சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

'கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்குவதுபோல’ என்று நம்மூரில் அருமையாகச் சொல்வார்கள், ஒரு பழமொழி!

உடனே நாம், 'கண்களை எங்கே விற்பது? அதன் பிறகு எதற்காக ஓவியத்தை வாங்கவேண்டும்? அந்த ஓவியத்தை பார்க்கவோ ரசிக்கவோ முடியாதே!’ என்று நம் சிந்தனை களை ஓடவிட்டுத் தெளிவு பெற முடியும். கண்களை விற்று விட்டு ஓவியத்தை வாங்குவது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்பதை உணர முடியும்.

##~##
ஆனாலும் நாம், தொடர்ந்து கண்களை விற்றுத்தான் ஓவியம் வாங்கிக்கொண்டு இருக்கிறோம்; காதுகளை முழுவதுமாக அடைத்துவிட்டுத்தான் இசையைக் கேட்கிறோம்; இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டுதான், ஓடுவதற்கு முயற்சி செய்கிறோம்.

'என்ன இது?’ என்று குழம்புகிறீர்களா? 'ஒண்ணுமே புரியலியே சுவாமி!’ என அலுத்துக் கொள்கிறீர்களா?

புரியும்படி தெளிவாகவே சொல்கிறேன். மனிதர்களாகிய நாம் கிராமங்களை விட்டு நகரத்துக்கு வர ஆசைப்பட்டோம். அப்படி நகர்ந்து வரும்போது, நகரத்துக்கு அருகில் இருந்த காட்டை அழித்து நகரமாக்க முனைந்தோம். அதாவது, பசுமையான காட்டை அழித்து நாடாக்கினோம். மரங்களை வெட்டினோம்; சாலையாக்கினோம்; இடங்களை வளைத்தோம்; வீடுகள் கட்டினோம். அப்படி வீடு கட்டு வதற்காக, ஆற்று மணலைச் சுரண்டிச் சுரண்டி, நதிகளை வற்றச் செய்தோம். சைக்கிளில் இருந்து பைக் போன்ற வண்டிக்கு மாறினோம். பைக்கில் இருந்து, காருக்கு மாறினோம்.  

இப்போது என்னாயிற்று? மரங்களை வெட்டியதால் மழையைக் காணோம். எப்போதேனும் தப்பித் தவறி மழை பெய்தாலும், அந்த மழை நீரை ஆற்றின் உள்பகுதி, அதாவது பூமியின் உள்பகுதி உள்வாங்கிக் கொள்கிறது. தெருவெங்கும் தார்ச்சாலைகள் வந்துவிட்டன. இதனால், வெப்பம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது. மரங்களும் தண்ணீரும் இல்லாததால், உடலில் புழுக்கமே மிஞ்சுகிறது. சைக்கிள் குறைந்து, பைக்குகளும் கார்களும் பெருகிவிட்ட நிலையில், காற்று மாசுபட்டு, அந்தப் புகைகளைச் சுவாசிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு! ஆக, நகரமயமாக்கம் என்பது நரகமயமாக்கம் என்பதாக ஆகிவிட்டது என்பதே உண்மை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?! ஆக, கண்களை விற்று ஓவியம் வாங்குகிற கதை இதுதான் என்பது இப்போதேனும் புரிகிறதா? இதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவஸ்தைப்படுவது எது தெரியுமா? நாம் விடுகிற மூச்சுதான்!

மூச்சு அதாவது சுவாசம் சரியாக இருந்தால்தான், நிறுத்தி நிதானமாகச் சிந்திக்கமுடியும். மூச்சில் உள்ள லயம் தப்பிப்போனால், எல்லாச் செயல்களிலும் அது எதிரொலிக்கும். காரியத்தில் ஈடுபாடு குறையும்; செயல்களில் ஏகப்பட்ட வேகத் தடைகள் குறுக்கிடும். சீராகச் சிந்திக்கமுடி யாமல், புத்தியானது கிழக்குத் திசையில் பயணித்து சட்டென்று மேற்குக்கு மாறி, திடீரென வடக்கு முகமாக நகர்ந்து, இறுதியில் தெற்கில் போய் முட்டிக்கொண்டு நிற்கும். ஆக, மூச்சு சீராக இருந்தால், வாழ்க்கையும் சீராகப் பயணிக்கும்.

இன்னொன்று...

வாழ்க வளமுடன்!

ஒரு கையால் ஆணியையும், இன்னொரு கையால் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு, சுவரில் கடவுளின் திருவுருவப் படத்தையோ, பொக்கை வாய் தெரியச் சிரிக்கும் குழந்தை யின் புகைப்படத்தையோ மாட்டுவதற்கு முனையும் வேளையில், யாரேனும் ஏதேனும் கேட்டால், 'கை வேலையா இருக்கேன்ல’ என எரிந்து விழுவோமல்லவா?.

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து அக்கடா என்று அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில்... 'ஏங்க, சட்னி அரைக்க பொட்டுக்கடலை இல்லீங்க. கொஞ்சம் வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று மனைவி கேட்டதும், ''ஏன்டீ... காலு ரெண்டையும் வெட்டிப் போட்டுடலாம் போல வலிக்குது. ஆபீஸ் போயிட்டு வந்து உட்கார்ந்த கையோட, இரக்கமே இல்லாம கடைக்கு விரட்டறியே?’ எனக் கத்திவிடுவோம்தானே?

இப்படித்தான், சென்னையில் இருந்து நெல்லைக்கு பஸ்ஸில் சென்று இறங்கினால், முதுகுத் தண்டெல்லாம் பயங்கர வலி என்கிறோம். இரண்டு நாட்களாக, கிட்டத் தட்ட இரவு- பகலாக, கம்ப்யூட்டரில் வேலை செய்ததால், கண்களில் எரிச்சல் என்று கண்களைக் கசக்குகிறோம். துண்டைத் தண்ணீரில் நனைத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கிறோம்.

கை-கால்களில் உள்ள விரல்களைச் சொடுக்கெடுத்துக் கொள்கிறோம். கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆட்டி, ரிலாக்ஸ் செய்து கொள்கிறோம். கழுத்துக்கு கவசம் போல் அணிந்து வலியில் இருந்து விடுதலை பெற முயற்சிக்கிறோம். முழங்கால் பகுதிகளில் விளையாட்டு வீரர்கள்போல், சாக்ஸ் அணிந்து நிவாரணம் தேடுகிறோம்.

கதவிடுக்கில் விரல் லேசாக நசுங்கினால் துடித்துப் போகிறோம். பெயின் கில்லர் கிரீமைத் தடவி, வெந்நீரில் விரலைக் குளிக்க வைத்து, அதை சின்ன டவலால் ஒற்றியெடுத்து... என ஒவ்வொரு உறுப்புக்கும் எத்தனை விதமான முயற்சிகள்... மெனக்கெடல்கள்... பாதுகாப்பு ஏற்பாடுகள்! ஆனால், மூச்சு பற்றி மட்டுமே நாம் சிந்திப்பதே இல்லை.

வாழ்க வளமுடன்!

''ஏங்க... அங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க?'' என்று மனைவி கேட்டால், ''நேத்திக்கி பஸ் ஸ்டாப்புக்கு வரதுக்கும் பஸ் கிளம்பறதுக்கும் சரியா இருந்துச்சு. தடதடவென ஓடி வந்து, பத்துப் பன்னண்டு அடி தூரம் வரை பஸ் பின்னாடியே போய் ஜம்ப் பண்ணி ஏறிட்டேன். அதுல, 'ஹார்ட் பீட்’ அதிகமாயிருச்சும்மா. அதான், இன்னிலேருந்து ஒரு பத்து நிமிஷம், மூச்சுப் பயிற்சி செய்யலாம்னு முடிவு பண்ணி, பயிற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்’ என்று எவரேனும் சொல்கிறார்களா, என்ன?

மூச்சு என்பதை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. 'அதுபாட்டுக்கு அது இயங்கிட்டிருக்கு’ என்பதாலேயே மூச்சினை எடுப்பார் கைப்பிள்ளை என்பதாகவே நினைத்துக் கொள்கிறோம். இதனால், சுவாசத்தில் உள்ள பிரச்னைகளையும் சுவாசப் பாதைகளில் திடீரென்று முளைத்திருக்கிற ஸ்பீடு பிரேக்கர்களையும் கண்டறிவதுமில்லை; அங்கே ஏதேனும் பிரச்னையா என்று கண்டுகொள்வதுமில்லை.  

மூச்சு இருக்கிற வரைக்கும் உயிர் இருக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மூச்சு சீராக இயங்கினால்தான், நம்மால் நிம்மதியாகவே வாழ முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

'என் மூச்சு இருக்கிற வரைக்கும், உன்னை நான் மறக்கவே மாட்டேன்’ என்கிற இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். எவரேனும் உதவி செய்திருந்தால், அவர்களைப் பார்த்து நெக்குருகி இப்படிப் பேசியிருப்பார்கள். ஆனால், காலப்போக்கில், சொன்ன வார்த்தையை மீறி அல்லது மறந்து, மூச்சிருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவார்கள் என்பது வேறு விஷயம்!

ஆகவே, நம்மிடம் அன்பும் கனிவுமாக இருப்பவரை, மூச்சிருக்கிற வரைக்கும் மறக்காமல் இருக்க முயற்சி செய்வோம். முக்கியமாக, நம் மூச்சை மறக்காமல் கவனிப்பது ரொம்பவே அவசியம் என்பதையும் உணர்வோம்!

அது சரி, மூச்சைக் கவனிப்பது எப்படி? அதற்கு ஏதேனும் பயிற்சிகள் உண்டா?

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா