சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

இளைஞர் சக்தி

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##
'ம
னமது செம்மையானால் மந்திரம் ஜபிக்கவேண்டாம்’ என்று சித்தர்கள் அருளியிருக்கின்றனர். அவர்கள் அருளிய பல விஷயங்கள், வாழ்க்கைக்கும் இறையனுபவத்துக்குமான மிக முக்கியமான அகராதி என்று அன்பர்களிடம் சொல்லுவேன். 'மனமது செம்மையானால்...’ என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சென்னையில் இருந்து அன்பர் ஒருவர் குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு பதற்றம் நிரந்தரமாகக் குடியிருந்தது. கண்களில் பயமும், பேச்சில் தடுமாற்றமும் தெரிந்தது. அவரின் கைகள் மெல்லிய நடுக்கத்தில் இருந்தன. நிதானமின்றி, இங்கும் அங்குமாகக் கால் மாற்றி மாற்றி நின்றுகொண்டிருந்ததில், அவர் மனத்தில் குழப்பமும் தவிப்பும் இருப்பது புரிந்தது.

''சுவாமி... ஒரு விஷயம்...'' என்று தயங்கியவாறு அவர் பேசத் தொடங்கினார்.

''எப்போதும் என் மனத்தில் ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் வேலை விஷயமாக ஹைதராபாத் சென்றிருந்தேன். ஐந்து நாள் வேலை. அந்த ஐந்து நாளும் மொழி தெரியாத ஊரில் இருக்கிறோமே என்று படபடப்பாக இருந்தது. அதேபோல், ஆறு மாதங்களுக்கு முன்பு, என் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வேலை நிமித்தமாகச் சென்றிருந்தேன். அங்கே இருந்த ஆறு நாட்களும், இழந்த உறவுகளைப் பற்றியே என் மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. தினமும் கனவில் அம்மாவோ அப்பாவோ வருவார்கள்; சித்தப்பாவும் மாமியும் நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள்.

போதாக்குறைக்கு சிறு வயதில், எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, ஒரு தெருவில் பிள்ளையார் கோயில் அருகில் நடந்துபோகும்போது, என் கழுத்து வரைக்கும் கவ்வுவதற்குப் பாய்ந்த நாயை என்னால் மறக்கவே முடியவில்லை. என் கெட்ட நேரம்... எங்களின் நாகர்கோவில் அலுவலகம், அந்தத் தெருவில்தான் இருந்தது. பிள்ளையார் கோயிலைக் கடப்பதற்கே ரொம்பப் பதற்றமாக இருந்தது. பயந்து நடுங்கியபடி கடந்தேன். அந்த நாய் இத்தனை வருடத்தில் செத்துப் போயிருக்கும் என்று தெரிந்தாலும்கூட, எனக்கென்னவோ அந்த நாய் இப்போதும் வந்து என்னைக் கழுத்தைக் கவ்வுவதற்குப் பாய்கிற மாதிரியே ஒரு பயம்!

இப்படியான பயத்தில், பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பேச்சு சீராக வருவதில்லை. எப்போதும் மிரட்சியுடன் எல்லோரையும் பார்க்கிறேன். இதில் இருந்து விடுதலை கிடைத்தால், அதைவிட மிகப் பெரிய பேறு எனக்கு எதுவுமில்லை, சுவாமி!'' என்று சொல்லிவிட்டு, சின்னக் குழந்தைபோல தேம்பித் தேம்பி அழுதார் அந்த அன்பர்.

உண்மைதான். சிறுவயது முதற்கொண்டு நாம் பயப்படுகிற விஷயங்கள் சில, இப்படி ஆழ் மனத்தில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. தன்னைப் பற்றியும், தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் எப்போதும் ஒரு தவறான அபிப்ராயம் வைத்திருப்பதுகூட இதுபோன்ற பயத்தின் வெளிப்பாடுதான். 'நாம செய்யறது எல்லாமே எப்பவுமே தப்பாத்தான் முடியுது. நமக்கு இன்னும் விவரம் போதலை’ என்றே சிந்திப்பார்கள் இவர்கள்.

உலகின் மிக மோசமான நோய், பயம்தான்! ஏதேனும் ஒரு விஷயத்தின்மீது ஏற்பட்டுவிடுகிற பயமானது, நாளாக ஆக வளர்ந்துகொண்டே சென்று, நம்மை முழுவதுமாக ஆட்கொண்டுவிடும். இதிலிருந்து மீண்டுவிடலாம், தைரியத்தை வரவழைத்துக்கொள்கிற பக்குவத்துக்கு வந்துவிடலாம் என்பதில்கூட நம்பிக்கை வைக்கமாட்டார்கள் இவர்கள்.

வாழ்க வளமுடன்!

அதேபோல், பொய்யும் புரட்டுமாக இருப்பவர்களில் சிலர், உண்மை தெரிந்து குட்டு உடைந்துவிட்டால் என்னாகும் என்று பதறியபடியே இருப்பார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, முதலில் கிழக்கு என்று பேசிவிட்டு, பிறகு மேற்கு என்று திசையையே மாற்றிவிடுவார்கள். பொய் இருக்கிற இடத்திலும் எந்நேரமும் ஒருவித பதற்றமும் குழப்பமும் ஒட்டிக்கொண்டிருக்கும்.

மனவளக் கலைப் பயிற்சியை மேற்கொள்வதற்கு எவர் வேண்டுமானாலும் வரலாம். பொய் பேசுபவர்கள், எப்போதும் பயப்படுகிறவர்கள், எதற்கெடுத்தாலும் நடுங்கிப் போகிறவர்கள், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட முடியாதவர்கள் என எவர் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

கி.மு., கி.பி. என்பதுபோல, ம.மு., ம.பி. என்று அவர்களைப் பிரித்து வைத்துக்கொண்டு கூர்ந்து கவனித்திருக்கிறேன். அதாவது, மனவளக் கலைப் பயிற்சிக்கு முன்னும் பின்னுமாக அவர்களின் மனோநிலையைப் பார்க்க, அவர்களின் குணாதிசயமே மாறிவிட்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

பரந்து விரிந்திருக்கிற இந்த உலகில், வீண் அலட்டலும் கர்வமுமாக, எப்போதும் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டும், கால் அகட்டி நின்றுகொண்டும், கர்வத்துடன் பேசுகிற அன்பர்கள் பலரும் மனவளைக் கலைப் பயிற்சிக்குப் பிறகு வேறு விதமாக, அதாவது அலட்டலே இல்லாமல், எது குறித்தும் கர்வமே கொள்ளாமல், கருணையும் அன்புமாக மலர்ந்த முகத்துடன் மாறிவிட்டதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

மனவளக் கலைப் பயிற்சியில், உடல் தளர்த்துகிற பயிற்சி என்பது கிட்டத்தட்ட ஒரு குட்டித் தூக்கம் போலான எளிமையான விஷயம்தான். ஆனால், எளிமையான பயிற்சிக்குள் இருக்கிற இனிமையைப் புரிந்து, உணர்ந்து செய்வதில்தான் நம் மனத்துக்குக் கிடைக்கிற விடுதலையை, சுதந்திரத்தை அறிய முடியும்.

பயந்த சுபாவத்துடன் இருப்பவர்கள், தெளிவாகச் சிந்திக்க முடியாமல் திணறுவார்கள்; தீர்க்கமாகச் செயல்பட முடியாமல் சோர்ந்து போவார்கள். அவர்களுக்கு வைட்டமின் போல, டானிக் போல மலர்ச்சியை ஏற்படுத்த வல்லது... இந்த மனவளக் கலைப் பயிற்சி.

வேலூரில் இருந்து வந்திருந்த அன்பர், மருந்து விற்பனைப் பிரதிநிதி. அவர் ஒருமுறை ஆழியாறில் வந்து பார்த்துவிட்டு, ''சுவாமி, நான் மெடிக்கல் ரெப். நிறைய டாக்டர்களைச் சந்தித்து, எங்கள் மருந்து- மாத்திரைகள் குறித்து விளக்கி, அவற்றை விற்கவேண்டும். இதற்கான விளக்கங்களைச் சொல்லும்போது, அவர் என்ன கேட்பார், என்னென்ன கேள்விகள் கேட்பார், அவற்றுக்கு நாம் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று முன்பே திட்டமிட்டுவிடுவேன். ஆனால், நான் எதிர்பார்த்ததற்கும் மாறாகவோ, டெக்னிக்கலாகவோ அவர் கேள்வி கேட்டுவிட்டால், பதில் சொல்லி முடிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிடும். அப்படியான குழப்ப நிலையில், திக்கித் திணறிப் பேசத் துவங்கிவிடுவேன். உள்ளே வார்த்தைகளைக் கோத்து, விவரமாகச் சொல்லவேண்டும் என்று மனம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே, வேறு ஏதோ வார்த்தைகள் வந்து விழும். இதுபோன்ற தருணங்களில், நான் உண்மையைச் சொன்னாலும் அது பொய்யாகவே பார்க்கப்படுகிறது. நேர்மையானவன் என்று பேரெடுத்திருக்கும் என்னைக் கபடம் நிறைந்தவன் என எதிரில் இருப்பவர் நினைக்கும்படியான நிலைக்கு நான் ஆளாகும்போது, அது மேலும் மேலும் என்னை மன அழுத்தத்தில் கொண்டு தள்ளுகிறது, சுவாமி!’ என்றார்.

மனவளக் கலைப் பயிற்சியை மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, அவரிடம் திக்கிப் பேசுதல் என்பது அடியோடு போய்விட்டிருந்தது. காரணம்... மனத்துள் ஏற்பட்ட தெளிவு; அந்தத் தெளிவு தந்துவிட்ட நிதானம்!

'மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்’ என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா அன்பர்களே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா