மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 35

அன்பே தவம் - 35
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 35

ஓவியம்: பாலகிருஷ்ணன்

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

அன்பே தவம் - 35

 'வன்முறை நேர்வும் தீர்வும்’ என்ற ஒரு தொகுப்பு நூலை, சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் சுடர். காவல்துறையில் ஒரு கனிந்த இதயம். அந்த நூலில் வன்முறைக்கு எதிரான பல்துறை நிபுணர்களின் கருத்துகளும், கவிஞர் சுடரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒரு சம்பவம்...

அப்போது கவிஞர் சுடர், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன். மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்குச் செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஜன்னலோரத்தில் ஒரு தாய். தோற்றத்திலேயே வசதி படைத்தவர் என்பது தெரிந்தது. அவர், தன் மடியிலிருந்த குழந்தைக்கு ஓர் இனிப்புத் தின்பண்டத்தைச் சிறு துண்டுகளாக்கி ஊட்டிக்கொண்டிருந்தார். அருகில் அவர் கணவர்.  விரிந்து சிவந்த கண்கள்; வெட்டரிவாள் மீசை... தோற்றமே பயமுறுத்துவதுபோல இருந்தது. இவர்களுக்கு எதிரே ஓர் ஏழைத் தாய். அவர் மடியில் எச்சில் ஒழுக ஒரு குழந்தை அமர்ந்திருந்தது. அந்தக் குழந்தை, தனக்கு எதிரே மற்றொரு குழந்தைக்கு இனிப்பு ஊட்டப்படுவதை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. 

இதை கவனித்துவிட்ட பணக்காரத் தாய் தன் கணவரிடம், ``ஏங்க... அதைப் பாருங்க. அது பார்க்கிற பார்வையே சரியில்லை. நம்ம செல்லத்துக்கு வயிறு வலிக்கப்போகுது...’’ என்று கிசுகிசுத்தார்.

உடனே, வெட்டரிவாள் மீசை, குழந்தையை முறைத்தது. பார்வையின் உக்கிரம் தாளாமல் அந்த ஏழைக் குழந்தை அழுதது. அவர் அந்தக் குழந்தையை அடிப்பதுபோல் தன் கையை ஓங்க, குழந்தை இன்னும் சத்தமாக வீறிட்டு அழுதது. இதை ஓர் ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த கவிஞர் சுடரின் நெஞ்சில் வலி. 

அன்பே தவம் - 35

ஆசை, கோபம், பொறாமை இவையெல்லாம் நம்மை வன்முறைக்கு அழைத்துச் செல்லும் பாதைகள். அதோடு சாதி மதப் பிரிவினைகளும் வன்முறைக்கு மிகப்பெரிய களமாக அமைந்துவிடுகின்றன.

தாய், தன் குழந்தைகளை ஒன்றாகத்தான் பாவிக்கிறாள். அழுகிற தம்பிக்கு முதலில் மிட்டாய் கொடுத்துவிட்டால், அண்ணன்காரனுக்குப் பொறுக்கவில்லை. ‘எனக்குப் பின்னால் பிறந்தவனுக்கு முதலில் மிட்டாய் கொடுக்கிறாயே...’ என்று தன் கையிலிருக்கும் மிட்டாயைத் தூக்கி எறிகிறான்.

`தனக்கு... தனக்கு...’ என்கிற எண்ணம் வன்முறைக்கு வித்தாகிறது. இருவரும் வளர்கிறார்கள். பட்டம் பெறுகிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். அண்ணன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டிய நேரம்... அவனுக்குப் பின்னால் வேலைக்குச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்குப் பதவி உயர்வைக் கொடுக்கிறது நிறுவனம். `என்னைவிட வயதில் இளையவனுக்குப் பதவி உயர்வா... நான்தானே சீனியர்...’ என்று கோபத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டான் மூத்தவன்.

சிறிய வயதில் மிட்டாய்க்குச் சண்டை போட்டவன், பெரிய வயதில் பதவி உயர்வுக்குச் சண்டை போடுகிறான். மனம்  வளர்ந்திருக்கிறதா... பக்குவப்பட்டிருக்கிறதா?

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், `குறிதவறாமல் செல்லும் ஏவுகணைகளை மனிதன் கண்டுபிடித்துவிட்டான். நெறிதவறாமல் செல்லும் மனிதர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.

ஒரு புதுக்கவிஞர் இப்படி எழுதினார்... `மரங்களெல்லாம் மனிதர்களைப் பார்த்துக் கேட்டனவாம். `மனிதர்களே... மனிதர்களே… எங்களிடம் இன்னொரு சிலுவை செய்வதற்கு மரம் இருக்கிறது. உங்களிடம் ஏசுவைப்போல் இன்னொரு மனிதர் இருக்கிறாரா?’ என்று.

வன்முறைக்கான முதல் வித்து ஆசை. அது, பேராசையாக உருவெடுக்கும்போது போர்க்களம் உருவாகிறது.

வேதங்கள் அனைத்தும் கற்றவன் ராவணன். ஆயிரம் மறைபொருள் உணர்ந்து தெரிந்த அறிவுக்குரியவன். முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும் கொண்டவன். சாமகானம் பாடி, இறைவன் நெஞ்சில் இடம்பெற்றவன். கயிலைமலையைக் கையிலெடுத்தவன். சீதைக்கு நிகரான கற்புக்கனல் மண்டோதரியை மனைவியாகப் பெற்றவன். ஆனால், அடுத்தவன் மனைவிமீதுகொண்ட ஆசை அவனை அழித்துவிட்டது. 

துரியோதனன், கதை யுத்தத்தில் இணையற்றவன். ஆற்றலில், வீரத்தில் சிறந்தவன். நண்பன் கர்ணனை உயரத்தில் வைத்துப் பார்த்தவன். ஆனால், பாண்டவர்களுக்கு ‘ஊசி முனை அளவு இடம்கூடத் தர இயலாது’ என்று அவன் மறுத்தான். அந்த மண்ணாசை, குருக்ஷேத்திரப் போர் உருவாகக் காரணமாகி விட்டது.  

நெப்போலியன்... `சென்றான்; கண்டான்; வென்றான்...’ என்ற பெருமைக்குரியவன். ‘மண்ணில் விழுந்துகிடந்த பிரெஞ்சு சாம்ராஜ்யத்தின் மணிமகுடத்தை என் வாளால் சூட்டிக்கொண்டேன்’ என்று மார்தட்டிச் சொன்னவன். வாட்டர்லூவில் நடந்த போரில் தொடர்ந்து 37 மணி நேரம் குதிரையில் அமர்ந்து போரிட்டவன். `ஐரோப்பிய வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு’ என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தவன். ஆனால், பிரிட்டனைப் பகைத்துக்கொண்டான். செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தை மீறி, காரணமில்லாமல் ரஷ்யாவைத் தாக்கினான். ரஷ்யாவின் கடுங்குளிர், அதன் ராணுவத்தைவிட பலம் வாய்ந்தது. அது நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பாதை அமைத்துத் தந்தது. அங்கே தன் வீரர்களை இழந்துவிட்டுத் தன்னந்தனியனாக ஓடி வந்தான். இறுதிக்காலத்தில், செயின்ட் ஹெலீனா (Saint Helena) தீவில் தனிமைச் சிறையிலிருந்தான். பிரெஞ்சு மக்கள் மத்தியில், சீன் (Seine) நதிக்கரையில் தன் கல்லறை அமைய வேண்டும் என்பதைத் தன் கடைசி ஆசையாக வைத்திருந்தான். அதைக்கூட பிரிட்டன் ஏற்றுக்கொள்ளவில்லை. பேராசைப்பட்டவனின் வாழ்க்கை, வீழ்ச்சியில் முடியும் என்பதற்கு நெப்போலியன் வரலாறு ஓர் உதாரணம்.

வெறும் பேச்சாற்றலை மூலதனமாக வைத்துக்கொண்டு ஜெர்மனியின் பழம்பெருமையைப் பேசி, பிரிட்டன், பிரான்ஸுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி, `நேஷனல் சோஷியலிஸ்ட் ஜெர்மன் வொர்க்கர்ஸ் கட்சியில் (National Socialist German Workers’ Party) இணைந்து, 14 ஆண்டுகளில் உலக வல்லரசின் அதிகார பீடத்தில் அமர்ந்தவன் ஹிட்லர். டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளோடு போரிட்டு வெற்றிகளைக் குவித்தவன். ஒரே நேரத்தில் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் எதிர்த்தவன். ஆனால், அவனும் நெப்போலியனிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பேராசையால் ரஷ்யாமீது படையெடுத்துத் தன் வாழ்வை முடித்துக்கொண்டான்.

முசோலினி, ஹிட்லரைப்போலவே மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவதில் வல்லவன். இத்தாலியின் அதிகாரத்தைக் கைப்பற்றியவன். ஹிட்லருக்குத் தோழனாகத் துணைநின்றவன். வன்முறையை வளர்த்தெடுத்தவன், வன்முறைக்கே இரையானான்.  இத்தாலியின் சான்சலர் (Chancellor) பொறுப்பேற்கப் புறப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்த்துரைகளோடு எந்த மிலான் (Milan) நகரம் வழியனுப்பிவைத்ததோ, அதே நகர வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்டபோது முசோலினியின் உடல்மீது மக்கள் காறி உமிழ்ந்தார்கள். `முசோலினியின் காலத்தில் வாழ்வதற்குப் பெருமைப்படுங்கள். இதுதான் இத்தாலியின் பெருமை’ என்று முழங்கியவனுக்கு இழிவுச்சாவுதான் இறுதியில் வந்துசேர்ந்தது.

இவையெல்லாம் வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள். வன்முறை எப்போதும் வன்முறையைத்தான் திரும்பத் தரும். அது இருபுறமும் கூரிய முனைகொண்ட ஆயுதம். `எதுவும் எனதில்லை’ என்று வாழ்பவரின் வாழ்க்கைதான் எப்போதும் சிறப்பானது.

ஆசை என்பது துன்பம் தரும் போதை. ஆயிரம் முறை சொன்னாலும் யாரும் அதைத் துறந்துவிடப்போவதில்லை. முட்செடியைத் தின்று நாக்கில் ரத்தம் வடிந்தாலும், ஒட்டகம் மீண்டும் அந்த முட்செடியையே நாடுமாம். ஒவ்வொரு நாளும் துன்பத்தில் துடித்தாலும்,  மனித மனம் ஆசையைத் தேடித்தான் ஊர்வலம் வருகிறது. உடைமை மறுப்புதான் ஆசை என்ற நெருப்பை அணைக்கும் உபாயம். ஆசை இருக்கும்வரை எவ்வளவு இருந்தாலும் மனிதன் ஏழைதான்.

`கர்வம்கொண்டவன் கடவுளை இழக்கிறான். பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான். கோபக்காரன் தன்னையே இழக்கிறான்’ என்பது நம் மண்ணின் முதுமொழி.

குருநாதரும் சீடரும் சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் ஒரு வழிப்போக்கன் இரண்டு பேரையும் சீண்டி, கோபமூட்டுகிறான். ``எங்கே இரண்டு துறவிகளும் போகிறீர்கள்?’’ என்று ஏளனமாகக் கேட்டான். குருநாதர் சிரித்த முகத்தோடு போனார். ஆனால், சீடனுக்குக் கோபம் வந்துவிட்டது. வழிப்போக்கன் முகத்தில் ஓங்கி அறைந்தான். குருநாதர் அவனை விட்டுவிட்டு ஓடினார். சீடனும் `குருவே... என்னை விட்டுவிட்டு ஏன் போகிறீர்கள்?’ என்று கேட்டபடி அவரைத் துரத்திக்கொண்டு போனான்.

அன்பே தவம் - 35

ஓரிடத்தில் நின்று குரு சொன்னார்... ‘கோபத்தின் பிடியில் சிக்கியிருக்கும் உன்னை நான் சீடனாக ஏற்றுக்கொள்ள முடியாது.’  கோபம் பகையை வளர்க்கும்; மனிதத் தன்மையை இழக்கவைக்கும்.
`பகையைக்கொண்டு பகையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அன்பைக்கொண்டுதான் பகையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என்பார் புத்த பெருமான். அவரின் சீடன் பூர்மா என்பவன் பௌத்த தர்மத்தை போதிப்பதற்காகப் புறப்பட்டான்.

``நீ தர்மத்தை போதிக்கும்போது, அந்தப் பகுதி மக்கள் உன்னை வசைச்சொற்களால் திட்டினால் என்ன செய்வாய்?’’ என்று கேட்டார் புத்தர்.

``இவர்கள் நல்லவர்கள். கைநீட்டிக் காயப்படுத்தாமல்,  பேசுவதோடு நிற்கிறார்களே என்று மகிழ்வேன்.’’

``அவர்கள் கைநீட்டி அடித்தால்?’’ 

``எவ்வளவு நல்லவர்கள். ஆயுதங்களால் தாக்காமல் கைகளால் அடிக்கிறார்களே என்று ஆனந்தப்படுவேன்.’’

``சரி… ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினால்?’’ 

``இவர்கள் மிக மிக நல்லவர்கள். பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஒவ்வொருவரும் என்னென்னவோ வழிகளைக் கடைப்பிடிக்கும் போது, இவர்கள் முக்திப் பாதைக்கு  வழி காட்டினார்களே என்று மகிழ்ச்சி அடைவேன்.’’

``பூர்மா... உனக்கு புத்த ஞானம் கனிந்துவிட்டது. போய் வா’’ என்றார் புத்தர். கோபமும் பழிவாங்கும் எண்ணமும் அரக்கப் பண்புகள்.  மன்னிக்கும் மனோபாவம்தான் இறைமையின் சீதனம். இமைப்பொழுதும் சோர்வில்லாமல் தன்னை, தன் ஆசையைத் துறத்தல்தான் துறவுநிலை. அதைத்தான் புத்தர் உலகத்துக்குக் கற்றுத் தந்தார்.  

அமைதியும் சமாதானமும் வன்முறை நெருப்பை அணைக்கிற நீர். தென்மாவட்டச் சாதிக்கலவரங்களின்போது நாம் அமைதிப்பணி ஆற்றினோம். அப்போது நமக்குத் தெளிவாகத் தெரிந்த கசப்பான உண்மை ஒன்று உண்டு. சாதியின் பெயரால் நம் சொந்தச் சகோதரர்கள்தாம் சண்டையிட்டுக்கொண்டார்கள். தாங்கள் உழைக்கும் வர்க்கம், தாங்கள் தமிழர்கள், தாங்கள் சொந்த உறவுகள் என்பதையெல்லாம் மறந்துபோனார்கள். 

`பிராணிகளின் உலகில் சோம்பேறித் தேனீக்களை, உழைக்கும் தேனீக்கள் அழித்துவிடும். ஆனால், மனிதர்களின் உலகத்திலோ சோம்பேறியாக இருக்கும் மக்கள், உழைக்கும் மக்களை அழித்துவிடுகிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார் காரல் மார்க்ஸ். இந்த அவலநிலை மாற வேண்டும்.

சங்க இலக்கியத்தில், `இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்...’ என்ற புறநானூற்றுப் பாடல் நமக்கு உணர்த்தும் முக்கியமான செய்தி ஒன்று உண்டு. `சண்டையிடுதல் தவறு என்பதை மக்கள் உணர வேண்டும். போர் என்றால் அறவே எதிர்க்க வேண்டும். எந்தப் போரிலும் இருவருக்கு வெற்றி கிடைக்காது. ஒருவர்தான் வெற்றி பெறவியலும். வெற்றி பெற்றவரும் மனிதர்தாம். தோற்றவரும் மனிதர்தாம். இதில் வெற்றி, தோல்வி என்ன வேண்டியிருக்கிறது..?’ 

அன்பே தவம் - 35

உலக நாடுகளில் சின்னஞ்சிறிய ஜப்பான், ஒரு முன்னுதாரண நாடு. அங்கிருக்கும் ஹிரோஷிமாவும் நாகசாகியும் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளாகின. வாழும் தலைமுறை மட்டுமல்ல, வளரும் தலைமுறை மட்டுமல்ல, இனி பிறக்கப்போகும்  தலைமுறையும் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளான அவலநிலை. ஆனால், அந்த நிலையிலும் அந்த தேசம் நம்பிக்கை இழந்துவிடவில்லை. தங்களுக்கு அழிவைத் தேடித் தந்த வல்லரசைப் போர்க்களத்தில் சந்திப்பதில்லை என்று முடிவெடுத்தது. தொழில் வணிகக்களத்தில் சந்திக்க முடிவுசெய்தது. சில  ஆண்டுகளிலேயே, உலக வணிகச்சந்தையில் எந்தப் பொருளை எடுத்தாலும் அதில், `Made in Japan’ என்று பொறித்திருக்கும் என்கிற அளவுக்கு உயர்ந்தது.

தீமை செய்தவரை, நமக்குத் துன்பம் செய்தவரை வெல்வது என்பது அவருக்கு நன்மையைச் செய்வது. அன்பால்தான் அதைச் சாதிக்க முடியும் என்பது உலக வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம். அதை அழுத்தமாக மனதில் பதித்துக்கொள்வோம்.

- புரிவோம்...

- படம்: சாய் தர்மராஜ்