
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் மகா பாரதத்தை எழுதி யதாகச் சொல்வார்கள். தன் அழகிய தந்தங்களில் ஒன்றை ஒடித்து, அதைக்கொண்டு எழுதினாராம். தந்தம், அழகின் குறியீடு. அப்படியிருக்க, விநாயகர் எதற்காக அதை எழுது கோலாகப் பயன்படுத்தினார்... `Utility’, `Beauty’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, பயன்பாடு முக்கியமா... அழகு முக்கியமா... விநாயகர் `பயன்பாடுதான் அழகு’ என்று உலகுக்கு உணர்த்து வதற்காகத் தந்தத்தைப் பயன்படுத்தினார்.
ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார். அம்மை, உபதேசத்தைச் சரியாக கவனிக்கவில்லை. சிவபெரு மானுக்குக் கோபம் வந்தது. ‘பூமியில் பிறக்கக் கடவாய்’ என்று உமையம்மையை சபித்துவிட்டார். முருகப் பெருமானும் விநாயகப் பெருமானும், தாயாருக்கு சாபம் கொடுத்துவிட்டாரே என்று சிவபெருமானுடன் சண்டை யிட்டார்கள். அவருடைய ஞான நூல்களையெல்லாம் கடலில் தூக்கி எறிந்தார்கள்.

கோபம்கொண்ட சிவபெருமான் வாயிலில் இருந்த நந்திதேவர்வரை தன் கோபத்தைக் காட்டினார். `சுறாமீனாகப் பிறக்கக் கடவாய்’ என்று நந்திப் பெருமானுக்கு சாபம் கொடுத்தார். முருகப் பெருமானுக்கு ‘பேசாப் பிள்ளையாக பூமியில் பிறக்கக் கடவாய்’ என்று சாபம் கொடுத்தார். விநாயகப் பெருமானை மட்டும் சபிக்கவில்லை. அதற்குக் காரணமும் உண்டு. விநாயகப் பெருமானை யார் சபித்தாலும், அந்த சாபத்தில் பாதி சபித்தவர்களையே போய்ச் சேரும்.
இது, விநாயகர் வழிபாட்டிலிருக்கும் முக்கிய நெறி. அதே நேரம், எந்தத் துன்பத்தையும் அவர் தூளாக்கிவிடுவார். அதனால்தான் அவருக்கு நாம் விடலைத் தேங்காய் உடைக்கிறோம். உடைக்கும்போது தேங்காய் சிதறி விழுவதைப்போல, துன்பங்கள் காணாமல்போகும் என்ற நம்பிக்கையில்தான் வழிபடுகிறோம். அவர் குழந்தைகளின் கடவுள். அதனால்தான் `பிள்ளை+ஆர்’ என்ற விகுதியோடு அவர் அழைக்கப்படுகிறார்.
கொழுக்கட்டை, சுண்டல், மோதகம் என்று குழந்தைகளுக்குப் பிடிக்கும் எல்லா உணவுகளும் அவருக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும். அந்த நைவேத்தியங்கள் பிள்ளைகளுக்குத்தான் போய்ச் சேரும்.
ஒருமுறை பாரதி விநாயகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்தார். `இந்த உலகத்திலுள்ள மக்கள், விலங்குகள், பூச்சிகளின் துன்பம் நீங்க வேண்டும். அந்தத் துன்பம் நீங்க, விநாயகப் பெருமானே நீர் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
அந்தத் துன்பத்தை நீக்குகிற பொறுப்பு எனக்கு இருக்க வேண்டும். உயிர்க்குலத்தின் துன்பத்தை நீக்குவதே என் கடமை. அதற்கு உன் ஆசீர்வாதமும் உறுதுணையும் வேண்டும்.’ இறைமையின் ஆசீர்வாதமும், மனித முயற்சியும் இணைந்து செயல்படுவதே ஆன்மிகத்தின் தடம் என்பது பாரதியின் கருத்து.
மனித முயற்சியை முடமாக்குவதல்ல இறை நம்பிக்கை. மனித முயற்சியை, நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதுதான் இறை நம்பிக்கை. தடுமாறிக்கொண்டிருப்பவர்களுக்கு வழிகாட்டுவதுதான் வழிபாட்டு நெறி. அந்த நிலையில்தான் விநாயகர் வழிபாடு, எல்லாச் செயல்களையும் செய்வதற்குத் தொடக்க வழிபாடாக அமைகிறது.
முருகனும் விநாயகரும் ஞானப்பழத்துக்குச் சண்டையிட்டார்கள். பழத்துக்குள் மறைந்திருந்த தத்துவ நெறி என்ன... `அம்மையப்பரே உலகம்’ என்றார் விநாயகர். `உலகே எனக்கு உறவு’ என்றார் பழனியாண்டி.
இருந்த இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார் விநாயகப் பெருமான். `உலகமே உறவு’ என்று குன்றிருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமான் குடியிருக்கிறார். அந்தப் பண்பாட்டு நெறி, பக்தி நெறி இந்த மண்ணில் தழைக்க வேண்டும்.
இன்று இளைஞர்களுக்குத் தங்கள்மீது அதீத நம்பிக்கை. உண்மையில், தன்னம்பிக்கை என்பது தன்னைச் சார்ந்தது மட்டுமல்ல; உடனிருப்பவர்களையும் இணைந்து பணி செய்யவைப்பது.
ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்புக்கு வந்தான். பொறுப்பேற்ற அன்றே தன்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள நினைத்தான். அவனைச் சந்திக்க அறை வாசலில் ஒருவர் காத்திருந்தார். அவன் அவரைப் பார்த்தபடி, சுழல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, தொலைபேசியில் யாருடனோ பேசுவதுபோல பாவனை செய்தான். ``நான் இதற்கு முன்னர் பல நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எனக்குத் தூசு. இந்த நிறுவனத்தின் பொறுப்பெல்லாம் எனக்கு வெகு சாதாரணம்...’’ என்றெல்லாம் கதைவிட்டுக்கொண்டிருந்தான். அறை வாசலிலிருந்தவர் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் தொலை பேசியை வைத்துவிட்டு, அவரை உள்ளே வரச் சொன்னான்.
``என்ன வேலையாக வந்தீர்கள்?’’ என்று விசாரித்தான்.
``ஐயா, உங்கள் மேஜை மேலிருக்கும் தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வந்திருக்கிறேன்’’ என்றார் அவர். இப்படித்தான் மழையில் நனையாத காரணத்தால் பலரின் சாயம் வெளுக்காமலிருக்கிறது.
நான்கு இளைஞர்கள் ஒரு ஞானியிடம் வந்தார்கள். ``ஐயா, நாங்கள் பிறருக்கு உதவ வேண்டும் என விரும்புகிறோம். எப்படி உதவுவது என்று எங்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்...’’ என்றான் அவர்களில் ஒருவன்.
``பிறருக்குச் சிறு உதவி செய்தால்கூடப் போதும். அதுவே மகத்தான பலன் தரும். நீங்கள் சாலையில் போகும்போது வழியில் கல் இருந்தால் அதைத் தூக்கி ஓரமாக வையுங்கள். முதியவர்கள் சாலையைக் கடக்க உதவுங்கள்...’’ என்றெல்லாம் அறிவுரை வழங்கினார் ஞானி.
நான்கு இளைஞர்களும் ஞானியை வணங்கிவிட்டுக் கிளம்பிப் போனார்கள். மறுநாள் மறுபடியும் வந்தார்கள்.
``ஐயா, நீங்கள் சொன்னபடி நாங்கள் நால்வருமே உதவி செய்தோம்’’ என்றான் ஒருவன்.
``என்ன செய்தீர்கள்?’’
``சாலையைக் கடக்க ஒருவருக்கு நான் உதவி செய்தேன்’’ என்றான் அவன்.
``நானும் சாலையைக் கடக்க ஒருவருக்கு உதவினேன்’’ என்றான் இன்னொருவன்.
மற்ற இருவரும் அதே பதிலைச் சொன்னார்கள்.
``உங்கள் நான்கு பேரிடமும் நான்கு முதியவர்கள் சாலையைக் கடக்க உதவி கேட்டார்களா என்ன?’’
``இல்லை. நாங்கள் நால்வரும் ஒரு முதியவருக்குத்தான் உதவி செய்தோம்’’ என்றான் ஒருவன்.
``ஒரு முதியவர் சாலையைக் கடக்க, நீங்கள் நான்கு பேர் தேவைப்பட்டீர்களா?’’ ஆச்சர்யத்தோடு கேட்டார் ஞானி.
``ஐயா, உண்மையில் அவர் சாலையைக் கடக்க விரும்பவில்லை. நாங்கள்தான் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு போய் சாலையின் மறுபுறம் விட்டோம்’’ என்று சொன்னான் ஒருவன். இப்படித்தான் சமயத்தில் உதவிகூட உபத்திரவமாகிவிடுகிறது.
ஆசை வயப்பட்ட சமூகம் தடுமாறித் தடுமாறி, பேராசை என்னும் பெருங்குழியில் விழுந்துவிடுகிறது. அது உழைப்பையும் முயற்சியையும் முடமாக்கிவிடுகிறது. இதைத்தான், ‘உழுத நோன்பகடு அழிதின்றாங்கு…’ என்கிறது புறநானூறு. எப்படி?
`வயல்வெளிகளில் காளைகள் உழைத்து, உழைத்து உணவுப் பயிராம் நெற்பயிர்களில் இருந்து நெல்லை நமக்குத் தந்துவிட்டு, எஞ்சிய வைக்கோலை வயலில் நாம் விட்டுச் சென்ற கழிவை உண்டு, மீண்டும் உணவுப் பயிரை உற்பத்தி செய்ய ஆயத்தமாகும். அதனால் அந்தக் காளைகள் தவம் செய்தவை’ என்பது புறநானூற்றுப் பாடல் சொல்லும் செய்தி. அதனால்தான் எருதுக்கொடியை ஏந்தி நிற்கிறார் சிவபெருமான். நந்தியெம்பெருமானைத் தன் வாகனமாகக் கொண்டார். `உழைப்பு போற்றுதலுக்குரியது’ என்பது நம் வழிபாட்டு நெறி. `கைவருந்தி உழைப்பவர் தெய்வம்’ என்கிறார் பாரதி.
ஒருமுறை நாரதர் கயிலைக்குப் புறப்பட்டார். வழியில் தவம் செய்துகொண்டிருந்த ஒருவரைப் பார்த்தார். நீண்டகாலமாகத் தவம்புரிகிறார் என்பதற்கு அடையாளமாக அவர் உடலைச் சூழ்ந்திருந்தது புற்று. ``எங்கே போகிறீர்கள்?’’ என்று கேட்டார் அந்தத் தவசீலர்.
``இறைவனைக் காணக் கயிலைக்குப் போகிறேன்’’ என்று நாரதர் சொன்னார்.
``அப்படியா… எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று இறைவனிடம் கேட்டு வாருங்கள்.’’
``சரி’’ என்று சொல்லிவிட்டு நாரதர் நடந்தார்.
சற்று தூரத்தில் ஓர் இளைஞன் ஆடிப் பாடி, குதித்துக்கொண்டிருந்தான்.
``எங்கே போகிறீர்கள்’’ என்று நாரதரைக் கேட்டான்.
``கயிலைக்குப் போகிறேன்.’’
``அப்படியா… எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று இறைவனிடம் கேட்டு வாருங்கள்.’’
``சரி’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் நாரதர்.
கயிலையில் இறைவனை தரிசித்துவிட்டுத் திரும்பினார்.
வழியில் அந்தத் தவசீலர், ``எனக்கு எப்போது முக்தி கிடைக்கும்?’’ என்று கேட்டார்.
``இன்னும் நான்கைந்து பிறவிகள் கடந்துதான் முக்தி கிடைக்கும்’’ என்று நாரதர் சொன்னார்.
``ஐயோ… இன்னும் நான்கைந்து பிறவிகளா?!’’ வருத்தப்பட்டார் தவசீலர்.
சற்று தூரத்தில் அதே இளைஞன். ``எனக்கு எப்போது முக்தி தருவதாகக் கடவுள் சொன்னார்?’’ என்று கேட்டான்.

நாரதர், பக்கத்திலிருந்த புளியமரத்தைக் காட்டி, ‘இதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ அத்தனை பிறவிகள் எடுத்த பிறகே உனக்கு முக்தி கிடைக்கும்’’ என்றார்.
அதைக் கேட்டு இளைஞன் பரவசத்தில் குதித்தான். ``ஆஹா… எனக்கும் கடவுள் முக்தி கொடுத்துவிட்டாரே..!’’ என்றான். அப்போது வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. ``இப்போதே நீ முக்தி அடைந்துவிட்டாய்...’’ Detached attachment என்பது இதுதான். பற்றிலிருந்து வெளிப்பட்டு வாழ்வது. பற்றை அறுத்துவிட்டு அன்பாக வாழ்வது. அப்படி வாழ நாம் பழகியிருக்கிறோமா?
`எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே ஈஸ்வர பக்தி’ என்பது வள்ளல் பெருமானின் வாய்மொழி. நம் காலுக்குக் கீழேதான் சொர்க்கம் இருக்கிறது. அன்பின் சொர்க்கத்தை நாம் நரகமாக்கி விட்டோம். நாம் வாழும் இடத்தை வறட்சியும் பஞ்சமும் கூத்தாடும் இடமாக ஆக்கிவிட்டோம். இயற்கை நமக்குத் தந்த கொடையை இழந்துவிட்டோம். இறைமை நமக்குத் தந்த வரத்தை சாபமாக மாற்றிவிட்டோம்.
கொளுத்தும் வெயில்; வாட்டும் வறட்சி; தண்ணீர்ப் பஞ்சம்... இந்தக் கொடைகளை யார் தந்தார்கள்... நாம்தான் தேடிக்கொண்டோம். நம் நீர் வரத்துகளைக் காணவில்லை. அத்தனையிலும் ஆக்கிரமிப்புகள். நம் வயல்வெளிகளைக் காணவில்லை. அத்தனையிலும் வீடுகள்.
எரியும் அடுப்பில் ஏற்றிவைத்த பானை நீரில் ஆமையை இட்டால், இதமான வெப்பத்தில் இருக்கும்போது ஆனந்தப்படும். அந்த இதமான வெப்பம் கொதிநிலையை அடையும்போது, ஆமை இறந்துவிடும். இப்படித்தான் நம் வாழ்க்கையும். நமக்கு இன்பமாகத் தெரிவதெல்லாம் துன்பத்தின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றன. கானல் நீரை கங்கை நீர் என்று நம்பி நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

பசுஞ்சோலைகளை இழந்துவிட்டுப் பாலைவனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குறிஞ்சி, முல்லை, மருத நிலங்கள் பாலை நிலமாக மாறிவிட்டன. கண்ணிரண்டையும் விற்று, சித்திரம் வாங்கிக் கைகொட்டிச் சிரிக்கிறோம். இயற்கை நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறது. அமுதசுரபிகளைத் தொலைத்துவிட்டு, திருவோடுகளை ஏந்திக்கொண்டு, தெருத்தெருவாகத் திரிகிறோம். இந்தக் கணத்தில், இனியொரு விதி செய்யத்தான் வேண்டும். அந்த விதி, இயற்கை வளத்தைக் காப்பது!
- புரிவோம்...
- படம்: கே.ராஜசேகரன்