
ஹோமம் மற்றும் வைதீக காரியங்கள் நடத்துவது குறித்து விளக்கிய மகாபெரியவா, காஞ்சிபுரத்தில் உள்ள ...

##~## |
'சின்ன காஞ்சிபுரம் ஆனைக் கட்டித் தெருவுல ஒரு வேத பாடசாலை இருக்கு. ஐம்பதுகளில் அங்குதான் மகாபெரியவாளுக்கு கனகாபிஷேகம் நடந்தது. அந்த வைபவத்தைப் பக்கத்துல இருந்து தரிசித்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம்!
மகாபெரியவாளுக்கு அவரோட பரமகுரு ஸ்வர்ண வஸ்து ஒன்றைக் கொடுத்திருந்தார். பொன்னாலான அந்த அங்கியைப் போட்டுக் கொண்டுதான் கனகாபிஷேகத்தில் அமர்ந்திருந்தார் மகாபெரியவா. இன்னிக்கும், குருவாரம்தோறும் (வியாழக்கிழமைகளில்) காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருக்கும் ஆதிசங்கரர் திருமேனிக்கு அந்த சொர்ணத் தைச் சாத்துகிறோம்...'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், ஓரிக்கையில் நிகழ்ந்த மகாபெரியவாளின் சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தைப் பற்றி விவரித்தார்...
''ஓரிக்கையில், காங்கிரஸ் பிரமுகர் மட்டப்பாறை வெங்கட்ராமய்யரின் பேரன் வீட்டில் வைத்துதான் மகா பெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது. அந்தத் தருணங்களில் மடத்துக்கு மிகவும் பணக் கஷ்டம். அங்கே வைத்துதான் நடத்தணும்னு மகாபெரியவா சொல்லிட் டார். மிக அருமையாக நடந்தது அந்த வைபவம்.

ஹோமம் மற்றும் வைதீக காரியங்கள் நடத்துவது குறித்து விளக்கிய மகாபெரியவா, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துச் சத்திரங்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடணும்னும் உத்தரவு தந்தார். போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அன்னம் பரிமாறுவதுடன், இனிப்பு வகையறாவும் நிறையப் பரிமாறணும்னு சொன்னார். அன்பர்கள் சாப்பிட்டு எஞ்சியது நரிக்குறவர்களுக்குப் போகும்; அவர்களுக்கும் இனிப்புப் பலகாரங்கள் கிடைக்கணும் என்பதுதான் காரணம். அதேபோன்று, கிராமத்து ஏழைகளுக்கும் வயிறு நிறையக் கூழ் காய்ச்சி ஊத்தணும் என்பதும் பெரியவாளின் விருப்பம். அவரது ஆசியுடன் எல்லாம் தடபுடலாக ஏற்பாடு ஆனது.
அதேபோன்று, காஞ்சி காமாட்சியம்மன் கோயில் முழுக்க முழுக்கக் காய்-கனிகளால் அலங்கரிக்கணும்னு சொல்லிட்டார். அம்பாளுக்கு சாகம்பரின்னு ஒரு பெயர் உண்டே! சாகம்பரிதேவிக்கு காய்- கனிகள் உகந்தவை. அதனால்தானோ என்னவோ காய்- கனி அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மகா பெரியவா. காய் - கனி அலங்காரத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அந்தத் தருணத்தில் ஒரு சம்பவம்!
மகாபெரியவா இனிப்பு நிறையப் பரிமாறணும்னு சொல்லியிருந்தார், இல்லையா? அதனால, அவருக்கு இனிப்புன்னா ரொம்பப் பிடிக்கும் போலன்னு முடிவு பண்ணிவிட்டார் ஓர் அம்மணி. ஒருநாள், மலாடு செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்தார். மகாபெரியவா முன், இலையால் மூடி கிண்ணத்தை வைத்து விட்டுத் தரிசித்துச் சென்றார்.
வெறும் நெல் பொரி, வேகவைத்து இறுகிய வாழைக்காயைப் பொடியாக்கி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் குடிப்பது என்று மிக மிகக் குறைவான ஆகாரம்தான் மகாபெரியவாளுக்கு. அவர் எப்படி மலாடு சாப்பிடுவார்? நாக்கு ருசிக்கு அடிமையாவது கூடாது என்பது அந்த மகானுக்கா தெரியாது?

ஆனால், அந்தப் பெண்மணி திரும்பி வந்த போது, காலியான கிண்ணத்தை அவரிடம் கொடுத்துக் கை தூக்கி ஆசீர்வதித்தார். பரம திருப்தியுடன் திரும்பிச் சென்றார் அந்தப் பெண்மணி. தான் கொடுத்த மலாடுவை பெரியவா ருசித்து சாப்பிட்டிருப்பார் என்ற மகிழ்ச்சி அந்த அம்மாவின் முகத்தில். ஆனால், பெரியவா அதைச் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். தமக்கு உரிய நியமங்களுக்கு பங்கம் ஏற்படாமல், அதே நேரம் அந்த பக்தையின் மனதும் புண்படாதபடி மகாபெரியவா செய்த அனுக்கிரகம் அற்புதமானதுதான்.
வைகாசி- பௌர்ணமி அன்று மகாபெரியவா ஜயந்தி. அந்த வருடம் மகாபெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி வேறு. அன்று பௌர்ணமி என்பதால், காமாட்சியம்மன் கோயில்லயும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். சஷ்டியப்த பூர்த்தி வைபவங்கள் முடிந்து ஸ்ரீகாமாட்சியம்பாளைத் தரிசிக்க எண்ணியிருந்தார் மகா பெரியவா. ஆனால், 'ஓரிக்கையில் விழா வைப வங்கள் முடியறதுக்கே நெடுநேரம் ஆகிவிடும். அதற்குப் பிறகு மகா பெரியவாளுக்கு ரொம்பச் சிரமமா இருக்கும். அங்கே கோயிலிலும் நடை சாத்தி விடுவார்கள். அதனால், வேறொரு நாள் அம்பாளைத் தரிசிக்கப் போகலாமே?’ என்று விசுவநாதய்யர் சொல்லிப் பார்த்தார். ஆனால், நடந்தது என்ன தெரியுமா?
ராத்திரி 12 மணி இருக்கும். அன்பர்கள் புடை சூழ வந்து சேர்ந்தார் மகாபெரியவா. என்னைக்

கூப்பிட்டனுப்பி, ''பாராக்காராளை வரச் சொல்லு. தீப்பந்தம்பிடிக்கறவாளையும் வரச் சொல்லிடு!'' என்று கட்டளையிட்டார். எல்லோரும் வந்து சேர, உடனே புறப்பட்டு விட்டார். அந்த நள்ளிரவிலும் கோயிலின் ராஜ வீதியைப் பிரதட்சிணம் பண்ணி, கோயில் கோபுரத்தைத் தரிசித்து வணங்கி வழிபட்ட பிறகே ஓரிக்கைக்குக் கிளம்பிச் சென்றார்.
ஜகத்குரு என்றாலும், அந்த ஜகதாம்பிகைக்கு அவர் குழந்தைதானே?! அதனால்தான், நள்ளிரவாகிவிட்ட பிறகும்கூட காஞ்சிக்கு வந்து, கோயில் கோபுரத்தையே அம்பிகை யாகக் கண்டு வணங்கி மகிழ்ந்தார் மகா பெரியவா!'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் இன்னொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
''தஞ்சாவூர்ல பூதான இயக்கம் மும்முரமாக இருந்தபோது, நிறையப் பேர் நிலம் தானம் கொடுத்தார்கள். அப்போது, கால் ஏக்கர் நிலம் மடத்துக்குக் கிடைத்தது. அதில் வரும் வருமானத்தை வைத்துதான் வேதபாஷ்ய சதஸ் நடத்தினார் மகாபெரியவா.
வேதங்களை என்றென்றைக்கும் காப்பாற்ற வேண்டும் என்பார் அவர். அவருக்கு உற்சாகம் தருவது எப்பவும் வேதம்தான். வேதத்தோட அர்த்தம் எல்லாருக்கும் தெரியணும்னு வேத அத்யயனம் பண்ணினவர்களைக் கொண்டு, வேதபாஷ்ய சதஸ் நிகழ்த்தி, அதன் அர்த்தத்தை எல்லோரும் அறிய வழிசெய்தார்!''
(அடுத்த இதழில் நிறைவுறும்)