ஓவியங்கள்: முத்து

##~## |
என் முன்பு வந்து அமர்ந்த அவர், நடுத் தரமான நிலையில் இயங்கிவரும் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். 'எங்கள் நிறுவனத்தில் புதிய கண்டுபிடிப்புகளை, புதிய கோட்பாடுகளை, புதிய சிந்தனைகளை, புதிய கலாசாரத்தைக் கொண்டுவர நினைக்கிறேன். இது குறித்துப் புராணங்களில் ஏதாவது தகவல் அல்லது முன்மாதிரி இருக்கிறதா? இருந்தால், அதையே பின்பற்றி நானும் என் நிறுவனத் தில் புதிய கருத்தாக்கங்களைப் புகுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.
புதிய கலாசாரத்தை புராண அடிப்படையில் அணுகும் அவரைப் பாராட்டிவிட்டு, 'நீங்கள் சொல்வது போன்று புதிதாகக் கண்டுபிடித்துத்தான் ஆகவேண்டும் என்கிற தேவை அல்லது நிர்ப்பந்தம் ஏதாவது இருக்கிறதா? புதிய கண்டுபிடிப்புகள் உங்கள் நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு முன்பாக, இதுபற்றி கொஞ்சம் விளக்குவது நல்லது என்று தோன்றுகிறது...' என்று நான் சொல்லவும், நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்தார் அவர்.
'புதிய கண்டுபிடிப்பு அல்லது 'இன்னொவேஷன்’ என்பது புதிய வார்த்தை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பணியை ஒழுங்காகச் செய்வது, தரத்தைப் பேணுவது என்பவையே புதுமையாக இருந்தன. ஏன்... அதுதான் சந்தைக்குத் தேவை யாகவும் இருந்தது. ஆனால், எந்தச் சந்தை? இந்தியச் சந்தையா, உலகச் சந்தையா, மேற்கத்தியச் சந்தையா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது இருந்தது. நம் வணிக நூல்களை எழுதியவர்கள் எல்லோரும் வட அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள்தான். மேற்கத்திய தேவைகளே அப்போது இந்தியத் தேவைகளாக இருந்தன. ஆனால், இன்றைக்கு நாம் புதிதாக 'இன்னொவேட்’ செய்கிறோம்; அதாவது, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கிறோம்; அல்லது, திருத்தங்களை, மாற்றங்களைச் செய்கிறோம்.

மேற்கத்திய புராணங்களில், புதுமையான சுதந்திரச் சிந்தனைக்கு ஆட்டைக் குறிப்பிடுகிறார்கள். கிரேக்க புராணங்களில், ஆட்டின் கால்களைக் கொண்ட பான், புதுமைவாதி; கலவரம் உண்டாக்கக்கூடியவர்; அழிவைத் தருபவர். பைபிளில், செம்மறி ஆடு. அவர்களுக்கு ஆடு என்பது சாத்தான் மாதிரி. இந்தியப் புராணங்களில், விதிகளைக் கடைப்பிடித்த ஸ்ரீராமர், சில தருணங்களில் விதிகளை மீறிய ஸ்ரீகிருஷ்ணர் இருவரையுமே நாம் ஹீரோக்களாக மதிக்கிறோம்.
விதிகளை மீறுவது நமக்கு வசதியாக இருக்கும் என்றால், அதை நாம் புதுமை என்கிறோம்; அசௌகரியமாக இருந்தால், அதை அடாவடித்தனம், கீழ்ப்படியாமை என்கிறோம். நமக்குப் புதுக் கருத்துக்கள் தேவை. ஆனால், அவை நமக்குச் சாதகமாகவும் இருக்க வேண்டியுள்ளது.
போகட்டும்... உங்கள் நிறுவனத்தில் புதிய கருத்தை நீங்களோ அல்லது உங்கள் குழுவில் ஒருவரோ வெளியிட வேண்டும் என்று ஏன் எண்ணுகிறீர்கள்? அப்படிப் புதிய கருத்தைச் சொன்னால், அவருக்கு போனஸ் அல்லது வெகுமதி ஏதாவது அளிப்பீர்களா? அல்லது, புதுமையாகச் சிந்தித்துக் கருத்துச் சொன்னால்தான் உங்கள் நிறுவனத்தை அவர் நேசிக்கிறார் அல்லது உண்மையாகப் பாடுபடுகிறார் என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்டேன். இதற்கு அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தான் எடுத்தது சரியான முடிவுதானா என்பது தெரியாமல் அவர் திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது. அதனால் மேலும் சில விளக்கங்களைச் சொல்லவேண்டியதாயிற்று.
'உங்கள் நிறுவனத்தில் புதிய சிந்தனைக் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் என்ன காரணத்துக்காக இதை விரும்புகிறோம் என்று யோசியுங்கள். சும்மா தமாஷ§க்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காகவோ நாமும் இதில் இறங்கவில்லை என்பதை முதலில் நீங்களே உணருங்கள். வியாபார நோக்கில் அந்தப் புதுமை உங்களுக்குப் பயன்படுமா என்று ஆராயுங்கள். அடுத்ததாக, உங்கள் குழுவுக்கு இந்தப் புதுமையால் என்ன பயன் கிடைக்கும் என்றும் பாருங்கள். புதுமைக் கருத்துக்கு வெகுமதி அளியுங்கள். அதை வெளியிட்டவரைக் கொண்டாடுங்கள். அந்தக் கருத்தைச் செயல்படுத்துங்கள். அதன்பின், எத்தனை வேகமாக உங்கள் நிறுவனம் வளர்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

செக்கு மாடு மாதிரி ஒரே மாதிரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள் உற்சாகத்தைத் தரக்கூடும். பணியின் தரமும் நிறுவனத்தின் தரமும் உயரும். அதே நேரம், எந்தவொரு புதுமையும் அதற்கான பலனைப் பெறும் வரையில் ஊசலாட்டமின்றி உறுதியாகக் கடைப்பிடிக்கப் பட வேண்டியதே!
ஆனால், கட்டளைகளுக்கும் விதிமுறைகளுக்கும் நடைமுறை ஒழுங்குக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் கட்டுப்படுவதில்லை. தங்களின் தணியாத ஆசைக்கும் உணர்வுக்கும் ஏற்பவே அவர்கள் முடிவு எடுப்பார்கள்.
எனவே, புதிதாக எதையாவது செய்தால், நீங்கள் அவர்களைக் கொண்டாடுவீர்கள் என்று அவர்கள் நம்ப வேண்டும். தவிர, அவர்கள் தங்களைப் புதுமைக்குச் சொந்தக்காரர்கள் என்று எண்ணிக்கொண்டால், அதற்குப் பின்பு எழும் களேபர நிலையை உங்களால் சமாளிக்க முடியுமா என்று பாருங்கள்.
குழுவில் ஒருவர் வெளியிடும் புதுமைக் கருத்தை மொத்தக் குழுவுமே ஏற்குமா, செயல்படுத்த முன் வருமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். புதுமைக் கலாசாரத்தை ஊக்குவிப்பதன் சாதக- பாதகங்கள் அப்போது புரியும்' என்றேன்.
'நல்ல வழி காட்டினீர்கள். புதுமை அவசியம்தான் என்றாலும், அதை எப்போது, எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டேன்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அவர்.