தொடர்கள்
Published:Updated:

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!


இளைஞர் சக்தி
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!

துஷ்யந்தன் சொல்லும் நீதி!

சிந்தனை செய் மனமே!

லகின் தலைசிறந்த நாடகமான சாகுந்தலத்தை இயற்றியவர் மகாகவி காளிதாசன். விக்கிரமாதித்ய அரசவையில் இருந்த உறுப்பினர்களில் காளிதாசனும் ஒருவர் என்பர். 'இந்தியாவின் ஷேக்ஸ்பியர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவன் காளிதாசன்.

சிறந்த கவிஞர்களை விரல் மடக்கி எண்ணும்போது, முதலில் சுண்டுவிரலை மடக்கி 'காளிதாசன்' என்றனர். அவனுக்கு ஈடாக இன்னொருவர் இல்லாததால், இரண்டாவது விரலை மடக்கவில்லை. எனவே, அந்த விரல் 'பெயர் குறிப்பிடாத விரல்' என்றாகிவிட்டது. இதையே பிறகு 'அனாமிகா' என்றார்கள். 'அனாமிகா' என்றால் பெயர் இல்லாதது என்று பொருள்.

ஐம்பெரும் காப்பியங்களை இயற்றிய காளிதாசனை அகில உலகுக்கும் அறிமுகம் செய்தது, அவன் இயற்றிய 'சாகுந்தலம்'. இதன் நாயகனான துஷ்யந்தன், புரு வம்சத்தில் பிறந்தவன்; அரசாட்சியின் உயர்வை உலகுக்கு உணர்த்தியவன். இவன், வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது, அங்கே கண்வ மகரிஷியின் மகள் சகுந்தலையைக் கண்டான்; பார்த்ததுமே அவளை விரும்பத் துவங்கினான்.

'கண்வரோ பிரம்மரிஷி; நானோ அரசன்; அறங் காவலன். அறத்துக்குப் புறம்பாக ஆசை முளைத்துவிட்டதே...' எனக் குழம்பினான் துஷ்யந்தன். அதே நேரம், 'எனக்கு உரியவளாக இவள் இருக்கவேண்டும்' எனும் ஆசையும் வளர்ந்தது. இருதலைக் கொள்ளியெனத் தவித்து மருகியவன், அவளுடைய தோழியரைச் சந்தித்து, ''உங்களின் தோழி சகுந்தலையின் தந்தை வெளியூர் சென்றிருந்தாரே, வந்துவிட்டாரா?'' என்று கேட்டான். அவர்கள், ''வந்துவிட்டார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? சகுந்தலை, கண்வரின் சொந்த மகள் அல்ல; வளர்ப்பு மகள். விஸ்வாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்தவள்'' என்று சொன்னதும், மகிழ்ந்தான் துஷ்யந்தன். 'நம் மனம் தவறு செய்யவில்லை' என உணர்ந்து நிம்மதியானான்.

சரிசமமானவர்கள் செய்யும் திருமணம் சிறக்கும் என்கிறது சாஸ்திரம் (விவாஹசே ஸமயோரேவசோபதெ). சகுந்தலையைவிட்டு ஊர் திரும்ப மனமின்றி, வேட்டையாடுவதை விரிவுபடுத்தினான்; அவளைச் சந்திக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தினான். ஆனால் கண்வரிஷியின் சிஷ்யர்கள் அவனிடம், ''ஆஸ்ரம அமைதியை அழிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. காட்டில் உனக்கு என்ன வேலை? நாட்டுக்குத் திரும்பிச் செல்'' என்று கடிந்துகொண்டனர்.

சிந்தனை செய் மனமே!

உடனே துஷ்யந்தன், ''மக்களிடம் இருந்து வரியைப் பெறுவதால், அவர்களைக் காக்கவேண்டும். அதேபோல், காட்டில் உள்ள முனிவர்களும் அவர்கள் சேமித்த தவத்தின் பலனில், ஆறில் ஒரு பங்கை வரியாகத் தருகின்றனர். எனவே, காட்டுவிலங்குகளிடம் இருந்து அவர்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனவே, வேட்டையாடுதல் அறத்துக்குப் புறம்பானது அல்ல'' எனப் பொறுமையாக விளக்கினான். தூண்டுதல், வேண்டுதல் என எதுவுமின்றி, மக்கள் பணியில் அக்கறை செலுத்தும் இயல்பு, துஷ்யந்தனிடம் இருந்தது. இறைவனின் அரவணைக்கும் கைகளில் இருந்து தோன்றியவன் அரசன் என்கிறது வேதம் (பாஹூராஜன்யகிருத). இதற்கு உதாரணம், துஷ்யந்தன்.

சகுந்தலை, துஷ்யந்தன் நினைவால் வாடினாள். அவனுக்குக் கடிதம் எழுத எண்ணினாள். ஓடையில் இருந்து தாமரை இலையைப் பறித்து, தனது எண்ணத்தை எழுத்தாக்கினாள். அவள் எழுதியிருந்த வரிகள் அனைத்திலும் துஷ்யந்தன்மீது அவள் கொண்டிருக்கும் அன்பு, ததும்பி வழிந்தது!

'இருவரில் சரிசமமான விருப்பம் இருந்தும், சந்திப்பு ஏற்படாமல் மடிவது சிறப்பு. ஆனால், சரிசமமில்லாத விருப்பம் சந்திப்பைத் தந்தாலும், ஏற்பது இழுக்கு' என்கிறான் காளிதாசன் (பாஸ்பரப்ராப்தி...). சகுந்தலையின் விருப்பத்தை அறிந்த துஷ்யந்தன், மோதிரம் அணிவித்து காந்தர்வ முறையில் திருமணம் செய்துகொண்டான்; அரச மரியாதையுடன் அழைத்துச் செல்வதாகச் சொல்லி விடைபெற்று, நாடு திரும்பினான்.

அவனது நினைவில் மூழ்கிய சகுந்தலை, சூழலை மறந்தாள். அப்போது துர்வாச முனிவர் அங்கு வந்தார். கண்கள் அவரைப் பார்த்தன; ஆனால், மனமோ வேறிடத்தில் இருந்தது. இதில் கோபமுற்ற துர்வாசர், 'என்னைக் கண்டுகொள்ளாத அளவுக்கு, உன் மனம் எவரை நினைத்திருந்ததோ, அவன் உன்னை மறந்துவிடுவான்' எனச் சபித்தார். அருகில் இருந்த அவளுடைய தோழியர் பதறிப்போய், சாப நிவர்த்தி வேண்டினர். மனமிரங்கிய முனிவர், 'மோதிர அடையாளத்தைக் கண்டால், சாபம் நிவர்த்தியாகும்' என்று சொல்லிச் சென்றார்.

சிந்தனை செய் மனமே!

தோழியர்களுடன் கிளம்பினாள் சகுந்தலை. வழியில், ஒரு நதியில் அவர்கள் நீராடினர். அப்போது, சகுந்தலையின் விரலில் இருந்த மோதிரம் நழுவியது. அவனது பிரிவால் இளைத்துப் போயிருந்ததால், மோதிரம் சுலபமாக நழுவியது. இதை அறியும் மனநிலையில் அவள் இல்லை.

துஷ்யந்தன் எதிரில் போய் நின்றும், அவன் மறதியில் இருந்ததால், அவளை ஏற்க மறுத்தான். 'உன்னை நான் சந்தித்ததே இல்லை' என்றான்.

காந்தர்வத் திருமணத்துக்குச் சாட்சியாக அவன் தன் விரலில் அணிவித்த மோதிரத்தைக் காட்ட முனைந்தவள், விரலில் மோதிரம் இல்லாதது கண்டு திடுக்கிட்டாள். இதைக் கண்ட மன்னன், 'இவள் நாடகமாடுகிறாள்' என எண்ணி, அவையில் இருந்து அவளை வெளியேற்றினான். அப்போது அவளின் தாயார் மேனகை அங்கே தோன்றி சகுந்தலையை அழைத்துச் சென்று, முனிவரின் ஆஸ்ரமத்தில் சேர்த்தாள்.

இந்த நிலையில், நீரில் விழுந்த மோதிரத்தை மீன் விழுங்கிற்று; அந்த மீன், மீனவன் ஒருவனிடம் சிக்கியது. மீனின் வயிற்றில் மோதிரம் இருப்பதைக் கண்டவன், ஓடிப்போய் மன்னனிடம் மோதிரத்தைச் சேர்த்தான். அதைக் கண்டதுமே, துஷ்யந்தனுக்குச் சகுந்தலையின் நினைவு வந்தது. தேடி வந்தவளை விரட்டிவிட்டோமே என வருந்தினான்.

அந்த வேளையில், ஜமீன்தார் ஒருவர் இறந்துபோனார். அவருக்கு வாரிசு எவரும் இல்லாததால், அந்தச் சொத்து அரசைச் சேரும் என்பது சட்டம். எனவே, அந்தச் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க, அமைச்சர் குழு, மன்னரிடம் வந்தது. அவர்களிடம், 'இறந்தவருக்குப் பல மனைவிமார்கள் இருக்கக்கூடும். அவர்களில் எவரேனும் ஒருவருக்கு வாரிசு இருக்கலாம். எனவே, தீர விசாரித்து முடிவுக்கு வாருங்கள்' என்றான். உடனே அமைச்சர்கள், ''நாங்கள் விசாரித்துவிட்டோம். வாரிசு யாரும் இல்லை'' எனத் தெரிவித்தனர். ''ஒருவேளை, அவரது மனைவியரில் எவரேனும் கர்ப்பவதியாக இருக்கலாம். அப்படியெனில், பிறக்கும் வாரிசுக்கு அந்தச் சொத்து சென்றடையவேண்டும் அல்லவா?! அறத்துக்குப் புறம்பான வழியில், செல்வமானது அரசை அடைந்தால், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையே சரிந்துவிடும். எனவே, தீர விசாரியுங்கள்'' என்றான் துஷ்யந்தன். அதாவது, காதல்வசப்பட்ட நிலையிலும், அலுவலில் தடையின்றி, ஆழ்ந்து கவனம் செலுத்தும் பாங்கு அவனிடம் இருந்தது. சோகத்தில் ஆழ்ந்த வேளையிலும் லோக க்ஷேமத்தின்மீது விழிப்புடன் செயல்பட்டான், அவன்.

எதிரியை அடக்க, துஷ்யந்தனை நாடினான் இந்திரன். அவனை அழைத்துவர, சாரதியுடன் தேரினை அனுப்பிவைத்தான். பூமியில் தேருடன் இறங்கிய சாரதி, துஷ்யந்தனைச் சந்தித்தான். ஆனால் அவனோ, கவலையில் ஆழ்ந்திருந்தான். இந்த நிலையில் அவனை அழைத்துச் சென்றால் பயனில்லை என எண்ணிய சாரதி, அருகில் இருந்த விதூஷகனின் கழுத்தை நெரித்தான். இதில் அவன் கூச்சலிட, சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்த மன்னன், வில்லில் பாணம் தொடுத்து, சாரதியை அடக்க முனைந்தான். உடனே சாரதி, 'நான் இந்திரனுக்காக வந்துள்ளேன். இந்திரனின் சத்ருவை நீங்களே அடக்கவேண்டும். வில்லோடு தேரில் ஏறுங்கள். தொடுக்க முனைந்த பாணம், சத்ருவின் மீது விழவேண்டும்' என்றான். சூழலை உணர்ந்த துஷ்யந்தன், விண்ணுலகம் சென்றான். தனது துக்கத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு, இந்திரனுக்காகக் களமிறங்கினான். சுயநலத்தை மறந்து, பிறர் நலனுக்கு முன்னுரிமை தருபவனே அரசன் என்பதை மெய்ப்பித்தான் துஷ்யந்தன்.

பிறகு, விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்பும்போது, ஒரு ஆஸ்ரமத்தைக் கண்ட துஷ்யந்தன், அங்கு சென்று முனிவரை வணங்க எண்ணினான். அங்கே சிறுவன் ஒருவன், சிங்கக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் இனம் புரியாத உணர்வு மன்னனுக்குள். சிறுவனுடன் பேச விரும்பி, ''சிங்கக்குட்டிகளுடன் என்ன செய்கிறாய்?'' என்று கேட்டான். ''சிங்கக்குட்டிக்கு எத்தனைப் பற்கள் உள்ளன என எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என பதில் தந்தான் சிறுவன். அப்போது, அங்கே சகுந்தலை வந்தாள். அவளைக் கண்டதும், வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைத்தான் துஷ்யந்தன். பிறகு, அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல; தனக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன்தான் என அறிந்ததும், துஷ்யந்தனின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. அந்தச் சிறுவன்... பரதன்! அவனது பிறப்பால் பெருமை கொண்டது பாரதம். அதையடுத்து, சகுந்தலை மற்றும் பரதனுடன் நாடு திரும்பினான் துஷ்யந்தன் என்கிறது நாடகக் கதை!

நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; காட்சிகளை ரசிப்பதுடன் நிற்காமல், மக்களுக்கு நல்ல பண்புகளையும் கற்றுத் தருவதே, சிறந்த நாடகம்! அறநெறியுடன் வாழ்வதன் அவசியத்தை, அற வழியில் வாழ்ந்து காட்டியே, மக்களுக்கு உணர்த்தினான் துஷ்யந்தன். எத்தனை இன்னல்கள் வந்தாலும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்ற வேண்டும் என உலகுக்கு உணர்த்தியவன் சாகுந்தல நாயகன் துஷ்யந்தன்.

- (இன்னும் சிந்திப்போம்)