மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 31

சிவமகுடம் - பாகம் 2 - 31
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 31

சிவமகுடம் - பாகம் 2 - 31

சிவமகுடம் - பாகம் 2 - 31

பாடம் சொன்ன ஞானப்பிள்ளை!

ந்தப் பிள்ளையின் வருகையால் கோலாகலம் பூண்டது திருவடுகூர். சிவநாதமாக ஒலியெழுப்பி ஆலய மணி அழைக்க, ஊரே ஒன்றுதிரண்டது ஆலயத்தில். `பூம்பூம்’ என்று மங்கலச் சங்கம் முழங்க, `தொம் தொம்’ என்று குடமுழவுகள் ஒலியெழுப்ப, கூடவே நாகஸ்வர நாதமும் சேர்ந்துகொள்ள, அரை நாழிகைப் பொழுதுக்குள் திருக்கயிலாயமாகப் பொலிவு பெற்றது அந்தக் கோயில். 

சிவமகுடம் - பாகம் 2 - 31

அங்கு கூடியிருந்த எல்லோருக்குள்ளும் பரவசம்; அனைவர் முகத்திலும் ஆனந்தம். அதன் உச்சமாக எவரோ ஓர் அடியார் `நமசிவாய’ என்று உரத்துக் குரலெழுப்ப, பதிலுக்குக் கூட்டமும் வெகு உற்சாகத்துடன் பஞ்சாட்சர முழக்கம் செய்தது. கூட்டத்திலிருந்த ஆடவரெல்லாம் சிவகணங்களாகவும், பெண்கள் அனைவரும் அரம்பையராகவுமே தோன்றினார்கள் அந்தப் பிள்ளைக்கு.

அன்றலர்ந்த கமலமாகத் திருமுகம் பொலிவுற்றுத் திகழ, மேனியெங்கும் வெண்ணீற்றின் மணம் கமழத் திகழ்ந்த அந்தப் பாலகன், திருச்சுற்றிலிருந்து கருவறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்தத் தளிர்நடையைக் கண்டவர்களுக்குக் கொன்றைவார்சடையனும், பொன்னார் மேனியனும், பிறைமுடியோனுமான அந்தக் கயிலைநாதனே இப்படிப் பால வடிவில் வந்து சேர்ந்திருக்கிறான் என்றே எண்ணம் தோன்றியிருக்க  வேண்டும். விளைவு, அதீதப் பரவசத்துக்கு ஆட்பட்டு உரக்க முழங்கினார்கள் பஞ்சாட்சரத்தை.

எனினும், அந்தப் பிள்ளை கருவறையில் கொலுவிருக்கும் வடுகநாதரைக் கண்டு கண்மூடி வணங்கிக் கைதொழுத அடுத்த நொடிப்பொழுதில், ஒட்டுமொத்த அரவமும் அடங்கிப்போனது. காரணம், அந்தப் பிள்ளையிடமிருந்து பாடலாகப் புறப்பட்ட பதிகம்!

சுடுகூர் எரிமாலை அணிவர் சுடர் வேலர்
கொடுகூர் மழுவாள் ஒன்றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசி காமம் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே...


`சுடும் வெம்மை மிக்க தீப மாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலாயுதத்தையும் வல்லமை மிக்க மழுவாயுதத்தையும் கொண்டவரும் விடை வாகனமாம் நந்தியில் ஏறி உலா வருபவருமான ஈசனே, நீர்வளம் மிக்க வடுகூரில் கோயில்கொண்டிருக்கும் இறைவனே, பசி, காமம், கவலை, பிணிகள் போன்றவை அற்றவரே...’ எனும் பொருள்பட, குறிஞ்சிப் பண்ணில் பாடத் தொடங்கி சீர்காழிச் சிவக்கொழுந்தாம் சம்பந்தப் பிள்ளை, தொடர்ந்து பாடிக்கொண்டிருக்க, மெய்ம்மறந்து நின்றது ஊர்.

தென்னாடுடைய சிவபிரானின் அறக்கருணையை மட்டுமல்ல, மறக்கருணையையும் பாடித் தொழுதது பிள்ளை. அவர் அவதரித்த சீர்காழியைப் போன்றே இந்தத் தலமும் பைரவ அம்சத்தோடு தொடர்புகொண்டது ஆயிற்றே! ஆம், வடுக பைரவர் வழிபட்ட ஊர்.

அந்த பைரவரின் வீராவேசமும், அவரே வணங்கிய நாதர் எனும்போது, பெருமானுடைய பிரதாபங்களும் சம்பந்தப்பெருமானுக்கு நெஞ்சில் அலையிட்டிருக்க வேண்டும். ஆகவே, சிவனுடைய வீரச்செயல்களையும் பாடினார். இறைவன், ஓடும் களியானை உரிபோர்த்ததையு,ம் காலன் மடிய உதைத்ததையும் பாடிச் சிறப்பித்தார்.

அவர் வருகையால், அவருடைய பாடல்களால் பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது திருவடுகூர். நடுநாட்டுத் தலமாகத் திகழும் ஊர் இது. துந்துபி எனும் அசுரனின் மைந்தனான முண்டகன் மிகவும் கொடுமைபுரிந்தான். அவனுடைய கொடுமைகளைத் தாளாத பிரம்மன், பரமனைச் சரணடைந்தார். சிவம் பைரவருக்கு ஆணையிட, அசுரவதம் நிகழ்ந்தது. அசுரனே ஆனாலும் கொல்வது பாவமல்லவா. அந்தப் பாவம் நீங்க சிவனாரை வழிபட்டார் பைரவர். இங்ஙனம், வடுக பைரவர் வழிபட்டதால், *`திருவடுகூர்’ எனும் திருப்பெயரை இந்தத் தலம் ஏற்றுக்கொள்ள, இறைவன், `வடுகநாதர்' என்று பெயர் பெற்றார்.

இப்படிப் புராணத்தால் மகிமை பெற்ற தலம், இதோ இப்போது ஞானக்குழந்தையின் பதிகங்களாலும் மகிமை பெற்றுவிட்டது.

பதிகம் மட்டுமா பாடியது அந்த ஞானக்குழந்தை... அவ்வூர் மக்களுக்குப் பாடமும் சொன்னது.

‘‘பிள்ளையாரே! வடுகர் என்பவர் தனித் தெய்வமா?’’ - இளைஞன் ஒருவன் கேட்டான்.

‘‘சிவாம்சம் என்பார்கள் பெரியோர்கள்.’’

‘‘எனில், எங்கள் ஊரில் சிவமே சிவத்தை வழிபட்டதா?’’

ஞானக்குழந்தை சிரித்தது. அருகில் குடலையிலிருந்த மலர்களை மலர்க் கரங்களால் அள்ளியெடுத்து இளைஞன் முன் நீட்டியது.

``இதென்ன?’’

‘‘பூக்கள்!’’

‘‘எனில், இது?’’

அருகில் அடியவர் ஒருவர் மூங்கில்தட்டில் ஏந்தியிருந்த சரத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டது.

‘‘பூச்சரம்!’’

‘‘அப்படியெனில், அதோ... இறைவனின் திருமேனியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனவே... அவை?’’

‘‘ஆரங்கள்!’’

‘‘அதெப்படி... எல்லாம் பூக்கள்தானே! வேறு வேறு பெயர்களைச் சொல்வதேன்?’’

கேள்வி கேட்ட இளைஞன் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான். ஞானக்குழந்தை இன்னும் தெளிவாகப் புரியவைத்தது.

``விண்ணிலிருந்து பொழிவதை, `மழை' என்கிறோம். அதுவே மலையைத் தொட்டு பள்ளத்தில் வீழும்போது அருவியாகும்; சமவெளியில் பாயும்போது நதியாகும்; சேருமிடத்தில் சேர்ந்ததும் சாகரமாகிவிடும். அப்படித்தான் இறையும். காரியம் தொட்டு, காரணம் விளக்க ஒன்றே பலவாகித் தோன்றுகிறது. சீடனுக்குக் குருவாகித் திகழ்பவர், தன் பிள்ளைக்கு தந்தையாக இருப்பார் அல்லவா! அப்படித்தான் இதுவும்.

அதுமட்டுமல்ல... நீங்கள், நான், என் அணுக்கர்கள் என நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் அவர் அம்சமே. ஆக, சகலரும் சகலமும் சிவாம்சமே என்று உணர்த்த இப்படியோர் அருள்கதை உங்கள் ஊர் புராணத்தில் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!’’

இளைஞன் தெளிந்தான்; ஊர் வியந்தது. அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடத் துடித்தது. அவரின் பாதம் பணியவும், அவரின் மலரக் கரத்தைப் பற்றி ஒருகணம் தங்களின் சிரத்தில்வைத்துக்கொள்ளவும் யத்தனித்து முண்டியடித்தது. 

இயன்றவரை அந்த அன்பர்களின் அவாவைத் தீர்த்துவைத்த சீர்காழிப்பிள்ளையின் கவனத்தைக் கவர்ந்தது ஓர் உருவம். அவரை அணுக முற்பட்டு, கூட்டத்தில் சிக்கித் திணறிக்கொண்டிருந்தான், அந்த உருவத்துக்குச் சொந்தக்காரன். சீர்காழிக்கொழுந்து கையசைத்ததும், கூட்டம் விலகி வழிவிட்டது. தாமே அவனை அணுகினார் சீர்காழிப் பிள்ளை.

சிவமகுடம் - பாகம் 2 - 31

‘‘யார் ஐயா தாங்கள், என்ன வேண்டும் தங்களுக்கு?’’

‘‘ஐயன்மீர்! தங்களின் கருணைப் பார்வை ஒன்று போதுமே எனக்கு. வேறென்ன வேண்டும். ஆனாலும்...’’

‘‘என்ன...?’’

‘‘ஒரு கேள்வி உங்களிடம்...’’

‘‘கேளுங்கள்.’’

‘‘எங்கள் ஊருக்கும் வருவீர்கள்தானே?’’

‘‘தங்களின் ஊர் எது ஐயா?’’

சீர்காழிச் சிவக்கொழுந்து அன்பொழுகக் கேட்க, ஆர்வத்துடன் அவன் பதில் சொன்னான்.

‘‘ஆலவாய் ஐயா! மரகதவல்லி மீனாள் அரசாளும் மாமதுரை எங்கள் ஊர்!’’

முகம் மலர்ந்தார் திருஞானசம்பந்தர். வில்வமும் திருநீறுமாக அந்த அன்பனுக்குச் சிவப்பிரசாதம் தந்தவர், அதே மலர்ச்சியோடு பதில் சொன்னார்:

‘‘காலம் கைகூடும்; நிச்சயம் வருவேன்!’’

சித்திரம் விசித்திரமாகும்!

மா
தாண்ட நாயகர்களும், மந்திரிப் பிரதானிகளும், தலைமை அமைச்சரும், இளங்குமரன் முதலானோரும் கூடியிருந்த அந்தப் பெரும் சபையில் மாமன்னரின் குரல் மட்டுமே தனியே கம்பீரமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

மாமதுரையைக் கைப்பற்ற, சேரனும் அவன் தளபதியும் போட்ட திட்டங்களைத் தவிடுபொடியாக்கிய பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசியாரின் வியூகா வியூகங்களை, அவற்றைச் சாத்தியமாக்கிக் காட்டிய பேரமைச்சர் குலச்சிறையாரின் பெருஞ்சாதனையைப் பெருமிதத்தோடு விளக்கிக்கொண்டிருந்தார், பாண்டியப் பேரரசர் மாறவர்மன் அரிகேசரி.

‘‘வனப்புறக் கிராமத்தில் நம் பேரரசியார் உறைந்திருக்க, சேரன் அதைத் தாக்கத் துணிந்தபோதே தீர்மானித்தேன், மேற்கொண்டு பல திட்டங்களை அவன் வைத்திருப்பான் என்று. ஆகவே, மாமதுரையில் போர் ஒத்திகைகள் அவசியமாகின. எனக்குள்ளும் திட்டங்கள் உருவாகின.

நம் பெருஞ்சேனையை இரண்டாகப் பிரித்தேன். ஒன்றை, பல்லவ தேசத்தின் எல்லையை நோக்கி நகர்த்தினேன். அது நம் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி. மற்றொன்றை மலைப்புறத்தில் மறைந்துறையச் செய்தேன். அந்தப் படை தங்களைக் கண்காணிக்கவே என்று சேரன் யூகித்திருக்க வேண்டும். அப்படி அவன்  யூகித்திருந்தால், அது சரிதான். ஆனாலும் அதற்கு வேறொரு காரணமும் உண்டு’’ என்றவர், சற்று நிதானித்து பேரமைச்சரை நோக்கினார். குலச்சிறையார் புன்னகைக்க, அந்தப் புன்னகையின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டவராக மேலும் தொடர்ந்தார், மாமன்னர்.

‘‘சில நாள்களாக மாமதுரையில் என்னாலேயே அனுமானிக்க முடியாத சில நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முகம் தெரியாத  நபர்களின் ஆளுமை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அவர்களை அடையாளம் காண முயன்றேன். அதற்கும் சேர்த்தே இந்தப் படை நகர்வைப் பயன்படுத்தினேன்.

பெரும்படை தலைநகரிலிருந்து நகர்ந்தால், எவருக்கும் அது போர் நடவடிக்கையாகவே தோன்றும். அப்படியான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள் அந்த மர்ம நபர்கள் என்று நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. அடையாளம் தெரியாத சில குழுக்களின் நடமாட்டம் அதிகரித்தது. ஆனால், அவர்கள் நமக்கு அணுக்கர்களா, துரோகிகளா எனபதைத்தான் என்னால் அனுமானிக்க இயலவில்லை. போகட்டும்... விரைவில் அவர்கள் அகப்படுவார்கள்’’ என்று குரலில் உறுதி தொனிக்கக் கூறிய மாமன்னர், மேற்கொண்டு சேரன் முறியடிக்கப்பட்ட விவரத்தைப் பேசத் தலைப்பட்டார்.

அப்போது மூச்சிரைக்க வேக வேகமாகச் சபைக்குள் பிரவேசித்தான் வீரன் ஒருவன். அதே வேகத்தில் மாமன்னரின் தாள் பணிந்தவன், மிகப் பதற்றத்துடன் அவரிடம் மெல்லிய வெண்பட்டுச் சுருள் ஒன்றை எடுத்து நீட்டினான்.

இங்கே இந்தச் சபை கூடிய நேரத்தில், மாலிருஞ்சோலையில் குறுவாள் மூலம் தனக்குக் கிடைத்த அந்த வெண்பட்டுச் சுருளை, அவசர அவசியம் கருதி மாமன்னரின் பார்வைக்குக் கொடுத்தனுப்பியிருந்தார் பேரரசியார். அந்தப் பட்டுத்துணிச் சுருளில் இருந்த விவரம் இதுதான்...

‘சித்திரம் விசித்திரமாகும்!’

-மகுடம் சூடுவோம்...

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

*வடுகூர் என்றோ திருவடுகூர் என்றோ இப்போது கேட்டால், பலருக்கும் தெரியாது. ஆண்டார்கோவில் என்றோ திருவாண்டார் கோவில் என்றோ கூறினால்தான் தெரியும். நடுநாட்டுத் திருத் தலங்களில் ஒன்றான ஆண்டார்கோவில், புதுச்சேரி மாநில எல்லைக்குள் உள்ளது. விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கத்தில், கோலியனூர், வளவனூர் தாண்டியதும், சிறிது தொலைவிலேயே உள்ளது இந்தத் தலம்.