நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##
கா
சியில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரபலம். அவர்தான் வாரணாசி எனப்படும் காசி நகரைக் காப்பவர் என்று சொல்வார்கள்.  நம்மூர் காவல்காரர்களைப் பார்த்தால் எப்படிப் பயமாக இருக்கிறதோ, அப்படியே அவரைக் கண்டாலும் ஒருவித பயம் உண்டாகிறது, பக்தர்களுக்கு! இந்தக் காலபைரவருக்கு அடர்த்தியான மீசை உண்டு. நாயின் மீதுதான் அவர் அமர்ந்திருப்பார். உடலைச் சுற்றிப் புலித்தோலைப் போர்த்தியிருப்பார். கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பார். ஒரு கையில் கத்தி இருக்கும். இன்னொரு கையில் ஒரு குற்றவாளியின் தலை!

தங்கள் அகங்காரத்தை அழித்துவிட, மக்கள் அவர் கோயிலுக்குச் செல்கிறார்கள். காலபைரவரின் பார்வை தங்கள்மேல் படவேண்டும் என்பதே அவர்களது எண்ணம். அவரது பார்வை தங்கள் மீது பட்டால்... தொல்லை தரும் திருஷ்டிகள் ஒழியும் என்பது அவர்களது நம்பிக்கை. அதனாலேயே, அவரது கோயிலைச் சுற்றிக் கறுப்புக் கயிறுகளும், இரும்புத் தாயத்துகளும் விற்கிறார்கள். பக்தர்கள் அவற்றை வாங்கி பக்தி சிரத்தையோடு கட்டிக்கொள்கிறார்கள். அப்படிக் கட்டிக்கொண்டால், கால பைரவரின் கருணை கிட்டும் என்பது ஐதீகம்.

ஒரு கதை உண்டு; ஒருமுறை, உலகைப் படைத்த பிரம்மா கர்வத்தின் உச்சியில் இருந்தார். அவரது கர்வத்தை அடக்க, அவரது 5 சிரசுகளில் ஒன்றைக் கிள்ளித் துண்டித்தார் சிவபெருமான். ஆனால், துண்டிக்கப்பட்ட பிரம்மாவின் சிரசு சிவபெருமானின் கையோடு ஒட்டிக்கொண்டது. அதோடு, அவருக்கு பிரம்மஹத்தி தோஷமும் உண்டானது.

கயிலாயத்தில் இருந்து கீழிறங்கி கங்கை நதிக்கரைக்கு வந்த சிவபெருமான், ஓரிடத்தில் வடக்கு நோக்கிச் சென்ற நதியில் கையை நனைத்தார். அப்போது, அவரது கையோடு ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மாவின் தலை மறைந்துபோயிற்று. பிரம்மஹத்தி தோஷமும் விலகியது.

இந்த அற்புதம் நிகழ்ந்த இடம் 'அவிமுக்த’ (விடுதலை பெற்ற தலம்) என்று அழைக்கப்பட்டது. அதுதான் இன்றைய காசி நகரம். சிவபெருமானின் திரிசூலத்தில் அந்த நகரம் நிற்பதாக ஐதீகம்.

இந்த நகரத்தில் உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பவராக அந்தச் சிவபெருமானே இங்கே பைரவராக இருக்கிறார் என்பது புராண வரலாறு. அதன்படி, எட்டு பைரவர்கள் எட்டுத் திசைகளையும் பாதுகாக்கின்றனர் என்பது புராணத்தில் சொல்லப்படுகிற கருத்து.  

தென்னிந்தியாவில் பல கிராமங்களில் வைரவர் (அதாவது, பைரவர்) எட்டு மூலைகளிலும் கோயில்கொண்டிருக்கிறார். இன்றும் பல கிராமங்களில், பைரவர் வழிபாடு மக்களைக் காப்பதாகக் கருதப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வானம் தொடுவோம்!

ஜெயின் கோயில்கள் பலவற்றில், பைரவருடன் அவர் மனைவி பைரவியும் காக்கும் தெய்வமாக இருக்கிறாள். குஜராத் மற்றும் ராஜஸ்தானில் கறுப்பு பைரவர், கோரா பைரவ், வெள்ளை பைரவர் என்றெல்லாம் வழிபடப் பெறுகிறார் காலபைரவர். தேவி கோயில்களில் கறுப்பு, வெள்ளைக் காவலர்களாக பைரவர் இருக்கிறார்.  

அவரைக் காலபைரவர் என்று நாம் சொல்லக் காரணம்.... காலத்தையும் அவர் நினைவுபடுத்துகிறார் என்பதுதான். பொதுவாக, காலத்தைக் குறிக்கக் கறுப்பை அடையாளம் காட்டுவார்கள். காலத்தை எல்லாம் கருங்குழி ஒன்று விழுங்குகிறது என்பதைக் காட்டத்தான் கறுப்பு வர்ணத்தில் கால பைரவரை வணங்குகிறார்கள்.

காலபைரவரை மதுவுடனும், கும்மாளத்துடனும் இணைத்துப் பேசுவார்கள். இதற்கு நேர்மாறாக, கோரா பைரவ் அல்லது பாட்டுக் பைரவ் (சிறிய பைரவர்) என்று வெள்ளை பைரவரை அழைப்பார்கள். அவர் ஒரு குழந்தை வடிவில் அங்கே காட்சி தருகிறார். அதனால், அவருக்கு நைவேத்தியம் பால்தான்.

பைரவர் என்ற சொல்லில் 'பயம்’ என்பதும் மறைந்திருக்கிறது. பைரவர் நம்மிடம் பயத்தை உண்டாக்குவதோடு, பயத்தை நம்மிடம் இருந்து போக்கவும் செய்கிறார்.

மனிதகுலத்தின் தவறுகளுக்கு எல்லாம் பயம்தான் காரணமாக இருக்கிறது. தன் பதவியின் காரணமாகத் தமக்கு இருக்கும் கௌரவமும், அதனால் வரும் அகங்காரமும் தம்மிடமிருந்து போய்விடுமோ என்ற பயத்தில்தான், பிரம்மா படைப்புத் தொழிலை விட்டுவிடாமல் அகங்காரம் கொண்டவராக மாறிவிட்டிருந்தார். இதில் நமக்கும் ஒரு செய்தி இருக்கிறது.

நாயானது எலும்புத் துண்டுகளை வாயில் கவ்விக்கொண்டு தன் அடையாளத்தைக் காட்டுவதுபோல், நாமும் பயம் காரணமாக நம் அடையாளங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அலைகிறோம். இந்தச் செய்தியை நமக்கு சொல்லத்தான் பைரவரை நாயுடன் சேர்த்துக் காண்பிக்கிறார்கள். 'அட்டாச்மென்ட்’ என்கிற பற்றின் அடையாளமாக நாயை அதன் வாயில் உள்ள எலும்புத் துண்டோடு சேர்த்துப் பார்க்கிறோம்.  

எஜமான் சிரித்தால் நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர் முன் நிற்கும். ஆனால், அவர் கையை ஓங்கினால் பயந்துவிடும். அதனால், 'அட்டாச்மென்ட்’ எனப்படும் பற்று.... பயத்தையும் பாதுகாப்பின்மையையும் நமக்குக் கொடுத்து, நம்மைப் பிறரிடம் இருந்து விலக்கி வைக்கிறது.

பைரவர் இதில் இருந்தெல்லாம் நம்மைக் காக்கிறார் என்பதுதான் நாம் அறிய வேண்டிய செய்தி!