மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 17

ஞானப் பொக்கிஷம்! - 17

ஞானப் பொக்கிஷம்! - 17
##~##
தி
ரை நட்சத்திரங்களை நேருக்கு நேராகப் பார்க்காவிட்டாலும்கூட, திரைப்படங்களில் அவர்கள் 'டூயட்’ பாடி, ஆடுவதைப் பார்க்கும்போது, நம் மனது நிலைகொள்ளாமல் தவிக்கிறது. அந்த நடிகர் இடத்திலோ, நடிகை இடத்திலோ நம்மை நிறுத்தி வைத்துக் கற்பனையாக 'டூயட்’ பாடத் தோன்றுகிறது.

நிழலைப் பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், நிஜத்தில் நெருங்கி நடிக்கும் நடிக- நடிகையருக்கு எப்படி இருக்கும்?

பெற்ற தகப்பனாக இருந்தாலும்கூட, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்பு, தன் மகளையே தொட்டுப் பேசக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம், காமம் அந்த அளவுக்கு வலிமையானது. காமத்தை வெல்லவேண்டும் என்றால், மனக்கட்டுப்பாடு அவசியம்.

முற்காலத்தில் மாமுனிவர்கள் ஆள் அரவமற்ற காட்டில் தவம் செய்துகொண்டிருந்தபோதே மனம் தடுமாறியதை இதிகாச- புராணங்கள் விரிவாகச் சொல்லியிருக்கின்றன.

மாயை என்பவள் காசிப முனிவரை மயக்கி, அசுர குலத்தை அதிகரிக்க நினைத்தாள். அதற்காக, காசிப முனிவர் தவம் செய்துகொண்டிருந்த காட்டின் சூழ்நிலையையே தனது மாய சக்தியால் மாற்றினாள்.

அழகான சின்னஞ்சிறு குன்றுகள், வாசம் வீசும் மலர்களைக் கொண்ட மரம்- செடி- கொடிகள், நீரூற்றுகள், அருவிகள், அழகும் ருசியும் நிறைந்த பழ மரங்கள், தென்றல் காற்று, இனிமையான ஓசையை எழுப்பும் பறவைகள்... என அனைத்தையும் அங்கே உருவாக்கினாள் மாயை. கடும் தவத்தில் இருந்த காசிபரின் உடல், சுற்றுப்புறத்தில் நிகழ்ந்த இந்த மாற்றங்களை உணர்ந்தது. யாராக இருந்தால் என்ன... அனைவரும் உடம்பின் வசப்பட்டவர்கள்தானே?

காசிப முனிவர் கண்களைத் திறந்தார். எதிரில்... ஆகாயத்தில் இருந்து நழுவி விழுந்த வானவில்லைப்போல அழகு ததும்ப நின்றிருந்தாள் மாயை. அப்புறம் என்ன... காசிபருக்கும் மாயைக்கும் சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன், அஜமுகி என்ற அசுரக் கும்பல் பிறந்தது.

தன் எண்ணம் நிறைவேறியது கண்டு மாயை மகிழ்ந்தாள். காசிபரைவிட்டுப் புறப்படத் தீர்மானித்தாள். பின்னே... காசிபருடன் குடும்பம் நடத்தவா அவள் வந்தாள்?

மாயை புறப்படுவதைக் கண்டு காசிபர் மனம் கலங்கினார். மாயையோ, ''முனிவரே! நான் அசுர குலத்தை விருத்தி செய்யவே வந்தேன். உங்களோடு வாழ்க்கை நடத்த வரவில்லை. நான் மாயை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து மறைந்துவிட்டாள்.

ஞானப் பொக்கிஷம்! - 17

அவள் மறைந்ததும், அவளால் உண்டாக்கப்பட்ட அனைத்தும் மறைந்து போயின. ஆனால், காசிபரால் பழைய நிலையை அடைய முடியவில்லை. மாயையின் பிரிவை எண்ணி, அவர் துயரத்தில் ஆழ்ந்தார்.

அப்போது, காசிபரின் தந்தையான பிரம்மா அங்கு வந்தார். மகனின் நிலை கண்டு, அதற்கான காரணத்தை விசாரித்தார். காசிபர் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட பிரம்மதேவருக்கு மனம் கூசியது.

''காசிபா! வேதங்களிலும் கலை ஞானங்களிலும் கரைகண்ட நீ, காமவலையில் சிக்கலாமா? அறிவிழந்து, மூடர்களைப் போலப் புலம்பிக்கொண்டிருக்கிறாயே..! உலகிலேயே இரண்டு பொருட்கள் மிகவும் கொடுமையானவை. ஒன்று- கள்; மற்றொன்று- காமம். இந்த இரண்டில் கள்ளைவிட மிகவும் கொடுமையானது காமம். கள்ளாவது அருந்தினால்தான் போதை ஏறும்; தீங்கை விளைவிக்கும். ஆனால் காமமோ, மனத்தில் நினைத்தாலே ஆளைக் கொன்றுவிடும்.

காமம்... நினைத்தாலும் சுடும்; கண்டாலும் சுடும்; கேட்டாலும் சுடும். அடைந்தாலும் சுடும்; நீக்கினாலும் சுடும். இப்படிப்பட்ட தன்மையால், காமத் தீயானது கள்ளைவிடக் கொடுமையானது. எல்லாவிதமான துன்பங்களையும் தந்து, வாட்டி வதைக்கும் காமத்தை அறிவுள்ளவர்கள் நினைப்பார்களா?

நீ விரும்பிய மாயை என்பவள், வஞ்சனையே வடிவானவள். அவளுடன் சேர்ந்ததன் மூலம், நீ அளவில்லாத பாவத்தைச் செய்துவிட்டாய். அந்தப் பாவம் நீங்குவதற்காக நீ முன்பு போல தவத்தைச் செய்!'' என்று காசிபருக்கு நீண்ட அறிவுரையும், அறவுரையும் சொல்லிவிட்டு, அங்கிருந்து மறைந்தார் பிரம்மதேவர். உண்மையை உணர்ந்த காசிபர் அதன்பின் சிறந்த முறையில் தவத்தைச் செய்து, சிவத்தைச் சேர்ந்தார்.

யோசித்துப் பாருங்கள்... விஸ்வாமித்திரர், துர்வாசர் முதலானவர்களே காம வலையில் அகப்பட்டு, அல்லல்பட்டபோது நாமெல்லாம் எந்த மூலை?

ராவணன் கயிலாய மலையையே அசைத்தவன். தலைசிறந்த வீரன். உத்தமமான மனைவி, நல்ல பிள்ளை என அனைத்தும் இருந்தும், காமம்தானே ராவணனை வீழ்த்தியது?

மாமுனிவர்கள்கூட மங்கையரின் மையல் வலையில் வீழ்ந்து மனம் கலங்கியதைச் சொல்லி, இதிகாச- புராணங்கள் நமக்கு பாடம் நடத்தி இருக்கின்றன.

'உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்றதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத்தீயதே!'

- என்று, கந்தபுராணம் சொல்கிறது.

கந்தபுராணம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது. தல புராணங்கள் அனைத்தும் கந்தபுராணத்தில் உள்ளன. 'கந்தபுராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை’ என்ற வாக்கும் கந்தபுராணத்துக்கு உண்டு.

- இன்னும் அள்ளுவோம்...