குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நாளை நமக்காக!

நாளை நமக்காக!

நாளை நமக்காக!
##~##
நாளை நமக்காக!

சோக மரத்தடியில் அமர்ந்திருந்த சீதாதேவி ஆச்சரியத்துடன் ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே... மரக் கிளையில் ஒரு குளவி, சின்னஞ்சிறு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து, அதைத் தன் கொடுக்கால் மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருந்தது.

''திரிஜடா! என்ன செய்கிறது இந்தக் குளவி?'' என்று, தனக்குக் காவலாக நியமிக்கப்பட்டிருந்தவளும், தனது தோழியுமான திரிஜடையிடம் வியப்புடன் கேட்டாள் சீதா.

திரிஜடை சொன்னாள்... ''தாயே! அந்தக் குளவி புழுவைக் கொட்டிக் கொட்டி, ஒரு கட்டத்தில் அதைத் தன்னைப் போன்றதொரு குளவியாகவே மாற்றிவிடும். எப்போதும் அந்தக் குளவியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப் பதால், அந்தப் புழு தானும் குளவியாகவே உருமாறிவிடும்!''

இதைக் கேட்ட சீதா யோசனையில் ஆழ்ந்தாள். பின்னர் கவலையுடன் கேட்டாள்... ''அடியே திரிஜடை! நான் எப்போதும் ராமபிரானையே

நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் விரைவில் நானும் ராமனாகவே மாறிவிடுவேனா? அப்படி மாறிவிட்டால் என்ன செய்வது? அப்போது உலகில் இரண்டு ராமர்கள் அல்லவா இருப்பார்கள்?''

திரிஜடை கலகலவெனச் சிரித்தபடி சொன்னாள்... ''அப்போதும் உலகில் ஒரே ஒரு ராமர்தான் இருப்பார், அம்மா! நீங்கள் ராமராக உருமாறியது போன்று, உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீராமர், சீதாதேவியாகஉருமாறிவிடுவார், இல்லையா?''

நாளை நமக்காக!

மேல்நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் என்ற உயர்நிலை ஆன்மிகவாதி, மிகச் சிறந்த உளவியல் அறிஞரும்கூட. அவர் தன் உளவியல் கருத்துக்களைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். அவரது சிந்தனைகளால் கவரப்பட்டவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் (ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளால் கவரப்பட்ட இன்னொரு பிரமுகர், அண்மையில் காலமான டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி). சிறையில் இருந்த

போது, ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் வ.உ.சி. 'அகமே புறம், மனம்போல வாழ்வு, மெய்யறிவு’ என்பன போன்ற தலைப்புகளில் வ.உ.சி-யின் தமிழாக்கங்கள், சின்னஞ்சிறு நூல்களாக வெளிவந்திருக்கின்றன (சென்னை, பாரி நிலைய வெளியீடு).

ஜேம்ஸ் ஆலன் உலகுக்குச் சொன்ன அற்புதமான உளவியல் உண்மைகளில் ஒன்றுதான் அகம் புறத்தை மாற்றுகிறது என்பதும், புறம் அகத்தை மாற்றுகிறது என்பதும்! அகம் புறத்தை மாற்றுகிறது என்ற அவரது உளவியல் விதிக்கான ஆதாரம்தான், மேலே சொன்ன ராமாயணக் கதை.

அகத்தில் நினைக்கும் எண்ணங்கள் புறத்தில் பற்பல விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இது என்றும் மாறாத உளவியல் விதி. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி, இந்த விதியை விளக்க எழுந்த முதுமொழிதான்.அதிலிருந்தே இன்னொரு விதியும் உருவாகிறது. அகம் புறத்தை மாற்றுவது போலவே, புறமும் அகத்தை மாற்றுகிறது. புறத்தில் உள்ள விஷயங்களைச் சீராக்கினால், அகம் தானாக மாறுகிறது. உருவத்தை மாற்றினால், உள்ளமும் மாறிவிடுகிறது.

ராவணன் சீதையை ஏமாற்றித் தன் பக்கம் கவர்வதற்காக ஸ்ரீராமன் போல் தன் உருவை மாற்றிக்கொண்டான். ஆனால் ஸ்ரீராமனாக உருமாறியதும், அவனிடம் பிறன்மனைவியைக் கவரவேண்டும் என்கிற எண்ணமே தோன்றவில்லை. எனவே, மீண்டும் ராவணனாகவே தன் சுய உருவுக்கு மீண்டான் என்கிறது ராமாயணம்.

புற விஷயங்கள் அக விஷயங்களை மாற்றுகின்றன என்பதற்கான அண்மைக்கால உதாரணம் ஒன்று. காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட தம்பதி, அவர்கள். அன்புமயமாக வாழ்ந்து வந்தனர். பிறகு என்ன நேர்ந்ததோ, தெரியவில்லை; அவர்களுக்கிடையே சச்சரவுகள் ஆரம்பமாகி விட்டன. சில ஆண்டுகளாக அவர்களிடையே கடும் மனக்கசப்பு. இது விவாகரத்துச் சிந்தனை வரை கொண்டுவிட்டது. ஆனால் மனைவிக்கும் சரி, கணவருக்கும் சரி... விவாகரத்தில் முழுச் சம்மதமில்லை. என்றாலும், ஒருகாலத்தில் மனப் பூர்வமாகக் காதலித்த தங்களால் ஏன் தற்போது அவ்வாறு ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ள இயலாமல் போனது என்றும் புரியவில்லை. இதுகுறித்து ஓர் உளவியல் நிபுணருக்குக் கடிதம் எழுதினர். தாங்கள் திரும்பவும் அன்பாக, அந்நியோன்னியமாக வாழ விரும்புவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். விரைவிலேயே அவரிடமிருந்து பதில் வந்தது.

நாளை நமக்காக!

'உங்கள் இருவரின் கையெழுத்தும் சாய்வாகவும் தெளிவில்லாமலும் இருக்கிறது. உள்மனமே கையெழுத்தை வடிவமைக்கிறது என, ஏற்கெனவே சித்தாந்தம் ஒன்று உண்டு. அதன்படி, கையெழுத்தின் மூலம் உள்மனத்தைச் சீர்செய்ய முடியுமா என ஆராய்ந்து வருகிறேன். நீங்கள் இப்போது விவாகரத்து செய்ய வேண்டாம். ஓர் ஆறு மாதம் இருவரும் கையெழுத்து நோட்டுப் புத்தகம் வாங்கிச் சீரான கையெழுத்து எழுதிப் பழகுங்கள். பிறகு, விவாகரத்தைப் பற்றி யோசிக்கலாம்.’

அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட அவர்கள், கையெழுத்து எழுதிப் பழகலானார்கள். மூன்றே மாதத்தில் நேரான தெளிவான கையெழுத்தில், தாங்கள் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தீவிர அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டதாகவும், விவாகரத்து யோசனையை அடியோடு கைவிட்டுவிட்டதாகவும் அவருக்கு பதில் எழுதினார்கள்.

உள்மனம் கையெழுத்தைத் தோற்றுவிப்பது போலவே, கையெழுத்தால் உள்மனத்தை மாற்ற முடியும் என்ற உளவியல் தத்துவம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

அக விஷயங்கள் புறத்தைப் பாதிக்கின்றன; அதுபோலவே புற விஷயங்களும் அகத்தைப் பாதிக்கச் செய்கின்றன என்பதே அந்த உளவியல் தத்துவத்தின் சாரம். சிடுசிடுவென்று எப்போதும் கோபித்துக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வீட்டைப் போய்ப் பாருங்கள்; வீடு தூசும் தும்புமாய் ஒரே குப்பைக் கூளமாய் இருக்கும். துப்புரவாகவும் ஒழுங்காகவும் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்ட அறைக்கு போனால், நம் மனத்தில் சாந்தி நிலவும்.

'வீட்டைப் பெருக்கிக் கோலம் போட்டு, சுத்தமாய் வைத்துக் கொள்! மாலை வேளையில் விளக்கேற்றி வைத்தால் வீடு தேடி லட்சுமி வருவாள். இல்லாவிட்டால், அவள் அக்காதான் வருவாள்!’ என்று முன்னோர்கள் சொன்னதில் உளவியல் தத்துவம் ஒளிந்திருக்கிறது.

அவரவர் மதச் சின்னங்களை நெற்றியில் அணிந்து கொள்வதிலும் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. திரு மண்ணோ திருநீறோ குங்குமமோ நெற்றியில் அணிந்துகொண்டால், அந்தப் புற விஷயம் நம் உள்ளத்தை மட்டுமல்ல; நம்மைப் பார்ப்பவர்களின் மனத்தைக்கூட மாற்றி, அவர்களின் உள்ளத்தில் ஒரு சாந்தியை ஏற்படுத்துகிறது. 'நீறில்லா நெற்றி பாழ்!’ என்று அவ்வை சொன்னதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மதச் சின்னங்களை விடுங் கள்; மற்ற புற விஷயங்களை எடுத்துக்கொண்டாலும்கூட, பொதுவாகவே வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் பளிச்சென்று நல்ல உடையணிந்து, தூய்மையான தோற்றத் துடன் காணப்படுவதைப் பார்க்கலாம். தூய்மை யான புறத்தோற்றம் என்பது வெற்றிகளை இன்னும் சுலபமாகப் பெறுவதற்கான வழி!

நாளை நமக்காக!

புற விஷயங்கள் குறித்த நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று, எடுத்த பொருளைப் பயன்படுத்திய பின்பு மறக்காமல் எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்தல். தலைவாரிக் கொள்ளும் சீப்பை, பவுடர் டப்பாவை, ஒரு ஸ்பூனைப் பயன்படுத்திய பிறகு, அதை அதற்கு உரிய இடத்தில் திரும்ப வைப்பதில் என்ன சிரமம்? ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் இருந்தால், வீடு அலங்கோலமாக இல்லாமல் சீராக இருக்குமல்லவா? நம் அசிரத்தை மற்றும் அலட்சியம் காரணமாக, எடுத்த பொருளை அவசரத்தில் ஏதோ ஓரிடத்தில் வைத்துவிட்டுப் போகிறோம். மீண்டும், அந்தப் பொருளுக்கான தேவை வரும்போது, வீடு முழுவதையும் புரட்டிப் போட்டுத் தேடுகிறோம்.

தேடுவதில் எவ்வளவு நேரம் வீணாகிறது! வீணாகும் நேரத்தைச் சரிக்கட்ட, பேருந்தில் போகும் இடங்களுக்கு அதிகக் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் போகிறோம். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது என்கிற நல்ல பழக்கம் இல்லாததால், நமக்கு நேரம் மட்டும் வீணாவதில்லை; பணமும் விரயமாகிறது. பொருட்கள் தாறுமாறாக இறைந்து கிடக்கும் புறச் சூழல் காரணமாக, நம் மனத்தில் குழப்பமும் அமைதியின்மையும் நிலவுகின்றன. வாழ்வே கசக்கிறது. வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்த்துச் சிடுசிடுக்கிறார்கள்.

அலுவலகத்தில் கோப்புகளைக்கூட ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும் என்கிறார் மகாஸ்ரீ அரவிந்த அன்னை. மேசை, நாற்காலி போன்றவற்றைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்கிறார். அப்படிச் செய்தால் அவை நம்மீது அன்பு கொண்டு, விசுவாசத்தோடு நமக்குக் கூடுதலாக உழைக்கும் என்கிறார். உயிரற்றது என்று நாம் கருதும் ஜடப் பொருள்களுக்கும்கூட ஒரு வகையில் உயிர் உண்டு என்பது ஸ்ரீஅன்னையின் சித்தாந்தம்.

சுற்றுப்புறத்தை ஒழுங்காகவும் சீராகவும் வைத்துக் கொண்டால், வாழ்க்கை இனிக்கும்; மனத்தில் அமைதி பிறக்கும்; வீட்டில் மகிழ்ச்சியும் அன்பும் மலரும்.

(சிறகு விரிப்போம்)