் எல்லோரின் கழுத்திலும் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததை திருடர்கள் கவனித்தனர்.

வீர சைவர்கள் தாங்கள் பூஜை செய்யும் இஷ்ட லிங்கத்தைக் கழுத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். மகேசுவர பூஜை நடத்துபவர், அதற்குத் தூப தீபம் காட்டி வணங்குவது வழக்கம். ஆனால் இதை அறியாத திருடர்கள், ‘இது உள்ளே செல்பவர்கள் அணியும் அடையாளம். இது இருந்தால்தான் உள்ளே விடுவார்கள் போலும்!’ என்று நினைத்தனர். அதனால் இரண்டு கத்திரிக்காய்களை எடுத்துத் துணியில் சுற்றி, ஆளுக்கு ஒன்றாகக் கழுத்தில் அணிந்து கொண்டனர்.
அனைவரும் மாளிகைக்குள் நுழைந்தபோது திருடர்களும் உடன் சென்றனர். எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பசவேசர் எழுந்து இஷ்டலிங்க பரமசிவ பூஜைக்குத் தயாரானார்.
வீர சைவ அடியார்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை எடுத்துத் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டனர். பசவேசர் ஓரிடத்தில் இருந்து தூப- தீபம் காட்டியபடி வந்தார்.
‘கத்திரிக்காய் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுமே!’ என்று அஞ்சிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடத் தீர்மானித்தனர். ஆனால், அருகில் இருந்த காவலர்களைக் கண்டதும் தப்ப இயலாது என்பது தெரிந்தது.
இருவரும் திகைத்தனர். அப்போது அவர்களை நெருங்கிய பசவேசர் உண்மையை உணர்ந்தார். அவர்களின் மேல் இரக்கம் கொண்டு, திருடர்களிடம் இருந்த கத்திரிக் காய்களை சிவலிங்கங்கள் ஆகுமாறு ஈசனிடம் வேண் டினார். அவரது வேண்டுதல் பலித்தது.
என்ன ஆச்சரியம்! திருடர்கள் கழுத்தில் கட்டியிருந்த துணி முடிச்சை அவிழ்த்தபோது, அதிலிருந்த கத்திரிக்காய்கள் சிவலிங்கங்களாக மாறி இருந்தன!
பசவேசரின் பக்தியையும் அவரது பக்திக்கு ஈசன் அருள் புரிந்ததையும் கண்டு அந்தத் திருடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். வீர சைவ சமயத்தின் மகிமையை உணர்ந்த திருடர்களும் திருட்டுத் தொழிலை விட்டதுடன் வீர சைவ சமய அடியார்களாகவும் மாறினர்.