தொடர்கள்
Published:Updated:

புதியதோர் உலகம் செய்வோம்!

புதியதோர் உலகம் செய்வோம்!


இளைஞர் சக்தி
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!

'இறைவன் எங்கு இருக்கிறான்?' என்ற கேள்விக்கு, 'அவன் எங்கே இல்லை? இருப்பதெல்லாம் இறைவனே!' என்று பதில் அளிக்கிறது ஸநாதன தர்மம்.

உலகம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானவை கடவுளைப் பற்றிய புரிதல்களும். 'எத்தனை மனிதர்களோ, அத்தனை மதங்கள்' என்றார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

உலகின் பல நாகரிகங்கள் தோன்றியிராத காலத்தில், நம் ரிஷிகள் கடவுள் தத்துவம் குறித்து மிகத் தெளிவான பார்வை கொண்டிருந்தனர். இறைவனை இல்லை என்பவன், தன்னையே இல்லை என்று சொன்னவன் ஆகிறான். இறைவன் இருக்கிறான் என எவன் ஏற்கிறானோ, அவன் தன்னையே இறைவனாக உணர்கிறான். இப்படி, வேதத்தின் துணை கொண்டு கடவுளின் இருப்பினை அறிவுபூர்வமாக நிரூபிக்க அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத, கண்ணையும் கருத்தையும் ஒளிர்விக்கிற, மாபெரும் தத்துவமான கடவுளைப் பற்றி வேதங்கள் நமக்குக் கூறுகின்றன.

ஒரு பொருளை அறிய வேண்டுமெனில், முதலில் அதன் இலக்கணத்தை அறியவேண்டும். வேதப்பொருளாக விளங்கும் திருக்குறளில் பரம்பொருளின் இலக்கணத்தை எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

ஒரு விஷயத்தை அழுத்திச் சொல்ல, ஒரு முறைக்குப் பத்து முறை கூறு என்கிறோம். திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்துப் பகுதியில், பத்துக் குறட்பாக்களில் இறைவனின் இலக்கணங்களை அற்புதமாக அருளியிருக்கிறார். ஒவ்வொரு குறட்பாவிலிருந்தும் கடவுளைப் பற்றிய இலக்கணம், கடவுளை வழிபடும் முறை, அதனால் ஏற்படும் பயன் ஆகிய மூன்று அம்சங்களை அறிய முடிகிறது.

கடவுளைப் பற்றி திருவள்ளுவர் கூறும் இலக்கணங்களைக் கவனியுங்கள்... உலக முதல்வன், எல்லாம் அறிந்தவன் (வாலறிவன்), உள்ளத்தாமரையில் உணர்வாக இருப்பவன் (மலர்மிசை ஏகினான்), விருப்பு- வெறுப்பு அற்றவன் (வேண்டுதல் வேண்டாமை இலான்), எங்கும் நிறைந்திருப்பவன் (இறைவன்), ஆசையற்றவன் (பொறிவாயில் ஐந்தவித்தான்), தனக்குவமை இல்லாதான், அறக்கடலாக விளங்குபவன் (அறவாழி அந்தணன்), எண்குணத்தான்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள கடவுள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்? திருநீறு, திருமண் போன்ற சமயச் சின்னங்களோ, கயிலாசம், வைகுண்டம் போன்ற இடங்களோ கூறப்படவில்லை. அதனால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகிறது.

ஜாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள். சமயச் சின்னங்களுக்குள் அவரை அடக்கிவிட முடியாது. பெயரும் வடிவமும் கடந்தது, பரம்பொருள்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

- என்று பாடினார் மாணிக்கவாசகர்.

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங்கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந் துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதனியல் ஒளியுறு அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவம்

மகாகவி பாரதியார் இந்தப் பாடலில் கூறும் அறிவே உருவான ஆண்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எந்த மதத்தையும் சாராதவர் என்றால், ஏன் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல், பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதில்லை?! அந்த இறைவனுக்கே வெளிச்சம்!

புதியதோர் உலகம் செய்வோம்!

ஒருவேளை, இறைவன் என்று ஒருவர் இருந்து, அவரை வழிபடாவிட்டால் கண்ணைக் குத்திவிடுவாரோ என்ற பயத்தில் பலர் வழிபடுகின்றனர். நம் கலாசாரமும் பண்பாடும் இறை நம்பிக்கையில் ஊறியவை. நமக்கு மேல் ஒரு மாபெரும் சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது எனும் நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள், ஆண்டவனை வழிபடுகிறார்கள். ஆனால், வேண்டிக்கொண்ட பத்து காரியங்களில் ஐந்து நடந்து, ஐந்து நடக்காமல் போகும்போது, கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் நாத்திகனைப் போன்றே ஆத்திகனுக்கும் வந்துவிடுகிறது.

பொருளியலைச் சார்ந்திராமல், அருளியலுக்கு முக்கியத்துவம் தருபவர்களுக்குத்தான் கடவுளின் இருப்பைக் குறித்த சந்தேகம் எழுவதில்லை.

கடவுளின் இருப்பை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ள வேதங்கள் முதலான அறிவுநூல்கள் துணைபுரிகின்றன. அறிவு நூல்களை ஓதுவதும், அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்வதும்கூட வள்ளுவர் கூறும் வழிபாட்டில் அடங்கிவிடுகின்றன.

கடவுளை எப்படி வழிபடுவது? பிரமாண்டமான கோயில் எழுப்பி, கும்பாபிஷேகம் செய்யலாமா? அல்லது, எளிமையான முறையில் வழிபடலாமா?

திருவள்ளுவர் பட்டியிலிடுகிறார்

கடவுளை அறிவுபூர்வமாக ஏற்பது வழிபாடு. அறிவு நூல்களை ஓதி, பொருள் உணர்தல் வழிபாடு. உள்ளத் தாமரையில் விளங்கும் ஆண்டவனைத் தியானிப்பது வழிபாடு. விருப்பு- வெறுப்பில்லாத சீரிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் வழிபாடு. பொருள் சேர்ந்த புகழ் மொழிகளால் இறைவனைப் போற்றி வணங்குதல் வழிபாடு. 'பொய்தீர் ஒழுக்க நெறி' நிற்றல் வழிபாடு.

முறையான ஒப்பீடுகளுடன் நிறைவாக வாழப் பழகிக்கொள்வது வழிபாடு. சீரான அற வாழ்க்கை வாழ்தல் வழிபாடு. உடலால் இறைவனைப் பணிந்து வணங்குதல் வழிபாடு. காலத்தை முறையாகப் பயன்படுத்துதல் வழிபாடு.

பிரவாகமாக ஓடும் மிகப் பெரிய நதியை கமண்டலத்தில் அடக்குவதுபோல், ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை சாதனைகளையும் பத்துக் குறட்பாக் களில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அடக்கிவிடுகிறார்.

புதியதோர் உலகம் செய்வோம்!

திருக்குறளில் சொல்லியபடி இறைவனின் இலக்கணங்களை அறிந்து, அதில் கூறப்பட்டுள்ளபடி வழிபட்டால், தெய்வீகமான தன்னம்பிக்கை ஏற்படும்; நம் அறிவு புனித மான, பயனுள்ள அறிவாக விளங்கும்; ஆழ்மனதில் ஆழ்கடல் அமைதி எப்போதும் இருக்கும்; துன்பம் நீங்கும்; இகழ்ச்சி- புகழ்ச்சி நம்மைப் பாதிக்காது; மனதில் நிறைவு தோன்றும்; உடல் புனிதமாகும்; காலத்தை வென்றவர்கள் ஆவோம்.

திருக்குறள், அறிவையும் ஒழுக்கத்தையுமே ஓயாது போதிக்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்களாவது ஒதுக்கி, ஒரு குறளையாவது ஆழ்ந்து சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதனைக் கடைப்பிடிக்க முயலுங்கள். அதுவே, உங்கள் மனநிம்மதிக்கான முதலீடு என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அறிதாகி
வேதப்பொருளாய் மிகவிளங்கி தீதற்றோர்
உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

- எனப் போற்றப்படும் வள்ளுவர் கூறும்

வாழ்க்கை நெறிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

குறட்பாக்களைப் படித்து உணர்வோம். நமக்கும், சமுதாயத்துக்கும், வருங்காலத் தலை முறைக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து, புதியதோர் உலகம் படைப்போம். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

- (நிறைவுற்றது)
படம் எஸ். கிருஷ்ணமூர்த்தி