மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 29

இறையுதிர் காடு - 29
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 29

இறையுதிர் காடு - 29

இறையுதிர் காடு - 29

அன்று எதனால் நவபாஷாணத்தில் தண்டபாணி சிலையைச் செய்யப்போகிறேன் என்னும் கேள்விக்கான விடையைக் கூறுமுன், போகர் பிரான் அங்கே நிற்கும் கிழார்களையும், அஞ்சுகன் மற்றும் புலிப்பாணியையும் ஒருமுறை சுற்றி வந்து, பிறகு தரையில் பத்மாசனமிட்டு அமர்ந்து கொண்டார். அவர்கள் எல்லோரையும்கூட எதிரில் அமரச் சொன்னார். அவர்களும் அமர்ந்தனர்.

அப்போது தென்னஞ்சிரட்டைகளுடன் (கொட்டாங்கச்சி) ஓர் உறிப்பானையில் ஆவி பறக்க முருங்கை ரசத்தை, அடுமனைக் கொட்டார ஊழியன் ஒருவன் கொண்டுவந்திருந்தான். ரசத்தின் மேல் ஆவியின் ஆனந்த நடனம். சிரட்டை ஒன்றை போகர்வசம் வணங்கிவிட்டுத் தந்தவன், முருங்கை ரசத்தை இன்னோர் அகப்பைச் சிரட்டையால் முகந்தெடுத்து போகரின் சிரட்டையில் விட்டான். அப்படியே எல்லோருக்கும் சிரட்டைகளைத் தந்து ரசத்தை விட்டான். ரசத்தின் மேல் பசு நெய்யின் மினுமினுப்பு நன்கு தெரிந்தது.

முருங்கை, தாது விருத்திக்கு அடிகோலும் ஓர் அபூர்வ தாவரம். குறிப்பாக, இரும்புச்சத்து இதனிடம் அபரிமிதம். தன் இலை பூ காய்களில் இது தாதுச்சத்தை மிகுதியாகச் சேர்த்துவிடுவதால், இதன் மரத்தண்டு இவற்றைக் கடத்தும் ஒரு வழித்தடமாக மட்டுமே ஆகி தனக்கென உறுதி இல்லாததாக ஆகிவிட்டது. அதனால் இதைக் கொண்டு மரவேலைப்பாடு எதையும் செய்ய இயலாது. ஆனால், ஈரம் வற்றாத இதன் தண்டுகள் நடப்படும் இடங்களிலெல்லாம் வேர்விட்டு மரமாகிவிடும்.

முருங்கை ரசத்தை போகர் சுவைக்கவும், மற்றவர்களும் சுவைத்தனர். அளவான கல்லுப்பு, மிளகுக்காரம், பெருங்காயம், பசு நெய், மஞ்சள், கூடுதலாக ஒரு சிட்டிகை கடுக்காய் மசி என எல்லாம் கலந்த கலவை... சாப்பிடச் சாப்பிடப் புத்துணர்ச்சியாக இருந்தது.

``இது என்ன ரசம்?’’  என்று அஞ்சுகனைப் பார்த்துக் கேட்டார் போகர்.

``முருங்கை ரசம் பிரானே...’’

``இதன் குணம் பற்றிக் கூறு பார்ப்போம்!’’

``மந்தத்தன்மையைப் போக்கி விறுவிறுப்பை உடலுக்கு அளித்திடும். எலும்பு மஜ்ஜைகளுக்கு ஊட்டம் கிட்டும், வயிற்றுணவில் விஷத்தன்மை இருந்தால் முறிக்கும்.’’

``சுருக்கமாய், எலும்பை இரும்பாக்கும் என்று கூறு.  தினசரி உணவில் இதோடு சுண்ணம்கொண்ட வெற்றிலையைச் சேர்த்துக்கொள்வது நூறு வயதிலும் ஓட்டக்காரனாய் நம்மை வைத்திருக்கும். இங்கே சுண்ணம் அளவாய்ச் சேர்க்கப்படுவது முக்கியம். அடுத்து, விருந்துணவுக்குப் பிறகு தாம்பூலம் என்பதும் முக்கியம். வெறும் வயிற்றில் வெற்றிலை சேர்வது மூன்றாம்பட்சமே... எப்போதும் நாம் முதல்பட்சத்திலேயே நின்றுவிட வேண்டும்’’  என்று முருங்கை ரசம் தொட்டு வெற்றிலை வரை சென்ற போகர், தண்டபாணி சிலையிடம் திரும்பி வரலானார்.

இறையுதிர் காடு - 29

``கிழார்களே... அருமைச் சீடர்களே... இப்போது நான் கூறப்போவதை நன்றாகக் கிரகித்துக்கொள்ளுங்கள். இந்தப் பூமி, கனிமங்களால் ஆனது. ஆயிரமாயிரம் கனிமங்கள் ஒன்றாகிப் பிறகு உருண்டையாகி, பஞ்சபூதங்களின் வடிவமாகி உருண்டுகொண்டே இருக்கிறது. இதன் மூலம், சூரியனே! சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அக்னிக்குழம்புதான் அவிந்து அடங்கி இப்படியானது. தொடக்கத்தில் இப்போதுள்ளதுபோல் சீரான ஒரு தட்பவெப்பநிலை இல்லை. முதலில் ஆகாயம், பிறகு அக்னி, பிறகு வாயு, பிறகு வருணன், பிறகே நிலம் என்று ஒரு வரிசை உண்டானது.

பூதங்களில் எல்லையற்றது, அளக்க இயலாதது, இருப்பது, இல்லாதது என எல்லாமுமானது ஆகாயமே! இதில் மிதந்த அக்னிக்குழம்புதான் குளிரப்போய் வாயு உருவாகி, பிறகு வாயுவால் மழை உருவாகி, அதனால் கடல் உருவாகி, அதனால் பூமியில் தாவரங்கள் தோன்றி, பிறகு பல்லுயிர்கள் தோன்றி பாரம் ஏற்பட்டு சாய்மானம் ஏற்பட்டு, இறுதியில் சீரான ஒரு வேகத்தில் துமியளவு கூடுதல் குறைதல் இன்றி இந்தப் பூமி சுழன்றுவருகிறது’’ - போகர் இப்படி ஒரு விளக்கம் அளிக்கவும், அஞ்சுகனும் புலிப்பாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அப்போது சங்கன் முதல் மற்றுமுள்ள சீடர்களும் வந்து வரிசையாக அமரத் தொடங்கினர்.

``என்ன அஞ்சுகா... ஏதேனும் சந்தேகமா?’’

``ஆம் குருவே.’’

``எதுவேண்டுமானாலும் கேள்.’’

``இந்த உலகை, அந்த ஆதிசிவன்தான் படைத்தார் என்பதுதானே தங்கள் கருத்து. ஆனால், இங்கே எங்கேயும் சிவனார் வரவேயில்லையே?’’
 - அஞ்சுகனின் கேள்வி முன், போகர் பெரிதாய் முதலில் சிரிக்கத்தான் செய்தார். அஞ்சுகனை அது என்னவோ செய்தது. தான் தவறாக எதையாவது கேட்டுவிட்டோமா என்பதுபோல் அவரைப் பார்த்தான்.

``சலனப்படாதே... நீ சரியாகத்தான் கேட்டுள்ளாய். உனக்கான பதிலை நான் வேறு மாதிரி கூறினால்தான் உனக்கும் விளங்கும். ஒரு சமையல் தொடங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில் பாத்திரம், பிறகு அடுப்பு, பிறகு தண்ணீர், பிறகு உணவுப்பண்டம் என்று அங்கே ஒரு வரிசை உருவாகிறதல்லவா? அப்படித்தான் ஆகாயம், அக்னித்துண்டு, வாயு பிறப்பு, பிறகு அதன் திரிபால் மழை, அதனால் கடல் மிகுந்த பாகம், நிலம், பிறகு தாவரம், உயிரினம் என்ற வரிசை...
எப்படி சமையலை ஒருவர் செய்கிறாரோ,  அதைப்போல் இதை கிரமப்படி செய்தவனே அந்த ஆதிசிவன்தான்! சைவ நெறி கோட்பாட்டின்படி ஆதிசிவன் என்றால், வைணவத்தின்படி விஷ்ணு, சாக்தத்தின்படி பராசக்தி... சூரியனைப் படைத்து அவனைச் சிலுப்பிச் சிதறச்செய்து பூமியை உருவாக்கிய விதத்தை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ளும்விதத்துக்கு ஏற்ப விளக்கங்கள் அமைகின்றன. நான் `ஆதிசிவனே சூரியனைப் படைத்தான். பிறகு அதிலிருந்து அக்னிக்குழம்பைத் தெறிக்கச் செய்தான்’ என்று கூறியிருந்தால், நீ இப்படிக் கேட்டிருக்க மாட்டாய்...’’ - போகரின் இந்த விளக்கத்திலிருந்தும் ஒரு கிளைக் கேள்வி சங்கனிடம் தோன்றியது.

``குருவே... தங்கள் கூற்றிலிருந்து, சகலத்துக்கும் மூலம் ஒளிப்புனலான சூரியனே என்பது விளங்குகிறது. இந்தச் சூரியனை ஆதிசிவன் படைத்தான் எனில், ஆதிசிவனை யார் படைத்தது?’’  என்கிற கேள்வியை அவன் கேட்டும்விட்டான்.

``சங்கா... இந்தக் கேள்வியைத்தான் சித்தர்களாகிய நாங்கள் பெருங்கேள்வி என்கிறோம். ஒருவேளை ஆதிசிவனைப் படைத்தது ஒரு சக்தி என்றால், அந்தச் சக்தியைப் படைத்தது எது என்று அடுத்து கேள்வி எழும். இந்தக் கேள்வி நீண்டுகொண்டு மட்டுமே செல்லும். இதனால் ஒரு விடையை நாம் பளிச்சென அடையவே முடியாது. ஆனால், இந்தக் கேள்விக்கு விடை உன்னுள்ளேயே உள்ளது. நீயோ என்னுள் இருக்கிறாய் என்னும் சிவ தத்துவம் உணர, நமக்குப் பேரறிவும் பெருந்தவமும் வேண்டும். அது இரண்டும் இல்லாத நிலையில் நான் உங்களுக்கு எவ்வளவு விளக்கமளித்தாலும் ஒரு கேள்வி மிஞ்சியபடியேதான் இருக்கும்’’  - போகர் இப்படிக் கூறவும் ``மன்னிக்க வேண்டும்’’
 என்று இடையிட்டார் கிழார் ஒருவர்.

``ம்... கேளுங்கள் கிழாரே!’’

``நீங்கள் `சிவம்’ என்றும், `விஷ்ணு’ என்றும் குறிப்பதை `இயற்கை’ என்று ஒரு சொல்லில் சொல்பவர்களும் உள்ளனரே, அதுபற்றிய தங்கள் கருத்து?’’

``இது பொதுவான ஒரு சொல்... நம்மையெல்லாம் `மனிதர்கள்’ என்றும், நான்கு கால் உயிர்களை `விலங்குகள்’ என்றும் பொதுவாகக் கூறுவதுபோன்றதே இது. அப்படியும் கூறலாம். ஆனால், `இயற்கை’ என்று கூறும்பட்சத்தில் அங்கே பெருங்கேள்விக்கு இடமேயில்லை. அந்த இயற்கை எவ்வாறு தோன்றியது என்று யாரும் பெரிதாகக் கேட்பதில்லை.’’
 
``உண்மைதான்... எது இதில் சிறந்தது?’’

 ``கேள்விக்கு இடமளிக்கும் இறைச் சிந்தனையே சிறந்தது. கேள்விக்கான விடை அவரவர் தவத்துக்கு ஏற்ப கிட்டும். இறைச் சிந்தனையே அகந்தையில்லாதது. இயற்கை என்பவரிடம் தன்னம்பிக்கை, சுயமரியாதை எனும் பெயர்களில் அகங்காரம் மிகுந்திருக்கும். அகங்காரம், மனிதன் வரையில் மிக ஆபத்தானது.’’

``அகங்காரம் என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?’’

`` `நான், நான், நான்’ என்று இந்தச் சொல்லை எவர் மிகப் பயன்படுத்தினாலும் அவர்கள் அகங்காரம் மிகுந்தவர்களே! நான்தான் செய்தேன், நான் சாதிப்பேன், நான் யார் தெரியுமா போன்ற கேள்விகளில் இதுதான் தூக்கலாக இருக்கும். இந்த `நான்’ ஒரு மனிதனை மேலான நிலைக்குச் செல்ல விடவே விடாது.’’

``நான் செய்தேன், நான் சாதிப்பேன் என்பதெல்லாம் தன்னம்பிக்கை அல்லவா, தன்னம்பிக்கை எப்படித் தவறாகும்?’’

`` `இன்று. பிறகு, அது நிறம் மாறி நம்மை அகந்தையுள்ளவனாக ஆக்கிவிடும். அதற்கு ஒளவைக்கிழவியே ஒரு சான்று.’’

போகர் ஒளவைக்கிழவியிடம் வந்து நின்றது, அனைவருக்குமே ஆச்சர்யமளித்தது. `அந்தத் தமிழ் மூதாட்டி மூலம் எப்படி சாட்சியம் உரைக்கப்போகிறார் போகர்?!’ என்று அனைவரும் பார்த்தனர்.

``ஒளவை, ஒரு மாது சன்யாசி! தன் இளமையை மறுத்து முதுமையை இறைவனிடம் வேண்டிப் பெற்றவள். மூலன் சொன்னதுபோல் உள்ளம் கோயிலாய், ஊனுடம்பு ஆலயமாக இருக்க விரும்பியவள். அவளுக்கும் கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு - தெள்ளத் தெளிந்த அவளுக்கும் சீவன்தான் சிவலிங்கம். ஒருசமயம் இந்தக் கிழவிக்கு இனி அறிய எதுவுமில்லை என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அலைந்து திரிந்தது போதும் என்றாகி, இறைவனோடு கலக்கும் எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் அறிந்துகொண்டுவிட்டதாய் இந்தக் கிழவி நினைத்ததுதான் பிழை. இவளின் பிழையைச் சீர்செய்து உலகுக்கும் இந்தக் கிழவி மூலம் ஒரு பாடம் கற்பிக்க எண்ணினான் அந்த முருகன்.

ஒருநாள் இடையன் வடிவில் எதிரில் சென்றான். களைத்து, பசியோடு இருந்த இந்தக் கிழவியிடம் `பசிக்கிறதா?’ என்று கேட்டான். `ஆமாம்’ என்றாள் கிழவி!

`நாவல் மரத்தடியில்தான் இருக்கிறாய்... பழம் பறித்துத் தரட்டுமா?’ என்று கேட்க,
கிழவியும் `ஆஹா தாடாப்பா’ என்றாள்.

`நல்லது... உனக்கு சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா?’  என்று அடுத்து கேட்டான்.

கிழவிக்குத் திக்கென்றது. காய் தெரியும், அது கனிந்தால் பழம் என்பதும் தெரியும். இது என்ன சுட்ட பழம்? தெரியாது விழித்த கிழவி, அதைக் காட்டிக்கொள்ளாமல் `சுடாத பழமே தாப்பா’  என்றாள். மனதுக்குள் அவன் தருவதைவைத்து எது சுட்ட பழம், எது சுடாத பழம் என்பதைத் தெரிந்துகொள்ள எண்ணினாள். முருகனும் மரத்தை உலுக்கினான். பொலபொலவென மண்ணில் பழங்கள் உதிர்ந்தன. அவற்றில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து கிழவிக்குத் தந்தான் முருகன். அந்தப் பழங்களில் தரைமண் தூசு ஒட்டியிருக்கவும், அதைக் கண்ட கிழவி தன் வாயால் ஊதிவிட்டுச் சாப்பிட விழையவும் முருகன் கேட்டான்...

இறையுதிர் காடு - 29

`என்ன பாட்டி, பழம் சுடுகிறதா?’

கிழவியிடம் சிலிர்ப்பு. `இதைத்தான் இவன் இப்படிக் குறிப்பிட்டானா? எவ்வளவு சிறிய விஷயம்... ஆனால், எல்லாம் தெரிந்துவிட்டதாக நான் கருதியது எவ்வளவு பிழை? இந்தச் சிறிய விஷயம் எனக்குத் தெரியவில்லையே...’ என எண்ணும்போதுதான் அந்தக் கிழவிக்குள்ளும் `கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற சிந்தனை எழுந்தது. அதன்பிறகு இடையன் முருகன் ஆனான். கிழவி, தன் அகங்காரம் அழிந்து அந்த ஞானச்செல்வனை வணங்கி நின்றாள். இந்தச் சம்பவம், ஒரு கோணத்தில் சிறு சம்பவம் - இன்னொரு கோணத்தில் இதுதான் பெரிய சம்பவம்!

கிழவி, உண்மையில் உலகில் உள்ளோர் எல்லோரையும்விட எல்லாம் அறிந்தவளே! ஆனாலும், மேலும் அறிய வாழ்வில் விஷயங்கள் இருந்துகொண்டிருப்பதுதான் விந்தை.

`நான்’ எனும் அகந்தை, மேலும் அறிந்துகொள்ள விடாதபடி செய்துவிடும். அதனால்தான் அகங்காரம் கூடவே கூடாது என்றேன்.’’

``அப்படியானால் பக்தி உள்ளவர்களிடம், அதாவது இறை நம்பிக்கையுள்ளவர்களிடம் அகங்காரமே இருப்பதில்லையா?’’

``அகங்காரம் ஒரு மாய உணர்வு. அது எல்லோரையுமே தன்வயப்படுத்த முயலும். இறை நம்பிக்கையுள்ளவர்கள் வேகமாய் அதை உணர்ந்து திருந்திவிடுவர். நம்பிக்கை யற்றவர்களிடம் விவாதம்தான் வளரும். இதற்கும் ஒளவைக்கிழவியே சாட்சி.’’

``பிரானே, நாங்கள் ரசவாதத்தில் தங்கம் செய்வது குறித்துக் கேள்வி எழுப்பினோம். அந்தத் தங்கத்தால் ஏன் முருகனாகிய தண்டபாணியைத் தாங்கள் செய்ய விரும்ப வில்லை என்று சங்கன் கேள்வி எழுப்பினான். ஆனால், அதற்கான பதிலை தாங்கள் இன்னமும் கூறவில்லை. கேள்விகள் கிளைவிட்டு எங்கெங்கோ சென்றுவிட்டன.’’

``எங்கும் செல்லவில்லை... தங்கம் மற்றும் பாஷாணங்கள் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால், அதைத் தன்வசம் கொண்டுள்ள இந்தப் பூமி பற்றிய அறிவு எல்லோருக்கும் முக்கியம். அப்படிப்பட்ட பூமி எப்படி உருவானது என்பதைச் சுருக்கமாய்க் கூறினேன். இந்தப் பூமிதான் நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் தருகிறது. வானம், மழையை மட்டுமே தருகிறது. மழைநீரால்தான் பூமியில் ஆறு, கடல் போன்றவை உருவாகின்றன. மண்ணுக்குள் ஆழத்தில் ஊடுருவும் இவற்றால்தான் கனிமங்கள் மற்றும் தாவரங்கள் உருவாகின்றன. இந்தத் தாவரங்கள் மற்றும் கனிமங்களிலிருந்தே ஒன்பது வகை பாஷாணத்தைச் செய்து அதை உரிய காலம், உரிய நேரம், உரிய தட்பவெப்பம், உரிய அளவுகளில் கலந்து உரிய இடத்தில் அதைச் செய்வதில்தான் காலத்தால் அது அழியாமல் திகழ்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், இது விஷங்களின் கூட்டணிபோல் தெரியும். உண்மையில், இது குணங்களின் கூட்டணி... ஒன்பது கோள்களின் கூட்டணி! இந்தக் கூட்டணியால், நிலைத்த ஒரு வடிவும், ஓரிடத்தில் நில்லாமல் பயணப்பட்டபடியே இருக்கும் ஒரு வடிவும் என்று இரு சிலைகள் உருவாகப்போகின்றன!’’ - போகர் பிரான் இறுதியாகக் கூறியதைக் கேட்டு அனைவருமே வியந்தனர். இத்தனை நாள்களாக தண்டபாணி வடிவம் மட்டுமே எனக் கருதி இருந்தவர்களுக்குள், அந்த இன்னொரு சிலை வடிவம் எது என்கிற கேள்வியும் எழும்பலாயிற்று!

இன்று    முத்துலட்சுமி, கணேசபாண்டி சொன்னதைக் கேட்டுக் கதறி அழத் தொடங்கி விட்டாள்.

``ஐயோ ராஜா... பேராசை பெருநஷ்ட மாகப்போவுதே... இந்த அரசியலல்லாம் வேண்டாம்னேன் கேட்டியா...’’  என்று ஆலாபிக்கத் தொடங்கிவிட்டாள்.

``அண்ணே, என்னண்ணே திடீர்னு... உயிருக்கு எந்த ஆபத்துமில்லை, நடக்கிறதுதான் நடக்காத காரியம்னு சொன்னீங்களே?’’  - போனிலிருந்து விலகாமல் பாரதி தொடர்ந்தாள்.

``வாஸ்தவம்தான் பாப்பா. ஆனா, திடீர்னு ஐயாவுக்கு மைல்டா அட்டாக் வந்துடுச்சி.’’

``அட்டாக்கா... யூ மீன் ஹார்ட் அட்டாக்?’’

``ஆமாம் பாப்பா.’’

``மை குட்நெஸ்... அப்புறம்?’’

``அதுக்கு மருந்து கொடுக்கப்போனா, பிரஷர் வேற கூடிப்போச்சு.’’

``பக்கத்துல டாக்டர் இருக்கிறாரா... நான் பேச முடியுமா?’’

``இல்லை பாப்பா... எவ்வளவு கேட்டாலும் துண்டுத்துண்டாதான் பதில் சொல்றாங்க. இதுல இன்னொரு கூத்து வேற...’’

``என்ன..?’’

``சொன்னா என்மேல கோபப்படக் கூடாது.’’

``முதல்ல சொல்லுங்கண்ணே...’’

``அந்தச் செத்துப்போன குமாரசாமியோட ஆவிய அப்பா பார்த்திருக்காரு..!’’

``வாட்... ஆவியா?’’

``ஆமாம் பாப்பா. இதை நான் சொல்லலை. ஐயாதான் சொன்னாரு! மயக்கமாகிறதுக்கு முந்தி நான் அவர்கிட்ட போயிட்டேன். அப்ப, `பாண்டி, அந்தக் குமாரசாமி செத்துட்டான்னு சொன்னேல்ல’ன்னு கேட்டார். `ஆமாங்கய்யா’ன்னேன்.
 `அது ஒண்ணும் பொய் இல்லையே!’ன்னும் கேட்டாரு. `அட, இதுலபோய் யாராவது பொய் சொல்வாங்களா?’ன்னு கேட்டேன்.’’

`` `அப்ப எப்படி அவன் இங்கே வந்தான்?’னு கேட்டவர்... `அதோ அங்க நின்னு எட்டிப் பார்க்கிறான் பார்’னாரு.. ஆனா, என் கண்ணுக்குத் தெரியலை!’’

``அவருக்கு மனசுல அழுத்தம். நடக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டதால வருத்தம். எல்லாம் சேர்ந்து இப்படி ஒரு இல்யூஷனை உருவாக்கிடிச்சாட்டம் இருக்கு.’’

``அப்படித்தான் சத்தியமா நானும் நினைச்சேன். ஆனா, அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னைக் கூப்பிட்டுவிட்டு இதே கேள்வியைக் கேட்டாரு. இதே பதிலைத்தான் சொன்னேன். ஆனா, அந்த ஆளோ `நானும் அந்தக் குமாரசாமியை இங்கே இப்ப பார்த்தேன்’னு சொல்லி நடுங்குறாரு. இதுக்கு என்ன சொல்றீங்க பாப்பா?’’

கணேசபாண்டியனின் கேள்வி, பாரதியைத் தெறிக்கவிட்டது.

``என்னண்ணே இது உளறல்?’’

``பாப்பா... இப்ப இப்படியெல்லாம் கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ நேரமில்லை - வேகமா கிளம்பி வாங்க நீங்க.’’

``புறப்டுட்டோம்ணே... அதிகபட்சம் எட்டு மணி நேரத்துல அங்கே இருப்போம்.’’

``தரிசனம் முடிஞ்சிடுச்சா?’’

``தரிசனமா..? இந்த வார்த்தையே எனக்குப் பிடிக்கலை. இங்கே வந்த இடத்துல என் ஹேண்ட்பேக் களவுபோய், அதுல ஒரு தேடல். கிழவி ஒருத்தி கேட்காமலே மாலையைப் போடுறா. யாரோ பிளான்பண்ணி மிஸ்ட்ரி உண்மைன்னு நான் நினைக்கணும்னு செயல்படுறமாதிரிதான் எனக்குப் படுது.’’

``சரிங்கம்மா, வேகமா வாங்கம்மா! சுருக்கமா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். அந்த முருகன்தான் எல்லோரையும் காப்பாத்தணும். உங்களுக்கும் இப்படி ஒரு அவநம்பிக்கை கூடாதும்மா’’ - என்ற கணேசபாண்டியன், டக்கென போனையும் கட் செய்துகொண்டார். பாரதிக்கு அவர் வலிக்காதபடி ஒரு செல்ல அறை அறைந்ததுபோல்தான் இருந்தது.

சில விநாடிகள் பேச்சு வரவில்லை. அரவிந்தன் அவளைக் கலைத்தான்.

``பாரதி... என்னாச்சு?’’

``என்னத்த சொல்ல... மைல்டு அட்டாக், கூடவே பி.பி வேற...’’

``ஏதோ ஆவின்ன மாதிரி காதுல விழுந்ததே..?’’

``ஆமாம்... அது ஒரு இல்யூஷன், ஆவியாம் ஆவி... புடலங்கா!’’

``ப்ளீஸ்... கொஞ்சம் புரியும்படி சொல்லு.’’

``என்னத்த சொல்றது... செத்துப்போன அந்தக் குமாரசாமி ஆவிய அப்பா ஹாஸ்பிடல்ல பார்த்தாராம்.’’

``நிஜமாவா?’’

``எப்படி, இப்படி உடனே நிஜமாவான்னு கேட்கிறீங்க அரவிந்தன்? நான்தான் இல்யூஷன், பிரமைன்னேனே.’’

``அது எப்படி பாரதி... அந்த பிரமை இன்னிக்கு ஏற்படணும்.’’

``நீங்க என்ன சொல்ல வர்றீங்க?’’

``தப்பா ஏதோ நடந்துகிட்டே இருக்கு.’’

``இப்ப சொன்னீங்க பாருங்க... இதை நான் ஒப்புக்கிறேன். ஆவியாம் ஆவி... இதெல்லாம் ஏன் என் எதிர்ல வர மாட்டேங்குது?’’

``போதும் பாரதி பேசினது... புறப்படு முதல்ல’’  - முத்துலட்சுமி துடிதுடித்தாள்.

``புறப்படத்தான்போறோம்... இப்ப நான் வராம அங்கே இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு யோசிச்சியா? வந்ததுல, பர்ஸ்ல இருக்கிற பணம் தொலைஞ்சதுதான் மிச்சம். முருகனைக் கும்பிட்டா எல்லாம் சரியாயிடும்னு சொன்னியே... நாம கும்பிடப்போனப்பதான் எல்லாக் கூத்தும் நடந்திருக்கு. எனக்குத்தான் நம்பிக்கையில்லை, உனக்குத்தான் ஒரு மூட்டை இருக்கே, ஏன் எந்த நல்லதும் நடக்கலை?!’’

- பாரதி கேட்டுக்கொண்டே கொண்டுவந்த சூட்கேஸில் துணிகளைத் தூக்கிப் போட்டு மூடினாள். ஹேர் டிரையர், உருண்டை சீப்பு, பர்ஃபியூம் ஸ்ப்ரே என்று சகலத்தையும் குப்பைபோல் அள்ளி இன்னொரு பையில் போட்டாள்.

``மேடம், சார்ஜரை மறக்காம எடுத்துக்குங்க’’ என்றான் செந்தில்.

``யெஸ்... யெஸ்... செந்தில், நீங்க போய் ரிசப்ஷன்ல பில்லை செட்டில்பண்ணுங்க, வந்துகிட்டே இருக்கோம்’’ என்று, தன் ATM கார்டை எடுத்து நீட்ட, அவனும் விலகினான்.

அரவிந்தன், பாரதியையே பார்த்தபடி இருந்தான்.

``என்ன அரவிந்தன், புறப்படலையா?’’

``நீ போ பாரதி... நான் அப்புறமா வர்றேன்.’’

``அப்புறமாவா... ஏன் அரவிந்தன்?’’

``நான் பல விஷயங்களை உன்கிட்ட சொல்லலை. நாம இங்கே வந்ததுல நிறைய நல்லதுதான் நடந்திருக்கு பாரதி.’’

``புரியலை’’ - அரவிந்தன் காயலாங்கடையில் பார்த்த பெட்டியில் ஆரம்பித்து, சுப்பையா சாமி, கண்ணாயிர பண்டாரம் என்று சகலத்தையும் சொல்லி முடித்தான். முத்துலட்சுமிக்கு எதுவுமே புரியவில்லை.

``தம்பி... என்னப்பா பொட்டி? அப்படி என்ன இருக்கு பொட்டியில..?’’

``பாட்டிம்மா, நீங்க பங்களாவுக்குள்ள போகும்போது உங்களுக்கெல்லாம் தெரியும். தப்பா ஒரு பக்கம் சில விஷயங்கள் நடக்கிற மாதிரியே, சில நல்ல விஷயங்களும் இன்னொரு பக்கம் நடந்துகிட்டே இருக்கு. நாம இப்ப நடுவுல இருக்கோம். போகப்போகத்தான் எல்லாத்துக்கும் சரியான காரண காரியம் புரியும்.’’

``தப்பான்னா... ராஜாவுக்கு எதுவும் ஆயிடாதே?’’

``நிச்சயமா ஆகாது. தைரியமா இருங்க.’’

``அரவிந்தன், அப்ப நீங்க அந்தப் பண்டாரத்தைத் தேடிப் போய்ப் பார்க்கப்போறீங்களா?’’

``நிச்சயமா...’’

``ஒரு கோ இன்சிடென்ஸை நீங்க பெருசுபடுத்தி டைம் வேஸ்ட் பண்றீங்களோன்னு தோணுது.’’

``கோ இன்சிடென்ஸுக்கு எனக்கு அர்த்தம் தெரியும் பாரதி. இது கோ இன்சிடென்ஸே இல்லை. திவ்யப்ரகாஷ்ஜி சரியா அந்த நேரம் வந்து க்ளூ கொடுக்கிறார். அந்தத் திருடனும் கிடைக்கிறான் - அப்ப அங்கே அந்தப் பெட்டி - பெட்டிக்குப் பின்னால சில கதைகள்... கோ இன்சிடென்ஸுங்கிறது ஒரு தடவைதான் நடக்கும். போனாப்போகுதுன்னு ரெண்டாவது தடவையும் நடக்கும். வரிசையா கோவையா நடக்காது. எனக்கு நம்ம பங்களாவுல இருக்கிற பெட்டியைத் திறந்து பார்க்கணும்கிறது முதல் விருப்பம். அதுல அந்த டெல்லி ஜோசியன் சொன்ன மாதிரி மருந்து இருக்கலாம். அது உங்க அப்பாவை குணப்படுத்தலாம்னு நான் பாசிட்டிவா நினைக்கிறேன்’’ - அரவிந்தன், தன் எண்ணங்களைத் தெளிவாக வைத்தான். பாரதிக்கும் அதற்குமேல் அவனோடு மல்லுக்கட்டத் தோன்றவில்லை.

``சரி அரவிந்தன்... சீக்கிரமா வாங்க! நீங்க என்கூட இருந்தா எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்கிறதை மறந்துடாதீங்க.’’

``பாரதி... நான் தொடர்கதையைக்கூட எடிட்டர்கிட்ட பேசி, தள்ளிப்போடப்போறேன். எனக்கு இப்ப இதுதான் அசைன்மென்ட். ஒரு எழுத்தாளனுக்கு அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுறது ரொம்பவே நல்லது’’
  என்று கழுத்தைச் சொறியவும் அவள் விட்டெறிந்த மாலை, விரல்களில் உரசியது.

``பாரேன்... மலையில இருந்து உன் கழுத்துல விழுந்து இப்ப என் கழுத்துல... ஏன் இது வேற எங்கேயாவது போய் விழுந்திருக்கலாமே..?’’

``அரவிந்தன்... அது ஒரு ஜடப்பொருள்! தெலுங்கு சினிமா பாதிப்பு உங்ககிட்ட ரொம்பவே இருக்கு.’’

``நான் தெலுங்குப் படமே பார்த்ததில்லை பாரதி.’’

``வேண்டாம்... பேசினா பேச்சுதான் வளரும். அந்தப் பண்டாரத்தைப் பார்த்துட்டு வந்து சேருங்க. எனக்கு இந்த ட்ரிப்ல எல்லாமே நெகட்டிவ்தான். ஒரு நாயை இடிச்சுக் கொன்னதுல இருந்து எல்லாமே தப்பா இருக்கு.
 எல்லாம் இந்தக் கிழவியால - புறப்படு கிழவி’’ என்று கோபமாய், செல்லமாய், பல மாதிரி பேசியபடி புறப்பட்டாள். அரவிந்தனுக்குள்ளும் கண்ணாயிரப் பண்டாரம் நிமிர்ந்து எழத் தொடங்கினார்.

அவ்வளவு மரங்களுக்கும் தண்ணீர் விட்டுவிட்டு, முகத்தில் பூத்த வியர்வையை ஒற்றிக்கொண்டே வந்தாள் சாருபாலா. சாந்தப்ரகாஷ், அந்தத் தாத்தாவின் கட்டிலில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தான். மனதில் இனம்புரியாத ஓர் அமைதி, எந்தச் சிக்கலும் தீர்ந்துவிடவில்லை. ஆனால், தீர்ந்துவிட்டதுபோலவே ஓர் அமைதி.

தாத்தா, அந்தத் தள்ளாமையிலும் தனக்கான ஆஸ்பெஸ்டாஸ் கூரை இருப்பிடத்தில் டீ போட்டு எடுத்து வந்து, இருவர் முன்னாலும் நீட்டினார். சன்னமாய் வாசம், நெளிசலாய் ஆவி ``உங்களுக்கு எதுக்கு தாத்தா சிரமம்?’’
 
``சிரமமா... கடமைம்மா! நீங்க திரும்ப வந்து இப்படி இங்கே உட்கார்ந்திருக்கிறதுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதுலயும் இந்த இடத்தைத் திரும்ப வாங்குறேன்னு சொன்னதுல ரொம்பவே சந்தோஷம்.’’

``தாத்தா... திரும்பி வாங்குறது அவ்வளவு சுலபமில்லை. அந்த மிஸ்ரா இப்ப சும்மா இருக்கிறதால இப்படியே எப்பவும் இருப்பார்னு சொல்ல முடியாது. ஆமா... எதை வெச்சு அவர் வித்துடுவார்னு நம்புறீங்க?’’

``என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... அவங்களால இங்கே எதையுமே செய்ய முடியலை. வரிசையா எத்தனை சாவுங்க தெரியுமா?’’

``ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் பண்ணும்போது விபத்துகள் சகஜம் தாத்தா.’’

``இல்லை தம்பி... இது விபத்து வடிவத்துல மிரட்டல்.’’

``யார் மிரட்டுறது?’’

``வேற யார்... உங்க தாத்தாதான்.’’

``அவர் எப்படி?’’

``சொன்னா நம்ப மாட்டீங்க. சர்ப்பமா நடமாடிக்கிட்டிருக்கார் அவர்.’’

``சர்ப்பமா... அதாவது பாம்பாவா?’’

``ஆமாம்.’’

``கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்க. எந்தக் காலத்துல இருந்துக்கிட்டு என்ன பேச்சு இது?’’

``காலம் எதுவா இருந்தா என்ன, சில விஷயங்கள் மாறுவதேயில்லை தம்பி.’’

``தாத்தா... நீங்க சொல்ற ஃபேன்டசியெல்லாம் கற்பனையான விஷயங்கள். அமெரிக்காவுலேயும் ஃபேன்டசி உண்டு. ஆனா, அதை நூறு சதவிகிதக் கற்பனைன்னு சொல்லிட்டுதான் செய்வாங்க.’’

``என்ன பெரிய அமெரிக்கா... இந்தக் கொலம்பஸ்ங்கிறவன் கண்டுபிடிச்ச நாடுதானே அது?’’

``ஆமாம்... அதுக்கென்ன?’’

``என்ன, அந்த நாட்டுக்கு இப்ப ஒரு 500 வயசு இருக்குமா?’’

``கிட்டத்தட்ட... எனக்குத் துல்லியமா தெரியலை.’’

``தம்பி... நாம இருக்கிற இந்த மண்ணோட வயசு பல ஆயிரம் வருஷங்கள். ஏன் வருஷம்னு சொல்லணும் - யுகம் யுகமா இருக்கிற பூமி இது. இங்கே எவ்வளவு பேர் பிறந்து வளர்ந்து வாழ்ந்துட்டுப் போயிருப்பாங்க..?’’

``அதுக்கென்ன?’’ - கேட்டபடியே டீயைக் குடித்தான் சாந்தப்ரகாஷ்.

``இப்ப இங்கே இருக்கிற எல்லாமே மனுஷ மூளையோட கண்டுபிடிப்பும் உழைப்பும்தானே?’’

``நீங்க பேசறதே புரியலை எனக்கு.’’

இறையுதிர் காடு - 29

``சுருக்கமா சொல்றேன்... இப்ப இருக்கிற விஞ்ஞானிகளைவிட மேலான அறிவோட பல ஆயிரம் பேர் வாழ்ந்த பூமி இது. அதுலேயும் சித்தர்கள் வாழ்க்கை ரொம்பவே அலாதியானது. போகர்னு ஒரு சித்தர் பறப்பாருன்னா நம்புவீங்களா? அல்லமர்னு ஒரு சித்தர் உடம்பை எத்தனை தடவை கத்தியால குத்தினாலும் உடனேயே அந்தப் புண் சரியாகி பழையபடி ஆயிடும்னா நம்புவீங்களா? புழுதி மண்ணை ஜொலிக்கிற பொன்னாக்கின சித்தர்கள் இங்கே எத்தனை பேர் தெரியுமா?’’

``தயவுசெய்து நேரா விஷயத்துக்கு வாங்க, எதுக்கு இந்தப் பீடிகை?’’

``வர்றேன்...

ங்க கொள்ளுத்தாத்தா ஒரு சித்தர்... இப்பவும் நடமாடிக்கிட்டிருக்கிற ஒரு சித்தர். அவர் விட்டதை நீங்க தொடர்ந்தா, உங்க குடும்பத்துக்கு மட்டுமல்ல... இந்த நாட்டுக்கேகூட ரொம்ப நல்லது.’’

``தாத்தா, அது என்ன... அப்படி நாங்க என்ன செய்யணும்?’’ - சாருபாலா இடையிட்டுக் கேட்டாள்.

``அப்படிக் கேள்... முதல்ல உங்க தாத்தாவைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்குங்க... நான் சொல்றதைவெச்சு இல்லை. அவரே எழுதிய ஒரு டைரி இருக்கு அதைவெச்சு...’’

``எங்கே அந்த டைரி?’’

``அதை அவர் ஒரு மரப்பெட்டியில வெச்சிருந்தாரு... பெட்டி, அநேகமா அவரோட பாதாள அறையிலதான் இருக்கணும்.’’

``பாதாள அறையிலயா?’’

``ஆமா... இந்த பங்களாவுல அப்படி ஒரு அறை இருக்கிறது ரொம்ப பேருக்குத் தெரியாது. வாங்க காட்டுறேன்’’
 - தாத்தா அவர்களோடு பங்களாவுக்குள் நுழையத் தயாரானார்.

- தொடரும்

- இந்திரா சௌந்தர்ராஜன்; ஓவியங்கள்: ஸ்யாம்