மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 32

மகா பெரியவா - 32
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 32

ஓவியம்: கேஷவ்

காபெரியவா கலவையில் முகாமிட்டிருந்த நேரம். ஒருநாள், பண்டிதர்கள் சிலர், சுவாமிகளுடன் சம்பாஷித்துக்கொண்டிருந்தார்கள். மிக உயர்ந்த வேதாந்தக் கருத்துகள் பற்றி விவாதம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. பேசுபொருள் கடுமையானதாக இருப்பினும், சாதாரணனும் புரிந்துகொள்ளும் வகையில், எளிமையான மொழியில் அதை விளக்கிவந்தார் மகாபெரியவா. பண்டிதர்கள் வழக்கமாக உரை நிகழ்த்துவதுமாதிரி இல்லாமல், மாறுபட்டிருந்தது அது.

மகா பெரியவா - 32

அந்த நேரம் ஆஸ்திரேலியாவிலிருந்து இளைஞர் ஒருவர் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார். பல்வேறு மதங்களை ஒப்புநோக்கும் வகையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவர் அவர். சம்ஸ்கிருத மொழியில் சுமாராகப் பேசவும் அந்த இளைஞருக்குத் தெரிந்திருந்தது.

மகா பெரியவா - 32வழக்கமான விசாரிப்புகள் முடிந்தன. “உனக்கு இப்ப என்ன வேணும்” என்று இளைஞரிடம் வினவினார்.

“நான் எப்படி இருக்கவேண்டும், நான் எப்படி வாழவேண்டும், வாழ்க்கை முறை என்பது என்ன'' என்று நிதானமாகத் தன் கேள்விகளை அடுக்கினார் ஆஸ்திரேலிய இளைஞர்.

மகா பெரியவா சிறிது நேரம் மெளனம் காத்தார். பிறகு கேட்டார்:

“அதெல்லாம் சரி... இவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு நீ இங்கே வரக் காரணம் என்ன?”

“நான் ஒரு பயணி. நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். நிறைய மகான்களை தரிசனம் செய்திருக்கிறேன். படித்த பண்டிதர்களிடம் உரையாடியிருக்கிறேன். அவர்கள் எல்லோருமே சத்தான விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். சிறப்பான அறிவுரைகள் எனக்கு வழங்கினார்கள். ஆனால், அவற்றில் உள்ளடங்கிய தத்துவம் புரிந்தமாதிரி தெரியவில்லை. உலகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எல்லோருமே தங்கள் பெயரையே குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு இங்கே வந்தேன்” என்றார் அந்த இளைஞர்.

முகத்தில் தெய்விகப் புன்னகை மலரக் கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா. சிறிதுநேரம் அமைதி காத்துவிட்டு, பின் திருவாய் மலர்ந்தார்.

“உன்கிட்ட நான் புதுசா என்ன சொல்லிடப் போறேன். நம் முன்னோர்களும், ரிஷிகளும், பக்தர்களும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, புராணங்களில் சொல்லியிருப்பது தவிர வேறு எதுவும் நான் சொல்லிடப்போறதில்லை” என்ற மகாபெரியவா, குழுமியிருந்த பண்டிதர்கள் பக்கம் திரும்பி, “ நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறேள்” என்று கேட்டார்.

ஒரு வித்வான் பதிலளித்தார்.

மகா பெரியவா - 32“இதிகாசங்கள், புராணங்களிலிருந்து பெரியவா நிறைய எடுத்துச்சொல்லணும். பெரியவா அனுக்கிரகம் பண்ற எல்லாத்தையும் பல்வேறு மொழிகள்ல அச்சடித்து எல்லா இடங்கள்லேயும் விநியோகம் பண்ணணும். இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள்லேயும் அவை கொடுக்கப்படணும். நாம நிறைய இடங்கள்லே கூட்டங்களுக்கு ஏற்பாடு செஞ்சு, இது பற்றியெல்லாம் பேசணும்... இந்தக் கூட்டங்களுக்கு பெரியவா வந்திருந்து ஆசீர்வாதம் பண்ணணும்” என்றார்.

மகா பெரியவா வாய்விட்டுச் சிரித்தார்.

“ஓகோ... நாம இதுமாதிரி கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பேசினா ஒவ்வொருத்தரும் அதைப் புரிஞ்சுக்குவாளா! தர்மமும் பக்தியும் இதனால வளர்ந்துடுமா” என்ற மகாபெரியவா தொடர்ந்தார்:

“இதபாருங்கோ, இப்ப இந்த இளைஞர் கேட்ட அதே கேள்விகளை நம்ம நாட்டைச் சேர்ந்த எத்தனைபேர் கேட்டுருப்பா. படிச்சதனாலேயும் ஆராய்ச்சிப் பலனாவும் இத்தனை கேள்விகளும் இவருக்குக் கேட்கணும்னு தோணியிருக்கு. ஆனா, மனசார அவர் ஏத்துக்கறமாதிரி எந்தப் பதில்களும் கிடையாது. ‘இதுக்கெல்லாம் பதிலே கிடையாது’ன்னு நாம சொன்னாக்கூட அது பாதிக்கிணறு தாண்டறமாதிரிதான். நம்ம மதத்துல இதுக்கெல்லாம் மிகத் தெளிவான பதில் இருக்கு. ஆனா, நமக்கு விடை தெரியும்கிறதால தீர்வு பத்தி நமக்கு அக்கறை இருக்கிறதில்லே. தீர்வு கிடைச்சவுடனே, எதுக்கு சல்லடைப்போட்டு கஷ்டப் படணும். இப்படித்தான் நாம அலட்சியமா இருந்துடறோம்.

பிரமாண்ட பந்தல் போட்டு, அற்புதமாக அலங்காரம் செய்து, loudspeakers ஏற்பாடு செய்து, முடிவில் பிரசாதமும் விநியோகம் செய்தால், பெரிய அளவில் மக்கள் கூடுவார்கள். அதைப் பார்த்ததும் உரை நிகழ்த்துபவர்களிடம் ஆணவம் பெருகும். ‘நான் பேசுவதைக் கேட்க மக்கள் கடலலையென திரண்டுவருகிறார்கள் பாருங்கள்...’ என்று இறுமாப்பு அடைவார்கள். இந்த உரைகளைக் கேட்கும் பத்தாயிரக் கணக்கானவர்களில், குறைந்தபட்சம் பத்துபேர் அவற்றைப் பின்பற்றுவார்களா? அதற்கு வாய்ப்பே கிடையாது ! இதுவே வெளிநாட்டவர்களை எடுத்துக்கொண்டால், பத்துபேர் இந்த உரைகளைக் கேட்க நேரிட்டால், அவர்கள் அத்தனை பேரும் மிகக் கவனமாக அதைக்கேட்பார்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரையில், வெளிநாட்டுக்காரர்கள் நமது புராதன கலாசாரம், கோட்பாடுகள் பற்றி எதுவுமே தெரியாமல்தான் இருந்தார்கள். இப்போது அப்படியில்லை. அவர்கள் நிறைய குழுக்களை அமைத்து வேதங்கள், வேதாந்தங்கள், புராண இதிகாசங்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் நேரம் ஒதுக்குகிறார்கள். நாம சங்கீர்த்தனங்களைப் பாடிப் பழகுகிறார்கள்” - என்று சொல்லி முடித்துவிட்டு அந்த இளைஞர் உட்கார்ந்திருந்த பக்கம் திரும்பினார் மகா பெரியவா. இளைஞரும் கண் இமைக்காமல் சுவாமிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தன் அணுக்கத்தொண்டர்களில் ஒருவரை அழைத்தார் மகா சுவாமிகள். பாகவதம் நூலை எடுத்துவரப் பணித்தார். வந்ததும், “இதுல ஏழாவது ஸ்கந்தத்துல ஆறாவது அத்தியாயத்தைப்படி...” என்றார் பண்டிதர் ஒருவரிடம்.

‘தஸ்மாத் ஸ்ர்வேஷு பூதேஷு...’ என்று ஆரம்பமாகும் ஸ்லோகத்தை ஸ்வரம் போட்டு பாடினார் அவர். மகாபெரியவா அதற்கான விளக்கத்தைக் கூறத் தொடங்கினார்.

“நான் புதுசா எந்த உபதேசமும் செய்யப் போறதில்லை. பாகவதத்தில் தன் சிஷ்யர்களுக்குப் பிரகலாதன் உபதேசம் செய்யும் பகுதி இது. அசுர குணங்களை நாம் விட்டுடணும். எல்லா மிருகங்களிடமும் நாம் அன்பும் நட்பும் காண்பிக் கணும். நாம் அப்படிச் செய்தால், பகவான் மகிழ்ச்சி அடைவார். அவர் மகிழ்ச்சியடைந்துவிட்டால் நம்மால் சாதிக்கமுடியாதது என்று எதுவுமே இல்லாமல் போய்விடும். பகவானிடம் சரணா கதி அடைந்து அவரது பாதங்களைப் பற்றிக் கொண்டால், மோட்சத்துக்கு அவசியமேது? நம்மையே (ஆத்மா) எங்கும் நிறைந்திருக்கும் பகவானிடம் சமர்ப்பித்துவிடுவதுதான் நிஜமான வாழ்க்கை. இன்னும் புரியும்படி சொல்லணும்னா, பக்திங்கறது கலப்படம் இல்லாம இருக்கணும். உண்மையா இருக்கணும். பொய்க்கு அனுமதியே கிடையாது. இந்த முறையில் நாம் வாழ்க்கையைப் பின்பற்றினால், அத்தனைபேரும் நம்மிடம் வருவார்கள்” மகாபெரியவா முடித்ததும், அனைவரும் முழு மகிழ்ச்சியில் மூழ்கினார்கள்.

ஆஸ்திரேலிய இளைஞருக்காக ஒருவர் பெரியவாவின் விளக்கத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கத் தொடங்க இளைஞர் அவரைத் தடுத்தார். “எனக்கு மொழியாக்கம் தேவையில்லை. எனக்கு முழுவதும் புரிந்துவிட்டது” என்றார்.

அன்பின் சிறப்பியல்புகள் பற்றி நிறையவே பேசியிருக்கிறார் மகாபெரியவா. அவற்றில் சில துளிகள்...

மனிதப் பிறவி எடுத்த பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்துகொள்வதில் தற்காலிகமாக அன்பு கிட்டலாம். ஆனாலும், இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.

அன்பு செலுத்தும்போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணம் செலவானாலும், இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே.

அன்பு செய்தாலும் முடிவில் துன்பம். அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. அப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக்கொள்வதே வழி. நம்முடைய  அன்புக்குரிய வஸ்து நம்மைவிட்டு  என்றும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்துவிட்டால், நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப்போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.

அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிடவேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்துவிடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க  முடியும்.

எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானம் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்புவைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அனுக்கிரகம் பண்ணிவிடுவார்.

ஈஸ்வரனிடம், சாதுக்களிடம் இந்த அன்பை அப்பியசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்கவேண்டும். அதுவே ஜன்மா எடுத்ததன் பயன்.

- வளரும்...

வீயெஸ்வி

மகா பெரியவா - 32

ஆடவல்லீஸ்வரர்!

வி
ழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- மரக்காணம் சாலையில், சுமார் 19 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலங்குப்பம். இங்கிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முன்னூர்.

`முன்னூற்று மங்கலம்' என்று புராணங்களும் சரித்திரமும் போற்றும் இந்தத் தலத்தில், சோழ மன்னன் குலோத்துங்கனுக்கு நடனக் கோலம் காட்டி அருளியதால், ஸ்ரீஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்கிறார் ஈசன். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரஹன்நாயகி. பூவுலகில் இருந்து சொர்க்கம் செல்ல பாலமாகத் திகழும் தலம் இது என்பது ஐதிகம்.

சித்தர்கள் சூட்சுமமாக உலாவரும் இந்தத் தலத்தில் மனக்குறைகளைக் கூறி பிரார்த்தித்தால், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான தீர்வு நம் கனவில் அசரீரியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

- ரமேஷ், சென்னை-61