'எந்தப் பிரச்னையும் இன்றி வாழவேண்டும். உயர்ந்த பதவி வேண்டும்; கௌரவம் வேண்டும்; எந்தச் சங்கடமும் இல்லாமல் பொருளீட்டவேண்டும்' எனச் சிலர் நினைப்பது, 'சாலையில் எந்த வாகனமும் செல்லாதபோதுதான் நான் வண்டியை ஓட்டுவேன்' என்று சொல்வதைப் போல!
நம் முன்னே தோன்றும் பிரச்னைகள், நம்மை திடப்படுத்துகின்றன; சில நேரங்களில் மேன்மைப்படுத்துகின்றன; நமது உள்ளத்தை இன்னும் விசாலமாக்குகின்றன. எதிர்ப்புகளுக்கு நடுவே வளரும்போதுதான், நம்முடைய உந்துசக்தி அதிகரித்து, நம் ஆற்றல் முழு அளவில் வெளிப்படுகிறது. சிறுத்தைகள் துரத்தும்வரை, மான்களுக்குத் தன்னால் இவ்வளவு வேகமாக ஓடமுடியுமா எனும் சந்தேகம் இருக்கவே செய்கிறது.
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. சிறிதுநேரம் விலகியிருந்து, மனத்தை நிர்மலமாக மாற்றி, ஆழமாகச் சிந்தித்தால், விடை காணமுடியும்; மாறாக, அதிலேயே முழுவதுமாக மூழ்கினால், மூச்சுத் திணறிப் போய்விடுவோம்! நம்மால் எதையும் தீர்க்கமுடியும் என நம்புவதுதான், அந்தப் பிரச்னைக்கான காரணங்களையும், அவற்றைப் போக்கும் விதங்களையும், அவற்றால் ஏற்படுகிற எதிர்வினைகளையும் அலசி ஆராய்வதற்கு உதவியாக இருக்கும்.
சின்ன எதிர்ப்பைக்கூட மலையாக நினைப்பவர்கள்தான், மலைத்துப் போவார்கள்; வெறும் அலையாக நினைப்பவர்கள், அதிர்ந்துவிடாமல் துணிந்து நிற்பார்கள்.
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
|