மனிதம் வளர்போம்!


முடியாது; காரணம், மன்னித்தல் என்பது
பலவான்களுக்கே உரிய விசேஷ குணம்! ’
- மகாத்மா காந்தி
##~## |
பாதிரியார் வீட்டில் தங்கியிருந்த ஒருவன், அங்கிருந்து விலையுயர்ந்த விளக்கு ஒன்றை திருடிச் சென்றுவிடுகிறான். அதை விற்க முயற்சிக்கும்போது, மாட்டிக்கொள்கிறான். பாதிரியாரோ, அந்த விளக்கை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததாகச் சொல்லித் திருட்டுப் பழியில் இருந்து அவனைக் காப்பாற்றியதாகக் கதை ஒன்று உண்டு.
தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும் இயேசுபிரான் மன்னித்ததை வரலாறு சொல்லும்.
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசான் எழுதி, அகிலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, 1955-ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு- முழுநிலவு. அதில் இடம்பெற்றிருந்த 'மன்னிப்பு’ சிறுகதை உலகப் புகழ்பெற்றது. தன்னை ஏமாற்றிய கணவன் ஜார்ஜை, அவன் மனைவியான பெர்த்தி முழு மனதுடன் மன்னிப்பதுதான் கதை.
திருந்தி வாழ நினைக்கும் தீவிரவாதிகளுக்கு அரசாங்கமே பொது மன்னிப்பு வழங்குவதும் நடைமுறையில் இருக்கிறது. ஒருவர் செய்த தவற்றை, குற்றத்தை அல்லது துரோகத்தை மறப்பதுகூட எளிதாக இருக்கலாம். ஆனால், பரிபூரணமாக மன்னிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. தனக்குத் துன்பம் இழைத்தவர்களுக்குப் பதிலுக்கு ஏதேனும் கெடுதல் செய்யவேண்டும் என்று மனம் பரபரத்தாலும், அதை அடக்கியாள்வார்கள் பலர். ஆனால், இவர்களாலும்கூட எளிதில் மன்னிப்பு வழங்கிவிட முடியாது. அப்படியே மன்னித்தாலும், முழு மனதோடு மன்னிப்பது அபூர்வம்!
மாதப்பன் என்பவர் மரணப் படுக்கையில் கிடந்தார். 20 வருடங்களுக்கு முன்னர் இவரது வியாபாரக் கூட்டாளியாக இருந்த மாரியப்பன் என்பவன், பலவிதத்திலும் இவரை ஏமாற்றிப் பொருளாதார இழப்பையும், பிரச்னைகளையும் உண்டாக்கியிருந்தான்.
பொழுது விடிந்தால் மாரியப்பனின் துரோகமும் சதிகளுமே மாதப்பனை வாட்டி வதைக்கும். தினமும் மனதால் அவனைச் சபித்துவந்தார் மாதப்பன். ஒருமுறை மாரியப்பன் விபத்துக்குள்ளானபோது, குதூகலமாக இருந்தது மாதப்பனுக்கு. இனிப்புகள் விநியோகித்து கொண்டாடியிருக்கிறார்!
இப்போது அவருக்கு ஓர் எண்ணம். ''நாம் இருக்கப் போவதோ கொஞ்ச காலம். அதற்குள் மாரியப்பனை மனப்பூர்வமாக மன்னித்து, அவனையே நேரில் அழைத்துச் சொல்லிவிட்டால் என்ன!'' என்று தோன்றியது.
அதன்படியே மாரியப்பனை வரவழைத்தார் மாதப்பன். தான் அவனை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டதைச் சொன்னார். மாரியப்பனுக்கும் மகிழ்ச்சி. ஆஸ்பத்திரியிலேயே மாதப்பனுடன் தங்கியிருந்தான் அவன். ஓரிரு நாட்களில் மருத்துவ அதிசயமாக மாதப்பனின் உடல் நலம் தேறியது. இன்னும் 10 வருடங்களுக்கு மாதப்பன் ஆரோக்கியமாக இருப்பார் என்றனர் மருத்துவர்கள்.
பென்சில்வேனியா அருகில் உள்ள நிக்கல்மைன்ஸ் என்ற இடத்தில் இருக்கிறது, அமிஷ் எனும் பள்ளிக்கூடம். 2006 ஆண்டு, ஒரு திங்கட்கிழமையன்று காலையில், சார்லஸ் ராபர்ட்ஸ் என்ற 32 வயது இளைஞன் ஒருவன், அந்தப் பள்ளியில், ஒரு வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தான். ஆசிரியரையும் மாணவர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, மீதமிருந்த பத்து மாணவிகளின் கால்களையும் கட்டினான். அவர்களைச் சுடுவதற்கு ஆயத்தமானான். அந்த மாணவிகளில், 13 வயதான ஒரு சிறுமிதான் மூத்தவள். ''என்னைச் சுடுங்க. மற்ற குழந்தைகளை விட்டுடுங்க'' என மன்றாடினாள் அவள்.
அதை ஏற்காத அந்த இரக்கமற்ற இளைஞன், ''என் செல்லக் குட்டி மகளை இரக்கமே இல்லாமல் தன்னிடம் கூட்டிக்கிட்டுப் போயிட்ட கடவுள் மேல எனக்குக் கோபம். உங்களைச் சுட்டுப் பொசுக்கினால்தான் அது ஆறும்!'' என்று சொல்லிவிட்டுக் கண் மண் தெரியாமல் சுட ஆரம்பித்தான். ஐந்து மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்ற குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதற்கிடையே அந்தக் கட்டடத்தை போலீஸார் சுற்றி வளைக்க, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இளைஞனும் மாண்டு போனான்.
உலகையே உலுக்கிய சம்பவம் இது. ஆனால், அதைவிட எல்லோரையும் ஈர்த்த இன்னொரு விஷயம்... கொலையுண்ட மாணவிகளின் பெற்றோர், கொலைகாரனை மனப்பூர்வமாக மன்னித்ததாக அறிவித்ததுதான். தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் உட்பட ஏராளமான பத்திரிகைகளிலும், லட்சக்கணக்கான இணையதளங்களிலும் இந்தச் செய்தி வெளியானது!
தங்கள் குழந்தைகளின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதுடன், கொலைகாரனின் இறுதிச்சடங்கிலும் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். அதுமட்டுமா? கொலைகாரனான சார்லஸ் ராபர்ட்ஸின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதல் சொன்னார்கள். அவர்கள் குடும்பத்துக்குப் பொருளுதவியும் செய்தனர். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு மன்னிக்கும் மனப்பாங்கு நம்மிடம் இருக்குமா? இருந்தால் அது உன்னதம் அல்லவா?
(தொடரும்)