சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!
##~##
ர் அரசர் தன் மகளுக்கு மணமுடிப்பதற்காக மிகச் சிறந்த மணமகனைத் தேடி வந்தார். அதையட்டி, இறைவனால் இதுவரை உருவாக்கப்பட்டவர்களில் மிகச் சிறந்தவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள தேவலோகம் சென்றார். தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொண்ட பிறகு பூமிக்குத் திரும்பினார். அப்போது, உலகமே மாறிப் போயிருந்தது. நூறு வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அவருடைய மகளும், மொத்த குடும்பத்தினரும் மரணமடைந்துவிட்டிருந்தனர். உயிர் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சில உறவினர்களுக்கும் அவரை யாரென்று அடையாளம் தெரியவில்லை.

தெய்வங்கள் வாழும் தேவலோகத்தில் காலம் வேகமாகச் சென்றுவிடும். அங்கே ஒருநாள் என்பது பூலோகத்தில் நூறு வருடங்கள் என்பதைத் தாமதமாக அறிந்துகொண்டார் அரசர்.

இதேபோல், இன்னொரு கதையும் உண்டு. அதன்படி, கடவுள் ஒரு சந்நியாசியிடம் வந்து, ஒரு குடம் தண்ணீர் தருமாறு கேட்டார். சந்நியாசி குடத்தை எடுத்துக்கொண்டு நதிக்கரைக்கு வந்தார். நதியில் குடத்தை முக்கியபோது, ஓர் அழகான பெண் அதனுள் தெரிந்தாள். பார்த்த மாத்திரத்தில் அவள்மேல் மையல் கொண்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டினார். அவளும் சம்மதித்தாள்.

அவர் அவளைத் திருமணம் செய்துகொண்டு சம்சாரி ஆனார். அவருக்குக் குழந்தைகள் பிறந்தன. பின்பு, அந்தக் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர் களாகி, அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அவருடைய வயதான காலத்தில், திடீரென்று நதியில் வெள்ளப்பெருக்கு வந்தது. நதியின் கரைகள் உடைந்தன. அவரது வீடு,மனைவி உட்பட குழந்தைகள், பேரக் குழந்தைகள் எல்லோரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர் மட்டும் யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டார். அப்போது ஒரு குரல் கேட்டது... 'குடத்தைத் தண்ணீருக்குள் மூழ்கடித்தது போதும்; எனக்குத் தண்ணீர் கொடுங்கள்!'  

யாருக்காகத் தண்ணீர் எடுக்க வந்தாரோ, அதே கடவுளின் குரல்தான் அது. நடந்தவை எல்லாமே, ஏதோ கனவு கண்டதுபோல் தோன்றியது சந்நியாசிக்கு.

முதல் கதையில், ஒரு நாள் என்பது நூறு வருடங்களாக இருந்தது. இரண்டாவது கதையில், ஒரு முழு வாழ்நாளும் சில நொடிகளாக இருந்தது. முதலாவதில் காலம் சுருங்கியது; இரண்டாவதில் காலம் விரிவடைந்தது. இந்துப் புராணங்களில் இது பொதுவாக நிலவும் கருத்து. கவனம்தான் இரண்டிலும் முக்கியமானது. 

வானம் தொடுவோம்!

நீங்கள் கவனம் செலுத்தும்போது, காலம் குறுகிச் சிறுத்துவிடுகிறது. கவனம் செலுத்தாதபோது காலம் விரிகிறது.

நிகிலேஷ§க்கு மாறனுடன் வேலை செய்யப் பிடிக்கும். மாறன் ஒவ்வொரு புராஜெக்டையும் சிரமமே இல்லாமல் விளையாட்டுப்போல ஆர்வத்தோடு செய்வார். அவருடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே சீக்கிரமாக வந்தாலும், தாமதமாகச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் அலுத்துக்கொண்டது கிடையாது. அவர்களுக்கு நாட்கள் வேகமாகச் சென்றன.

நிகிலேஷ§க்கு வேலை ஓய்வு என்ற பேச்சே கிடையாது. வேலைதான் வாழ்க்கை; வாழ்க்கைதான் வேலை. அவன் மனைவியும், தன் கணவன் அப்படி இருப்பதைத்தான் விரும்பினாள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நிகிலேஷ், அலுவலகத்தில் எவ்வளவு சுறுசுறுப்போடும் மகிழ்ச்சியாகவும் இருந்தானோ, அதை சுறுசுறுப்பையும் மகிழ்ச்சியையும் வீட்டிலும் வெளிப்படுத்தினான். அதனால், அவனது நீண்ட நேர அலுவலக வேலை, அவனது மனைவிக்கு எரிச்சலைத் தரவில்லை.

அதே நிகிலேஷ், தினகருடன் பணி செய்யும்போது வேறு மாதிரியான அனுபவத்தை உணர்ந்தான். தினகருக்கு விளையாட்டே ஆகாது. தினமும் சுற்றறிக்கை அனுப்பி எல்லோரையும் அழைத்து விவாதிப்பது தினகரின் வழக்கம். அவர் நடத்தும் விவாதங்களில் ஒருவர்கூட கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால், அவருடன் பணிபுரிந்த ஒவ்வொருவருக்கும், அவர்களுக்கு தரப்பட்ட வேலை ஏதோ தண்டனை போலவே இருந்தது. அலுவலகம் முடிந்து சீக்கிரமாக வீடு திரும்புவதுதான் அவர்களுக்குச் சுகமாக இருந்தது. ஆனால், அலுவலக அலுப்பும் சலிப்பும் வீடு திரும்பும்போது கூடவே வந்தன. மற்றவர்கள் போலவே நிகிலேஷ§ம் அந்த வெறுப்பையும் சினத்தையும் மனைவியிடம் காட்டினான்.

மாறன் வேலை நேரத்தைச் சுருக்குவது மாதிரி மாற்றினார். அதனால், அவருடன் பணி செய்யும்போது ஊழியர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. நிகிலேஷ் உள்பட அனைவரும் எல்லா வேலைகளையும் மகிழ்ச்சியோடு செய்தார்கள். ஆனால், தினகரோ எல்லா வேலை களையும் கசப்பானதாகவும் அலுப்புத் தட்டுவதாகவும் ஆக்கியதால், அலுவலக வேலை நேரம் நீண்டது. ஊழியர்களும் மகிழ்ச்சியாக இல்லை.

இதிலிருந்து நாம் அறியவேண்டியது என்ன?

நாம் மகிழ்ச்சியாகப் பணியாற்றும்போது, காலம் இறக்கை கட்டிக்கொண்டு வெகு வேகமாகப் பறக்கிறது; சலிப்பாகப் பணியாற்றும்போது, நேரம் நத்தையாக ஊர்கிறது.

ஓர் அலுவலகக் கலாசாரத்தை அறிந்துகொள்ள விரும்பினால், அங்கே மதிய உணவு இடைவேளையில் ஊழியர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனித்தாலே போதும். அவர்கள் ஆவலோடு அந்த இடைவேளையை எதிர்நோக்கினால், பணியின்போது நேரம் மெதுவாகச் செல்கிறது என்பது தெரிந்துவிடும். மதிய உணவு இடைவேளையையே மறந்து வேலை செய்துகொண்டிருந்தால், அவர்கள் பணியில் உற்சாகமாக ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறார்கள் என்று அர்த்தம்!