மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 30

இறையுதிர் காடு - 30
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 30

இறையுதிர் காடு - 30

இறையுதிர் காடு - 30

அன்று `எது அந்த இன்னொரு சிலை?’ என்ற கேள்வியோடு போகர் பிரானை ஊன்றிப் பார்த்தார்கள் கிழார்கள். புலிப்பாணியும் சங்கனும் அஞ்சுகனும்கூட ஆவலாதியோடு வெறித்தனர்.

``என்ன, எல்லோரும் அப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``ஒரு சிலைதானே தாங்கள் செய்யப்போவதாய்க் கூறியிருந்தீர்கள்?’’ - மெல்லிய குரலில் கேட்டான் அஞ்சுகன்.

``ஏன்... இன்னொன்று கூடாதா?’’

``கூடாதென்றில்லை... கூறவில்லையே தாங்கள் என்றே இப்படிக் கேட்டேன்.’’

``அதுவும் சரிதான்... இப்போதுதான் கூறிவிட்டேனே!’’

``ஒன்று, தண்டபாணி என்பது தெரியும். அந்த இன்னொன்று..?’’ புலிப்பாணி கேட்டான் இம்முறை.

``அதை தண்டபாணியின் திரு உருவம் முற்றுப்பெறும் சமயம் நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.’’

``இதில்கூடவா ரகசியம்?’’

- இது ஒரு கிழார்.

போகர் உடனே அவர் பக்கம் திரும்பினார், ``என்ன சொன்னீர்... என்ன சொன்னீர்?’’

``இல்லை... இதில்கூடவா ரகசியம் என்று கேட்டேன்.’’

``அப்படியானால், என்னிடம் அநேக ரகசியங்கள் இருப்பதாகக் கருதுகிறீர்கள், அப்படித்தானே?’’

``ஆம் பிரானே... `மண் புழுதியிலிருந்து மலைப் பாறை வரை, நினைத்தால் தங்கமாக்கிவிடுவேன்’ என்றீர்கள். ஆனால், அது எப்படி என்பது ரகசியமாகவே உள்ளதே!’’

இறையுதிர் காடு - 30

``ஒரு பறவைபோல் ஒரு மனிதன் பறப்பது என்பது எவ்வளவு இனிய விஷயம்! கூடு விட்டுக் கூடு பாய்வது என்பதும் எவ்வளவு அரிய விஷயம். இவை நாங்கள் அறிந்திடாத ரகசியங்கள் அல்லவா?’’

``நினைத்த மாத்திரத்தில் சீனம், ரிஷ்யம், அஸ்வதீபம், அரேபியம், மதினம், மக்கம், இலங்கை என்று எங்கும் சென்று வர உங்களால் முடிகிறது. இவையெல்லாமும் ரகசியங்கள் தானே?’’

எல்லோருமே கேள்வி கேட்டார்கள். போகர் பிரான், எல்லோரையும் வியப்பு, புன்னகை, சிந்தனை என்று மூவகைக் கலவையோடு பார்க்கலானார்.

``நாங்கள் ஏதும் தவறாகப் பேசிவிட்டோமா பிரானே?’’

 - சற்றே பயத்துடன் கேட்டார் கிழார் ஒருவர்.

``இல்லை இல்லை... இப்படி நீங்கள் வெளிப்படையாகப் பேசுவது சிறந்த விஷயம். நான் உங்களையெல்லாம் எவ்வளவு பாதித்திருக்கிறேன் என்பதை இதன்மூலம் எண்ணிப்பார்க்கிறேன். நீங்கள் இப்படியெல்லாம் கேட்கும்போதுதான் என்னிடம்கூட அநேக ரகசியங்கள் இருப்பது எனக்கே தெரிகிறது. உண்மையில் அவை ரகசியங்கள் அல்ல... எனக்கு மட்டுமே வசப்பட்டவை. அவற்றைப் பற்றி நான் பெருமையாகப் பேசுவது சித்தலட்சணம் ஆகாது. உண்மையில் ஒரு சித்தன் பெருமைகொள்ள எதுவுமில்லை. பெருமைகொண்டால் அவன் முழுச் சித்தனுமல்லன். பெருமை, சிறுமை எல்லாமே பற்றுள்ளோருக்கு மட்டுமே.

நான் உங்கள் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் கூற விரும்புகிறேன். எனக்கு வசப்பட்ட சக்திகள் உங்களுக்கும் வசப்படவேண்டுமானால், நீங்கள் சித்தன் ஆக வேண்டும். இதுதான் அந்த ஒரு வரி! அறுசுவை உணவை ருசித்துக்கொண்டும், ஆசைகளை வளர்த்துக்கொண்டும் திரும்பத் திரும்பப் பிறக்கும் பிறப்பாக நீங்கள் உள்ள வரை, என் போன்றோருக்கு வசப்பட்டவை உங்களுக்கு வசப்படாது. இவையெல்லாம் ரகசியமாகவும் அதிசயமாகவும் தெரியும்’’
- போகரின் பதில், கிழார் ஒருவரின் முகத்தைச் சற்றுச் சுளிக்கவைத்தது. தலையைத் தாழ்த்திக்கொண்டு முகத்தைச் சுளித்த அவரை போகரும் கவனித்தார்.

``என்ன கிழாரே... என் பதில் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லைபோல் தெரிகிறதே?’’

``ஆம் பிரானே... தங்களைப்போல் நாங்களும் சித்தன் ஆனாலே எல்லாம் கிட்டும் என்றால், அது எப்படி?’’

``ஓர் ஓவியம் வரைய வேண்டும் என்றால், ஓவியன் ஆனால்தானே அது சாத்தியம்?’’

``ஆசானாக இருந்து கற்றுக் கொடுத்தால் ஆகிவிட்டுப் போகிறோம்.’’

``கலைகளைக் கற்றுத்தர முடியும். ஆனால், சித்த நிலை என்பது கற்று வருவதல்ல;  கர்மத்தால் வருவது.’’

``அப்படியானால்?’’

``உங்கள் ஜாதகம் இடமளிக்க வேண்டும்.’’

``ஜாதகம் இடமளிக்க வேண்டும் என்றால்?’’

``புலி... இந்தக் கேள்விக்கு மட்டும் இவருக்கு நீயே விளக்கம் கூறு. உனக்கும் பயிற்சி எடுத்ததுபோல் இருக்கும்.’’

``நன்றி குருபிரானே...’’ என்ற புலிப்பாணி, கிழார்களை ஊன்றிப் பார்த்தவனாக விளக்கமளிக்கத் தொடங்கினான்.

``கிழார் பெருமக்களே! நமது இப்பிறப்பு என்பது நம் முன் பிறப்பின் தொடர்ச்சியே. முன் பிறப்பு என்பது, மனிதப் பிறப்பாகவும் இருக்கலாம், ஏனைய உயிரினமாகவும் இருக்கலாம். அதை, பிறக்கும் நேரமும், அந்த நேரத்தில் விண்ணில் நிலைகொண்டிருக்கும் கோள்களும் நமக்கு உணர்த்திவிடும்.

ஒரு மனிதன் தனக்கென ஒரு பெயர் இல்லாமல்கூட இருந்துவிட முடியும். பிறந்த நேரம் என்னும் காலக்கணக்கு இல்லாமல் மட்டும் இருக்கவே முடியாது. அந்தக் கணக்குக்குள்தான் எல்லாமே அடங்கியுள்ளன. கணக்குதான் ஜோதிடம்! ஜோதி உள்ள இடம் என்பதால், `ஜோதிடம்’ என்றும், நாம் யார் என்று அறிய அதை நாம் சோதித்துப்பார்ப்பதால் அதை `சோதிடம்’ என்றும் நம் முன்னோர் அதுகுறித்துக் கூறுவர்.

இந்தச் சோதிடத்தில் லக்னம்தான் ஒருவருக்குத் தலையானது. இது தாயைப் போன்றது என்றும் கூறலாம். ஒரு நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுக்குள்ளும் அந்த நாளின் நட்சத்திர ஆதிக்கம், லக்னத்துக்குரிய கிரக ஆதிக்கம், ஏனைய கோள்களின் ஆதிக்கம் நிரம்பியுள்ளன. காற்று எப்படி கண்களுக்குப் புலனாகாமல் உணர்வாய்ப் புலனாகிறதோ, அதேபோல் கோளாதிக்கமும் மனித உடலில் கண்களுக்குப் புலனாகாதபடி தன் செயலைச் செய்தபடியுள்ளது. அதன் ஆதிக்கப் படியே நாம் செயல்படுகிறோம். இதில் சந்திரன் மனமாகவும், சூரியன் ஆன்மாவாகவும், செவ்வாய் வீர உணர்வாகவும், புதன் நுட்ப அறிவாகவும், வியாழன் அருளாகவும், வெள்ளி உல்லாச சந்தோஷமாகவும், சனி காரண காரிய சக்தியாகவும் எல்லா உயிர்களுக்குள்ளும் செயலாற்றுகின்றன. இவைபோக நிழற்கிரகங்களான ராகு-கேது உள்ளன. இதில் ராகு மறைந்தால் நற்பயன், நிறைந்தால் இடத்துக்கேற்ப தீய பயன், எதிர்பாராத அதிர்ஷ்டம், திருப்பம், பட்டம், பதவி இவை எல்லாமும்கூட ராகுவின் அமைப்பைப் பொறுத்ததே!

கேதுவுக்கும் இப்படி ஒரு தன்மை. ஆனால், ஒரு மனிதன் சந்நியாசியாகவும் சித்தனாகவும் கேது என்னும் கோளே பெரிதும் காரணமாகவுள்ளது. ஆதலால் `ஞானகாரகன்’ என இதை அழைக்கிறோம். இவையெல்லாம் பொதுவான கூற்று! மேற்சொன்ன வற்றில் கிரக சேர்க்கைகள் மற்றும் அவை உள்ள இடங்கள் போன்றவை, இந்தப் பொதுவான பலனை மாற்றிவிடும். அதைத் துல்லியமாகக் கண்டறிந்து கூற வேண்டும்’’
- புலிப்பாணி தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பெரிய ஒரு விளக்கமே அளித்து முடித்தான். அதைக் கேட்டு மேலும் சலனத்துக்கே முன்பு கேள்வி கேட்ட அந்தக் கிழார் ஆளானார்.

``என்ன கிழாரே, இந்த விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையா?’’ 

- போகர் நிமிண்டினார்.

``ஆம் போகர் பிரானே! கோள்கள் எங்கோ உள்ளன. நாம் இங்கே உள்ளோம். அவை எப்படி நம்முள் புகுந்து செயல்பட முடியும்? என்னை நான் அல்லவா இயக்குகிறேன். அவை இயக்குவதாகக் கூறுவது எப்படி?’’

`` `கண்களுக்குப் புலனாகாத கதிர்களால்’ என்று புலிப்பாணி கூறியதை, தாங்கள் கேட்கவில்லையா?’’

``அங்கேதான் இடிக்கிறது. கண்களுக்குப் புலனாகாத ஒன்றை இந்த ஜோதிடர்கள் மட்டும் எப்படி அறிந்தனர்? இவர்களுக்கு மட்டும் அது எப்படிப் புலப்பட்டது?’’

``கட்டப்படி எல்லாம் நடப்பதை வைத்துதான்... வேறு எப்படி அறிய முடியும்?’’

``அப்படியானால், நாங்கள் உங்களைப்போல் அஷ்டமா சித்திகளை அடைய வேண்டும் என்றால், இப்போதுள்ள நிலையில் முடியாதா?’’

``புலன்களை அடக்காமல், உடம்பை வெற்றிகொள்ளாமல், மனம் கட்டுப்படாமல் அது சாத்தியமே இல்லை.’’

``செயலற்றுப் பிணம்போல் கிடக்க வேண்டும் என்கிறீர்களா?’’

``உடல், பிணம்போல் ஆக வேண்டும். ஆனால், உள்ளம் விழித்திருக்க வேண்டும்.’’

``அது எப்படி?’’

``அதற்கே தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.’’

``தியானத்தில் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, தான் யார் என்பதேகூடத் தெரியாத ஒரு சூன்ய நிலைக்கு அல்லவா செல்கிறார்கள். அது எப்படி விழிப்புநிலையாகும்?’’

``கிழார்களே... கேட்பது நன்றுதான். அதேசமயம், கேட்டபடியே இருப்பது நன்றல்ல. எதையும் முயன்றுபார்க்காமல் கற்பனை செய்துபார்த்து, அனுமானங்களுக்கு வராதீர்கள்.’’

``முயன்றுபார்ப்பது என்றால்?’’

``புலிப்பாணியின் ஜோதிடம் உங்கள் வரையில் என்ன சொல்கிறது என்பதைத்தான் அலசிப் பார்த்துவிடுங்களேன்.’’

``ஒரு வகையில் நல்ல யோசனைதான்.’’

``எனக்கும் உங்களுக்கு வந்ததுபோல் சந்தேகங்கள் வந்தன. என் சக்தி என்பது, இந்த உடல்சார்ந்த மனம்சார்ந்த சுயமா அல்லது அது கோள்களின் வழிநடத்தலா என்பதை நான் பரிசோதித்து உணர்ந்த பிறகே, என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. நான், நீங்கள் அழைக்கும் சித்தன் ஆனேன்.’’

``அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’

``உங்கள் பிறந்த கால நேரத்தை புலிப்பாணியிடம் கூறுங்கள். அதைக்கொண்டு அவன் ஜாதகம் கணித்து உங்கள் முற்பிறப்பு இப்பிறப்பு அடுத்த பிறப்பு என்று சகலத்தையும் கூறிவிடுவான். அவன் சொல்வதுபோல் எல்லாம் நடந்தால் நம்புங்கள். இல்லாவிட்டால், உங்கள் கருத்துகளை நான் பரிசீலனை செய்கிறேன்.’’

``அப்படியே செய்கிறோம்...’’ என்ற கிழார்கள், புலிப்பாணியிடம் தங்களின் பிறந்த நாள் நேரத்தைக் கூறினர். வேல்மணிக் கிழாருக்கு அந்த வகையில் பதிவே இல்லை. அவர் பிறக்கும்போதே தாயானவள் இறந்துவிட்டாள். உறவுகளால் வளர்க்கப்பட்ட அவர்குறித்து மட்டும் காலப்பதிவு இல்லை. அவரும் மற்றவர்களுக்கு நடப்பதைவைத்தே தான் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதாகக் கூறவும், தங்கத்தில் தொடங்கிய விவாதம் மீண்டும் தங்கத்திடமே வந்து நின்றது.

``பிரான் அவர்களே... எங்கள் எதிரில் தாங்கள் கல்லையோ, மண்ணையோ, இரும்பையோ, செம்பையோ தங்கமாக்கிக் காட்டுவீர்களா?’’ என்று கேட்டு, அவரைப் பணிவோடு பார்த்தனர்.
``சந்தேகமா?’’ - ஒரு வார்த்தையில் கேட்டார் கிழார்.

``சத்தியமாக இல்லை. ரசவாதம் என்பது நிஜம். அது ஒரு பேராற்றல் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாய்த் திகழ விரும்புகிறோம்.’’

``எதற்கு சாட்சியெல்லாம்?’’

``நாளை இந்த உலகம் இதை நம்ப மறுக்கலாமல்லவா?’’

``அதைப்பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’’

``இப்படிச் சொன்னால் எப்படி?’’

``சரி... உங்களுக்காக நான் இப்படிச் சொல்கிறேன். ரசவாதம் பொய்! அது ஓர் ஏமாற்று வேலை. அவ்வளவு ஏன், சித்தன் என்பவனே ஏமாற்றுக்காரன் தான். அவனை யாரும் நம்பாதீர்கள். அவனைப் புறக்கணித்துவிடுங்கள்... போதுமா?’’
- போகர் பிரான் அப்படி ஒரு பதில் சொல்வார் என்று அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

இறையுதிர் காடு - 30

அப்போது இரு கொல்லர்கள் தங்களின் கருவி மூட்டைகளுடன், இருமட்டக் குதிரை மேல் அவை இருக்க, போகரின் அந்த வாயவியபாக வளாகம் முன் வந்து நின்றனர். போகர் முன் மெத்த பணிவோடு வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

``போகர் பிரானுக்கு எங்கள் கும்பிடு! நாங்கள் கருவூர்க் கொல்லர் பெருமக்கள். என் பெயர் செங்கான். இவன் என் சகோதரன் ஆழிமுத்து. சிலை அச்சு செய்யக் கொல்லர்கள் வேண்டும் என்ற தங்களின் அழைப்பை அறிந்து, தங்கள் கொட்டாரகர் இடும்ப மூப்பர் என்பவரால் அனுப்பப்பட்டுள்ளோம்’’ என்றனர்.

``அடடே தாங்கள்தானா அவர்கள். சற்றுமுன் தான் சிமிழிப்புறாவிடமிருந்து தகவல் வந்தது. தங்கள் வரவு நல்வரவாகட்டும். குதிரைகளை மேய விட்டுவிட்டு, பணிப்பொருள்களையும் வைத்துவிட்டுப் போய்க் குளித்துவிட்டு வாருங்கள். உங்களுக்கு நான் ஏற்பு தீட்சை வழங்கிய பிறகு மற்ற விஷயங்களைப் பேசுவோம்’’ என்றார்.

அவர்களும் அவ்வாறே செய்ய ஆயத்தமாயினர். கிழார்களோ வருத்தமும் குழப்பமுமாய் போகர் பிரானையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

இன்று  பங்களா நோக்கி நடக்கையில் ஆங்காங்கே துண்டுத் துண்டாகக் கிடந்த சில மரக் கிளைகள், புல்டோசர்களும் பொக்லைனர்களும் கடந்த தடயங்கள் ஆகியவை, அந்தச் சிலுசிலு தோட்டப் பகுதியைக் காயம்பட்ட யுத்த பூமிபோலக் காட்டின.

சாந்தப்ரகாஷுக்குக் கண்கள் கரித்தன. இழையிழையாய் இளம்பிள்ளையில் ஓடி ஆடிய நினைவுகள் தோன்றத் தொடங்கின. கோடைக்காலத்தில் தேர்வடக் கயிற்றால் ஓர் ஆள் உறங்கும் அளவுக்குப் பலகைகொண்டு அந்த மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி, காலால் உந்தி உந்தி ஆடியபோது உடம்பில் ஏற்பட்ட பரவச உணர்வு மூளைச் செல்களில் அப்படியே பதிவாகிவிட்டதுபோலும்.

மீண்டும் அந்த மரக்கிளைகளைக் காணும்போது, அந்தச் செல்கள் தூண்டப்பெற்று அதே பரவச உணர்வு குறுதியில் தோன்றத் தொடங்கியது. தோட்டப் பரப்பைக் கடந்து கட்டடப் பகுதிக்குள் கால் வைக்கவும் நெஞ்சில் கரகரத்தது. வேலைப் பாடுள்ள நிலைக்கால்களையோ, ஜன்னல்களையோ, கதவுகளையோ சுத்தமாய்க் காண முடியவில்லை. அவ்வளவையும் துரியானந்தமும் அவன் மகன் குமரேசனும் ஒரு சேட்டின் உதவியோடு அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விட்டது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

``என்ன தாத்தா இது கோரம்..?’’ என்று வாய்விட்டுக் கேட்கவும் தாத்தாவிடமும் ஒரு பெருமூச்சு.

``மச்சு வீடு கட்டி ஆண்டு அனுபவிச்ச ஒரு வீட்டை ஓட்டையும் ஓடசலுமா பார்க்கிறது கோரம்தான்யா... கோரம்தான்.’’

``இடிச்சது இடிச்சாங்க முழுசா இடிக்காம இப்படியே விட்டுட்டாங்களே..?’’

``அவங்க எங்க விட்டாங்க... நம்ம சாமி விடவெச்சாரு.’’

``நீங்க சொல்றதை எப்படி நம்புறதுன்னே தெரியலை எனக்கு.’’

``நம்ப கஷ்டமாதான் இருக்கும். இந்தக் காலம் அப்படி... நானும்தான் பார்க்கிறேன்ல? முந்தியெல்லாம் பாங்க்ல பணம் போடவும் எடுக்கவும் போனா, பல மணி நேரம் ஆகும். டோக்கன் வாங்கி வரிசையில நின்னு பணத்தைக் கட்டியும், எடுத்து வரவும் அம்புட்டு நேரமாகும். இப்ப, அஞ்சுக்கு அஞ்சடி சதுர அறைக்குள்ளார ஒரு இயந்திரம் எப்ப வேணா வந்து பணத்தை எடுத்துக்கன்னுது. அந்த வேலை பார்த்தவங்க இப்ப என்ன பண்றாங்கன்னும் தெரியலை!

கொஞ்சம் பெரிய தீப்பெட்டிகணக்காதான் இருக்குது இந்த செல்போனு. இது உலகத்தோட எந்த மூலைக்கும் நம்ம பேச்சைக் கொண்டு போகுது, கொண்டும் வருது. இதுல பழைய சிவாஜி கணேசன் படம், பாகவதர் படம்லாமும் பார்க்க முடியுது. என் கொள்ளுப்பேத்தி, படத்தைப் போட்டு கையில கொடுத்துரும். காதுக்குள்ள புளியங்கொட்டைகணக்கா ஒண்ணை அமுக்கிவிடும். நல்லா கேட்கும். சினிமா கொட்டாயில முட்டி மோதி டிக்கெட் வாங்கி மண்ணைக் குவிச்சு அது மேல உட்கார்ந்து பார்த்த படங்களையெல்லாம் இப்ப உள்ளங்கைக்குள்ளார வெச்சுப் பார்க்கையில, சினிமா வளர்ந்துகிட்டிருக்கா இல்லை செத்துக்கிட்டிருக்கான்னும் தோணும். நானும்தான் எல்லாத்தையும் பார்க்கிறேன்ல...’’

``அப்புறம் எப்படி தாத்தா பாம்பு ரூபத்துல என் கொள்ளுத்தாத்தா நடமாடுறார்னு நம்புறீங்க?’’

``அப்படி நடமாடினா நம்பித்தானே தம்பி தீரவேண்டியிருக்கு’’ - தாத்தாவிடம் சளைப்பே இல்லை. அதற்குள் அந்தப் பாதாள அறைப் பகுதி வந்து தரைப்பாகத்தில் தரையோடு தரையாக உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரிந்த மரப்பலகையின் பிடிக்கம்பியைச் சற்றே நடுங்கும் கரங்களால் தேடிப் பிடித்து சிரமப்பட்டுத் தூக்க முனைந்தார் தாத்தா. அவர் சிரமப்படவும் சாந்தப்ரகாஷே தூக்கினான். கீழே சரேல் என்று மர ஏணி போல் அந்தச் சரிவு. சாந்தப்ரகாஷுக்கு நெற்றி நரம்பில் கட்டெறும்புக் கூட்டம் ஊர்ந்து செல்வதுபோல் ஓர் உணர்வு.

இறையுதிர் காடு - 30

``இங்கே இப்படி ஒரு அறையா?’’

``ஆமா தம்பி... வாஸ்து பார்த்துக் கட்டிய அறை. இந்தப் பகுதி, இந்த பங்களாவோட ஈசான்ய பாகம்.’’

`` `ஈசம் தாழ கன்னி ஓங்க வாயு அக்னி கூடாது குறையாது சதுரம்கொள்ள வாசம் புரியும் மனையில் லட்சுமி கூத்தாடுவாள் என்று நினை’ன்னு ஒரு வாஸ்துப்பாட்டே இருக்கு. அரங்கநாத முதலிங்கிறவர் `வாஸ்து ரகசியங்கள்’னு எழுதிய புத்தகத்துல இதெல்லாம் இருக்கு.’’

``அப்படிக் கட்டிய வீடா இது?’’

``அரண்மனைன்னு சொல்லுங்க.’’

``எங்கே இப்ப லட்சுமி கூத்தாடுறா... எல்லாம் கோரமால்ல இருக்கு?’’

``கொண்டாட வேண்டாமா? தங்கமேயானாலும் அப்படியே வெச்சிருந்தா பூஞ்சை படியத்தானே செய்யும்!’’

அவரின் சரியான பதில் அவனைக் கட்டிப் போட்டது. அவர் டார்ச்லைட் கொண்டு வந்திருந்தார். அதன் வட்ட வெளிச்சம் வழிகாட்ட உள்ளே இறங்கத் தொடங்கினார். முன்னதாக, கைகளைக் கூப்பிக்கொண்டு ``நமசிவாயம் நமசிவாயம் ஹரி நாராயண நமசிவாயம்... நமசிவாயம் நமசிவாயம் போகரானந்த நமசிவாயம்... நமசிவாயம் நமசிவாயம் சாந்தப்ரகாஷ பூபதி நமசிவாயம்...’’ என்று இறை வணக்கப் பாடல்போல் சொல்லிவிட்டுத்தான் உள் படிகளில் காலை வைத்தார்.
அவரின் இறை வணக்கத்தில் தன் பெயரைச் சொல்லி வணங்கியது அவனுக்கே ஆச்சர்யம். அவரைப் பின்தொடர்ந்து இறங்க விழைந்தவன் சாருபாலாவைப் பார்த்து ``சாரு... நீ இறங்காதே. டோன்ட் டேக் ரிஸ்க் நௌ - யு ஆர் கேரியிங்! நான் போய்ப் பார்க்கிறேன்’’ என்றான். பிறகு, தடுமாறியபடி இறங்கியவன்மேல் வட்ட வெளிச்சம் விழுந்து வழிகாட்டியது. இறங்க இறங்க விபூதி வாசம் மூக்கில் ஏறியது.

``தாத்தா... என் பேரைச் சொல்லி `நமசிவாயம்’னீங்களே அது எதுக்கு?’’ என்று கேட்கவும்செய்தான்.

``அது உங்க பேர் இல்ல... உங்க கொள்ளுத்தாத்தன் பேர். என் சாமி பேர்...’’ - அவர் குரல் எக்கோ அடித்தது.

``இங்கே இப்ப எதுக்கு வந்திருக்கோம்?’’

``இதுதான் என் சாமியோட தவக் கொட்டாரம்’’ - சொன்னபடி வட்ட வெளிச்சத்தைச் சுழற்றியதில் சுவரில் வரையப்பட்டிருந்த பழுப்பேறிய சிவலிங்க உருவம் கீழே கும்பிடுவதுபோல் வரையப்பட்டிருக்கும் போகரின் உருவம் என எல்லாம் தெரிந்தன.

``ஜில்லுன்னு இருக்கே... நான்கூட புழுங்கும்னு நினைச்சேன்.’’

``அதான் ஈசான்யம். இங்கே சூடேறினா அப்ப வெளியே மழை வரும்னு அர்த்தம்.’’

``புதுசு புதுசா என்னென்னமோ சொல்றீங்களே...’’

``எல்லாமே வாஸ்து விஷயம் தம்பி. ரொம்பப் பழசு. ஆனா, உங்க காதுல இப்பதான் விழுது’’ - தாத்தா, பேச்சோடு பேச்சாக நாலாபுறமும் டார்ச்லைட் வெளிச்சத்தை உருட்டி, பெட்டியைத் தேடினார். ஆனால், அதைத்தான் துரியானந்தமும் அவன் மகன் குமரேசனும் கொண்டுபோய் விட்டார்களே?

பழநி - மதுரை சாலைமேல் குழந்தை வேலப்பர் கோயில் முன், ஓலாவில் வந்து இறங்கிய அரவிந்தனோடு ரிப்போர்ட்டர் செந்திலும் இருந்தான். பெரிதாய்க் கூட்டமில்லை. வெளியே சாலைமேல் மட்டும் நொடிக்கொரு வாகன ஓட்டம்.
``சார்... அந்தப் பண்டாரத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கு. இங்கே ஒரு இட்லிக்கடை இருக்கு. அந்தக் கடைக்காரர்தான் பண்டாரத்துக்கு தினமும் இட்லி சாப்பிடத் தருவாராம். அப்படித் தர ஆரம்பிச்சதுல இருந்து நல்ல வியாபாரமாம். அங்கே போய்க் கேட்டா தெரிஞ்சிடும்’’ என்றான் செந்தில் தன் கேமரா பேக்கைத் தோள் மாற்றியபடி.

அப்படியே போய்க் கேட்கவும், கல்லாவில் அமர்ந்திருந்த அந்தக் கடை முதலாளி ``சாமிய பார்க்கணுமோ?’’ என்றார் ரூபாய் நோட்டை எண்ணியபடி.

``ஆமாங்க.’’

``எதுக்கு?’’

``முக்கியமான ஒரு மேட்டர்.’’

``அது என்ன கேமரா பேக்கா?’’

``ஆ... ஆமா...’’

``பத்திரிகைக்காரரா?’’

``ஆமா...’’

``போயிருங்க. சாமி கண்லயே பட மாட்டார்.’’

``இப்படிச் சொன்னா எப்படிங்க... நீங்க சொல்லுங்க. நாங்க பார்த்துக்கிறோம்.’’

``தன்னை எடைபோட்டுப் பார்க்க வர்ற யாரையும் சாமி பார்க்க மாட்டார். நீங்க இந்த மண்ணுல கால் வைக்கவுமே அவருக்குத் தெரிஞ்சிடும். இந்நேரம் அவர் கவுண்டர் தோப்புல - தோப்பை விட்டுக் கிளம்பியிருப்பாரு.’’

``நாங்க எடையெல்லாம் போட வரலை... அவர்கிட்ட உதவி கேட்க வந்திருக்கோம்.’’

``ஏன் கும்பிட வந்தோம்னு சொன்னா குறைஞ்சுபோயிடுவீங்களோ!’’ - கிட்டத்தட்ட அந்த இட்லிக்கடைக்காரர் பண்டாரத்தின் பி.ஏ போலவே கேள்வி கேட்டார், பதிலும் சொன்னார்.

அதுவரை பேசாமல் இருந்த அரவிந்தன் ``ஐயா... நான் அவரை ரொம்பவே மதிக்கிறேன். அவர் ரொம்பப் பெரியவர். அவர் உதவி, ஒரு விஷயத்துல தேவைப்படுது’’ என்றான்.

``யாருக்கு என்ன சிக்கல்?’’

``அது...’’

``எதுக்குன்னு சொன்னா நான் இங்கேயே சொல்லிடுவேன், அது நடக்கும் நடக்காதுன்னு...’’

``நாங்க உங்களைக் கேட்டு வரலையே..?’’

``நக்கலா... எனக்கு சாமியைப் பற்றி நல்லா தெரியும். சொல்லப்போனா நான்தான் அவருக்குச் சோறு போட்டுக்கிட்டிருக்கேன்.’’

``அது வந்து...’’

``சும்மா சொல்லுங்க... செய்வினையெல்லாம் சாமி வெக்க மாட்டார்... எடுக்கவும் மாட்டார். சாமி அந்த வகையில சுத்த சைவம்!’’

இட்லிக் கடைக்காரரின் பேச்சு அப்படியெல்லாம் கூட விஷயங்கள் இருப்பதை அரவிந்தனுக்கு உணர்த்தவும், அவனுக்கு ஜிலீர் என்றானது. சில விநாடிகள் பேச்சே வரவில்லை.

``பொம்பள சமாசாரம், வசியம், மாந்திரீகம்னு அந்தப் பக்கமே போக மாட்டார். ஆனா, பார்த்த மாத்திரத்துல எதுக்கு வந்தேன்னு சொல்லிவிடுவார்.’’

``அப்ப நீங்க எதுக்கு இத்தனை கேள்வி கேட்கிறீங்க? நாங்க அவரைப் பார்க்கிறதுக்கு முந்தி எங்ககிட்ட மேட்டரைக் கறந்து அவருக்குச் சொல்றதுக்கா?’’
 - செந்தில் சற்றுக் கோபமாகக் கேட்டேவிட்டான். இட்லிக் கடைக்காரருக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. உள்ளே சப்ளையில் இருந்த லுங்கி பனியன் மட்டுமே அணிந்திருந்த ஒரு பெரியவர், செந்தில் கேள்வியை ரசிப்பதுபோல் சிரித்தார்.
 அரவிந்தன் கவனித்தான்.

``ஐயா, எதுக்கு இப்படி நோண்டிக்கிட்டு? இப்படி நீங்க பேசறது மட்டும் சாமிக்குத் தெரிஞ்சா நல்லதில்லையய்யா. இருக்கிற இடத்தைக் காட்டிவிடுங்க...’’ என்று அவரே நான்கு இட்லியோடு கெட்டிச் சட்னி வைத்துக் கட்டியபடியே சொன்னது, அவர் காதைத் திருகி மண்டையில் குட்டியதுபோல் இருந்தது.

``நீ மூடிகிட்டு வேலையப் பார். எனக்கு என்ன செய்யணும்னு தெரியும்’’ என்று பதிலுக்குக் கோபப்பட்டவர், ``கவுண்டர் காட்டுக்குப் போய்க் கேளுங்க. அங்கேதான் எங்கேயாவது உட்கார்ந்திருப்பார்’’ என்றார்.
``கவுண்டர் காடு எங்கே இருக்கு?’’

``நேரா போனா இடப்பக்கம் மண் பாதை போவும். அதுல போங்க. ஒரு மளிகைக்கடை வரும். தாண்டுங்க... கவுண்டர் தென்னந்தோப்பு அங்கே இருந்தே ஆரம்பம்.’’

``இதை ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கலாமே...’’ என்ற முணுமுணுப்போடு ``வாங்க சார்...’’ என்று வேகமாய் நடக்கத் தொடங்கினான் செந்தில்.

இறையுதிர் காடு - 30

ஹாஸ்பிடல்! முகப்பு போர்ட்டிகோவில் தேங்கிய ஃபோக்ஸ்வாகனிலிருந்து அந்த வடநாட்டு ஜோசியரோடு உதிர்ந்துகொண்டிருந்தாள் பானு. கட்சிக்காரர்கள் கூட்டம் நிறையவே இருந்தது. பத்திரிகையாளர்களும் தென்பட்டனர். ஒரு பத்திரிகைக்காரர், கணேசபாண்டியனிடம் ராஜா மகேந்திரன் உடல்நிலை பற்றிக் குடைந்துகொண்டி ருந்தார். அவருக்கு எப்படித்தான் தெரிந்ததோ! ``குமாரசாமிங்கிறவர் கொடுத்த சாபத்தாலதான் ஐயா இப்படிக் கிடக்கிறார்னு சொல்றாங் களே?’’ என்று அவர் கேட்கவும், கணேச பாண்டியனுக்கு வியர்த்தேவிட்டது.

``அப்படியெல்லாம் எதுவுமில்லீங்க..!’’ எனும் போது ஜோதிடரும் பானுவும் நெருங்கி வந்தனர்.

``நீங்க ஊருக்குப் போகலையா ஜி?’’ என்று கணேசபாண்டியன் ஜோதிடரை நெருங்கி வந்து கேட்கவும்,
``எம்.பி-யை நடக்கவெச்சு அவர் நடக்கிறதைப் பார்த்துட்டுதான் போவேன்’’ என்றார் அந்த ஜோதிடர்.

``என்னவோ போங்க.... இப்பகூட டாக்டர் ஒருத்தர் 80% பொழைக்கவே வாய்ப்பு இல்லைன்னுட்டுப் போறாரு. நீங்க இப்படிச் சொல்றீங்க!’’

``ஆமா... எங்கே எம்.பி-யோட அம்மா, பொண்ணு எல்லோரும்?’’

``எல்லோரும் சாமி கும்பிட பழநிக்குப் போயிருக்காங்க.’’

``சீரியஸ்னு அவங்களுக்குத் தெரியுமா?’’

``கொஞ்ச நேரம் முந்திதான் போன்ல சொன்னேன். கிளம்பி வந்துகிட்டிருக் காங்க’’ - கணேசபாண்டியன் பதில், ஜோதிடரை பானுவை நோக்கித்தான் பார்க்கவைத்தது. இருவரும் ஒதுங்கினர்.

``ஜி...’’

``இப்பவே பங்களாவுக்குப் போறோம் பானு. அந்தப் பெட்டியை இந்த முறை நான் உடைக்கப் போறேன்.’’

``ஐயோ... பாரதி மேடம் வந்தா அவ்வளவுதான்!’’

``உங்க அப்பாவைக் காப்பாத்ததான் உடைச்சேன்னு நான் சொல்லிக்கிறேன்.’’

``அதை இப்ப எதுக்கு உடைக்கணும்?’’

``எம்.பி-யைக் காப்பாத்துற மருந்து அதுக்குள்ளே தான் இருக்கு பானு. கூடவே, எனக்குத் தேவைப்படுற பல விஷயங்கள் அதுக்குள்ளே இருக்கு!’’ - ஜோதிடர் முகத்தில் அதீதமான ஒரு குரூரப் பிரகாசம்.

- தொடரும்

- இந்திரா சௌந்தர்ராஜன்,  ஓவியங்கள்: ஸ்யாம்