புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
##~##

க்கங்களும் துக்கங்களும் இல்லாதவர்கள் எவரும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், 'அடச்சே... இதுக்குப் போய் ஏங்கிட்டிருக்கோமே!’ என்று தோன்றும். 'இந்த அல்ப விஷயத்துக்காகவா துக்கித்துக் கிடக்கிறோம்!’ என்று நம்மை நாமே பரிகசித்துக் கொள்வோம். ஆனால், இந்த ஏக்கங்களும் துக்கங்களும் ஒருவகையில் சுவாரஸ்யமானவையே!

 சென்னையில் உள்ள அந்த அன்பர், மிகப் பெரிய தொழிலதிபர். சதா காலமும் வேலை வேலை என்றே ஓடிக்கொண்டு இருப்பதால், எப்போதும் ஒருவித டென்ஷனுடனே இருப்பார். மனைவியுடன் அவர் மனவளக்கலைப் பயிற்சிக்கு வந்திருந்தபோது, அவரைப் பற்றி மனைவி புலம்பலாகச் சொல்லத் தொடங்கினார்.

''எப்பவும் படபடப்பாவே இருக்கார், சுவாமி! எதுனா ஒண்ணு சொன்னாலும், தடக்குன்னு கோபம் வந்துடுது இவருக்கு. என்னவோ தெரியலை, கடந்த ரெண்டு மாசமா இவர்கிட்ட திடீர்னு ஒரு மாற்றம். எல்லாத்துக்கும் அமைதியாவும் பொறுமையாவும் பதில் சொல்றார். எப்பவும் மலர்ந்த முகமும், கனிவான பேச்சுமா இவரைப் பாக்கறதே ஆச்சரியமா இருக்கு, சுவாமி!'' என்றார்.

''இதுக்கு ரெண்டு விஷயங்கள்தான் காரணம். பொதுவா ஒருத்தரோட அடி மனசுல ஏதாவதொரு குறையோ கோபமோ நெடுங்காலமா இருந்துக்கிட்டே இருக்கும். அது ஒருகட்டத்துல எரிச்சலா, வேதனையா, பேரிழப்பா இம்சை பண்ணும். அப்படியரு குறை, உங்க கணவர் மனசிலும் ரொம்ப காலமா இருந்துது. அவரோடு பேசினதுல, அது என்னன்னு கண்டுபிடிச்சேன். உடனடியா அதுக்கு எப்படியாவது வாய்ப்பு ஏற்படுத்திக்கிட்டு, நேரம் ஒதுக்கிப் பண்ணச் சொன்னேன். அவரும் அதைப் பண்ணினார். அந்த விஷயம்... நீச்சல்!

ஆமாம், உங்க கணவருக்கு சின்ன வயசுலேருந்தே நீச்சல் அடிக்கணுங்கிறதுல மிகப் பெரிய ஆர்வமும் ஈடுபாடும் இருந்திருக்கு. ஆனா, கிராமத்துக் கிணத்துல இறங்கி நீச்சலடிச்சதுக்காக அவங்க அப்பாகிட்ட அடி வாங்கி, அன்னிலேருந்து கிணத்துப் பக்கமே போகலை. இருந்தாலும், நீச்சல் மேல இருந்த ஆசை மட்டும் அப்படியே வளர்ந்துக்கிட்டே வந்திருக்கு. இப்ப அவர் நீச்சல்குளத்துக்குத் தினமும் போய் நீச்சலடிக்கறதால, அவர் மனசுக்குள்ளே ரொம்ப காலமா இம்சை பண்ணிக்கிட்டிருந்த விஷயத்துலேருந்து விலகி வந்துட்டாரு. கூடவே, அவர் எடுத்துக்கிட்ட மனவளக் கலைப் பயிற்சியும் அவருக்குள்ளே நிதானத்தையும் அமைதியையும் கொடுத்திருக்கு!'' என்று அந்தப் பெண்மணிக்கு விளக்கிச் சொன்னேன்.

வாழ்க வளமுடன்!

நீங்களும் உங்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள். உங்களுக்குள்ளேயும் ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யாமல் விட்டதால், அந்த ஏக்கம் உங்களைத் துரத்திக்கொண்டும் இம்சை செய்துகொண்டும் இருக்கலாம். அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் இங்கே முக்கியம்.

மனத்தை வளப்படுத்துவது என்பது இங்கே மிக மிக அவசியம். வளப்படுத்த வளப்படுத்த, மனமது செம்மையாகும். மனத்துள் எப்போதும் ஒருவிதத் தெளிவும் துணிவும் கிடைக்கும். பதற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம். பக்குவமும் நிதானமும் கிடைக்கப் பெற்று, ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி, அமைதி நிலைக்கு வரலாம். இவை அனைத்தையும் நாம் செய்கிற மனவளக் கலைப் பயிற்சி நமக்கு வழங்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இப்படித்தான், கும்பகோணத்தில் இருந்து மனவளக்கலைப் பயிற்சிக்காக அன்பர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பயிற்சிக்கு இடையே பேசிக்கொண்டிருந்தபோது, ''இத்தனை வருட வாழ்க்கையில், நீங்கள் எவரிடமேனும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறீர்களா?'' என்று கேட்டேன். உடனே அவர், ''அப்படியெல்லாம் எவரிடமும் மன்னிப்புக் கேட்கிற எண்ணமில்லை. மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு நான் எந்தத் தவறும் செய்துவிடவில்லை'' என்று சொன்னார்.

''நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்'' என்றேன். ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக யோசித்தார். பிறகு தயங்கியவாறே, ''தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், சுவாமி! இதைச் சொன்னால், நீங்கள் சிரித்தாலும் சிரித்துவிடுவீர்கள். அத்தனை அல்பமான விஷயம்தான் இது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் படித்த நண்பன் மதிய உணவின்போது எனக்கு புளிசாதம் தரவில்லை என்கிற கோபத்தில், அவனிடம் பேசுவதையே விட்டுவிட்டேன். இத்தனைக்கும் அதற்கு முன்பு வரை அவன்தான் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட். நானும் அவனும்தான் எங்கு பார்த்தாலும் ஒன்றாகச் சுற்றித் திரிவோம். ஆனால், புளிசாதம் தரவில்லை என்கிற அல்ப காரணத்துக்காக, அதன்பின் பிளஸ் டூ முடிக்கிற வரையில் அவனுடன் நான் பேசவே இல்லை. வயது ஆக ஆக, 'சே..! அசட்டுத்தனமாக ஒரு நல்ல நட்பை முறித்துக்கொண்டோமே! அந்த நண்பனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று தோன்றும். ஆனால், அவனை அதன்பின் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. அந்த இனிய நண்பனின் சிரித்த முகம் அப்படியே என் மனத்துக்குள் நிலைத்து நின்றுவிட்டது. அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், அவனுடன் திரும்பவும் பேசிப் பழக வேண்டும் என்று என் உள்மனது சொல்லிக்கொண்டே இருக்கிறது, சுவாமி!'' என்றார்.

சொல்லி முடித்தபோது, அந்தத் தோழனிடமே மன்னிப்புக் கேட்டுவிட்டது போன்ற ஒரு நிம்மதி அவர் கண்களில் தெரிந்தது.

வாழ்க வளமுடன்!

நமக்கே தெரியாமல் நம் மனத்துக்குள் அட்டையாய் ஒட்டிக்கொண்டு இம்சிக்கிற விஷயங்களை நாமே இனம் கண்டு களைவதற்கு இந்த மனவளக் கலைப் பயிற்சி பெரிதும் உதவுகிறது.

உடலுக்கும் மனத்துக்குமான பாலத்தை, மனவளக் கலைப் பயிற்சி அமைப்பதையும், அதன் விளைவாக உடல் சக்தியானது மனத்துக்குள் ஊடுருவுவதையும், மனோசக்தியானது உடலெங்கும் பரவுவதையும் பயிற்சியின் அடுத்தடுத்த நிலைகளில் வெகு நன்றாகவே, அனுபவபூர்வமாக உங்களால் உணர முடியும்.

உணவும் உடையும் எப்படி சந்தோஷத்தைத் தருகிறதோ, தூக்கமும் நிம்மதியும் எப்படி உற்சாகத்தை வழங்குகிறதோ அதேபோல, மனத்துக்குள் நீண்ட காலமாகப் புதைந்திருக்கும் நியாயமான ஆசைகளை நிறைவேற்றும்போதும் சந்தோஷமும் உற்சாகமும் கிடைக்கப் பெறுவீர்கள். அது ஐஸ்கிரீம் சாப்பிடுவது மாதிரியான சின்னச்சின்ன ஆசையாகவும் இருக்கலாம்; இப்போது நீங்களே ஐஸ்கிரீம் சாப்பிட முடியாத நிலையிலும் இருக்கலாம். பரவாயில்லை... ஒரு பத்து ஐஸ்கிரீம்கள் வாங்கி, உங்களைச் சுற்றி இருக்கிற குழந்தைகளுக்கும் தோழமைகளுக்கும் வழங்குங்கள். நீங்கள் சாப்பிட்டால்கூட கிடைக்காத சந்தோஷத்தையும் மன நிறைவையும் அப்போது உணர்வீர்கள். அதற்கு ஈடான உற்சாகம் எதுவுமே இல்லை, நண்பர்களே!

வாழ்க்கை ஒருமுறைதான்; வாழ்வதும் ஒருமுறைதான். அதை முறையாகவும் செம்மையாகவும் வாழ்ந்துவிட்டுப் போவதில்தான் நிறைவும் மரியாதையும் இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லவேண்டியதும், இப்படியான சத்காரியங்களைத்தான்.

மனவளக் கலை எனும் அற்புதமான பயிற்சி, அடுத்தடுத்த தலைமுறைக்கும் சென்று, ஒவ்வொரு தலைமுறையையும் தழைக்கச் செய்யவேண்டும்; செய்யும் என உறுதியாக நம்புகிறேன்.

- அடுத்த இதழில் நிறைவுறும்.

தொகுப்பு: ஆர்.கே.பாலா