சிந்தனை செய் மனமே!



வாழ்வில், இன்னல்களில் இருந்து விடுபட்டு, மன உறுதியுடன் வெற்றி பெற ராமாயணம் அருமருந்து என்கிறது உபநிடதம் (ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே). அறத்தின் தொகுப்பு வேதம்; அதன் செயல்பாடு ராமாயணம். சொல்லின் விளக்கத்தை, அதன் உண்மையை, செயல்பாடு உறுதி செய்யும். இதிகாச விளக்கத்தின் துணையுடன், வேதப் பொருளை உணர வேண்டும் என்கிறது சாஸ்திரம் (இதிஹாச புராணப்யாம் வேதம் ஸமுபபிரம்ஹயேத்). ஆக, மனித வாழ்க்கையுடன் இணைந்த இதிகாசம், ராமாயணம்.
உலகின் முதல் கவிஞர், வால்மீகி; முதல் காவியம், ராமாயணம். இதையடுத்து வந்த காவியங்களுக்கு இதுவே ஆதாரம் (கவீனாம்ப்ரதமோ குரு:) தாய்- தந்தை, அண்ணன்- தம்பி, மனைவி- மக்கள், பங்காளிகள்- கிராமத்தார் மற்றும் சமூகம், நகரம், தேசம் என உலகம் அனைத்துடனும் மனிதனுக்கு உள்ள தொடர்பு, அவன் அவற்றுடன் இணைந்து வாழ்வதற் கான நடைமுறைகள், அவனது கடமைகள், அடைய வேண்டிய ஆன்ம லாபம் என அனைத்தையும் விரிவாக விளக்கி, பொது அறத்தின் நூலாகத் திகழ்கிறது ராமாயணம். உள்ளே இருக்கிற மிருக குணத்தைக் கிள்ளி எறிந்து, பண்பட்ட மனிதனாக மாற்றி, நற்சமூகத்தை உருவாக்க, இந்த ஒரு நூலே போதும்; சுதந்திர பாரதத்தை ராம ராஜ்ஜியமாகப் பார்க்க வேண்டும் எனும் அண்ணல் காந்தியின் ஆசைக்கு அடித்தளமிட்டதும் ராமாயணம்தானே?!
அயோத்தியில், அரச குலத்தில் தோன்றினாலும், அரியாசனத்தில் அமராமல், காட்டுக்குச் செல்வதைச் சாக்காகக் கொண்டு, விலங்குகளுடனும் மனிதர்களுடனுமான தொடர்பின் மூலம் கடல் கடந்து, இலங்கை சென்று, தனது செயல்பாட்டில் அறத்தைப் போதித்து,
##~## |
'சீதையை ராவணன் கவர்ந்து சென்றதை அறிந்ததும், அறவழியில் ராவணனை அழிக்க, போதிய தடயம் கிடைத்துவிட்டது என ஒரு கணம் மகிழ்ந்தான் ஸ்ரீராமன்’ என்கிறார் நாராயணப் பட்டத்திரி. தகுதி இருந்தாலும், அறத்துடன் இணைந்தே செயலாற்றவேண்டும். 'மனிதனாகத் தோன்றியது, மனிதனைப் பண் படுத்துவதற்காகவே...’ என்பர்.
ஓர் இனத்தைச் செம்மைப்படுத்த, அந்த இனத்திலேயே தோன்றி, அவர்களுடன் நெருங்கிப் பழகி நல்வழிப்படுத்துவதே, வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும். உண்மையில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லவில்லை; பொய்யான சீதை, அவனிடம் சிக்கிக்கொண்டாள். உண்மையான சீதை, அக்னிதேவனின் பாதுகாப்பில் இருக்கிறாள். அலை மகளைக் கயவன் நெருங்கவே முடியாது. ராவண வதம் முடிந்ததும், அக்னிப் பிரவேசத்தைக் காரணமாகக் கொண்டு, அக்னியிடம் இருந்து உண்மை சீதையைப் பெற்றுக் கொள் கிறார் ஸ்ரீராமர் என்கிற விளக்கம், வேறு சில ராமாயணங்களில் சொல்லப்படுகிறது!
மனித அறத்தை வலுப்படுத்தவும், நம்பிக்கையை உறுதி செய்யவும், வீண்பழியை அழிக்கவும் அக்னிப்பிரவேசம் நிகழ்ந்தது. அக்னியின் இயல்பு வெப்பம்; அந்த வெப்பத் தையே மாற்றும் சக்தி கொண்ட பதிவிரதை சீதாதேவி. அனுமனின் வாலில் நெருப்புப் பட்டபோது, 'பதிவிரதை எனும் அறம் என்னுடன் இணைந்திருப்பது உண்மையெனில், அந்த நெருப்பு, அனுமனுக்கு குளிர்ச்சியாக மாறவேண்டும்’ என நினைத்தாள் சீதை. அப்படியே குளிர்ந்துபோனது நெருப்பு!
காட்டுக்குச் செல்லும் ஸ்ரீராமனைப் பின்தொடர முற்பட்டாள் சீதை; கணவன் மறுத்தும் கேட்கவில்லை. 'கணவனைப் பின்பற்றுவதே மனைவியின் அறம்’ என்றாள். அவளது செயல், ராமாயணத்தில் முக்கியத் திருப்புமுனை. மனைவி, கணவனது செயலுக்கு உறுதுணை யாக இருப்பவள் என செயல் படுத்திக் காட்டினாள் சீதாதேவி! அது மட்டுமா?! இரண்டு புதல்வர்களை ஈன்றெடுத்து, ராம காதையைச் சொல்லவைத்து, ராமசரிதத்தை சிரஞ்ஜீவியாக்கினாள்; பெண்மையின் பெருமையை எடுத்துரைத்தாள்; அறம் வளர பெண்ணின் பங்கும் தேவை என்பதைப் புரியவைத்தாள். அவளுக்கு நிகர் அவளே! சீதா-ராமன் போல் தம்பதி வாழவேண்டும் எனத் திருமணத்தில் வாழ்த்துவதற்கு சீதையின் சரிதமே காரணம். 'சீதா கல்யாணமே... வைபோகம்’ எனும் வரிகள் திருமணங்களில் இன்றைக்கும் பாடப்படுகின்றன!

அலைமகளுடன் இணைந்து செயல்படுபவன் ஸ்ரீமந் நாராயணன். தனது ராம அவதாரத்திலும் அதையே பின்பற்றி னான். நாட்டையும் நாயகியையும் இழந்தவன் சுக்ரீவன்; ஸ்ரீராமனும் அப்படியே! சம துயரத்தில் இருப்பவர்கள் இணைந்தால், அங்கே செயல்பாடுகள் சிந்தாமல், சிதறாமல் வெற்றியைத் தரும் என உணர்ந்த அனுமன், ராஜதந்திரத்துடன் செயல்பட்டான்; இருவரும் துயரத்திலிருந்து விடுபட்டனர்! எதிர்பார்ப்பு இன்றி பிறரது துயர் துடைக்கும் நல்லெண்ணம், அமைச்சர்களிடம் வேண்டும் என்கிறது ராமாயணம்.
அசோகவனத்தில் சந்தித்ததும், 'ஆழ்கடலை உன்னால் எப்படிக் கடக்க முடிந்தது?’ என்று அனுமனிடம் கேட்டாள் சீதை. 'தங்களது கருணையால், என் தகப்பனின் பெருமையால், எல்லாவற்றையும்விட, என் மனதில் குடியிருக்கும் ஸ்ரீராமரின் பேரருளால் கடக்க முடிந்தது’ என்றான் அனுமன். தகுதி இருப்பினும் தன்னடக்கம் தேவை என வலியுறுத்து கிறது ராமாயணம்.
தன்னடக்கம் இல்லையெனில் இறுமாப்பு புகுந்து மெய்ம்மறக்கச் செய்துவிடும்; வாழ்வும் வெற்றியும் கேள்விக் குறியாகிவிடும். இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டதும், ராவண னின் அரசவையில் கைதியாக நின்றதும் இவற்றை நமக்கு வலியுறுத்தவே! அவனது தன்னடக்கம், ஸ்ரீராமனின் பெருமையை ராவணனுக்கு உணர்த்தியதுடன், பயத்தையும் அவனுக்கு உண்டுபண்ணியது! அந்தப் பயம் சிந்தனையைச் சிதறடித்தது. ஆக, அவனது அழிவுக்கு மறைமுக மாக உதவினான் ஸ்ரீஅனுமன். தூதுவனின் அறத்தைச் செயல்படுத்தினான். பிறகு, தூதுவனாக வந்த அங்கதனிடம், 'முன்பு இங்கே வந்து இலங்கையை எரித்த குரங்கு எங்கே?’ என்று கேட்டான் ராவணன். அவனது மனதில் அனுமனும் அவன் சொன்ன ராமனது பெருமையும் பயத்தை ஏற்படுத்தியிருந்ததன் வெளிப்பாடு அது! ஆசை மனதை ஆட்கொண்டுவிட்டால், அவமானத்தை அறியமுடியாமலே போய்விடும். அனைவரின் பரிந்துரையையும் ஏற்காமல், தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்தான் ராவணன். ஆசை ஆட்கொள்ள, அவலம் நிச்சயம் என்பதற்கு உதாரணம், அவன்.
கைகேயியின் வரம், ஸ்ரீராமனை காட்டுக்கு விரட்டியது. அவளை அனைவரும் பழித்தனர். ஸ்ரீராமனின் பகையாளியாகவே அவளை இகழ்ந் தனர். அவளிடம் பகை மறந்து, அவளிடம் உள்ள நல்லவற்றை ஏற்கும் குணம் ராமரிடம் இருந்தது. அவளைத் தாயாகவே பாவித்தார் ஸ்ரீராமர்; அவளது செயல் சரியே என நினைத்தார். 'கைகேயி, பரதனுக்கு அரசுரிமையை அளித்தது சரிதான்! மனைவியைக் காப்பாற்ற இயலாதவன், நாட்டை எப்படிக் காப்பாற்றுவான் எனும் தீர்க்கத் தரிசனத்துடன் கைகேயி செயல்பட்டாள்’ என்று அவளது குணத்தை மெச்சும் குணம், ராமரைத் தவிர எவருக்கும் இருக்காது.
இப்படியாக... அறத்தின் மொத்த உருவத்தை யும், கதாபாத்திரங்கள் மூலமாக, செம்மையாக, தெளிவாக வெளிப்படுத்தியவர், வால்மீகி. அவரின் சிந்தனையின் ஆழம், அதன் தூய்மை வார்த்தைகளில் அடங்காது.
வேடனாகப் பிறந்து, களவாடிப் பிழைப்பவனை நாரதர் திசை திருப்பினார்; நெடுந்தவத் தில் இருந்தவனைப் புற்று மண் சூழ்ந்தது (வல்மீகம் என்றால் புற்று என்று பொருள்!). புற்றிலிருந்து வெளிவந்ததால், அவரை வால்மீகி என அழைத்தாகச் சொல்வர். 'வாமலுரூ’ என்பவருக்குப் பிறந்த வால்மீகி, தவம் இருந்த போது, புற்று மண் மூடி, பிறகு அதிலிருந்து வெளிவந்தவர் என அத்யாத்ம ராமாயணம் கூறுகிறது. வல்மீகி எனும் முனிவருக்கும், நாக கன்னிகைக்கும் பிறந்தவர் எனும் தகவல் கந்த புராணத்தில் உண்டு!
வேடன் ஒருவன், சப்தரிஷிகளின் பரிந்துரை யில் ராம நாமாவைச் சொல்லித் தவத்தில் ஆழ்ந்தபோது, புற்று மண்ணால் அவனது உடல் மறைக்கப்பட்டது. அதைக் கண்ட ரிஷிகள் ஏழுபேரும் அவனுக்கு அருளி, ராமாயணம் இயற்றும்படி பணித்தனர் எனப் பத்மபுராணம் தெரிவிக்கிறது.
இப்படி... வால்மீகி குறித்த மாறுபட்ட தகவல்கள் பல உண்டு. ஸ்ரீபிரம்மாவின் தூண்டுதலால், நாரதரின் பரிந்துரைப்படி அறத்தை அடிப்படை யாகக் கொண்டு, ராம சரிதத்தை இயற்றினார், வால்மீகி மகரிஷி. ஸ்ரீராமனின் அருளால் ரிஷியாக மாறிய வால்மீகி, நதியில் நீராடச் சென்றபோது, வேடன் ஒருவன், இணைந்திருந்த இரண்டு பறவைகளில் ஒன்றைத் தனது பாணத்தால் அழித்தான். இணையை இழந்த பறவை, துக்கத்தில் கதற... இதைக் கண்ட ரிஷி, 'காமத்தில் கட்டுண்ட இணையின் ஒன்றை அழித்த நீ, நிலையாக வாழமாட்டாய்’ என்று சொன்னார். அந்தச் சோகத்தின் வடிகாலாகத் தோன்றியதே ராம காவியம். இந்தக் காவியம், மனித உயிர்களின் அறிவுப்பசியைப் போக்கி, ஆனந்தம் அடையச் செய்யும் அருமருந்து!
பண்பாட்டுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ராமா யணம் இயற்றிய வால்மீகியின் பெருமையை, வார்த்தைகளில் அடக்க இயலாது!
(இன்னும் சிந்திப்போம்)