நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...
எப்போதும் இன்புற்றிருக்க...
##~##
'நொ
டிக்கு நொடி வாழ்’ என்பதே கிழக்கிந்திய மரபு. அதுவே, ஜென்னில் ஊடுருவியது. இன்று மேற்கத்திய மேலாண்மையை அடியற்றி, திட்டமிடுவது குறித்த பல சுயமுன்னேற்ற நூல்களை விலாவாரியாக எழுதுகிறார்கள். 200 பக்கங்கள் எழுதத் திட்டமிட்டு, 300 பக்கங்கள் வரை கூட அவை நீள்கின்றன.

அலுவலக ரீதியான வாழ்க்கை வேறு; சொந்த வாழ்க்கை வேறு! சொந்த வாழ்விலும் பயணத்துக்கோ, வேறு சில பணிகளுக்கோ திட்டமிடவேண்டியது அவசியம்தான். அதே நேரம், எல்லாவற்றுக்கும் திட்டமிட முனைவது, வாழ்க்கையை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

'வெற்றி பெறுவதற்குத் திட்டமிடல் அவசியம்’ என்று இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், வெற்றி பெற்றவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சக்ரவர்த்திகளாகவும் சாம்ராஜ்ஜியங்களை வென்றவர் களாகவும் திகழ்ந்த பலரும், சவப்பெட்டிக்குள் சோகமாகச் சுருண்டு விழுந்ததை அறிவோம். அத்தனை வெற்றிகளும் வீண் என்பதைத் தங்களுடைய கடைசி காலத்தில்தான் அவர்கள் உணர்ந்தனர். காலம் கைநழுவிப் போனதால், அதன்பின் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எங்கள் பள்ளிகளில் பதக்கங்கள் பெற்ற மாணவர்கள் பலர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஒரு சிலரைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது மாத்திரம் புரிந்தது. வெற்றி பெறும் ஆசையில், இனிய நொடிகளையும் மகிழ்ச்சியான அனுபவங்களையும் அவர்கள் இழந்துவிட்டார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்...

எப்போதும் இன்புற்றிருக்க...

பள்ளியில் நண்பர்கள் இருவர் இருந்தனர். அவர்களில் அரவிந்த், எதிலும் முதலிடம்; நிறையப் பதக்கங்கள் பெற்றவர்! அஷோக் கடைசி பெஞ்ச்; விளையாட்டு, நண்பர்கள், உல்லாச வாழ்வு என ஊர் சுற்றுவதில் பொழுதைக் கழிப்பவர்.

ஒருநாள், ''அஷோக், நீ நினைத்தால் இன்னும் நன்றாக ஜெயிக்க முடியும். ஏன் முயற்சிக்க மாட்டேன் என்கிறாய்?'' என்று கேட்டான் அரவிந்த்.

''பள்ளிப் பருவத்தில் படிப்பு மட்டுமே முக்கியம் அல்ல. நீ என்றைக்காவது பள்ளி வளாகத்தில், மரத்தடியில் அமர்ந்து மற்ற நண்பர்களுடன் பேசியது உண்டா? அவர்களது குடும்பம் பற்றி விசாரித்திருக்கிறாயா? அவர் களுடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறாயா? விளையாடிக் கீழே விழுந்திருக்கிறாயா? இவையும் முக்கியம் என்று நீ ஏன் கருதவில்லை?'' என பதிலுக்குக் கேட்டான் அஷோக்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நண்பர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது. அஷோக், முன்னணி நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அரவிந்த், மிகச் சாதாரணப் பணியில் இருந்தார்.

இது ஏன் என்கிற கேள்வி எழும். படிப்பும், பதக்கங்களும் வாழ்வின் ஒரு பகுதிதான்! அவற்றைக் கொண்டே எல்லாச் சாதனைகளையும் நிகழ்த்திவிட முடியாது. 'எனது படிப்பு என் அறிவுக்குத் தடையாக இருக்க, நான் அனுமதித்தது இல்லை’ என்று கல்வியைப் பற்றிக் குறிப்பிடுவார் மார்க் ட்வெயின்.

அரவிந்தைப் போன்று முன்கூட்டியே திட்டமிடுகிறவர்களைக்காட்டிலும், அஷோக்கைப் போன்று அந்தந்த நொடிக்கு ஏற்ப வாழ்வின் சகல பரிமாணங்களையும் அரவணைத்து வாழ்பவர்களே வெற்றி பெற முடியும்.

திட்டமிடல் என்பது ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தையும், நிகர வருவாயையும் அதிகப்படுத்த வேண்டுமானால் உதவலாம். திட்டமிடுவோர், எல்லோரிடமும் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வார்கள். எந்த ஒரு செயலுக்கும் உடனடி பலனை எதிர்பார்ப்பார்கள். லட்சிய வெறி, அவர்களைப் பாடாய்ப்படுத்தும். எவர் முந்தினாலும், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடைசியில், அவர்களது பதற்றமே அவர்களை அதல பாதாளத்தில் வீழ்த்தி விடும். சிறு பின்னடைவுக்கே சிதறிப்போய் விடுவர்!

எவரிடமும் எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொள்ளக் கூடாது. 'பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்னும் வரிகளுக்கு ஏற்ப வாழத் துவங்கினால், நமது மகிழ்ச்சியை எவரும் களவாட முடியாது. நமது மகிழ்ச்சியை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் படி விட்டுவிடக் கூடாது. மற்றவர்கள் நம்மிடம் அன்புடனோ பணிவுடனோ நடந்துகொள்வதில் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று எண்ணுவதுகூடத் தவறு.

எப்போதும் இன்புற்றிருக்க...

முதிர்ச்சி என்பது, எந்தச் சலனமுமற்ற அணுகு முறையுடன் வாழ்வதே! பிறர் பழித்தாலும் இகழ்ந் தாலும் நமது செயல் சரி என்கிறபோது... வருந்தாமல் தொடர்ந்து செயல்பட்டால், அந்த இகழ்ச்சி பின்னுக்குத் தள்ளப்படுவதை நாம் பார்க்கலாம்.

நன்றியைக்கூட நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஒருவருக்கு உதவினால், அவரும் பதிலுக்கு நமக்கு ஏதேனும் நல்லதுதான் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் நம் முதுகில் குத்துபவராகவும் இருக்கலாம். மற்றவர்கள் குத்தியதைவிட, புரூட்டஸின் கத்திக் குத்துதான் சீஸரை அதிகம் காயப்படுத்தியது. சீஸரின் ஈமக்கிரியையின்போது பேசும் ஆன்டனி, 'இதுதான் புரூட்டஸ் ஏற்படுத்திய காயம். மற்ற எல்லா காயங்களைக் காட்டிலும் இரக்கமற்ற காயம்!’ என்று ஆதங்கப்படுவான்.  

நாம் எவருக்கேனும் நன்மை செய்தால், அதற்கு அவர்கள் நன்றி கூற வேண்டும்; அவர்களின் கண்களில் விசுவாசம் தெரியவேண்டும் என எதிர் பார்த்தால், நிச்சயம் நாம் மகிழ்ச்சியை இழந்து விடுவோம். பிறருக்கு நல்லது செய்யும் நிலையில் நாம் இருப்பதற்காக மகிழ்வோமே!

'என்னைப் பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது’ என எண்ணத் துவங்கும்போதே, நமது ஆனந்தம் ஆவியாகிவிடுகிறது. ஏனெனில், அனைவரையும் திருப்திப்படுத்த நினைப்பவன், தனது தனித்தன்மையை ஒரு கட்டத்தில் முழுவதுமாக இழந்துவிடுவான்!

நாம் எப்போதும் நன்றியுடையவர்களாகவே இருக்க வேண்டும். நன்றிகெட்டத்தனம், குறுகிய காலத்தில் சந்தோஷ விளைவுகளைத் தரலாம். ஆனால், நிரந்தரமான குற்ற உணர்வை அது ஏற்படுத்திவிடும்.  

நாம் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் அளவுக்கு அதிகமாக, ஆக... அவை நிறைய எதிர்பார்ப்புகளை நம்முள் உருவாக்கிவிடுகின்றன.

எந்தத் தகவல் தொடர்புச் சாதனங்கள் நம்மை அறிவாளிகளாகக் காட்டிக்கொள்ள உதவுகின்றனவோ, அவையே சில தருணங்களில் நம் மகிழ்ச்சிக்கு உலை வைப்பதையும் பார்க்கலாம். செய்தித்தாளே கிடைக்காத, மின்சாரமே இல்லாத பகுதிகளில் நான் ஒரு வாரம் தங்க நேர்ந்ததுண்டு. அப்போதெல்லாம் மிகுந்த சுதந்திரமும், சிறகுகள் முளைத்த உணர்வும் என்னுள் ஏற்படுவதை உணர்ந் திருக்கிறேன்.

இன்று... சாப்பிடும்போதும் ஏதேனும் ஓர் அலைபேசி செய்தி வராத மனிதரைக் காண முடியாது. நிதானமாக, மௌனமாக ஒவ்வொரு பருக்கையையும் விழிப்பு உணர்வுடன் உண்ண முடிவதில்லை. அலைபேசி அழைப்புக்குப் பதிலளித்தபடி பதற்றத்துடன் சாப்பிடும்போது, சாம்பாரில் என்ன காய், ரசம் என்ன ருசியில் என்பதுகூடத் தெரியாமல் சாப்பிடும் அவலத்தைப் பார்க்கிறோம். வாழ்க்கையில், அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிக்கூடத் திட்டமிட முடியாது. எந்த உணவையும் எதிர்பார்க்காத மனிதனுக்கு எப்போதும் ருசியான உணவு கிடைக்கிறது.

ஆதிவாசிகளுக்கு அதிகம் கனவுகள் வருவதில்லை என்று கண்டுபிடித்திருக் கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு நிறைவேறாத எதிர்பார்ப்புகள் என எவையும் இருப்பதில்லை.  

கைசொடுக்கும் நேரமாக வாழ்க்கை முடியும்போது, நாம் பெற்ற விருதுகளை நாம் நினைத்துப் பெருமைப்படுவதில்லை. நம்முடன் அன்பாக இருந்தவர்களே நமக்குத் தென்படுவார்கள். நமக்கு உதவியவர்களின் முகங்களே நம் கண்முன் வலம் வரும்.  

அப்படி நாம் எத்தனை பேருடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் வலம்வரப் போகிறோம் என்பதே நம் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுகோல்!

(இன்பம் பொங்கும்)
படம்: கே.ராஜசேகரன்