
சிவமகுடம் - பாகம் 2 - 30

துணையாக வந்த பாலகன்!
மாமதுரையை, பகைவரிடமிருந்து காப்பாற்றிவிட்ட பெரும் திருப்தியோடும் உவகையோடும்... அதற்கான வல்லமையை அளித்து, வெற்றிக்குத் துணைநின்று அருள்பாலித்த ஆலவாய் அண்ணலுக்கு நன்றிசெலுத்தும்விதமாக, சித்தத்தை சிவன்பால் நிறுத்தி தியானத்தில் லயித்துவிட்ட குலச்சிறையார், அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீண்டுவிடவில்லை.

மெள்ள மெள்ள புறச்சிந்தனைகள் மறைந்துபோக, அகத்தில் அந்தக் காட்சியைக் கண்டு பேரானந்தவயப்பட்டார் பேரமைச்சர். ஆம்... முதலில், இருள்சூழ் வெளியை ஊடறுத்துத் தோன்றிய மெல்லிய ஒளித்துளி ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக பெரிதுபட, அதன் மையத்தில் தந்தை பரமனும் அம்மை மீனாளும் ஒன்றிணைந்து தாண்டவம் நிகழ்த்தும் அரிய காட்சியைக் கண்டு திளைத்தார். சில விநாடிகளே நீடித்த அந்தக் காட்சி திடுமென மறைந்து போனது.
அதன் பிறகே, ஒளிவெள்ளத்தின் நடுவே பாய்ந்துவரும் அந்தப் புரவியைக் கண்டார். அதன்மீது ஆரோகணித்திருந்த வீராங்கனை கம்பீரமாக வாள் சுழற்ற, ஒவ்வொரு சுழற்றலிலும் ஆயிரமாயிரம் வீரர்கள் அவளுக்கு அடிபணிந்த காட்சியைக் கண்டார்.
அந்தப் புரவிப் பெண்மணி தன்னை நெருங்கிப் பணிந்ததும், பதறிப் போனார்; வணங்கிப் பணிவது பாண்டிமாதேவியார் என்பதை அறிந்து பதைபதைத்தார்; சட்டென்று எழுந்து அவளின் செய்கையைத் தடுக்கவும் முயன்றார். ஆனால் முடியவில்லை. சூட்சுமம் நிறைந்த மனத்தின் காட்சியில் ஸ்தூலம் தோற்றுப் போனது. புத்தியின் கட்டளை அகத்துக்குள் பிரவேசிக்க இயலாமல் போக, தவியாகத் தவித்தார் குலச்சிறையார்.
அகக் காட்சியில், மகாராணியை மட்டுமல்ல, அவளுக்குத் துணையாக வந்த ஒரு பாலகனையும் கண்டார். ஆனால், அவன் ஆயுதபாணியாக இல்லை. ஒளிவீசும் திருமுகம்; மேனியெங்கும் திருநீறு; திருக்கரங்களில் பொற்றாளங்கள். அவற்றைக் கொண்டு செவிகுளிரும் வண்ணம் நாதம் எழுப்பியபடி, ஏதோ பதிகம் பாடி வருகிறான். அன்னையைப் பணிந்தவர்கள் அவனையும் பணிந்த அற்புதத்தைக் கண்டார்.
`யார் அந்தப் பாலகன்?’
அடையாளம் காண முடியவில்லை அவரால். அகத்தின் பரிதவிப்பு அதிகமானது.
இப்படியாக வெகு நேரம் நீண்டுகொண்டிருந்த அகக்காட்சி, ``அமைச்சர் பிரானே...’’ என்ற திடமான அழைப்புக் குரலாலும், தோள் பற்றி உசுப்பிய முரட்டுக்கரம் ஒன்றின் ஸ்பரிசத்தாலும் முற்றுப்பெற்றது.
கண் மலர்ந்தவர், எதிரில் இளங்குமரன் சிரம்தாழ்த்தி, கரம்குவித்து பணிந்து நிற்பதைக் கண்டார்.
‘‘அமைச்சர்பிரான் மன்னிக்க வேண்டும். தங்களின் தியானத்தை நான் கலைத்திருக்கக் கூடாது. எனினும், நீண்ட நெடுநேரம் தங்களிடம் சலனம் இல்லையாதலால், சிறிது அச்சம்கொண்டுவிட்டேன்...’’
நாசித்துவாரங்களால் காற்றை உள்வாங்கிக்கொண்டு, பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறு எழுந்துகொண்ட குலச்சிறையார் தளர்வுடன் நடந்து வந்து, இளங்குமரனை அணுகி, வலக்கரத்தால் அவன் தோளைப் பற்றியபடி அவன் கண்களை உற்று நோக்கினார்.
‘ `கடமைகள் நிறைய காத்திருக்கும்போது தியானம் அவசியமா?’ என்று உனக்குக் கேட்கத் தோன்றுகிறதா இளைஞனே...’ என்று வினா தொடுப்பதுபோலிருந்தது அவரின் அந்தப் பார்வை. மதியூகியான இளங்குமரன், அந்தச் சூழலைச் சாமர்த்தியமாகச் சமாளித்தான்.
‘‘பேராபத்தை எளிதில் முறியடித்துவிட்டீர்களே... விஷயமறிந்து வியப்பில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த பாண்டியதேசமும். பரவசத்தோடு ஓடி வந்தேன் தங்களின் பாதம் பணிய. ஆனால் தாங்களோ...’’

இளங்குமரன் சொல்லி முடிப்பதற்குள், ‘‘தியானம் என்ற பெயரில் உறங்கிக்கிடந்தேன்... அப்படித்தானே...’’ என்று கேட்டுவிட்டு, வீரத் தோள்கள் குலுங்க, பெருங்குரலெடுத்து இடியெனச் சிரித்தார் குலச்சிறையார்.
பின்னர் அவரே தொடர்ந்தார்... ‘‘இளங்குமரா... இந்த வெற்றி என்னால் விளைந்தது என்றா நினைத்தாய். அல்ல... இது நம் அன்னையால் விளைந்தது. அவரால்தான் இது சாத்தியமானது.’’
‘‘அவரால் சாத்தியமானதா... எப்படி?’’
``அதை நான் சொல்கிறேன்...’’
சட்டென்று கம்பீரமான குரல் ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் குரல் வந்த திசையை நோக்கினார்கள்.
மறுகணம், அந்த மகா மண்டபம் அதிர ஒலித்தது, பாண்டிய மாமன்னர் மாறவர்மன் அரிகேசரியின் மெய்க்கீர்த்தி.
``உதயகிரி மத்தியத்
துறுசுடர் போலத்
தெற்றென்று திசைநடுங்க..’
மாமன்னர், சகலரையும் கைமயர்த்தியபடி கம்பீரமாக நடந்து வந்து, சிரம்தாழ்த்தி, கைதொழுது நிற்கும் குலச்சிறையாரை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அவரின் அன்புப் பிடியிலிருந்து மீள முடியாமல் மீண்ட அமைச்சரின் விழிகளில் தளும்பித் ததும்பி நின்றது நீர்.
பாண்டியன் மாளிகையின் முகப்பாகத் திகழ்ந்த அந்தப் பெரிய மண்டபத்தில், அடுத்தகட்ட ஆலோசனைக்காகக் கூடியிருந்த அணுக்கர்களிடையே பெருமிதத்தோடு பேருரை நிகழ்த்த ஆயத்தமானார், தென்னவன்
கூன்பாண்டியர்.
‘‘மதுரை மண்ணில் நம் அமைச்சரால் எப்படிப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது தெரியுமா... பகைவர்களின் ஊடுறுவலை அடையாளம் காட்ட உடுக்கை ஒலித்ததன் ரகசியம் என்ன தெரியுமா... நம் மதுரையை வசப்படுத்த வந்த எதிரிகளைத் தடுத்து நிறுத்தியது எந்தப் படை தெரியுமா...’’
மகா மண்டபத்தில், கேள்வியும் பதிலுமாக மாமன்னர் மிக உற்சாகமாகத் தமது உரையைத் தொடங்கிய அதே வேளையில், மாலிருஞ்சோலையின் அடிவாரத்தை அடைந்திருந்தன சில புரவிகள். அந்தச் சிறு சேனையை வழிநடத்திவந்தவர் கரும்புரவியில் அமர்ந்திருந்தார்.
சிறு பொய்கையுடன்கூடிய இடத்தை அவர்கள் அடைந்தபோது, இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. மேற்கொண்டு நகரவிடாமல் கடிவாளத்தை இறுக்கி, தன் புரவியின் ஓட்டத்தை நிறுத்திய அந்தச் சேனையின் தலைவர், ‘‘இங்கு சற்று இளைப்பாறிவிட்டுச் செல்லலாம்’’ என்று ஆணையிட்டார்.
அதுவரையிலும் வெறும் சைகைகளால் மட்டுமே ஆணையிட்டு வழிநடத்திவந்தவர், இப்போது குரலெழுப்பி, கட்டளையிட்ட பிறகுதான் தெரிந்தது அந்த வீரர்களுக்கு... இத்தனை நேரம் தங்களை வழிநடத்தியது, பேரரசி பாண்டிமாதேவியார் என்பது. பரவசத்தோடு கூக்குரலிட்டார்கள். வெகு வேகமாக தங்களின் புரவியிலிருந்து தரையில் குதித்து ஓடோடி வந்தவர்கள், பாண்டிமாதேவியாரை நெருங்கி, அவரின் திருமுன் மண்டியிட்டு வாள் வணக்கம் செய்தார்கள்.
தனது முகத்திரையை விலக்கி, அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த தேவியார், கரங்களை உயர்த்தி, அந்த இளம் வீரர்களை ஆசீர்வதித்ததுடன், திருமுகத்தை அசைத்து, அவர்களது வீர வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டார்.
அத்துடன், ‘‘நண்பர்களே... முக்கியமானதொரு செய்திக்காக இங்கு சில நாழிகைகள் காத்திருப்போம். செய்தி வந்ததும் புறப்பட்டுவிடலாம்’’ என்றும் உத்தரவு தந்தார்.
புரவிகள் களைப்பாறவிடப்பட்டன. வீரர்களில் சிலர் பொய்கையில் தாகம் தணிக்க முற்பட, வேறு சிலரோ ஆங்காங்கே தரையில் துணி விரித்து ஓய்வெடுக்கத் தலைப்பட்டார்கள். பாண்டிமாதேவியார், பெரியதொரு விருட்சத்தின் அடியில் அமர்ந்தார். வீரர்கள் இருவர் அவருக்குப் பாதுகாப்பாக அருகில் நின்றுகொண்டார்கள்.
அவர்களையும் மீறி நிகழ்ந்தது அந்தச் சம்பவம்.
பாண்டிமாதேவியாரை நோக்கி எங்கிருந்தோ சீறிப் பாய்ந்து வந்த குறுவாளொன்று, நொடிப் பொழுதில் அவர் விலகிக்கொள்ள, விருட்சத்தில் பாய்ந்து நின்றது. அதன் கைப்பிடியில் சுற்றப்பட்டிருந்த வெண்துணி, ஒரு செய்தியைத் தாங்கியிருந்தது.
அது, பாண்டிமாதேவியார் எதிர்பார்த்த செய்தி அல்ல!
திருவடுகூர் எனும் அந்த ஊருக்கு அன்றைய பொழுது மிக அற்புதமாக விடிந்தது. பல வண்ண மலர்களாலான அலங்காரத்திலும், பசு நெய் ஊற்றி ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் பிரகாசத்திலும் லிங்கத் திருமேனியராக எழில்கோலம் காட்டிக்கொண்டிருந்தார், வடுகநாதர்.
காலை வேளை உபசாரங்களையொட்டி, மகாதேவனுக்கு அமுது படைத்து, மகா ஆராதனை காட்டப்பட, அதை ஊருக்குத் தெரிவிக்கும்விதமாக, கணீரென்று முழங்கி சிவநாதம் எழுப்பியது ஆலய மணி. ஏற்கெனவே ஒரு கூட்டம் உள்ளிருக்க, ஆலய மணியின் அழைப்பைச் செவிமடுத்து, மேலும் திருக்கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது.
வடுகூர் - அதென்ன பெயர்?
வடுக பைரவர் (வடுகர்) வழிபட்டதால் வடுகூர்.
சிவமூர்த்தங்களில் ஒரு வடிவம் பைரவ வடிவம்; `அகங்காரத்தை அழித்தொழிக்கும் சிவ அம்சம்’ என்று ஞான நூல்களெல்லாம் சிறப்பிக்கும். பைரவரிலும் எட்டு வகைகள் உள்ளன. அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர்... இந்த எட்டு பைரவர்களில் சம்ஹார பைரவரையே, `வடுகர்’ என்று போற்றுவார்கள்.
இந்த `வடுக பைரவர்’ வழிபட்ட பதியென்பதால் இந்த ஊருக்கு, `வடுகூர்’ என்றும், இவ்வூரின் நாயகருக்கு, `வடுகநாதர்’ என்றும் திருப்பெயர்கள். புராணத்தால் சிறப்புப் பெற்ற இவ்வூருக்கு மேலுமொரு சிறப்பைச் சேர்த்தது அந்தத் திருநாள்.
`புனல் சூழ்ந்த வடுகூர்’, `அன்னங்கள் ஆளும் வடுகூர்’, `வரிவண்டு இசை பாடும் வடுகூர்’... என்றெல்லாம் பாடிப்பரவிட, இவ்வூரை நாடி வந்துகொண்டிருந்தான் ஞானமிகு பாலகன் ஒருவன்.
ஆம்... குலச்சிறையாருக்கு மனக்கண்ணில் காட்சிக்கொடுத்த அதே பாலகன்தான் அவன்!
- மகுடம் சூடுவோம்...
ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்