மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்தக விமரிசனம்

புத்தக விமரிசனம்

புத்தக விமரிசனம்

திருமால் அமுதுள்

ஆசிரியர்: வெ.இராஜகோபாலன்

வெளியீடு:  34, ராஜா ராணி இல்லம், 3-வது குறுக்குத் தெரு, சேர்மன் ரத்தினம் நகர், தேனி - 625 531.

பக்கங்கள்: 208     விலை: ரூ.100

கண்ணனின் திருப்புகழ், கண்ணனின் திருவடி, திருமால் பெருமை, ஸ்ரீசக்கரத்தாழ்வார் புகழ், கண்ணனின் திருநாமப் பெருமைகள், திருவரங்கத் திருப்புகழ், அரங்கன் பதிகம், ஸ்ரீகமலவல்லி நாச்சியார், கஜேந்திர மோட்சம்... என பாடல்கள், அவற்றுக்கான கருத்துக்கள் ஆகியவற்றை பக்தி சிரத்தையுடன் அழகுறத் தந்திருக்கிறார் நூலாசிரியர். இடையிடையே பகவானின் திருவுருவப் படங்களை இணைத்திருந்தால், புத்தகத்தின் அழகு இன்னும் கூடியிருக்கும்; மெருகு இன்னும் ஏறியிருக்கும்!

108 திவ்ய தேசங்களும்
276 தேவாரத் தலங்களும்

ஆசிரியர்: பி.கனகசபாபதி - எஸ்.பாலகுமாரன்

வெளியீடு: திருச்சிராப்பள்ளி ஸ்ரீஐயப்ப சங்கம் 2, லாசன்ஸ் ரோடு, திருச்சி- 1  

பக்கங்கள்: 174    விலை: ரூ.200

##~##
சோழ நாடு, நடுநாடு, தொண்டைநாடு, வடநாடு, மலைநாடு, பாண்டிய நாடு மற்றும் நிலவுலகில் பார்க்க முடியாதது என 108 திவ்விய தேசத் தலங்களைத் தந்துள்ளனர். ஒவ்வொரு ஆழ்வாரும் பாடிய தலங்கள் என்னென்ன, எத்தனைப் பாடல்கள்... எனப் பட்டியல் தந்ததும் சிறப்பு. எந்தத் திசை நோக்கிய ஆலயங்கள், நின்ற, அமர்ந்த, சயனத் திருக்கோலங்கள் எத்தனை, ராம, கிருஷ்ண, வராஹ, நரசிம்ம, வாமன அவதாரத் தலங்கள்... என இன்னும் பலவாறாகப் பிரித்துப் பிரித்துக் காட்டியிருக்கும் விதம் ரசிக்கத்தக்கது!

அதேபோல், தேவாரத் திருத்தலங்களான 276 ஆலயங்களையும் ஒவ்வொரு விதமாகப் பிரித்து ஸ்வாமி, அம்பாள், தலத்தின் பெயர் என விரிவாகத் தந்திருப்பதில் நேர்த்தி தெரிகிறது. அதில், முனிவர்களும் ரிஷிகளும் கடவுளரும் வழிபட்ட தலங்கள் எனத் தொகுத்திருப்பதும் சிறப்பு.

சைவத்தையும் வைணவத்தையும் இணைத்து நூல் வெளியிட்டதற்கே நூலாசிரியர்கள் இருவருக்கும் சொல்லலாம்... சபாஷ்!

திருவகுப்பு  வேல், மயில், சேவல் விருத்தங்கள் திருஎழுகூற்றிருக்கை

ஆசிரியர்: முனைவர் ம.ராமகிருஷ்ணன்

வெளியீடு: திருப்புகழ்ச் சங்கமம், 3-பி, ராகவ் அபார்ட்மென்ட்ஸ், 3-வது தளம், 41-சி, கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், சென்னை- 90

பக்கங்கள்: 232 விலை: ரூ.120

திருப்புகழை அருளிய அருணகிரிநாதர், திருவகுப்பையும் தோற்றுவித்துள்ளார். சீர்பாத வகுப்பு, வேல் வகுப்பு, பெருத்த வசன வகுப்பு, பூத வேதாள வகுப்பு, திருவேளைக்காரன் வகுப்பு மற்றும் சிவகிரி, வீரவாள், வேல் வாங்கு, செருக்களத் தலகை, கொலு, மயில்... என பல வகுப்புகளையும், அவற்றுக்கான அர்த்தங்களையும் தெளிவுபடத் தந்துள்ளார் நூலாசிரியர். கூடவே, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தங்களையும் தந்துள்ள விதம் ரசிக்கத்தக்கது.

கந்தக் கடவுளின் பக்தர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!

புத்தக விமரிசனம்