சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!
கதை கேளு... கதை கேளு!
##~##
''க
டவுளுக்கு சாதிப் பாகுபாடெல்லாம் கிடையாது. உயர்வோ தாழ்ச்சியோ அவருக்கு முக்கியமில்லை. அப்படியரு உதாரண தலம்தான் கரூர். வேட்டுவ குலத்துப் பெண்ணை சிவபெருமான் திருமணம் செஞ்சுக்கிட்ட அற்புதமான இடம். அந்தக் கோயில்ல இருக்கிற ஸ்வாமியோட திருநாமம் - ஸ்ரீபசுபதீஸ்வரர். இப்ப அந்தக் கோயிலைத் தரிசனம் பண்றதுக்காகத்தான் கரூர் வந்திருக்கோம்'' என்றார் தாத்தா. பரபரவென இருக்கிற கரூர் நகரத்தையும் அந்த ஊர் மனிதர்களையும் பார்த்து வியந்தபடியே தாத்தாவின் விரல் பற்றி நடந்தான் பேரன்.

காவிரிக்கரையோரம் உள்ள ஊர்களில் கரூரும் ஒன்று. எல்லா மனிதர்களும் தொழில் சார்ந்து சுறுசுறுப்புடன் இருக்கும் நகரங்களில் கரூருக்கும் முக்கியமான இடம் உண்டு. இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம்.

''ஸ்ரீபூமிதேவித் தாயார், ஸ்ரீஆண்டாளாக அவதரித்து திருமாலைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, இங்கே ஸ்ரீபார்வதிதேவியே வேடுவப் பெண்ணா பிறந்து, சிவனாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா.

கதை கேளு... கதை கேளு!

அதுமட்டுமா? சப்தமம்னு சம்ஸ்கிருதத்துல ஒரு வார்த்தை உண்டு. இந்து மதத்துல சப்தமத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. சப்தமம்னா, ஏழுன்னு அர்த்தம். சப்த ஸ்வரங்கள்னு சொல்றோம்; சப்த மாதர்கள்னு சொல்றோமில்லையா... அதேபோல கோபுரங்கள்ல, ஏழு நிலை ராஜகோபுரத்துக்குத் தனி மதிப்பும் பலனும் உண்டுன்னு ஆகமங்கள் சொல்லுது. கரூர், கோவை, ஈரோடுன்னு இருக்கிற ஊர்களை 'கொங்கு தேசம்’னு சொல்லுவாங்க. கொங்கு தேசத்துல ஏழு சிவ ஸ்தலங்கள் ரொம்பவே விசேஷம்! வெஞ்சமாங்கூடலூர், திருமுருகன்பூண்டி, அவினாசி, திருச்செங்கோடு, திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி... அதையடுத்து இதோ, இந்த ஆதி கருவூர்னு இருக்கிற சிவன் கோயில்களை 'கொங்கேழு சிவஸ்தலங்கள்’னு சொல்வாங்க'' என்று தாத்தா விவரிக்க, உடனே பேரன் மடக்கினான். ''என்ன தாத்தா, முதல்லே கருவூர்னு சொன்னீங்க. அப்புறம் ஆதி கருவூர்னு சொல்றீங்க. அப்படீன்னா என்ன தாத்தா அர்த்தம்?'' என்று கேட்டான். இதைக் கேட்டதும் தாத்தாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. 'அடடா... நம்ம பேரன் எவ்வளவு உன்னிப்பா கவனிச்சுக் கேக்கறான்’ என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டே, விவரிக்கத் துவங்கினார்.

''கொங்கேழு சிவ ஸ்தலங்கள்னு சொன்னேன் இல்லியா... அந்த ஏழு தலங்கள்ல, முதன்மையான தலம் கரூவூர். அதனாலதான் இதை ஆதி கருவூர்னு ஸ்தல புராணம் விவரிக்குது. உலகம் தோன்றியபோது முதன்முதலாக உருவான ஊர் இதுதான்னும், ஸ்ரீபிரம்மா படைப்புத் தொழிலை முதன்முதலா துவக்கின இடமும் இதுதான்னும் ஸ்தல புராணம் சொல்லுது. அதனாலதான் இதுக்கு ஆதிகருவூர்னு பேர் வந்தது.  

''ஒருகாலத்துல, அதாவது சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்துல, இந்த ஊர் வஞ்சி மாநகர்னும் சொல்லப்பட்டிருக்கு. சேரர்களின் தலைநகரமா இருந்த வஞ்சி மாநகரம்தான் கருவூர்; கருவூர்தான் வஞ்சி மாநகரம்னு சொல்ற கல்வெட்டுகள், நிறையவே இருக்கு. இன்னும் என்னெல்லாம் பெருமைகள் கருவூர்னு சொல்லப்படுற இந்தக் கரூருக்கு இருக்குன்னு பார்ப்போமா?

முதலில் தோன்றிய ஊர்ங்கறதால 'ஆதிபுரம்’னு ஒரு பேரு உண்டாம்! கரூரைச் சுற்றி மலையும் மலை சார்ந்த இடமா இருக்கறதால, வஞ்சி நகரம்னு சொல்லப்பட்டதாகவும், அதனாலதான் இங்கேயுள்ள அம்மனுக்கு வஞ்சி அம்மன்னு பேரு அமைஞ்சதாவும் சொல்றாங்க. மூர்த்தி, தலம், தீர்த்தம்னு சிறப்புகள் கொண்ட இந்தத் தலத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூணு பேரும் ஆட்சி செய்திருக்காங்க. இந்தக் கோயில்களுக்கு நிறையத் திருப்பணிகளும் செய்திருக்காங்க. சோழர்கள் காலத்துல வீரசோழபுரம்னு சொல்லப்பட்ட இந்த ஊர், வஞ்சி மரங்கள் சூழ்ந்த வனமா இருந்ததால, வஞ்சுளாரண்யம்னு அழைக்கப் பட்டிருக்கு. தவிர மலை, வனம், ஆறு, புண்ணிய தலம், நகரம், ஆலயம்னு ஆறு விஷயங்கள் இணைஞ்ச ஊர்ங்கறதால 'ஷண்மங்கல க்ஷேத்திரம்’னு இந்த ஊரைப் பெருமைப்படுத்திச் சொல்லுது ஸ்தல புராணம்!'' என்று மினி உபந்யாசம் நடத்திவிட்டு, ஆசுவாசப் படுத்திக்கொண்டார் தாத்தா.  

கதை கேளு... கதை கேளு!

சிறிது நேர மௌனத்துக்குப் பின்பு, ''இந்த ஊரைச் சுத்தி நிறையக் கோயில்கள் இருக்குன்னு சொன்னீங்களே தாத்தா... அதைப் பத்திச் சொல்லுங்க?'' என்று கேட்டான். சுள்ளென்று அடித்த வெயிலின் உக்கிரத்தைத் தணித்துக் கொள்ள, கையில் இருந்த பாட்டிலில் இருந்து இரண்டு மிடறு தண்ணீரைக் குடித்துவிட்டு, பேரனைப் பார்த்தார் தாத்தா.

''காமதேனுவுக்கும் இந்தத் தலத்துக்கும் நிறைய தொடர்பு இருக்குப்பா. இங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவுல, காமதேனுவால உண்டாக்கப்பட்ட தேனுதீர்த்தம் இருக்கு. இந்தத் தீர்த்தம் அற்புதமான வெண்ணெய் மலைல இருக்கு. அதேபோல, நாலாவது கிலோமீட்டர்ல தான்தோன்றிமலையில் பெருமாள் கோயில் இருக்கு. பதினஞ்சாவது கிலோமீட்டர்ல புகழிமலை முருகன் கோயில் இருக்கு. இதுல தான்தோன்றிமலைக் கோயிலுக்குத்தான் நாம ஏற்கெனவே போயிருக்கோமே!  

அப்புறம்... இந்தக் கோயிலை நல்லா கவனிச்சுப் பார்த்தா, ஒருவிஷயம் புரியும். கோயில் அமைப்பெல்லாம் சோழர் காலக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிற விதமா இருக்கு. சிற்பங்களைப் பார்க்கும்போது, நடுவுல மகிஷாசுரமர்த்தினியின் சிற்பமும் தூண்ல இருக்கு. பல்லவர்கள்தான் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க!

முசுகுந்த சக்கரவர்த்திதான் இந்தக் கோயிலைக் கட்டினார்னு சொல்லுது ஸ்தல புராணம். இந்தப் பசுபதீஸ்வரர் கோயில், அபயப்பிரதான ரங்கநாதர் கோயில் ரெண்டையும் அவர்தான் கட்டினாராம். வஞ்சி வனத்துல பிரம்மதீர்த்தம் உண்டுபண்ணி, வெண்ணெய் மலைக்கு வடக்கே வேள்விச்சாலை ஏற்படுத்தி, புற்றுடன் கொண்ட பாதாள லிங்கத்தை வணங்கித் தொழுது, பிறகு ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலைக் கட்டினார்னு ஸ்தல புராணத்துல சொல்லப்பட்டிருக்கு. அதேவேளையில், கோயிலைக் கட்டினது யாரோ. முசுகுந்த மகாராஜா கோயிலைப் புனரமைப்பு மட்டும்தான் பண்ணினார்னும் சொல்றாங்க!'' என்று தாத்தா சொல்ல... பேரன் கோயிலின் பிரமாண்டத்தில் மெய்ம்மறந்து நின்றான்.

- தரிசிப்போம்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்