விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

ரூர் அருகில் உள்ள தான்தோன்றி மலையின் படிக்கட்டுகளும் கொள்ளை அழகு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் எளிதாக ஏறும் வகையில் அமைந்திருப்பதுதான் இதன் சிறப்பு அம்சம்!

தாத்தாவும் பேரனும் படியில் அமர்ந்தபடி, சிலுசிலுவென வந்த காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

''ஸ்ரீமகாவிஷ்ணுவை அலங்காரப் பிரியர்னும் சிவப்பரம்பொருளை அபிஷேகப் பிரியர்னும் சொல்வாங்க. பெருமாள் கோயிலில், விசேஷ நாட்கள்ல மட்டும்தான் அபிஷேகம் நடக்கும். அதுக்கு திருமஞ்சனம்னு பேரு. இங்கே ஒரு மாற்றம்... தான்தோன்றிமலைப் பெருமாளுக்கு நித்தியப்படி அபிஷேகங்கள் சிறப்பா நடக்குது. அதேபோல எப்பவும் போல, எல்லா தலங்களைப் போல விசேஷமா அலங்காரங்களும் பண்றாங்க. அதனால, மற்ற தலங்கள்ல காணக் கிடைக்காத அரிதான அபிஷேகக் காட்சியை, இங்கே தரிசிக்கலாம். இது ரொம்ப பலன் தரக்கூடியதுன்னு சொல்றாங்க'' என்றார் தாத்தா.

''அட... அப்படியா தாத்தா?'' என விழிகள் விரியக் கேட்டான் பேரன்.

''ஆமாம்... உச்சிகால பூஜைக்கு முன்னால எண்ணெய்க் காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம்னு மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பாரு... மனசே நிறைஞ்சு போயிரும். அதேபோல வருஷத்துல நிறைய்ய விழாக்கள் இங்கே உண்டுன்னாலும் கூட, புரட்டாசி மாசம் திருவோணம் நட்சத்திரத்திலேயும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்திலேயும் இங்கே நடக்கிற தேர்த்திருவிழா சுற்றுவட்டாரத்துல ரொம்பவே பிரசித்தம். புரட்டாசி மாதத்துல பதினெட்டு நாட்கள் சீரும் சிறப்புமா நடக்கற திருவிழாவுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து போறதுக்கு வசதியா, அரசாங்கம் சிறப்பு பஸ்கள் கூட இயக்குவாங்க, தெரியுமா?'' என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார் தாத்தா.

''இன்னொரு விஷயம்... இது குடைவரைக் கோயில்னு சொன்னேன், இல்லியா? மலையை அப்படியே குடைஞ்சி, கோயிலா, சந்நிதியாக் கட்டியிருக்காங்கன்னு பிரமிப்போட சொன்னேன்தானே? கொங்கு தேசத்துக் குடைவரைக் கோயில்கள்ல முக்கியமான கோயில் இதுதான்! அதுமட்டுமா? நாமக்கல்ல இருக்கிற ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலும் குடைவரைக் கோயில்தான். அந்தக் கோயிலைப் பார்க்கும் போதும், பிரமிப்பும் பரவசமும் தொத்திக்கும். நாமக்கல் கோயிலைக் குடைவரைக் கோயிலாக அமைத்த குணசீலன் எனும் அதியேந்திரன் என்பவன், தான்தோன்றிமலை குடைவரைக் கோயிலையும் அமைத்தான். இந்தக் கோயிலை, எப்படியும் கி.பி.775-ஆம் வருஷம் அமைச்சிருக்கணும்னு மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்புத் தொல்லியல் வல்லுநர் ஹெச்.சர்க்கார் தெரிவிச்சிருக்கார். அப்படின்னா... இந்தக் கோயில் எத்தனை வருஷங்களை கடந்திருக்குன்னு கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாரு'' என்று தாத்தா சொல்லிவிட்டு, மீண்டும் கோயில் பக்கம் பார்வையைச் சுழலவிட்டார்.

கதை கேளு... கதை கேளு...
##~##
''அடேங்கப்பா...'' என சொல்லிவிட்டு, வாய் பிளந்தபடி அவனும் எழுந்து, கோயிலை ஒருமுறை வியப்புடன் பார்த்தான்.

''டேய் கண்ணா... ஸ்ரீகல்யாண வெங்கடரமண ஸ்வாமியோட கருவறை அளவு தெரியுமா உனக்கு? சுமார் 19 அடி அஞ்சு அங்குலம்னும் 14 அடி ஆறு அங்குலம்னும் குடையப்பட்ட பிரமாண்ட சந்நிதி இது! ஒன்பது அடி ஒன்பது அங்குலத்துல உசரம் இருக்கு.  அந்தப் பாறையிலேயே புடைப்புச் சிற்பமா, பெருமாளை, அவரோட அழகை அப்படியே கொண்டுவந்திருக்கிற அந்தப் புண்ணியவான் சிற்பி யாருன்னு தெரியலை. அவ்ளோ அழகா இருக்கு, கவனிச்சியா?

அதேபோல, கருவறை வாசல்ல, மேற்புறத்துல, பூதகணங்கள் எல்லாம் சேர்ந்து, வாத்தியக் கருவிகளை இசைக்கிறதை எவ்வளவு தத்ரூபமா அமைச்சிருக்காங்க, பார்த்தியா? இன்னொரு விஷயம்... துவார பாலகர்களோட உருவங்கள், முற்றுப் பெறாத நிலைல இருக்கறது ஏன்னு தெரியலை'' என்று குடைவரைக் கோயிலின் சிற்ப நுட்பங்களை வியந்து, சொல்லிக் கொண்டே வந்தார் தாத்தா.

''ரொம்பவே அற்புதமான இடம் இது. காவிரிக்கரையை ஒட்டி நடந்து வந்தா, அமராவதி ஆறு, காவிரியோடு கலக்கற இடம் வரும். அந்த இடத்து வழியா வரச்சொல்லி, சுசர்மாங்கற பக்தருக்கு நாரத முனிவர் அருளினார். திருமால் பக்தரான சுசுர்மா தம்பதிக்கு, கல்யாணமாகி பல வருஷங்களாகியும் குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்காமலே இருந்துச்சு. தம்பதி ரெண்டு பேரும் வாரத்துல ஏழு நாள்ல, நாலு நாளாவது அதுஇதுன்னு சொல்லி, விரதம் இருந்தாங்க.

நள்ளிரவு முடிந்து பிரம்ம முகூர்த்தப் பொழுது வந்த வேளையில, அவங்களோட விரத ஜபத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன நாரத மாமுனி, அவங்களுக்குத் திருக்காட்சி கொடுத்தார்.  'உங்களோட முற்பிறவியின் பாவம் தொலைஞ்சாத்தான், உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருப்பதிக்கு யாத்திரை போய், பகவானை ஸேவிச்சா... புண்ணியம் கிடைக்கும்’னு சொன்னார்.

கதை கேளு... கதை கேளு...

உடனே சுசர்மாவும் அவரோட மனைவியும் காவிரிக் கரையோரமாவே நடந்து வந்து, அமராவதி ஆறு காவிரியோட கலக்கற அந்த இடத்துக்கு வந்தார். அங்கே இருந்த கல்தச்சர்கள் சிலர், அவரை தங்களோட குருவாக ஏற்று உபசரிச்சாங்க. அவரும் அவர்களோடயே இருந்து மறுநாள், மலைக்குச் சென்று வேலையின் நுட்பங்களைத் தச்சர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அப்ப பாறை ஒன்றை உடைத்தபோது, அசரீரி கேட்டுச்சாம்..! 'உன் மனைவியை அழைச்சுக்கிட்டு, நாளை இந்த மலைக்கு வா...’ன்னு ஒரு அசரீரி கேட்டுச்சாம்.

அதன்படி, மறுநாள்... மனைவியையும் தச்சர்களையும் கூட்டிக்கிட்டு, மலைக்கு வந்தார் சுசர்மா. அப்ப மலையுச்சில, நட்சத்திரம் போல ஒரு ஒளி வந்துச்சாம். ஒளி வந்த இடத்தை நோக்கி நெருங்கி வந்தாங்க. அப்ப, அங்கேயிருந்த மலை ஒண்ணு தானாவே பிளந்துச்சு. அவங்களுக்குத் திருப்பதி ஸ்ரீவேங்கடவனே திருக்காட்சி தந்தார். 'உங்களுக்கு புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும்’னு அருளி, ஆசீர்வதிச்சார் பகவான்னு சொல்லுது ஸ்தல புராணம்!

இப்பேர்ப்பட்ட சாந்நித்தியங்கள் கொண்ட தான்தோன்றிமலை ஸ்வாமியை நல்லா ஸேவிச்சுக்கோ... புண்ணியம் உண்டு'' என்று சொல்லிவிட்டு, விஷ்ணு சகஸ்ரநாமத்தை முணுமுணுக்கத் துவங்கினார் தாத்தா.

பேரனும் சகஸ்ரநாமம் சொல்லத் துவங்கினான்.

- தரிசிப்போம்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்