நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

ம் வாழ்க்கையைப் புத்தம்புதிதாக ஆக்குவதும், நம்மையே நமக்குப் புதிதாகக் காட்டுவதும் எது தெரியுமா? பயணங்கள்தான்!

பயணங்கள், உற்சாகம் தருபவை; கொண்டாட்டங்கள் நிறைந்தவை; வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்கள் கூட, எத்தனை ரசனையும் ரகளையுமானவை என்பதை இந்தப் பயணங்களே நமக்கு உணர்த்துகின்றன.

''அடேங்கப்பா... இந்த லீவுக்குக் கொடைக்கானல் போயிருந் தோம். வெறும் டூரா இல்லாம, அத்தனைக் கோயில்களையும் தரிசனம் பண்ணினோம். டூருக்குப் போனது மாதிரியும் ஆச்சு; சாமியைக் கும்பிட்டது மாதிரியும் ஆச்சு!'' என்று நாலு நாள் சுற்றுலாவை நாற்பது நாட்களுக்குப் பேசுவார்கள்.

ஆக, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய, நின்று நிதானித்து, ஆற அமரப் பேசிப் பேசி, அந்தப் பேச்சின் மூலம் இன்னும் இன்னும் சந்தோஷங்களைத் தரக்கூடியவை பயணங்கள்!

''எனக்கு மூட்டு வலி. அதனால வீடு, வாசல், கொல்லைப்புறம்னே வாழ்க்கை ஓடிட்டிருந்துச்சு. எங்க கல்யாண நாளன்னிக்கி, எங்க பையன் அவனோட நண்பன்கிட்ட கார் வாங்கிட்டு, அதுல எங்களை ராமேஸ்வரம் கூட்டிட்டுப் போனான். ரெட்டை ஜடையும் சீட்டிப் பாவாடையுமா இருந்த என்னோட பத்துப் பன்னண்டு வயசுல, அப்பாவோடு நான் அங்கே போயிருக்கேன். அதுக்கப்புறம் கல்யாணமாகி, மும்பைல கணவருக்கு வேலை. திருப்பதி தரிசனம், கொல்லூர் மூகாம்பிகைன்னு

##~##
எங்கெல்லாமோ போயிருந்தாலும், சின்ன வயசுல... அர்த்தமோ புனித மகத்துவமோ தெரியாம குளிச்ச ராமேஸ்வரம் தீர்த்தக் கட்டங்கள்ல மறுபடியும் போய்க் குளிக்கணுங்கறது எனக்குப் பெருங்கனவாவே இருந்துச்சு. அவருக்கும் அதான் ஆசை. எங்களோட இந்த ஆசையை நாங்க கேக்காமலே நிறைவேத்தி வைச்சுட்டு, 'இதான் உங்க கல்யாண நாளுக்கான கிஃப்ட்’னு சொல்லிக் கைகுலுக்கினான் எங்க பையன். போன களைப்பும் தெரியலை; மூட்டு வலியும் குறைஞ்சது மாதிரி ஒரு ஃபீலிங்!'' என்று மும்பையில் உள்ள தோழிகளோடு, தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் தாய்மார்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்கள் பயண சுகானுபவத்தை சிலாகித்துப் பேசுவார்கள். ஆக, அலுப்பும் அசதியும் நிறைந்தது இல்லை, பயணம்; மனதுள் இனம்புரியாத உத்வேகத்தையும் தெம்பையும் தரவல்லது அது!

இந்தப் பயணங்களின்போது, நமக்குப் பக்கபலமாக இருப்பவை, நம் கால்கள்தான்!

அந்தக் காலத்தில், இத்தனை வாகன வசதிகள் இல்லை. கார், வேன், ஆட்டோ என எதுவும் கிடையாது. ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நடந்தேதான் செல்வார்கள். அப்படி நடந்து செல்லும்போது, அந்த ஊரின் செழிப்பையும், அங்கே விளைகிற பயிர்களையும் கண்டு, அமோக விளைச்சலுக்கான காரணங்களைக் கேட்டறிவார்கள். அந்த ஊரின் உணவும், அதன் ருசியும் வியக்க வைக்கும்; இன்னும் இன்னும் எனச் சுவைக்க வைக்கும்.

இன்னொரு ஊரில் உள்ள ஆலயம் அற்புதமாக இருக்கும். அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வம் மனதுக்கு நிம்மதி தருவதாக அமையும்.

இப்படி வழிநெடுகவுள்ள ஊர்களும் அந்த மக்களின் கலாசார, சடங்கு- சாங்கியங்களும் ஈர்ப்பைத் தரும். ஆங்கிலேயர்களின் இந்தியப் பயணம், அவர்களுக்கு ஒருவித கலாசார, ஆன்மிக அனுபவத்தைத் தர, அவர்களின் வருகையால் நமக்கு வேறு சில நாகரிக மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆக, பயணங்கள் பயனுள்ளவை. இன்னும் சொல்லப் போனால், வாழ்க்கை என்பதே மிக நீண்டதொரு பயணம்தான், இல்லையா?!

வாழ்க வளமுடன்!

தவழ்வதில் இருந்தே துவங்கிவிடுகின்றன, நம் பயணங்கள். சுவர் பிடித்து மெள்ள எழுந்து, தத்தித்தத்தி நடக்கிறோம். குட்டிப் பாதங்களை பாதியளவே பூமியில் பதித்தபடி, விறுவிறுவென ஓடுகிறோம். பிறகு, நடப்ப திலும் ஓடுவதிலும் தடுமாற்றமில்லாத ஓர் உறுதி வர, அற்புதமாக ஆரம்பமாகிறது, பள்ளி வாழ்க்கை!

பாடங்களைக் கற்பதற்காகத் துவங்குகிற அந்த ஓட்டமும் நடையும், பள்ளிப் பருவத்துடன் முடிந்துவிடுகிறதா, என்ன? அது ஆயுள்பரியந்தம் நீடிக்கிற அற்புதப் பயிற்சி அல்லவா! அந்தப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது பாதங்கள்தானே!

கைகள் நமக்கு அள்ளித் தருவதை இதுவரை பார்த்தோம். அதேபோல், கைகளுக்குச் சற்றும் குறைவில்லாத கால்களையும் நன்கு கவனிப்பதுதானே முறை?!

காலங்களுக்கும் கால்கள் உண்டு. அதனால்தான், 'காலங்கள் ஓடின’ என்று எழுதுகின்றனர், எழுத்தாளர்கள். 'என்ன சார்... பேச்சுப் பராக்குல மூணு மணி நேரம் ஓடினதே தெரியலையே!’ என ஆச்சர்யத்துடன் அலுத்துக்கொள்கிறோம்.

அடுத்தது அடுத்தது என வேலையில் இறங்கி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருப்பவர்களை, 'என்னடா, கால்ல சக்கரம் கட்டிக்கிட்டவனாட்டம் ஓடுறியே?’ என வியப்புடன் சொல்வார்கள்.

அத்தனை மகத்துவம், கால்களுக்கு உண்டு. கால்கள் இருந்தால்தான், தூரத்தை மட்டுமல்ல... காலத்தையும் கடக்கமுடியும். நம் வாழ்க்கைப் பயணத்துக்கு இறைவன் வழங்கியிருக்கிற அற்புதமான வாகனம், கால்கள்! கால்களை மடக்கி, சம்மணமிட்டு அமர்ந்தபடி, சற்று நேரம் ஓய்ந்து இருந்துவிட்டால், சிறிது நேரத்தில் அந்தக் கால்கள் மரத்துப்போய்விடும். அப்படி மரத்துப் போகாமல், நமக்கு உரமூட்டக்கூடிய வகையில் கால்களை வைத்திருந்தால்தான், பயணம் இனிதே நடந்தேறும்; அந்தப் பயணமும் பல சுவாரஸ்யங்களைத் தரக்கூடியதாக அமையும்! இப்போது 'பயணம்’ என்பதை, வாழ்க்கை என்பதான அர்த்தத்தில் சொல்கிறேன் என்பது புரிகிறதுதானே, உங்களுக்கு?!

இன்னொரு விஷயம்... 'டேய்..! அவனை மலை போல நம்பியிருந் தேன்டா! அவன் என் காலை இப்படி வாரிவிடுவான்னு கனவுலகூட நினைக்கலைடா!’ என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருக்கிறீர்களா?

'யாரை நம்பியும் நாம இருக்கக் கூடாது. வாழ்க்கைல சொந்தக் கால்ல நிக்கிற சுகத்துக்கு, எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது!’ என்பார்கள், பாஸிட்டிவாக வாழ்க்கையைப் பார்க்கிற அன்பர்கள்.

நம் கால்களில் நிற்கவேண்டும் என்பது மிக அவசியம்; அடுத்தவர் கால்களை வாரிவிடாமல் வாழ்வது என்பது அதைவிட முக்கியம்.

அப்பேர்ப்பட்ட கால்களை சாவகாச மாக நீட்டி வைத்துக்கொண்டு, கொஞ்சம் அன்புடனும் அதிக அக்கறை யுடனும் உற்றுக் கவனியுங்கள். அவை உங்களுக்காக எத்தனை உழைத்திருக்கின்றன!

உங்களின் மொத்த உடம்பை நீங்கள் போக விரும்பிய இடங்களுக்கெல்லாம் சுமந்துபோனவை அவைதானே? கல்லு முள்ளிலும், காட்டு மேட்டிலும் உங்களுக்காக ஓடித் தேய்ந்தவையல்லவா அவை? நீங்கள் மூன்று சக்கர சைக்கிள் பழகும்போது, உங்களின் பிஞ்சுக் கால்கள்தானே அதன் பெடலை உந்தித் தள்ளி உங்களை மகிழ்ச்சிப்படுத்தின!

பள்ளி வயதில் நீங்கள் சைக்கிள் ஓட்டும்போதும் சரி, பெரியவனாகி மோட்டார் சைக்கிளை உதைத்து ஸ்டார்ட் செய்யும்போதும் சரி... யோசித்தால், உங்கள் இயக்கங்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது உங்கள் கால்கள்தானே! அவற்றை நீங்களே அக்கறையுடன் கவனிக்காவிட்டால், வேறு யார் கவனிக்கப் போகிறார்கள், சொல்லுங்கள்?!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா