வானம் தொடுவோம்!


##~## |
திடீரென்று ஓர் அணில் ஒரு சிறு கூழாங்கல்லைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தது. பாலம் கட்டும் பணியில் தன் சிறு பங்கையும் அளிக்க முற்பட்டது அது. அதைப் பார்த்த குரங்குகள் வேடிக்கையாகச் சிரித்தன. 'அட, இதென்னடா நடுவே தொல்லை!’ என்று, ஒரு குரங்கு அந்த அணிலை கிண்டல் செய்தது. ஆனால், ஸ்ரீராமர் அந்த அணிலைப் பார்த்த பார்வையில் நன்றியுணர்வு வெளிப்பட்டது. அதன் அரும்பணியைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். அதன் பணியை அங்கீகரித்து, முதுகில் வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார். அதுதான், அணிலின் முதுகில் இன்றும் தென்படும் ராமரின் விரல் அடையாள வரிகள்!
புள்ளிவிவரக் கணக்குப்படி பார்த்தால், பாலம் கட்டும் பணியில் அணிலின் பங்கு அற்பமானதுதான். ஆனால், அணிலைப் பொறுத்தவரை அது 100 சதவீதம் முழுமையானது. அதற்குப் பலன் உண்டா என்றால்... பாலத்தின் கட்டுமானத்தைப் பொறுத்தவரை, இல்லைதான்! ஆனால், அது தன்னால் முடிந்த உதவியை ஸ்ரீராமருக்கு செய்தது. அந்த அணிலின் பக்தி சிரத்தை யாருக்கும் குறைந்ததல்ல என்றுதான் ஸ்ரீராமரும் கருதினார். மற்றவர்கள் பார்வையில் அது செய்த காரியம் பெரிதல்ல. ஆனால், அதன் உணர்வுபூர்வமான பங்களிப்பு மிக அதிகம். அதுதானே முக்கியம்?
இனி, நம் விஷயத்துக்கு வருவோம்...
ஜெய்சங்கர், கிரெடிட் கார்டு நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவி வகித்துவரும் அதிகாரி. தனது வாடிக்கையாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இதற்காக தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அழைத்துப் பேசும்போதெல்லாம், நமது வாடிக்கையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவார்.
அதாவது, பணத்தைத் திரும்பச் செலுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் காட்டும் வரைபடத்தைக் காண்பித்து, 'இது வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டும் படம்’ என்பார். பிறகு, கடந்த ஆண்டு இருந்த நிலையோடு ஒப்பிடும் இன்னொரு வரைபடத்தைக் காண்பித்து, 'வாடிக்கையாளர் திருப்தியும் சென்ற ஆண்டைக் காட்டிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுவார்.
நிகழ்ச்சி முடிந்ததும், வாடிக்கையாளர்கள் எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதாக எம்.டி. உள்பட எல்லோரும் அறிந்து, சந்தோஷப்படுவார்கள்.

ஆனால், இவர்களது நிறுவனத்தின் வாடிக்கையாளரான பெல்காமில் இருக்கும் ஜெயராஜின் நிலை மோசமானது. ஒருமுறை ஸ்ரீலங்காவுக்கு அவர் போயிருந்தபோது, இதே கிரெடிட் கார்டு நிறுவனம், அவருக்கு முன்கூட்டியே தகவல் ஏதும் தராமல் அவரது கார்டை செயல்படாமல் முடக்கிவிட்டது. அவர் அதற்குக் காரணம் கேட்டபோது, ஸ்ரீலங்கா போன்ற சுற்றுலாப் பயணிகள் நிறைந்த நாடுகளில் கிரெடிட் கார்டு குற்றங்கள் நிறைய நிகழ்கின்றன என்பதால், அவ்வாறு முடக்கியதாகக் கூறினார்கள். ஒரு வாரத்தில் புதிய கிரெடிட் கார்டு அவருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தகவல் தந்தார்கள். அப்படி சொல்லி 8 வாரங்கள் ஆகிவிட்டன. கார்டுதான் வரவில்லை!
ஜெயராஜ் எத்தனையோ முறை போனில் கூப்பிட்டுக் கேட்டாலும், 'கார்டு விரைவில் வந்துவிடும்’ என்கிற ஒரே பதில்தான் தரப்பட்டது. வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தலைவரைக் கூப்பிட்டுக் கேட்டார். அவரிடமும் சரியான பதில் இல்லை. தன்னை அவர்கள் ஏமாற்றிவிட்ட உணர்வும் சினமும்தான் ஜெயராஜுக்கு ஏற்பட்டது. யாரும் தன்னை ஒரு பொருட்டாகவே மதித்து நடந்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்தார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த இடத்தில் அவர் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.
'திருப்தி’ என்ற பாலம் கட்டும் பணியில் ஜெயராஜின் பங்கு, அந்த அணிலின் பங்குதான். அதனால்தான் என்னவோ, ஜெயராஜின் பங்களிப்பு அவர்களுக்குத் தேவைப்படவில்லை போலும்! அவர் ஒரு தனிமனிதர், அவ்வளவுதான்! அவர் கிரெடிட் கார்டு வாங்கிய நிறுவனத்துக்கு வேண்டியதெல்லாம் புள்ளிவிவரக் கணக்கும், அதற்கான வரைபடங்களும்தான்.
அதேநேரம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை சென்றடையக் குரங்குகள் தூக்கிக்கொண்டுவந்து போட்ட பெரிய பாறைகள் போல ஜெயராஜின் பங்களிப்பு இருந்திருந்தால், அவரது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்கு தகுந்த மரியாதையும் தரப்பட்டு இருக்கும். ஆனால், கிரெடிட் கார்டு நிறுவனத்தை பொறுத்தவரையில் ஜெயராஜின் பங்கு அற்பமானதாக தெரிந்ததால், அவர் தொடர்ந்த புகார்கள் அவர்களுக்குத் தொல்லையாகவே இருந்தன.
எல்லோரையும் திருப்திப்படுத்தி மகிழ்ச்சியுற வைப்பது என்ற இன்றைய நவீன நிர்வாக இயலில் ஜெயராஜின் நிலை சோகமான ஒரு பகுதி. ஆக, ராமர் மாதிரி இல்லாமல் இருப்பது எப்படி என்பதைத்தான் அது போதிக்கிறது. அதாவது, '100 சதவிகிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள். பலனைத் தருகிற 80 சதவிகித வாடிக்கையாளர் மீது மட்டும் கவனம் செலுத்தி, மீதமுள்ள 20 சதவீத வாடிக்கையாளரை கண்டுகொள்ளாதீர்கள்!' என்று எடுத்துக்காட்டுகிறது அது.
இதுதான் இப்போதைய 'வெற்றிகரமான’ நிர்வாக இயல்!